கமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது )


கமண்டலத்தில் நதி

( நன்றி- கலாப்ரியா கவிதை)

சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” பற்றி கோவை சி ஆர் ரவீந்திரனின் கட்டுரை சென்ற இதழில் வெளியாகியிருந்தது . அது சில யோசிப்புகளுக்குக் கொண்டு சென்றது.

துயரம் என்பது எப்படி வரும்.உடலால், மனதால், சூழ்நிலையால் இன்னும் எப்படி எல்லாம் வருமோ? அப்படி எல்லாம் வருகிறது செல்லமணிக்கு. செல்லமணியின் துயர நதி – அவள் அனுபவம் ஓடும் நதியாக மாற்றம் அடைந்துள்ளது. நதி என்ற குறியீடு பெண்ணையும், அவள் அனுபவ எண்ணங்களையும் குறிப்பதாகவே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

செல்லமணியின் தற்கொலை எண்ணத்தில் ஆரம்பமான நாவல் அவள் நொண்டி புருஷனோடு வாழ்வதாக முடிகிறது. நிறைய முரண்பாடுகள் நிறைந்தது இந்நாவல். செல்லமணியின் சில மாத அனுபவங்கள் நீண்ட அத்தியாயங்களில் விவரிக்கப்படுகிறது. அவளோடு சில கண அனுபவங்கள் கூட நாவல் முழுவதும் வருகிறது. பல வருட வாழ்க்கை சில பாராக்களில் முடிகிறது. இப்படித்தான் வாழ்வு அமைகிறது.

‘சொக்கன்’ என்ற தலித் பாத்திரம் வில்லனாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும்? . சொக்கன் செல்லமணியை விட்டு செல்ல காரணம் என்ன என்பது நாவலில் இல்லை. செல்லமணியோடு இருக்கும் துயரத்தோடு அவன் செல்கிறான், நாவலை விட்டு வெளியேறுகிறான். சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிராகவே அந்த அத்தியாயங்கள் நீள்கிறது. ஆனால் பின் அத்தியாயங்களில்
கவுண்டர்களின் சாதி ஆதிக்கம் குறித்தும், தண்­ர் பிரச்சனையில் ஆதிக்க வெறியோடும், தலித்களுக்கு எதிராக கொலைவெறி தாக்குதலும் விவரிக்கிறது. அதில் கம்யூனிஸ்ட்களும் சாதி பின்னணியோடு இருப்பதாக குற்றச்சாட்டை, விமர்சனத்தை முன் வைக்கிறார். இது சிறுபான்மையினருக்கு எதிரான குரலாக அமைந்து விடும் அபாயத்தை தருகிறது.

நாவலில் செல்லமணி அனுபவத்தைவிட நம்மை வியக்க வைப்பது என நாகாலாந்து கடிதங்களை சொல்லலாம். அது தனித்து நாவலாக வந்திருக்க வேண்டியது.செல்லமணி வாழ்வோடு- எந்த வகையிலும் ஒட்டாதது. நவீன எழுத்தும் உத்தியும் புதிய அனுபவத்தோடும் ஆதி பொதுவுடைமை மக்களின் தொடர்ச்சியாகவும், கடிதங்கள் நன்றாக வந்துள்ளன.

அப்புறம் மேரி, பக்ருதீன் உறவு வித்தியாசமாக அமைந்து உள்ளது. வயதானவனின் காமம், இளம் பெண்ணின் தேவை என்ற உறவு நிலை- மிகச் சரியாக சித்தரிக்கப்படுகிறது.

வக்கீல், செல்லமணி உறவு கூட அப்படித்தான். ரமேஷ்குமார். அவள் வாழ்வில் வருவதை- அந்த வன்புணர்ச்சியை நிகழ்வை விவரிப்பது- இன்னும் துயரமிக்க அவள் உடல்வலியையும், மனவலியையும்- இன்றும் பதிவு செய்ய வேண்டியது.

செகந்திராபாத் ஜுலியின் வாழ்வு கூட நமக்கு புது அனுபவமே இன்னும் வடிவ நேர்த்தி கொண்டு நல்ல பெண்ணிய நாவலாக வர வேண்டியது அவரின் ஆண் பார்வை நாவலில் மிகுந்தே வருவதும்,. நவீன கதை சொல்லல் முறையும்- வாசகன் அவரின் மற்ற நாவல்களில் கண்டடைந்ததே. என்றாலும் குறிப்பிடத்தக்க நாவல் ” ஓடும் நதி ”

( ” ஓடும் நதி ” அமிர்தா பதிப்பகம் , சென்னை விலை ரூ 150/- பக்கங்கள் 346. )


– சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது )

அனுப்பியவர்: ramtongauler@gmail.com

Series Navigation

சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது )

சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது )