‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

பிரபஞ்சன்


நாவல் என்பது இத்தன்மையிது, இவ்வடிவமைந்து இருப்பது என்றெல்லாம் அடிக்கடி பலரும் சொல்லக் கேட்கிறோம். இந்தப் பலரும் விமர்சர்களாகவே இருக்கிறார்கள். விமர்சகர்கள் பணி இது என்றும் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு நாவல் மட்டுந்தான் விஷயம். நாவல் நமக்குத் தருவது என்ன, நம்மோடு அது தொழில் புரியும் தளம் இவை மட்டுமே வாசகர் என்ற முறையில் நமக்கு முக்கியம். வேறு எதுவும் இல்லை.

நாவல் என்பது தத்துவத்தின் பிம்பவடிவம் என்றோர் கருத்துண்டு. ஆயிரத்து தொள்ளாயிரத்து அருபதுகளில் ஆல்பர் கெமுவின் அந்நியன் வந்தது. மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு அது. கெமுவின் உலகம் பற்றிய புரிதலுடன் மிகுந்த அக்கறையோடு வெளிவந்த பதிப்பு அது. அந்நியனுக்குப் பிறகு தமிழ் நாவலின் முகம் மாறியது. தமிழ்ச் சூழலில் சம்பத், சிங்காரம், பின்னர் வந்த தினை சார்ந்த நாவல்களிலும், அண்மையில் வந்திருக்கும் யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்), நிலாவை வரைபவன் (கரிகாலன்) வரையிலான தமிழின் முக்கிய நாவல்களிலும், சார்த்தரும் பாக்னரும் ஹெமிங்வேயும் கரைந்திருப்பதை தேர்ந்த வாசகர்கள் அவதானிக்கமுடியும்.

தத்துவம் பற்றிய பொதுபுத்தி மிகவும் வெளிப்படையானது. டாக்டர் ராதாகிருஷ்ணன் இங்கு தத்துவவாதி. ஓஷோவும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தத்துவ ஞானிகள். (இதில் முதலாமவர் பத்து லட்சம் விற்கிற பத்திரிகையின்படி செக்ஸ் சாமியார்.) வீடுவரை உறவு, வீதிவரை மனைவி என்றால் மிகச் சுலபமாக தத்துவக் கவியாக முடிகிறது.

நாகரத்தினம் கிருஷ்ணா, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் கல்வி அப்படி அவருக்கு வாய்த்தது. பிரெஞ்சு குவர்னர்கள் மற்றும் அக்காலத்து பிரதேச பூடகத்துடன் கூடிய சம்பவக் கோவையுடன் முன்னர் இவர் எழுதிய நாவல் கவனம் பெற்றுள்ளது. சுயமான சிறுகதைகளும், பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்த்தும், இவரது படைப்புகள் மேலும் கவனப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இப்போது மாத்தா ஹரி ( புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை) என்னும் பெயரில் நாவலுடன் வந்திருக்கிறார்.

மாத்தா ஹரி வேவுக்காரியாக அறியப்பட்டு அல்லது தவறாக அறிந்துகொள்ளபட்டு பிரான்சில் 1917ல் சுட்டுக் கொல்லப்பட்டவள். அவள் காலத்தில் பேரழகியாகக் கருதப்பட்டவள். இராணுவ அதிகாரிகள், எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள், அரசியல் சித்தாந்திகள் என்று பலரின் கனவுகளிலும் மாத்தா வந்து போனதாகச் சொல்லப்படுகிறது. தானே தானக்கென்று ஓர் அதிகார மையத்தை நிறுவிய அவள், இடைக்காலத்தில் தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த ஒன்றாக இருந்த உடலை முன்னிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்பட்டாள். மாத்தா ஹரியைப் பற்றிய புனைவுகள் உருவாகி புத்தகங்களும் திரைப்படங்களும் வெளிவந்தன. மாத்தா ஹரியை அவர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்தார்கள். நான் இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன்.

மாத்தாஹரிக்குப் பிறகு பிரான்சுக்குப் போன பவானி, பவானியின் மகள் ஹரிணியைப் பற்றிய அடுக்குகளாலான நாவல் இது. மாத்தா, பவானி, ஹரிணி மூவரும் ஒருவரைப் போலவே மற்றவரும், ஒருவர் பெற்ற அனுபவங்களை மற்றவரும், ஏதோவொரு வகையில் போராட்டங்களுக்கு மத்தியில் வாழ நேர்கிறவர்கள் எனும் நூலே இவர்களைப் பிணைக்கிறது. இதற்கு மேல் கதையை விவரிக்க முடியாது. ஏனெனில் நாவல் கதைகளால் ஆனதல்ல. நாவலுக்குள் கதை இருக்கலாம். இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

மூன்று பெண்களின் இருப்பைச் சொல்வதன் மூலமும், அவர்களைப் பற்றிய அடுக்கிலும் நாவலைக் கொண்டு செலுத்துகிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. நேர்க்கோட்டுச் சொல்லல் முறை இல்லை. அதனாலேயே முன்பின்னாக, சௌகரியம்போலச் சொல்லிச் செல்கிறார். நாவலின் அடர்த்தி கூடுதலுக்கு இம்முறை அவருக்கு அனுகூலமாகக் கைகொடுத்திருக்கிறது.

