கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

க.நாகராசன்



நவீன கவிதைவெளிக்கு இன்னும் ஒரு வரவாக பாவண்ணனின் புன்னகையின் வெளிச்சம் தொகுப்பு வெளிவந்துள்ளது. பிரசுரமான மற்றும் பிரசுரமாகாத ஐம்பத்தெட்டு கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். குழந்தையைப் பின்தொடரும் காலம், கனவில் வந்த சிறுமி ஆகிய தொகுப்புகளை அடுத்து வெளிவந்துள்ள பாவண்ணனின் மூன்றாவது கவிதைத்தொகுப்பு இது.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அளவில் சிறியவை. ஒன்றரைப்பக்க அளவைத் தாண்டாதவை. எளிமையான மொழியும் கவிதைக்குள் வாசகனை தாராளமாக அனுமதிக்கும் தன்மையும் தொகுப்பின் சிறப்புகளாகக் கூறலாம். எல்லாக் கவிதைகளுமே மிக அழகாக காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆரம்ப வரிகளில் தொடங்கும் விவரிப்பு, ஓர் அழகான ஓவியமாக வாசகனின் கண்முன் விரிகிறது. ஒவ்வொரு வரியின் துல்லியமான சலனங்களையும் காட்சிக்குள் உணரமுடிகிறது. சிறந்த காட்சிப்படுத்தலுக்கு எடுத்துக்காட்டுகளாக ‘நிறைதல்’, ‘மாநகர கோவர்த்தனள்’, ‘மழைப்பறவை’ ஆகியவற்றைச் சொல்லலாம். பெயர் தெரியாத ஊரின் கடற்கரை ஓரத்திலுள்ள தென்னந்தோப்பில் கொட்டாங்கச்சியைக் கொண்டு மேள இசையை உண்டாக்கி மகிழ்ச்சியில் மிதக்கும் சிறுமியொருத்தியின் சித்திரத்தைத் தீட்டிக்காட்டுகிறது நிறைதல் கவிதை. இந்த மேள இசை சுற்றியுள்ள பிரபஞ்ச இசையாக மலரும் அற்புதமான அனுபவம் கவிதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

‘புன்னகையின் வெளிச்சம்’ என்கிற தலைப்புக்கவிதை மிகமுக்கியமான ஒன்று. சமையலறை இறவாணத்து மூலையில் தட்டுமுட்டுச் சாமான்களோடு கிடக்கும் ஒரு கையுடைந்த மரப்பாச்சிப் பொம்மையை தற்செயலாக கண்டெடுக்கும்போது மலரும் உணர்வுகளே இக்கவிதை. புன்னகையின் வெளிச்சம் என்கிற தலைப்பே கவித்துவம் மிகுந்ததாக உள்ளது. இருண்டு கிடக்கும் நம் வாழ்வுக்கு வெளிச்சத்தைத் தந்து பல சம்பவங்களை நாம் காண வழிவகுக்கிற நம் அனுபவ நினைவுகளை புன்னகையாக உருவகப்படுத்தியுள்ளது மிகப்பொருத்தமாக உள்ளது.

எல்லாக் கவிதைகளும ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ள விதம் படிப்பதற்கு உற்சாகம் வழங்குவதாக உள்ளது. ‘காட்சி’, ‘கனவுச்சித்திரம்’ கவிதைகளை நல்ல எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். கனவுச்சித்திரம் கவிதையில் முதல்வரியும் கடைசிவரியும் இல்லையென்றால் விவரிக்கப்பட்டுள்ள காட்சி ஒரு கனவு என்பதையே உணர வழியில்லை. எண்ணங்களைப் பல திசைகளைநோக்கித் திருப்பிவிடும் அழகான திருப்பங்களைக் கொண்ட முடிவுகளோடு பல கவிதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பூ, பாரம், இலையின் துக்கம், மழையின் துணை ஆகிய கவிதைகளைச் சொல்லலாம். பல கவிதைகள் சிறுகதைக்கான வடிவத்தைக் கொண்டுள்ளன. பயணம், அதிகாலையின் அமைதியில், பின்னிரவு வாகனம் ஆகிய கவிதைகளை இவ்வகையில் சேர்க்கலாம்.

‘இளமை’ ஒரு மகத்தான அனுபவத்தைத் தரும் கவிதை. நாற்பது வயதை நெருங்கும் மனிதனிடம் இருந்து இளமை விடைபெற்றுக்கொள்வதும் முதுமை வந்தடைவதுமே இக்கவிதை. குறித்த நாள் முன்னிரவில் இளமைக்கும் கவிதைசொல்லிக்கும் இடையில் நடக்கும் விருந்து மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இளமை தருகின்ற முத்தம் கவிதையைப் படிக்கிற வாசகனைப் பரவசத்துக்குள்ளாக்குகிறது.

தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாக ‘இரண்டு விஷயங்களைக்’ குறிப்பிடலாம். ஒண்டிக் குடித்தனங்களின் நடுவில் உள்ள நாலு சதுர அடி கொண்ட கிணறு இக்கவிதையில் விவரிக்கப்படுகின்றது. கிணற்றை நகரத்து மாந்தரின் மனத்துக்கு ஒப்பிடும் படிமக்கூறுகள் கவிதையெங்கும் விரவிக்கிடக்கின்றன. கவிதை ஏராளமான வாசல்களைத் திறக்கிறது. நிலவொளியையும் சூரியக்கதிர்களையும் கர்ப்பிணிப்பெண்களையும் பறவைகளையும் அண்டவிடாத கிணறு பல புதிய விரிவுகளைநோக்கிய பயணங்களைத் தொடங்கிவைக்கிறது.

