மனசெல்லாம் நிம்மதி
சத்தி சக்திதாசன்

வெண்முகில் மலையோடு கொண்ட உறவால்
உதித்த வெண்பளிங்குகளாம் வான்
மழை மண்ணோடு பேசிய கதையால் தவழ்ந்த
மண்வாடை சிந்தையைத் தாலாட்டிற்று
தென்றலின் தழுவல் மலரோடு உறவாடி
காதலித்த கதைகளில் பிறந்த இன்பத்தினால்
புதிதான நறுமணம் சுகந்தமான அலையாக
பொன்வதனத்தைக் குளிப்பாட்டிற்று
வான்மதி வீசும் அந்த பொன்னோளி
வழிகாட்டும் முடிவற்ற இரவினிலே அங்கு
கூடுகட்டி வாழும் பறவைகள் ஒன்றாக
நிலவொளியில் குலவி மகிழ்ந்திற்று
இயற்கை போட்டதொரு இனிய வேலியாம்
பச்சை மரங்களின் அணிவகுப்பு என்றுமே
உள்ளங்களை கொள்ளை கொண்டு பூமியில்
மனசெல்லாம் நிம்மதியை நிரப்பிற்று