மாத்தா ஹரி, பவானி, ஹரிணி என்னும் இம்மூன்று பெண்களின் வாழ்க்கையைச் சற்றே ஒதுங்கல் பார்வையுடன் நாகரத்தினம் கிருஷ்ணா சொல்லிச் சென்றாலும் இம்மூவருக்கும் அமைந்த வாழ்வு சற்றேறக்குறைய ஒரு நிறமாக இருப்பதை வாசகர்கள் அவதானிக்கமுடியும். மாத்தா, பவானி, ஹரிணி இம்மூவரும் இருபதாம் நூற்றாண்டை முழுவதும் நிரப்புகிறார்கள். அந்த நூற்றாண்டின் முதலிரு தசாம்சங்களை மாத்தாவும், இடைப்பகுதியை பவானியும், இறுதிப்பகுதியை ஹரிணியும் எடுத்துக்கொள்கிறார்கள். எனினும் அவர்களின் மூவர் வாழ்க்கையும் முன்னர் சொன்னதுபோல ஒரு நிறம், ஒரு வாசனை, ஒரு பயணம். இதன் பொருள் எல்லாப் பெண்களும் ஏதோ ஒருவகையான நுகத்தடிகளைச் சுமக்கிறார்கள் என்று சொல்லி, இதைப் பெண்ணிய நாவல் என்று ஒரு சிமிழுக்குள் அடக்கிவிடமுடியுமா என்றால் முடியாது. மேலும் ஒரு நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல் இது.

உண்மையில்லாத புனைவு எது என்று ஓரிடத்தில் ஆசிரியர் கேட்கிறார். உண்மையில் பொய்யும் புனைவுகளுக்குப் பங்களித்துள்ளது. புனைவுகளைப் பொருத்தவரை உண்மை பொய் என்பது எதுவுமில்லை. இரண்டும் பிணைந்ததுதான் படைப்பு. சமபவங்களால் இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கவில்லை. சூட்சுமமான பல அடுக்குகளில் இது எழுதபட்டிருக்கிறது. மாத்தாவின் வாழ்க்கையே பல இருளடுக்குகளாலும் புதிர்களாலும் பிணைந்தது. பவானியின் முடிவு தற்கொலையா கொலையா என்கிற புரிதலிலும், ஹரிணி தொலைந்துபோதல் என்கிற புனைவிலும் என்று பல கேள்விகளால் ஆன பிரதேசங்களில் பயணம் செய்கிறது நாவல். அவ்வப்போது ஒரு துப்பறியும் புதினமாகத் தோற்றம் தந்தாலும், இது அந்த வகைப்பட்டதுமல்ல. மகள், தன் தாயாரைக் கண்டடையும் முயற்சியின் ஊடாகப் புனைவைக் கட்டமைக்கிறார் கிருஷ்ணா. பவானி பற்றிய தேடலில் பவானியோடு மாத்தா இணைக்கபடுகிறார். இந்த மூன்றடுக்கு நாவலில் ஒரு நூற்றாண்டு கடந்து போகிறது, சப்தம் இல்லாமல்.

இருபதாம் நூற்றாண்டின் குறுக்குவெட்டாக கதைப் பயணம் நிகழ்ந்தாலும், ஆசிரியர் நோக்கம் காலத்தைப் பதிவு செய்வது அல்ல. பிரதி, அம்மூன்று மனுஷிகளின் ஊடாக, அவர்கள் உணர்ச்சிகள் உந்தித்தள்ளிய நிகழ்ச்சிகள் மூலமாகப் புனைவின் வழியாகக் கட்டமைக்கப்படுகிறது. ஆகவே நாவல் முழுமையும் மனிதக் கவிச்சியும், மனித ஊடாட்டமும், மனித வேரூன்றுமாக நடக்கிறது பிரதி.

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு நல்ல கதை சொல்லியாகத் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். எழுத்து அவருக்கு நீர்ப்பரவல் மாதிரி மிக இயல்பாக வருகிறது. உண்மையில் நாவல் என்கிற வசன வடிவம், வசனத்தின் உயிர்ப்பில்தான் இயங்குகிறது என்றால் தவறில்லை. இயல்பான கட்டுடைத்து நீளும் வசனப் பரப்பில்தான் நாவல் சாத்தியம்.

தமிழ் நாவல் பரப்பில் புதிய வரவாக நாகரத்தினம் கிருஷ்ணாவின் முயற்சி பதிவாகியிருக்கிறது. அடுத்தடுத்து முயற்சிகளிலும் பாய்ச்சல்களிலும் அவர் நிலைபெறுவார். இந்த மாத்தா ஹரி நாவலும் கவனிக்கப்படும்.


– மாத்தா ஹரி நாவலுக்கான பிரபஞ்சன் முன்னுரை
மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை) -நாவல், ஆசிரியர்- நாகரத்தினம் கிருஷ்ணா விலைரூ 150. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், –//–102 எண் 57பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர். சென்னை 600017-இந்தியா.

Series Navigation

பிரபஞ்சன்

பிரபஞ்சன்