எல்லையற்ற சாத்தியங்களை முன்வைக்கும் இன்னொரு கவிதை ‘மாயத்தோற்றம்’. பிரபஞ்சத்தின் எல்லாப் பொருளும் பஞ்சபூதங்களால் ஆனது என்கிற கோட்பாட்டுக்கு நிகரான ஒரு மாய விளையாட்டை முன்வைக்கிறது கவிதை. ஆசைப்படும்போது எதுவும் கிடைப்பதில்லை. ஆனால் தேவையே இல்லாத தருணத்தில் ஆசைப்பட்டது கிடைக்கும் வாழ்வின் முரணை போகிறபோக்கில் நினைவுப்படுத்துகிறது.

தொகுப்பு முழுதும் காற்று, காகம், மழை ஆகியவை வலிமையான குறியீடுகளாக உலா வருகின்றன. ‘உயிர்மை’ கவிதையில் வரும் தொகுப்பு வீட்டைக் குறிப்பிடும் நிறுத்திவைத்த குழல் உவமையும் சாபத்தின் மொழி கவிதையில் வரும் மழைக்கான அம்பு என்கிற உவமையும் கவிதைகளுக்குப் பொருத்தமாக அமைந்து வலிமை சேர்க்கின்றன. ‘சாபத்தின் மொழி’ கவிதையில் வரும் ‘மண்ணில் விளையாடாத குழந்தைகள் பொம்மைகள்போல உட்கார்ந்திருக்கிறார்கள்’ என்கிற உருவகம் வாசகனை அதிரச் செய்கிறது.

‘தீராத புத்தகம்’ மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடிய கவிதை. வாழக்கை அனுபவங்களையும் கற்பனை வெளிகளையும் ஊடுபாவாக இணைத்துப் பின்னப்பட்டதாக உள்ளது இக்கவிதை. இதுபோன்ற இன்னும் சில கவிதைகளும் தொகுப்பில் உள்ளன. ‘ஒரு தண்டனைக்காட்சி’ கவிதையை இன்னொரு நல்ல எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ‘ஒரு பகுதிக்கனவு’ மற்றொரு மறக்கமுடியாத கவிதை. எவ்வளவு நினைவுபடுத்தியதும் மறந்துபோன கனவு நினைவுக்கு வரவில்லை என்கிற குறிப்பு சுவாரசியமாக உள்ளது. ஊஞ்சலில் ஆடும் உச்சத்தோடு பகுதிக்கனவு முடிகிறது. ஊஞ்சலின் ஆனந்தம் உணர்ந்தபின் எஞ்சிய கனவு அவசியப்படவில்லை என்னும் கவித்தும் மிகுந்த வரிகள் கவிதையைப் படித்துமுடித்த பிறகும் மனத்தை மீட்டியபடியே உள்ளன.

செறிவு மிகுந்த ‘ஓவியம்’ கவிதை மனத்தைக் கொள்ளைகொள்ளக்கூடிய கவிதை. அதிகாலை நடையில் / தினமும் நான் காணும் / இலை நுனியில் நிற்கும் / பனித்துளி/ முன்பொரு நாளில் / விடைபெறும் கணத்தில் / உன் விளிம்பில் உறைந்த அழுகையை / இன்னொரு முறை தீட்டிக்காட்டுகிறது என்பதுதான் அக்கவிதை. கண்-இலை, கண்ணீர்த்துளி- இலை நுனிப் பனித்துளி, மறக்காத நினைவு – உறைந்த அழுகை என பல உற்சாகமான ஒப்புமைகளைக் கொண்டதாக ஓவியம் மலர்ந்திருக்கிறது. கார் கதவுக் கண்ணாடியில் விரியும் அழகான சித்திரங்களை முன்வைக்கும் ‘அழகுச்சித்திரம்’ கவிதையும் அணிலாடும் முன்றிலை நினைவூட்டும் ‘மரணம்’ கவிதையும் தொகுப்பின் இன்னும் இரு முக்கியக் கவிதைகள். காலடிச்சுவடுகள் கவிதையில் இடம்பெறும் பட்டம் பிரமிளின் காவியத்தை நினைவுபடுத்துகிறது.

இத்தொகுப்பில் அடங்கியுள்ள எல்லாக் கவிதைகளுமே நூற்றுக்கு நூறு விழுக்காடு அளவில் அனுபவப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கின்றன. நல்ல தொடக்கம், சீரான வேகம், முழுமையை உணர்த்தும் இறுதி வரிகள், மறைவான அழுத்தமான படிமங்கள் மற்றும் வலிமையான குறியீடுகள் என அனைத்து அம்சங்களும் கொண்டவையாக உள்ளன பாவண்ணனின் கவிதைகள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வேறொரு விஷயத்தை நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. மே மாத தீராநதி இதழில் வெளிவந்துள்ள துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் நேர்காணலில் இடம்பெறும் வரிகள் அவை. “ஏன் கவிதைகளை எழுதவில்லை?” என்கிற கேள்விக்கு விடையாக ‘கவிஞன் என்பவன் மூலமாகத்தான் கடவுள் பேசுவதாக நான் நினைக்கிறேன்’ என்று சொல்கிறார் பாமுக். பாவண்ணனின் ‘புன்னகையின் வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் நிறைய இடங்களில் கடவுள் பேசியிருப்பதாகவே தோன்றுகிறது.

( 11.05.08 அன்று வளவனூரில் நடைபெற்ற பாவண்ணனின் மூன்று புதிய நூல்கள் ஆய்வுரை நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட கட்டுரை )

gnagarajanpec@gmial.com

Series Navigation

க.நாகராசன்

க.நாகராசன்