புத்தரும் சில கேள்விகளும்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ஸ்ரீமங்கை


—-
அந்த விஹாரத்தில்
அடுத்த பூசை ஆரம்பிக்க நேரமிருந்தது.
அகன்ற கண்கள் மூடி தியானத்திலிருந்த
புத்தரின் சிலை முன்னே நான்.

‘அமைதியின் அரசரே!
உம்மிடம் கேட்பதற்காக சில கேள்விகளைக்
காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறேன் ‘

மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டன.
‘கேள் மகனே ‘

‘உலகிற்கெல்லாம் அறிவுப்பால் ஒழுக்கும்
எம் அன்னையின் முலைகளை குதறித் தீர்த்த
குரூர இராக்கதர்கள் மீது ஏன் உம்
கருணையை இன்னமும் அனுப்புகிறீர் ? ‘

‘புரியவில்லை. என்ன நடந்தது ? ‘

‘அன்று அலெக்ஸாண்டிரியாவில்
நெருப்பை உமிழ்ந்த அசுரப்பறவையின்
முட்டைகளை ஏன்
கொழும்பில் அடைகாக்க
அனுமதித்தீர் ?
யாழில் நூலகம் கருகிய நெடி
சமர்ப்பிக்கப்பட்ட இப்பூக்களின் வாசத்தில்
உம்மை எட்டவில்லையோ ? ‘

புத்தரின் உதடுகள் துடித்தன.
வேதனையில் புருவங்கள் நெறிந்தன.
‘அறிவைக் கொன்றவரின் அடுத்த குறி யாது ?
அன்போ ? அன்றி நல்லிணக்கமோ ? ‘

‘குறிப்பால் உணர்த்துவேன்
பொறையின் பிதாவே..
போதிமரத்தடியில், உம்காலடியிலொரு
பிஸ்தால் புதைப்பது நல்லது.. ‘

புரிந்துகொண்ட புத்தரின் பெருமூச்சில்
ஊதுவத்திகளின் புகைச்சரம் மெல்ல ஆடியது.

அவர் சொல்லத்தொடங்குமுன்
அடுத்த பூசையின் ஆரம்பமாக மணி முழங்க,
புத்தரின் கன்னங்களில் வழிந்த கண்ணீரின் கோடுகள்
குங்கிலியப் புகைமூட்டத்தில்
மிக மங்கியதாக….
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை