C-5 – லிப்ட்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

கே ஆர் மணி


அன்றைக்கு லிப்ட் மேலும் கீழும் அமைதியாய் போய்க்கொண்டிருந்தது. அப்படித்தானே போகவேண்டும் என்று கேட்க வேண்டாம். எங்கள் ப்ளாட்டின் லிப்ட் பெரும்பாலும் அப்படிப் போவதில்லை. ஆகவே, எனக்கு அது அப்படி அமைதியாய் இயங்கிக் கொண்டிருந்ததே ஆச்சரியத்தையும், ஆசுவாசத்தையும் அளித்தது.
பெரும்பாலான நேரம், இரு தளங்களிக்கிடையே, பல் டாக்டரிடம் வாய் திறந்த கிருஸ்ணரைப் போல எங்களை பார்த்துச் சிரிக்கும். திட்டிக்கொண்டே மேலேயோ, கீழேயோ நடந்தே போகவேண்டும். அதிகமாகத் திட்டினால் அடுத்த தடவை நடுவழியிலே தனது அகிம்சா வழியிலான சத்தியாகிரகத்தை ஆரம்பித்துவிடும். அதற்கு எப்படியோ தெரிந்து விடுகிறது என்பதால் மனதிற்குள் கூட அதிகமாகத் திட்டுவதில்லை.
’பகல் பக்கம் பார்த்து திட்டு, இராத்திரியா அதுவும் திட்டாதே, நம்ம பிளாட்டு லிப்டா மனதிற்குள்ளும் திட்டாதே’
மேலே சொன்னபடி அது அமைதியாக இயங்கிக்கொண்டிருந்தது.
அதுவும் ஆச்சரியம். பொதுவாய், அது இயங்கிக்கொண்டிருக்கும் போது ஏற்படுத்தும் சத்தம் பிரபஞ்சம் உருவானபோதும், பிக்-பாங்கின் போதும், கிளம்பிய சத்தத்திற்கு இணையாக இருக்கும்.
“ம்” “ம்” என்றும் “ஓம்” “ஓம்” என்று சத்தமிடுவதாக மூன்றாவது தளத்தில் வசிக்கும் ஆயுர்வேத வைத்தியரும், யோக முறைகளால் தனது உடம்பை நிறைய முறை உடைத்துக் கொண்டு அலோபதி மருத்துவரிடம் ஓடியவருமான சாக்கேத் விசால்ஜீ சொல்லி சொல்லி புளகாங்கிதம் அடைவார்.
மாநகர விதிப்படி ஓவ்வொரு அடுக்குமாடிக் கட்டிடமும் தனது உயரத்திற்கேற்ப அந்த இயந்திரத்தை – லிப்டை- தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். எங்களது ஏழு மாடி குடியகம். கண்டிப்பாய் லிப்ட் தேவை. தள உயரம் சில எண்ணிக்கைகள் தாண்டினால் ஓன்றிற்கு மேற்பட்ட லிப்டும், மின்சாரம் தடைபட்டால் தானே இயங்கும் மின் உற்பத்தி வசதியும் கொண்ட ஜெனரேட்டரும் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும். ஆகவே லிப்ட் எங்களின், எங்கள் குடியகத்தின் ஒரு அங்கம். வெளியேயிருந்து வரும் புதியவர்களுக்கு எங்கள் வசதியின் முகம்.
எங்கள சொசைட்டியின் மற்ற ப்ளாட்டுகளில் லிப்டுகளெல்லாம் ஓழுங்காக இயங்க எங்களது லிப்ட் மட்டும், வாரண்டி காலம் முடிந்தவுடன் முரண்டு பண்ணுகிறது. எல்லா லிப்டும் ஓரே நிறுவனத்திடம் வாங்கப்பட்ட லிப்ட், கிட்ட்த்தட்ட ஓரே நேரத்தில் போடப்பட்டது. எல்லாமே ஓரே நேரத்தின் தேய்மானம் கண்டு நோயாளியாக வேண்டாமோ ?
மற்றவைகளெல்லாம் ஒரு 40 வயதுக்காரன் போல பாந்தமாய் ஓடிக்கொண்டிருக்க எங்கள் ப்ளாட் லிப்ட் மட்டும், என்ன கிரக கோளாறோ, யார் கண் பட்டதோ, எதிர்மறை அலைகள் அதிகமோ – என்ன இழவுக் காரணமோ – காச நோய் கண்ட தமிழ்ப்பட கதாநாயகன் போல – தன் ஆத்ம ஓளி இழந்து வருகிறது.
ஆரம்பத்தில் அழுது கொண்டிருந்த மகாசனங்கள் மாற்றத்திற்கான விலை அதிகம் என்பதை உணர்ந்து எதற்கும் பழகி விடுகிறார்கள். அந்த கால ரேடியோ தலையில் தட்டினால் பாடும், கீழே தட்டினால் நிற்கும். 70களின் பஜாஜ் பைக்கை கொஞ்சம் சாய்த்து தலையில் மிதிக்க, அழுதுகொண்டே ஸ்டார்ட் ஆகும்.
எதை செய்தால் லிப்டின் ஆத்ம ஓலி பெருகும், அது சொன்னபடி கேட்கும் என்பதை கண்டுபிடித்து கொண்டார்கள். அவைகள் முறையே :
வேகமாய் இரண்டு முறை அழுத்துவது, எதிரியாக நினைத்து கொண்டு கதவை எத்துவது, உலுக்குவது, பாதி வழியில் நின்றால் கையை கம்பிக்குள் விட்டு வயர் கம்பியை நிமிட்டி விடுவது, எப்போதும் கையில் ஏதாவது சாப்பிட கொண்டு போவது, மொபைல் மூலம் அந்த தள வீட்டிற்கு செய்தி தெரிவிப்பது, அவசரப்படாமல் ஏதாவது நாவல் படிப்பது – போன்ற பல இத்தியாதிகள்.
எங்கள் சொசைட்டியின் மற்ற லிப்டுகளை ஒப்பீட, எங்கள் ப்ளாட்டின் லிப்ட் வளர்ந்த நாடுகளுக்கிடையே மூச்சிரைக்கும் சோமலியா.
