தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எதனையும் வெல்பவனே !
தயக்க மற்றுப் புதிய
இயற்சக்தி பெற்றவனே !
உதிர்ந்த பூக்கள் சிதறி
ஏராளமாய்
விழுந்த கிளைகளில் எல்லாம்
இளங் காய் கனிகள்
முளைத் தெழுவது போல்
பழைய விதைகளைத்
தூவிக் கொண்டு
பிரமிப்பான நூதன வடிவோடுன்
பேருருவம் தெரிகிறது
பூரணத் தோற்றத்தில்
உனக்குரிய
உள்ளடங்கு வலு வோடு !
சிரம் தாழ்த்து கிறேன்
நானுனக்கு !

++++++++

பயமூட்டுவாய் நீ ! இனிய
அமுதூட்டுவாய் நீ !
களைப்படை யாதவனே !
கரைந்து தேய்வடை யாதவனே !
புதிதாய் உதித்த
போராட்ட வாதியே !
என்ன ஊழ்விதியை வைத்துள்ளாய்
உன் கைவசம்
என்பதை நீயறி யாயோ ?
முகிற்பிடியில் சிக்கிக் கொள்ளாது
பகலவனின் கதிர்க்கனலில்
பட்டொளி வீசிப்
பறக்குதுன் கொடி அங்கே !
உள்ளங் கைகளை மூடிக் கொண்டு
வானோக்கிப் பார்க்கிறேன் !
உன் கரம்
என்ன எழுதி வைத்துள்ளது
என்று நான்
படிக்க முடியாது !
சிரம் தாழ்த்து கிறேன்
நானுனக்கு !

*********************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா