தேவதைகள் தந்ததொரு பூங்கொத்து

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எனது கனவின் பாதையில் வந்து நிற்கும்

தேவதைகள் எல்லோரும்

சந்தோஷமிக்கவர்களாகவே இருக்கிறார்கள்

துயரம் கண்ணீர் என்பவற்றின் அர்த்தம்

தேவதைகளின் அகராதியில் இல்லை போலும்.

என்னிடம் கைகுலுக்கிக் கொண்டு

ஒரு பூங்கொத்தை தந்த மாத்திரத்தில்

கள்ளங்கபடமற்று

ஒரு குழந்தையாய் விளையாடத்துவங்குகிறேன்

நான் வாசிக்கும் வரிகளில்

மேலும் கீழும் மிதந்து

ஆழ்மனக்கனவின் நதியில்

ஒரு மீன்குஞ்சு வந்து போகிறது.

என் அப்பாவின் வியர்வைத்துளிகளைத்தான்

நான் குடித்து முடித்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் அம்மாவின்மடியில்

தலைசாய்த்து படுத்துறங்க முடியவில்லை

இரவிலும் விழித்து

பகலிலும்விழித்து

எதையெதையோ சொல்லி அரற்றிக் கொண்டிருக்கும்

அவளைத் தேற்றுவதற்கு

எந்த சொல்லும் இல்லை

எதிரே பறக்கும் பஞ்சவர்ணகொடிக்கு

மரியாதைசெலுத்திவிட்டு புறப்படும்போது

எங்கோ ஓரிடத்தில் குண்டு வெடிக்கிறது

சின்னாபின்னமான என் கனவுகளை

மீண்டும் ஒவ்வொன்றாக பொறுக்கிக் கொள்கிறேன்.

வழி நெடுக கேட்கும்

ஓலங்கள் இல்லாததொரு உலகிற்கு

பூங்கொத்தோடு வந்த தேவதைகள்

என்னை அழைத்துச் சென்றார்கள்

என் கடவுள் இறந்துபோயிருந்தார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்