இன்றைக்கு நல்ல நாள்தான் போல. இவ்வாறு நினைத்துக்கொண்டே மகிழ்ச்சியோடு உள்ளே புகுந்து, “G” என்கிற தரைத்தள பட்டனை அழுத்துகிறேன். நகரவேயில்லை.
சாம,தான, பேத, தண்ட எல்லா வேலைகளையும் செய்கிறேன். எல்லாம் தண்டம். அங்கயே நிற்கிறேன். சனியன்.. திட்டியபடியே கதவை திறந்து நடந்தே போய்விடலாம் என்று எண்ணியபடியே கதவை திறக்க, கதவும் திறக்கவில்லை. பலம் முழுதும் கொண்டு மறுபடி திறக்க, எத்த, உதைக்க, உலுக்க – எந்த அசைவுமில்லை.
சொசைட்டி ஆபிஸிற்கு போன் செய்ய அங்கே ரிங் போய்க்கொண்டேயிருக்கிறது. கத்தியும் எந்த பிரயோசனமுமில்லை. அலறும் டீவிக்குரல்கள் எனது குரலை கபளீகரப்படுத்துகின்றன. எனது வீட்டு தொலைபேசியை அடிக்க அது ஏற்கனவே ஏதோ ஒரு அழைப்பில் பிசியாகயிருந்த்து. மறுபடியும் எத்தல், உதைத்தல், தள்ளல்.
எல்லாம் முடிந்து கொஞ்சம் அமைதியாய் லிப்டிற்குள்ளே எதுவுமற்று நின்றேன். யாராவது வருவார்கள். வேறென்ன செய்ய..திரிசங்கு கைதி.
ஏன் மிசன்கள் கூட இயற்கை போல தவறிவிடுகின்றன ?
*
2.
எங்கள் வீட்டில் சின்னதாய் ஒரு கூட்டம் சூடு பிடித்திருந்த்து. ப்ளாட்டின் லிப்ட் பற்றிய கூட்டம். சொசைட்டிக்கு எத்தனை முறை சொன்ன பின்னும் செவிடன் காதில் சங்கு. இந்த தடவை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற கடுப்பில் மகாசனங்கள். குற்றப்பத்திரிக்கை, அவர் அவர்களது அநுபவ பதிவுகள், மற்றயிடங்களில் பிரச்சனையின்றி நமக்கு மட்டும் ஏன் என்கிற பிரபஞ்ச வயித்தெரிச்சல் கேள்வி. கூடவே பூனைக்கு மணி கட்ட பல ஆலோசனைகள்.
நாயர் ஆரோகணம் ஆரம்பித்தார். குறை சொல்லி நாயர்.
“எத்தனை நாளா சொல்றது.. ஒரு நா.. கறி வாங்கிட்டு வரும்போது நடுவழியிலே நின்னு, போயிடுச்சு.. அப்புறம் ஒரு கோழிக்கால லிப்டு கம்பிக்குள்ளே விட்டு நிமிண்டருந்துக்குள்ள உயிரே போயிடுத்து… “
“யாரோட உயிர் ..கோழியோட உயிரா..? “ [ பாலக்காட்டு க்ருஸ்ணன் என் காதில் ரகசியமாய் கேட்டான். நாயர் வீட்டு ஞாயிற்றுக்கிழமை அசைவ நறுமணத்தால் பாதிக்கப்பட்ட அகதி]. நான் சிரிப்பை அடக்க, சில இருமல்கள் விடுத்தேன்.
நாயர் தொடர்ந்தார். “ இன்னொரு நாள் என் மனைவி லிப்டுக்குள்ளயே ஒரு மணி நேரம் நின்னிருக்கா.. என் பேரன் அரை மணி நேரம் நின்னிருக்கா.. என்னோட மருமக.. புது மருமக.. ஒன்னரை மணி நேரமா.. நின்னு.. காலெல்லாம்.. எந்த ஞான் பேசறது.. “ மருமகள் பற்றி பேசியதில் ரொம்பவே நெகிழ்ந்தார்.
”ரமணி சார் .. நீங்கதான் நம்ப பிரச்சனையை ரெப்சரண்ட் பண்ணனும்..” என்று ஜோசப் ஆரம்பித்தான். மற்றவர்களை தள்ளிவிட்டு அவர்களை வேலை செய்ய வைப்பதில் ஜோசப் வல்லவன். அவனுக்கு சொசைட்டியின் அத்தனை ரூலும் அத்துப்படி. எப்போது எந்த சட்ட்த்தை பிரயோகிப்பது, எதை போர்வையின் அடியில் போடுவது, எதில் நீர் விட்டு வளர்ப்பது, எதை வெந்நீர் ஊற்றி குலைப்பது என்கிற அத்தனை ஜகஜால வேலைகளும் அவனுக்கு அத்துப்படி.
எந்த கூட்டத்திலும் கடைசியிலிருந்து காய்களை நகர்த்துவதில் வல்லவன்.கடற்கரையிலிருந்து மெல்ல மெல்ல ஆதிக்க அறையின் மையப்பகுதியின் மைக்கை பிடிக்கும் செயல் திட்டம் ஊறிய இரத்தம்.
“ எவன் சொல்றதையாவது கேட்டுட்டு சொசைட்டி வேலைய தலையில தூக்கி வைச்சுகிட்டு ராத்திரியெல்லாம் சுத்தினேள்னா.. தெரியும் செய்தி.. நோ மோர் நான்சென்ஸ் “ அசரீரியாய் என் மனைவி. அவள் சொல்கிற போனமுறை நான்சென்ஸிற்கும் ஜோசப்தான் காரணம்.
“ரமணி சார்.. நீங்க நம்ம ப்ளாட்ட ரெப்சரெண்ட் பண்ணுங்க.. யூ ஆர் ரைட் பெர்சன். நான் பின்னாடி நிக்கறேன். நம்மள என்ன கிள்ளுக்கீரைன்னு நினைசாங்கலா.. இந்த தடவை ஜெனரல் மீட்டிங்கல பிச்சு வாங்கிப்புடலாம்..”
ஜோசப்பின் வார்த்தைகளின் மீது விசுவாசம் கொண்டு கடலிலும் இறங்கலாம். திரும்பி பார்த்தபின் தான் தெரியும், நடுக்கடலில் தனியாக நின்று கொண்டிருப்பது. என் மனைவி சொன்னது சரிதான். ஆகவே இந்த முறை எந்த தேவனையும் நம்ப போவதில்லை..
