அந்தமானில்……

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

சுப்ரபாரதிமணியன்



அந்தமானில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நாளுக்கு முன் தினம் புறப்பட்டுவிட்டேன்.
அந்தமான் என்றால் பொது புத்திக்கு ஆதிவாசிகள்தான் ஞாபகம் வருவர். ஆதிவாசிகளைப் பார்க்கிற ஆர்வம் அங்கு செல்லும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. அவர்கள் பற்றி கிடைக்கிற தகவல்கள் புகைப்படங்கள்,ஒளிப்படங்கள் ஆகியவை அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும்.
போர்ட்ப்ளேயரில் இருந்து பாராடன்ங் தீவிற்கு செல்லும் வழியில் ஜாரவா பழங்குடிகள் வழக்கமாக தென்படுவர். பாதுகாப்பாய் வாகனங்களில் செல்வோர் அவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படும். சமீபத்தில் பாதையில் பல்வேறு இடங்களில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. யாத்ரீகர்கள் வீசியெரியும் உணவுப்பண்டங்கள் இனிப்புப்பண்டங்களை எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எண்ணிகை சற்றே அதிகரித்துதான் வருகிறது.
நவீன உணவுப்பொருட்களின் ருசி அவர்களுக்கு பிடித்துப்போயிருக்கலாம். வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் பான்பராக்,புகையிலை பொட்டலங்களையும் தூக்கியெரிகிறார்கள். இது போன்ற போதை வஸ்துகளை எதிர்பார்த்து காத்திருப்பது போல் தோன்றுகிறது. ஆதிவாசிகளளின் உடையமைப்பிலும், தோற்றத்திலும் பல்வேறு மாறுதல்கள் தென்படுகின்றன. பாதி நிர்வாணம், பாதி இலைஉடை என்ற வகையிலும் தென்படுகிறார்கள். சிறுவர்கள் டீசர்ட்,ஜீன்ஸ் ஆகியவற்றுடன் தென்படுகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளும், மருத்துவ உதவிகளும், உடை உதவிகளும் இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. கைகளில் வைத்திருக்கும் வில்அம்பு, கத்திகள் போன்றவற்றை வாகனங்களில் பறித்து பயமுறுத்தி உணவுப் பொருட்களை வாங்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உணவுத் தேவைக்கான அவர்களின் தேடல் வீதிகளில் வாகனங்கள் வரை வந்துவிட்டன.
எக்கோ-டூரிசம் என்ற சுற்றுலாபாணி சமீபத்தில் பிரபலமடைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மலைப்பிரதேசங்கள், அறியப்படாத பகுதிகளுக்கு செல்வதும், ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதும் இதனுள் அடங்கும்.
ஆதிவாசிகள் காட்சிப்பொருளாக மாற்றப்படுவதற்கான தந்திரங்களையும் இந்தபாணி சுற்றுலா கொண்டிருக்கிறது. விலங்குகளுக்கு அளிக்கப்படும் நவீன உணவு வகைகள்,யாத்ரீகர்களின் நவீன உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அவர்களின் உயிர்க்கு ஆபத்தாக முடிகின்றன. எக்கோ-டூரிசம் வணிகரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ஆதிவாசிகளை முக்கியமான காட்சிப்பொருளாக ஆக்கிவிட்டது.
பாரடங்கில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் வீதியோர நிலைமை ஈழத்தில் அகதி முகாம்களில் நிற்கும் ஈழத்தமிழர்களை ஞாபாகப்படுத்தியது.
அந்தமான் தமிழர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறது. பங்காளதேசின் அகதிகள் குடியேறி நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். இலங்கை அகதிகள் இங்கு குடியேற்றப்படுவதில்லை. இலங்கை தமிழர்களும், ஜாரவாக்களைப் போல காட்சிப்பொருளாகிவிட்டார்கள்.

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்