சாளரம் திறக்கையில்..

This entry is part of 44 in the series 20110403_Issue

கயல்விழி கார்த்திகேயன்


சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்…

“நிலா நிலா ஓடி வா”வும்
“சின்ட்ரெல்லா”வும்
ரசிக்கிறேன் விழிவிரித்து…
விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு..

அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்…
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..

குறுந்தகடுகளின் கூட்டம் சேர்த்து
வரிபிழறாமல் ரஹ்மானைப் பழகுகிறேன்
ராகம் தவறாமல்…
ரசனை கூட்டுகிறாய் நீயும்.

என் மருதாணிக் கிறுக்கல்
பழக கை தேடி உன் கரம் கேட்கிறேன்..
உள்ள பணியனைத்தும்விட்டு
கைநீட்டி சிரிக்கிறாய்…

சிட்னி செல்டனுக்கும் சுஜாதாவுக்கும்
மாறி புதிதாய்ப் பல
கற்றதாய் நினைக்கையிலும் தோழி
நீ ரசிக்கிறாய் என்னையும்..

“அம்மாவுக்கு எதுவுமே தெரியாது” மாறி
“அம்மாவுக்கு எல்லாம் தெரியுமென எனக்குத் தெரியாது”
உணர்கிறேன் இன்று,
கேள்வி எழுப்பி வெட்கச் செய்கிறது மனசாட்சி..
“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”

விடையில்லா மௌனத்துடன் ரசிக்கத் தொடங்குகிறேன்
“நிலா நிலா ஓடி வா”
நான் ஒரு புது சாளரம் திறந்து..

Series Navigation