நாயர் கனைத்துக்கொண்டு மறுபடியும் தனது ஸ்தல, குடும்ப வரலாற்றை ஆரம்பிக்கும் முன் ஸ்வேதா ஆண்டி மென்மையா சொன்னார்.
“ எனக்கு கூட போன வாரம் ஒரு பத்து நிமிடம் நிற்க வேண்டி வந்த்து. ஒரே மூச்சு முட்டல்..”
கண்கள் நிகழ்ச்சியை நினைத்து மீள் மருண்டன. ஸ்வேதா ஆண்டிக்கு ஏற்கனவே பைபாஸ் ஆகியிருக்கிறது. நிறைய நடக்கிறார். வாக்கிங், ஜாக்கிங் போகிறார். மகன் அமெரிக்காவில் இருக்க தனியே இருக்கிறார். அவர் சொன்னது எல்லோருடைய மனதையும் கொஞ்சம் தொட்ட்து.
” நாம என்னத்தை பண்றது. லிப்ட் மாத்தறது இன்னும் மூனு வருசத்துக்கு முடியாதுன்னு சொசைட்டி சொல்லுது.. நாமளும் பணம் போட தயாராயில்லை.. “ நான் விரக்தியோடு கூட்டத்தை ஏதாவது தீர்வை நோக்கி நகர்த்த முயற்சித்தேன்.
“ க்யாரே.. [என்ன] மணி, என்ன சொல்ற.. மூணு வருசமா.. க்மான்.. இது உயிர் சம்பந்தப்பட்ட விசயம்.. நாளைக்கே ஸ்வேதா ஆண்டிக்கோ, நாயருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னு.. இந்த சொசைட்டியா வந்து பதில் சொல்லும்.. நான்சென்ஸ்.. “ பெருங்குரலெடுத்து பேச ஆரம்பித்தார் விபுல்பட்டில். ஏழாவது தளத்தில் வசிப்பவர். அதிகமாய் அவதிப்படுபவர்.
“ நான் சொல்றத யாரும் கேட்க மாட்டேங்கறீங்க.. நம்மளோடது பெரிய சொசைட்டி.. அதுனால நம்ம பளாட்டை சரியா அவங்களால கவனிக்க முடியல.. அதில்லாம சொசைட்டி போர்டுல உக்காந்திருக்கிறதெல்லாம் வெறும் காகித புலிகள். வெள்ளை யானைகள். கிழட்டு நரிகள்.”
வேகமாய் பேசியதில் நிறைய மிருகங்கள் வந்ததை உணர்ந்து, சில விநாடிகள் மூச்சிரைக்க அநுமதித்தார்.
“ ஆல் ஆர். வேஸ்ட் டஸ்ட் பின்.. சேர்மனா உக்காந்திருக்கு.. அவங்க எதுக்கு.. நாமளே தனி சொசைட்டி ஆரம்பிக்கலாம். நம்மளோட குறைய உடனே சால்வ் பண்ண இதுதான் சொலியூசன். எதுக்கும் ஒரு எல்லையுண்டு ”
கூட்டத்தின் அமைதி கருத்தை அவ்வளவாய் ரசிக்கவில்லை என்று காட்டியது.
இதை புரிந்து குரலை தனித்து குழைத்து சொன்னார். ”இது எல்லா இடத்திலயும் நடக்கிறதுதான். சின்னதா கவர்மெண்டுல, கோர்ட்டுல அப்ளிகேசன் போட்டு நம்மோளோட சொசைட்டிய தனியா ஆரம்பிச்சிருவோம்.. கார்பஸ் பண்டுல இருந்து நம்மளோட பங்கை தனியா வாங்கிக்குவோம்.. உடனே, வேகமா ஒரு லிப்ட்.. தட்ஸ் ஆல்..”
பாலக்காட்டு கிருஸ்ணன் சிரிப்பை வழிய விட்டுக்கொண்டே என் காலை மிதித்து செய்கை காட்டினான். விபுல்பட்டிலின் தனி ஆவர்த்தனம் இது. ஓவ்வொரு மீட்டிங்கிலும் இதை பேசியே தீருவார். காரணங்கள் இரண்டு.
1. அவரது நிறுவனம் ஜெனரேட்டர் தயாரிக்கிறது. சொசைட்டியில் உள்ள பதினைந்து ப்ளாட்டுக்கள் தனியாக பிரிந்தால் அவருக்கு பதினைந்து சிறு ஜெனரேட்டர்களும் அது சார்ந்த வியாபாரமும் வரும் வாய்ப்புகள் அதிகம். அவரே நிறைய நிறுவனங்கள் பேரில் கொட்டேசன்கள் கொடுத்து காரியத்தை முடித்து விடுவார்.
2. மேற்கூறிய காரணம் மட்டுமே, வேறெதுவும் இல்லை. அதோடு லிப்ட் வேலை முடிந்தவுடன் வேறு பெரிய சொசைட்டியில் குடிபுகுந்து தனது வேலையை ஆரம்பித்துவிடுவார் என்று சில செய்திகள். 25 வருடங்களில் ஆறு சொந்த ப்ளாட் மாற்றியதும் மேற்சொன்ன செய்திக்கு காரணமாயிருக்கலாம்.
”தனியா போறத பத்தி அப்புறம் பேசலாம்..முதல்ல இந்த விசயத்திற்கு ஓத்துமையிருக்கான்னு பாப்போம்.. “ ஆறாம் தளத்தில் வசிக்கும் சிவராம் ஜாதவ் வேகமாய் இடைமறித்து பேசினார்.
