This entry is in the series 20040513_Issue

கி. சீராளன்.


இன்று ஓய்வதாய் இல்லை,

மழை

போர் இரைச்சலுடன்

வானம் எங்கும் ஆரவாரம்.

கரைந்து கொட்டுகிறது

மேகம்

தீர்ந்து போவதாகச் சொல்லி.

காற்றும் மழையும்

ஒன்றில் ஒன்றாகிவிடுகிற

வேகக் கலவியில்.

இருளின் வட்டத்தில்

இடைவெளியின்றி

உரசி உரசி

செடிகொடிகளில்

விழாக்கோலம்.

காற்றுடன் மழையும்

மழையில் தழைகளும்

பூமியும் மண்ணும்

கலந்து கலந்து

ஓர் ஆனந்தக் கூத்து.

மனிதன் புறக்கணித்து

ஓரமாய் நின்ற மரங்கள்

இன்று

மனிதனைப் புறக்கணித்து

மழையுடன்

கொண்டாடி வெற்றிக் களிப்பில்,

‘பார்த்தாயா எங்கள் ஆளை ‘

எனும் பெருமிதத்தில்.

இந்த மனிதன் மட்டும்

தனியே

ஓரமாய் நின்று

பார்க்கப் பரிதாபமாய்

‘கல்யாண வீட்டின்

எச்சிலுக்காய் ‘

காத்துக் கிடந்தான்,

மழை நிற்பதற்காய்.

(பி.கு. இக்கவிதை முன்னொரு காலத்தில்

தமிழ்நாட்டில் மாதம் மும்மாரி பெய்த நேரத்தில்

எழுதப்பட்டது).

—-

punnagaithozhan@yahoo.com

Series Navigation