“ எந்த விசயத்தில நம்ம ப்ளாட்டுக்குள்ள ஒத்துமை இருக்குது..போனதடவை முதல் ப்ளோர் வீரைன் ஜெயின் வீட்டிலிருந்து லிப்டிக்கு நாங்க எதுக்கு பணம் கொடுக்கணும்னு ஓரே சண்டை போட்டாங்கள்ள.. அப்புறம் சொசைட்டி ரூலா காமிச்சில்லா பைசா வாங்க வேண்டியிருந்தது “
” சிவராம்ஜீ சொல்றது உண்மைதான்.. தனியா பிரியறது எல்லாம் அப்புறம் பாக்கலாம். முதல்ல லிப்டை மாத்தறது, அப்படியில்லைன்னா, கண்டிப்பா யாராவது ஒரு ஆளை லிப்டு மெயிண்டன் பண்றதுக்கு உள்ளேயே உக்கார சொல்லுவோம். அதை ரொம்ப ஸ்டராங்கா.. சொல்லணும்.. ரெண்டுல ஒன்னு கேட்டே ஆகணும்… “
கருத்து வாத, விவாதங்களுக்கு பிறகு, பாலக்காட்டு கிருஸ்ணன் அதை கடிதமாய் எழுத, அது எல்லோரிடமும் ஒப்பந்தம் பெற உடனே அனுப்ப பட்டது. பதிவு போல, இந்த கடிதத்தில் லிப்டை உபயோகப்படுத்தாத முதல் இரண்டு தளங்களில் வசிப்பவர்கள் சிலர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினர். எங்களுக்கு எதற்கு லிப்ட் என்றபடியே கதவை மூடிவிட்டார்களாம்.
அதுசரி, தனக்கு வந்த தலைவலிக்கு தானே தைலம் தேட வேண்டும். மற்றவர்களின் தலைவலியை பற்றி அமிர்தாஞ்சன் கம்பெனி தானே கவலைப்பட வேண்டும்.
அந்த கடிதம் சொசைட்டி அலுவலகத்திற்கு அனுப்ப்பட்ட்து.
*
3.
கையில் அந்த கனமான (!) கடிதத்தோடு ஒரு ஞாயிற்றுக்கிழமை சொசைட்டி அலுவலகத்தில் எங்கள் சி-5ன் சில பிரதிநிதிகள் கூடியிருந்தோம்.
உருவப் பெரிய சேர்மன், ஓடியாடி வேலை செய்ய செயலாளர், கடுகடுவென்ற முகத்தோடு பொருளாளர். நேரடியாக விசயத்திற்கு வந்தோம். கடிதம் பார்த்த சேர்மன் தனது பூத உடலை மெல்ல ஆட்டியபடியே ஒரு பக்கம் சாய்ந்து தனது திருவாய் மலர்ந்தருளினார்.
” ரமணி உங்களுக்கு தெரியும்.. ஒரு ப்ளாட்டுக்கு மட்டும் லிப்ட்மேன் போடுவது அவ்வளவு லேசான காரியமில்லை. அதற்கான விலையை உங்கள் ப்ளாட்காரர்களிடமிருந்துதான் வசூலிக்க வேண்டும். மொத்தமாய் மூணு சிப்ட், சில ஆயிரம் தாண்டலாம். அவ்வளவு பணத்தையும் சொசைட்டி பொதுப் பணத்திலிருந்து எடுப்பது என்பது மிகப் பெரிய குழப்பத்தை கொடுக்கும். “
செயலர் தொடர்ந்தார். “ நாம் நடவடிக்கை எதுவும் எடுக்கமாலில்லை. இதுவரை ஆறு சர்வீஸ் கம்பெனிகளை மாற்றியிருக்கிறோம். மற்ற லிப்டுகளுக்கு செலவழிக்கும் தொகையை விட ஒன்னரை பங்கு அதிகம் செலவழிக்கிறோம். .. அப்புறம் பாருங்கள் ..” மேசை மீதுள்ள ஒரு கோப்பை எடுத்து பேச ஆரம்பித்தார்.
வாதங்கள், விவாதங்கள் -.. ’என்ன எதிர்பார்க்கிறோம்’ ’முடியாது என்பது எங்கள் எண்ணம்’, ’நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வீர்கள்’, ’நீங்கள் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்’, – – அதே பழைய வாதங்கள், விவாதங்கள்.
இடையில் புகுந்த பொருளாளர் சொன்னார். “ உங்க ப்ளாட் மாதிரியே மத்த ப்ளாட் காரங்களும் எங்களுக்கு வேணும்னு கேட்டாங்கன்னா.. 30 ப்ளாட்.. மூணு ஸிப்ட்.. மாதத்திற்கு கிட்ட்த்தட்ட எவ்வளவு கூடும் தெரியுமா.. “ கால்குலேட்டரில் எதையோ தட்டி காண்பித்தார்.
“ இவ்வளவு மாசத்திக்குன்னா, ஓவ்வொரு வீட்டிற்கும் பில் எவ்வளவு ஏறும் தெரியுமா.. “ இன்னும் சில பொத்தான்களை அழுத்திக் காண்பித்தார். சின்ன சிரிப்பின் மூலம் தனது பொத்தான் அழுத்தும் வேகத்தை தானே பாராட்டிக்கொண்டார்.
“ அதுனால.. நான் என்ன சொல்றேன்னா.. “ சேர்மன் தனது வாயுத்தொந்திரவு நிறைந்த பூத உடலை வாகாய் அசைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
ஏற்கனவே எதிர்பார்த்து தயாரித்து வைத்திருந்த உப்பு சப்பில்லாத பிரதமரின் குடியரசு தின வாசிப்பு போலும், ஆளுநர் அறிக்கை போலவும் அமைந்திருந்த்து. வெறும் வெற்று வார்த்தைகள், பிரச்சனைகளுக்கு எள்ளளவும் உதவாத செயல் முறைகள், முடியாது என்பதை தோசை திருப்பி போட்டு சொல்லும் முறை. வெண்ணெய் தடவிய ரொட்டிகள்.
அப்போதுதான் எங்கள் ப்ளாட்டின் சில மகளிர்கள் கூடி அந்த செயலை செய்தனர்.
சேர்மன் அரண்டு போனார். செயலாளர் கிடுகிடுத்து போனார். பொருளாளார் கடுகடுப்பு நீங்கி பயத்தின் உச்சிக்கு போனார். நாங்கள் செய்வதறியாமல் திக்கித்து நின்றோம்.
*
4.
தேதி : நாள்/மாதம்/வருடம்
அனுப்புநர்:
ப்ளாட் வாசிகள்,
சி- 05 வேதாந்தம் காம்பெளக்ஸ்,
மும்பை
பெறுநர்:
மேண்மை மிகு சேர்மன்
வேதாந்தம் காம்பெளக்ஸ்
மும்பை

ஐயன்மீர்,
மேற்சொன்ன தேதியிட்ட அன்று எங்கள் குடியிருப்பு வாசிப் பெண்கள் சிலர் மிக அநாகரிகமான் முறையில் நாம் ஜனநாயக முறையில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின், தானியங்கி லிப்டின் செயல்பாடின்மையை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது, தங்களது இல்லத்திலிருந்த சமையலறை கழிவுகளை சொசைட்டி அலுவலகம் நோக்கி வீசி எறிந்தார்கள்.
இது எங்களது முன்னேற்பாடல்ல. அவர்களே நமது ஜனநாயக முறை மீது மதிப்பழிந்து, எதிர்பார்ப்பு குறைந்து ஒரு ஆவேச மனநிலையில் செய்த செயலே. விவாதிக்க வந்த எங்களுக்கும் இந்த அஜனநாயக செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு அமைப்பின் மீது இப்படி அமைப்பற்ற முறையில் தாக்குதல் நடத்துவது, அமைப்பை விட அதை நடத்துகின்ற தனிநபர்களின் மீதான தாக்குதலே என்று நீங்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீசிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
அவ்வாறான நிகழ்ச்சிக்கு எங்கள் சி-05 குடியிருப்புவாசிகள் மன்னிக்க கோருகிறோம். எங்களது வாய்மொழி வார்த்தையை ஏற்று நீங்கள் ஏற்கனவே ஒரு லிப்ட் பணியாளை வேலைக்கமர்த்தியது பற்றி, நன்றியோடு நினைவு கோருகிறோம்.
நன்றி.
குடியிருப்பாளார்களின் கையொப்பம் இணைக்கப்பட்டுள்ளது.

5.
பாபுலால் யாதவ் – உபியிலிருந்து புதிதாய் வந்தவன். பிழைக்க வந்தயிடம் என்று மனதில் ஆழ்மன பதிவு. சொல்லிக் கொடுக்கப்பட்ட பணிவு.
முதலில் அ) ஏதோ ஒரு டீக்கடையில் வந்து தங்கி, சம்பளமின்றி சாப்பாட்டிற்கு மட்டும் வேலை செய்து, ஆ) அங்கிருந்து கொண்டே சம்பளம் கொடுக்கும் வேலையோ, தொழிலோ செய்து, இ) மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது கிராமம் பார்த்து வந்து, கொஞ்ச நாளில் கிராமத்து உபிக்காரியை மணந்து, ஈ) அப்படியே தனது அடுத்த தலைமுறையை ஒரு சாலில்* குடியமர்த்தி உ) அந்திம காலத்தில் கிராமம் நோக்கி நகரும் – புலம்பெயர் வாழ்க்கை.
பாபுலாலுக்கு இந்த லிப்ட் வேலை – முதல் வேலை. சம்பளம் கிடைக்கப் போகும் வேலை. நல்ல சட்டை, பேண்டு கட்டாயம். சின்ன துணி மூட்டையை லிப்ட் தூய்மைக்கும் துடைப்பங்கள் அறையில் வைத்து கொண்டான். யாருக்கும் தெரியாமல், ஏதோ மரத்தின் கீழ் சின்னதாய் ஸ்டவ் வைத்துக்கொண்டான்.
வந்த சில நாட்களிலே லிப்டில் சின்னதாய் கிருஸ்ணர் படம் ஓட்டி வைத்துக்கொண்டான். . சில நாட்களில் காலை நேரங்களில் ஊதுபத்தி மணம் கமழ்ந்தது. வெள்ளையான முகத்தில் தகதகவென குங்கும்ம். பெரும்பாலும் வெள்ளை சட்டை, பேண்டு.
“ஜீ ராம்ஜீ” என்று வந்தனம். முகமன்.
அதை அவன் சொல்லும்போதே உடல் ஒரு மாதிரி குழையும். ‘ராம்’ என்று உச்சரிக்கும்போது நெடிலாகவும், அழுத்தமாகவும், முதல் ஜீ பணிவாகவும், இரண்டாவது ஜீ(ராமனுக்காக என்பதால்) தெய்வீகமாகவும் இருக்கும்.
அந்த இடத்திற்கு இது புதிதாக அமைந்தது. பெரியவர்கள் அதை பணிவோடும், மத்திம வயதினர் அதை சிரமத்தோடும், குழந்தைகள் அதே போல நடித்து காட்டி சிரிப்போடும் ஏற்றுக்கொண்டனர்.
என் வீட்டில் அஸ்வத்தாமா அதையே இரண்டு நாட்கள் சொல்லிக் காட்டிக்கொண்டிருந்தான்.
”அஸ்வத், சாப்பிட வா ; ஸ்கூலுக்கு நேரமாச்சே ; இன்னும் ஹோம் ஓர்க் முடிக்கலையா ; பியானோ க்ளாஸ் ஏன் போகலை ?“ எல்லா கேள்விகளுக்குமான பதிலில் அவன் நடிப்போடு “ ஜீ ராம்ஜீ “ யை சேர்த்து கொண்டான்.
” ஜீ ராம் ஜீ.. வர்ரேன் ; ஜீ ராம் ஜீ ஸ்கூலுக்கு ரெடி ; ஜீ ராம்ஜீ இன்னிக்கு ஹோம் ஓர்க் எதுவும் இல்லை ; ஜீ ராம்ஜீ பியானோ டீச்சர் லீவு “
அவன் நண்பர்கள் சேர்ந்த போதும் இதை சொல்லி பேசியே சிரித்துக்கொண்டார்கள்.
” ஜீ ராம் ஜீ.. பால் ஒழுங்கா போடலை கொன்னுருவேன்..”
” ஜீ ராம் ஜீ.. சீக்கிரம் போகலை. எங்கம்மா கத்த ஆரம்பிச்சிருவா..”
” ஜீ ராம் ஜீ.. நாளைக்கு சரியான நேரத்துக்கு வந்துர்றேன் ராம்ஜீ..”
பாபுலாலின் முகமன் மெல்ல மெல்ல உயிர்பெற்று ஓவ்வொரு இல்லத்திலும் நுழைந்தது. வசந்த காலத்தின் உதிரும் இலைகள் தளர்த்தும் சூழல் போல ஒரு இறுக்கம் மெல்லியதாய் நெகிழக் கண்டோம்.
பாபுலால் எப்போதுமே எல்லோரிடமும் ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பான். கேட்பதற்கும், சொல்வதற்கும் நிறைய விசயங்கள் இருந்து கொண்டேயிருந்தன. குழந்தைகள் வேகமாய் அவனை நெருங்கின. அவனும்.
அவன் பேச்சு முழுக்க முழுக்க உபி மணம் கமழும் ஹிந்தி. சுத்த ஹிந்தி. அடனன் சாமியின் உருவத்தில் பிசிறு தட்டாத பிஸ்மில்லா கானின் இசை வாசிப்பு போல பேச்சு. அவன் பேச்சில் அவனே சந்தோசப்பட்டு ஜாகிர் உசேன் போல தலையாட்டி தன்னையே பாராட்டிக்கொள்வான்.
பேசிய வாக்கியங்கள் எல்லாவற்றிலும் ஒரு நீளமாய் “ஹே..” நீண்டியிருக்கும். புதியதாய் கேட்பவர்களுக்கு கொஞ்சம் மதிப்பு குறைவாயிருக்கிறதே என்று எண்ணத் தோன்றும். அதை சொல்லும் விதம் நமக்கு பழகிய ஒரு நட்பான பெரியவர் உரிமையோடு பேசுவது போலயிருக்கும்.
” என்ன நவீனா பேன்.. இவ்வளவு லேட்டாய் வருகிறாய்.. உலகம் கெட்டு கிடக்கிறதே..” [அப்படி கேட்ட அம்மா முகத்திலே புக்கை தூக்கி எறிந்தவள் நவீனா பேன்]
” இப்படி இருமுருகிறதே.. சந்தோஸ் ஜாதவ் ஜீ.. மருத்துவமனை போகலாமே..” [ பிள்ளை கூட்டிக்கொண்டு போனால் மாட்டேன் என்றா சொல்கிறது உடம்பு. அவனுக்கும், எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் மருமகளுக்கும் நேரம் தான் இல்லை. அதை நினைத்து எப்போதும் அவர் மனம் ஒரு கொதிநிலையிலே இருக்கும்]
” ஸீரி ராம்ஜீ.. இந்த மாநரகத்தில் எப்படித்தான் இவ்வளவு வருடம் குப்பை கொட்டினீர்களோ, வயசான காலத்திலாவது உங்கள் கேரளாவுக்கு போகலாமே நாயர்ஜீ..” [ ஓவ்வொரு வருடம் அப்படி போகவேண்டும் என்று நினைக்கிற போதெல்லாம் மனைவி, மகன், மருமகள்கள் ஏதாவது சண்டை போட்டு அந்த வாதத்தையே குப்பை தொட்டியில் போட்டு விடுவதால் “ஊர்” பற்றிய பிரமாதமான பேச்சுகள் கேட்டால் நாயருக்கு கடுப்பு]
” என்ன ரமணி சார், ஜீம்முக்கு போறதில்லையா.. பரவாயில்லை வாக்கிங், ஜாக்கிங் ஏதாவது போங்க சார். கண்டிப்பாய் சிலிம் ஆயிருவிங்க [ஓவ்வொரு வருடம் என் முதல் மாத டைரிக் குறிப்போடு காலாவதியாகிற உடற் குறிப்புகள் பற்றிய குற்றவுணர்வோடு மித்த பதினொரு மாதமும் வாழும் ஆத்மா நான். சொல்லத் தேவையின்றி உயரும் குற்றவுணர்சியும், இவன் வேற இழவு என்கிற சலிப்பும்]
மேலும், நட்பு பழக, பார்வை பழக “ஹா.. மேம்சாப்..” என்று அவன் கூப்பிடுவதும் குறைந்து, “ஓ.. ஏவ்..” என்று ஒருமையில் மாறிப்போனது. அதிக இடம் கொடுத்துவிட்டோமோ என்கிற மனக் குழப்பம். என்னவானாலும் லிப்ட் பணியாள் அப்படி பேசுவதை மகாசனங்கள் உள்ளுற விரும்புவதில்லை..
அவன் லிப்டையும் மற்ற மனிதர்கள் போலவே கருதினான். எங்களுக்கு சின்னதாய் ஒரு ஆசுவாசம். லிப்ட் நின்றால் தனியா அவஸ்தைப்பட வேண்டாம் , பேச்சு துணைக்கு பாபுலால்.
லிப்டை சின்னதாய் கோபிப்பான். அதனுடன் எப்போதும் பேசுவான். தனியாய் இருக்கும் போது பாடிக்கொள்வான். லிப்டும், கிருஸ்ணரும் மட்டும் அதை முழுவதுமாய் சகித்து கொண்டார்கள். அவனுக்கும் லிப்டுக்குமான பகடையாட்டம் அலகிலா விளையாட்டாக இருந்த்து.
லிப்ட் பிரச்சனை செய்த போது கெட்ட வார்த்தைகளால் கடிந்து கொண்டான். அது பிரச்சனையின்றி இயங்கிய சில நாட்களை செல்லமாய் நினைவு கூர்ந்தான். அந்த விளையாட்டு எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவனோடு சேர்ந்து அவர்களும் லிப்டோடு பேச ஆரம்பித்திருந்தனர். அது சுகமின்றி போனபோது அதை சரிசெய்ய வந்த பொறியாளர்களிடம் கோபமாய் சண்டையும், மிதமிஞ்சிய கெஞ்சலும் கொண்டான்.
“நேத்து பாருங்க ரமணிஜீ, டக்குனு நாலவது போர்ல நின்னுபோயிருச்சு.. ஒரு எத்து விட்டேன் பாருங்க.. பேசாம.. சொல்றபடி கேட்ட்து.. “
“விபுல்ஜீ.. அவ்வளவு ஓன்னும் மோசமில்லை.. கேட்டிங்களா.. நம்ம கைக்கு அடங்காத குதிரைன்னு ஒன்னு உண்டா.. என் கிராமத்துல இப்படித்தான் ஒரு மாடு துள்ளினு இருந்திச்சு.. விட்டேன் பாருங்க்.. உடனே வழிக்கு வந்திருச்சு… நான் யாரு..”
” மேத்தா ஆண்டி.. பிரச்சனையில்லை.. எல்லாம் சரி செய்தாச்சு.. தைரியமா வாங்க.. நம்ம லிப்ட்..”
“ நாயர்ஜீ.. கறித்துண்டு நிறைய கீழேயே போட்டுட்டு போயிருக்கீங்க போல.. வீர் ஜெயின் என்னை கண்ட மாதிரி கத்துராரு.. கொஞ்சம் பாத்து. பாவம் லிப்டுக்கும் வாசமடிக்குமில்ல..”
லிப்டின் தொல்லைகள் அதிகரித்தன. லிப்டிற்காக இரண்டு ஸீப்டுகளை அவனே சேர்த்து செய்தான். லிப்டை அவன் திட்டலாம். ஆனாலும் அதை யாரும் திட்டுவதையோ, அதைப்பற்றி குறை சொல்லுவதையோ அவன் உள்ளுர விரும்புவதில்லை.
சின்னதாய் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு கதவு திறந்து, மூடி, பொத்தான் அழுத்தி, மறுபடி திறந்து, மூடி – மிக இலகுவான வேலைதான். ஆயினும், லிப்ட் பணி எடுத்துக்கொண்ட நேரம், அவனுக்கு கிரகங்கள் எல்லாமே வக்கிர நிலையில் இருந்திருக்க வேண்டும்.
நகையும், சதையுமாய் லிப்டோடு இணைந்து போன பாபுலாலை அடித்து, துரத்த வேண்டியிருந்த்து. அதற்கான நிறைய காரணங்கள் இருந்தும், இரு முக்கியமான நிகழ்வுகள். அவை கீழே.
அ) ஐந்தாம் தளத்திலிருந்த விசால் தாக்கரே லிப்ட் நின்ற ஒருநாளில் ஏதோ திட்டிக்கொண்டிருக்க பாபுலால் கேட்டான்.
”சார்.. என்ன சார். மராத்தில திட்டிருங்க..ஹிந்தில திட்டினா.. நானும் புரிஞ்சிப்பேன்ல..” பாபுலால்யாதவ்.
” அட.. யூபிக்கார.. பையா * நாயே.. இங்க வந்து இந்த பாசை தெரியாம..என்ன மயித்துகுட. சுத்**.. இதில எனக்கு வேற அறிவுரை.. தலைவர் சொல்றது சரிதாண்டா. ”
பேசாமல் படார், படார் என்று அடிக்க ஆரம்பித்தார் விசால் தாக்கரே.
” இனிமே பையா யாரவது லிப்டில நின்னா, அங்கயே பொதச்சிடுவேன்.. எந்த கம்னாட்டி வேலக்கு வர்றதுன்னாலும் மராத்தி படிச்சிட்டு வாங்கடா.. அவனுக்கு மராத்தி தெரியுமான்னு பாத்து எடுங்கய்யா.. “
ஆ) ரஜினி ஆண்டியின் கை லிப்டில் சிக்கி விரல் சிதைந்ததில் ஒரு விரல் எடுக்க வேண்டி வந்தது.
” ஐயோ, சார்.. நான் ஒன்னுக்கு போறதுக்கு போயிருந்தேன்.. சார். அவங்க்கிட்ட வெயிட் பண்ண சொல்லிட்டுத்தான் போயிருந்தேன்..சார்.. ரஜினிம்மா.. எம்மேலெ தப்பு இல்லமா.. கிருஸ்ண சத்தியமா.. சொல்லுங்கம்மா.. நான் தப்பு பண்ணு வேணாம்மா.. நீங்களே சொல்லுங்கம்மா..“
கடைசி நாளில் அவனை வேலையை விட்டு போகச் செல்லும் சொசைட்டி மீட்டிங்கில் நானும் இருந்தேன். அவன் மீது நிறைய மராத்தி வசவுகள் வீசப்பட்டன. புரியாமல் முழுக்க, அவனுக்கு இந்தியில் மறுபடியும் சொல்லப்பட்ட்து.
அவன் தான் தவறு செய்யவில்லை என்று வாதாடினான். கை போனது லிப்டின் தவறில்லை என்று வாதாடினான்.. இனி தவறுகள் வராது என்று அவனுக்காகவும், லிப்டிற்காகவும் வேகமாக பேசி முறையிட்டான். லிப்டின் மீது தப்பு என்று சொல்லி அவனை காப்பாற்ற நினைத்த என் மீதும் பாய்ந்து பிராண்டினான். முட்டாள்.
புரியாமல் பேசுவது தொடர்ந்து போய், ஒரு சூழலில், கிட்டதட்ட அவனை அடித்து, துரத்தினார்கள். அவனை வேலைக்கு வைத்த செக்யூரிட்டி காண்டராக்டரும் அவனை சில வசவுகளோடு அனுப்பி வைத்தான்.
அவன் லிப்டின் மீது இவ்வளவு நட்பு கொண்டிருக்க கூடாதோ ?. அது ஒரு வேலை. லிப்ட் ஒரு இயந்திரம். அவன் வேலை செய்ய உதவுகிற இயந்திரம் என்று மட்டும் அவன் எண்ணியிருந்திருக்கலாம். இயந்திரத்தின் மீது பழியை போட்டு தப்பித்திருக்க வேண்டும்.
ரஜினி ஆண்டி தனது கை விரலுக்காய் கோர்ட்டில் சொசைட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததை, தொடர்ந்து உடனே, லிப்டை மாற்றினார்கள். கிருஸ்ணர் பட லிப்டை உடைத்து, பழைய சாமானாய் ஒரு நிறுவனம் எடுத்துக் கொண்டது. பாபுலால் உட்கார்ந்திருந்த பழைய சின்ன ஸ்டுல் லிப்டின் அழகை கெடுக்கிறது என்று அது தூக்கியெறியப்பட்ட்து.
புது லிப்ட் எந்த மனிதர் இன்றியும் தானே இயங்கிற்று. ஓவ்வொரு தளத்தையும் அதுவாய் சொன்னது. நின்று போனால் ஒரு அவசர அழைப்பு பொத்தான் இருந்த்து. அதற்கு அவசியமேயில்லாமல் அது சத்தமில்லாமல் இருக்குமிடம் தெரியாமல் இயங்கிக்கொண்டிருந்தது, மெட்ரோ மனிதர்களைப் போல
*
6.
சோம்பலான ஞாயிறு. அழைப்பு மணி. ’பாபுலால் யாதவ் – இவன் ஏன் இப்போது வருகிறான்’ கதவை திறந்த எனக்கு குழப்பம். மறுபடியும் வேலை கேட்கப் போகிறானோ ? கேட்டால் கண்டிப்பாய் முடியாது என்று சொல்லிவிட வேண்டும். சொல்கிற பதிலிலும், முறையிலும் அவன் திரும்ப வரவே கூடாது. இது சரியா, தப்பா என்று சிந்திக்கிற வேளையில்லை. அது என் வேலையுமில்லை.
இந்த மடமில்லை என்றால், வேறு மடம். இன்னொரு லிப்ட். அவனுக்கு வேலை கிடைக்காமலா போய்விடப் போகிறது. ஏதோ ஒரு ப்ளாட். இழுத்து மூடி, திறந்து, தளம் கேட்டு பொத்தான் அழுத்துகிற அதே வேலை. கொஞ்ச நாள் வேலையில்லாமல் இருக்கலாம். அதனாலென்ன, யார் தான் இந்த காலத்தில் கொஞ்ச நாளாவது வேலையில்லாமல் இல்லை.
” ஹீம். போலோ. க்யா .. ச்சாயியே.. ( சொல்லு.. என்ன வேணும்..) “ எனது குரலில் கடுமையை ஏற்றிக்கொண்டேன். முகத்தில் ஒரு வெறுப்பை தருவித்துக்கொண்டேன்.
அவன் பார்வை என்னை விடுத்து வீட்டிற்குள் தேடியது. என்னிடம் அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மறுபடியும் நான் குரலை உயர்த்தினேன். எனது குரல் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் வாசலில் நின்றவாறு, என் வீட்டிற்குள் ஏதோ தேடினான். தீடீரென்று முகம் மலர்ந்து, மெல்லியதாய் சிரித்தான்.
திரும்பிப் பார்த்தேன். அஸ்வத்தாமா நின்று கொண்டிருந்தான். அவனும் சிரித்தபடியே.
“ ஜீ ராம்ஜீ..அங்கிள்.. ஆயியே (வாருங்கள் ) ..”
பாபுலால் வீட்டிற்குள் வரவில்லை. மாறாக அஸ்வத்தாமாவை வெளியே வரும்படி அழைத்தான். என்னை தாண்டி அஸ்வத்தாமனும் நகர்ந்து அவன் பக்கம் சென்றான்.
பாபுலால் அவனிடமிருந்த புத்தகங்களையெல்லாம் கொடுத்தான். மெல்லியதான ஒரு சின்ன கட்டியணைத்தலோடு கண்ணீர் மல்க நன்றி சொன்னான்.
“ ஜீ ராம்ஜீ..தன்யாவாத்.(நன்றி) தம்பி.. “ அவன் குரல் தழுதழுத்தபடியே சொன்னான்.
“ ஓகே. அங்கிள்.. கதிகியா..(எப்ப வேணுமானுலும் வாருங்கள்.. மராத்தியில்) “
ஏதோ மராத்தியில் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தார்கள். சில புத்தகத்தை அவன் கொடுத்தான். சிலவற்றை வாங்கிக் கொண்டான்.
பாபுலால் என்னை திரும்பிக் கூட பார்க்காமல் லிப்டை பயன்படுத்தாமல் படி வழியே திரும்பி போனான்.
“ என்னடா.. இது.. “ அஸ்வதிடம் நான். காண்பித்தான். சில மராட்டி, ஆங்கில அடிப்படை புத்தகங்கள்.
“ எதுக்குடா இதெல்லாம்.. “
“ பாபுலாலுக்கு சொல்லிக் கொடுக்கப்பா.. எஙக் ப்ரெண்ட்ஸ் சில பேர் சேர்ந்து அவனுக்கு கொஞ்சம் மராத்தியும், இங்கிலீசும் சொல்லி கொடுத்தேம்பா..நல்ல மனுசன்பா.. வேறெங்கயும் அடிபட மாட்டான் பாருங்க..”
அஸ்வத்தாமா ஆழமானவன். எனக்கு ஏதோ பண்ணிற்று. ச்சை.. நல்ல மனுசன்.. என்ன நல்ல மனுசனோ.. அப்ப நாமெல்லாம்.. ச்சை.. பாபுலாலின் கிருஸ்ணர் குழலூதுகிறார். பிரமையோ.. நினைக்க, நினைக்க உள்ளுக்கு உடைய..
எங்கள் ப்ளாட்டின் புதிதாக நிறுவியிருந்த தானியங்கி லிப்ட் எங்கள் தளத்தில் நின்று ஆங்கிலத்திலும், மராத்தியிலும் தளத்தின் எண்ணை இயந்திரக் குரலில் சொல்லிவிட்டு மேலே போனது.
கீழறங்கிப் போன பாபுலாலுக்கு பால்கனியில் இருந்து கையாட்டி விடை கொடுத்துக்கொண்டிருந்தான் அஸ்வத்.
எல்லாவற்றையும் இயந்திரமாய் மாற்றிவிட வேண்டும். கோளாறு செய்யாத நல்ல இயந்திரமாய். எல்லா மொழியும் எப்போதும் பேசும் இயந்திரமாய். யாரிடமும் கோபிக்காத, எந்த சூழலிலும் உணர்ச்சி காட்டாத, குறை சொல்லாத இயந்திரமாய்.
நினைக்க, நினைக்க

நானே இயந்திரமாய் மாறுகிறேன். மேலே, கீழே போய் வருகிறேன். எல்லாவற்றையும், எல்லாமும் தெரிந்த, எந்த பிரச்சனைகளுமற்ற, சித்தமற்ற இயந்திரமாக்கிவிடுகிறேன். யாரோ அழுத்துகிறார்கள். அழைக்கிறார்கள். மேலே போகிறேன். சுமந்து கீழே விட மறுபடியும் அழைப்பு. மேலே போகிறேன்.

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி