பெண்ணின் பெருந்தக்க

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்


டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில்,டால்ஸ்தாவ் வெஸ்கி, ப்லாபர்ட், இப்படி ஒரு பத்து
நாவலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் முதல் தரமான
எழுத்தாளர்கள் என்றால், ஞான் மூன்றாம்தர எழுத்தாளனே, என்று தன்னைப்பற்றி, ஒரு
ஆங்கில எழுத்தாளர், கூறியுள்ளார்.
மரபற்ற மரபின் எச்சங்களாக உதிரும் பேதைமையை, அப்படியே எழுத்தில் கொண்டுவரும்
,சில எழுத்தாளர்களின் மொழியழகில், சில கதைகள் வெற்றி பெறுகிறது என்பதை
மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவே இலக்கியம், என்ற இளைய தலைமுறையினரின்
எதிர்பார்ப்பைத்தான் அவ்வப்போது திருத்த வேண்டியுள்ளது.எந்த நல்ல சிறுகதைக்கும்
எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் , தகுதியும் , பெருமளவில் உலக நடப்பைச்
சார்ந்திருக்கும் தன்மையும், இருத்தல் வேண்டும்.
சமூகப்பிரக்ஞையை அலசுவதும், மண்ணின் விழுமியம் கோலோச்ச எழுதுவதும், மட்டுமல்ல
இலக்கியம். .தன்னுடைய சிந்தனையை வாசகர்களிடையே, கதையாடலாகக் கொண்டு வரும்போது,
சமகாலப் பிரக்ஞையை, கதைமாந்தர்களின் உணர்வுகளோடு,, அப்படியே உள்வாங்கி
எழுதும்போதுதான் , அந்த எழுத்து வாசகனை சென்றடைகிறது.
19ம் நூற்றாண்டில்தான் அசாமிய மொழியில் நவீன இலக்கியம் தோன்றியது.
1947க்குப்பிறகுதான் ஒரியாவில் புதுக்கவிதையே
பிறந்தது.கமலாதாஸ், அம்ருதா பிரீதம் போன்றோர், சமுதாய எதிர்ப்பை மீறியும்
,மரபைமீறிய வாழ்க்கையே வாழ்ந்தாலும், இலக்கியத்தில் அவர்களின் கடுமையான உழைப்பே
அவர்கள் பேசப்பட்டதற்குக் காரணம். தாய்மொழியான பஞ்சாபியில் எழுதுவதைவிட ,
இந்தியிலும் ஆங்கிலத்திலும், எழுதியதாலேயே, அம்ருதா பிரீதத்தின் எழுத்து
கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் பன்முகப்பார்வை, அல்லது அதுபற்றிய
அறிவின் அலசல் மிக முக்கியம். அருந்ததிராயின் சின்னத்தெய்வங்கள் கூட
மலையாளிகளிடையே பெரும் எதிர்ப்பை ஈட்டிய நாவலே.

சிரியன் கிறிஸ்டியன்களின் வாழ்வியலை,துளிக்கூட ஒளிக்காமல் , துணிகரமாய் தன்
இலக்கியம் மூலம் உலகுக்கு எடுத்துரைத்தவர் அருந்ததிராய். இந்த நிதர்சன
எழுத்தில், [தலீத்தியத்தை அறிமுகப்படுத்தும் ]சிவகாமி,பாமா, போன்றோருக்கும்
பங்குண்டு.அம்பையின் எழுத்தில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை அறிவுபூர்வமாகத்
தகர்த்து,ஆக்கபூர்வமான படைப்பாற்றலில் துலங்கும் அழகைக் காணலாம். இதுவே அவரது
பலமும் கூட. பெண்ணியல்வாதத்தை முன்னிலைப்படுத்தும் எழுத்தை,ராஜம் கிருஷ்ணன் ,
அம்பை, காவேரி, வாஸந்தி, திலகவதி,,தொட்டு, இன்றைய உமா மஹேஸ்வரி வரை, அந்தந்த
காலகட்டதுக்கே உரிய,பரிமாணங்களோடு இயைந்தே எழுதியுள்ளார்கள், என்பதையும்
மறுப்பதற்கில்லை.

1915க்கும் 1917க்குமிடையில் குளத்தங்கறை, அரசமரம் எழுதிய, வ.வே.சு. ஐயரின்
எழுத்துக்கள்தான் , தமிழ்ச்சிறுகதை சரித்திரத்தைத் தொடங்கியது.பாரதிக்குப்
பிறகு, புதுமைப்பித்தன், கு.ப.ரா,மெளனி,பி,எஸ்.ராமையா, ந.பிச்சைமூர்த்தி,
சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், ல.ச.ரா. சுந்தர
ராமசாமி,தி.ஜானகிராமன்,அசோகமித்திரன்,சுஜாதா,பிரபஞ்சன், ஜெயமோகன்,
அழகிய பெரியவன் , என இன்று எழுதித் தீர்க்கவே முடியாத, எழுத்தாளர்களிடையே, நவீன
இலக்கிய அலசலுக்கே, முன்னோடியான க. நா.சு.–,அவர் மறைந்தாலும் , அவரது இடத்தை
இம்மியும் குறைக்காமல் , நிரப்பிவரும் வெங்க்ட் ஸ்வாமினாதன் போன்ற
ஆய்விலக்கியவாதிகளின் தரமான அலசல்தான் இன்று பலரையும் ,
திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆண்கள் என்றாலே அறிவியல் , பெண்கள் என்றாலே சமையல்கட்டு,,என்ற காலம்
மலையேறிவிட்டது. தொழில்னுட்பம் முன்னேறிவிட்ட இன்றைய காலகட்டத்தில்,ஆணுக்கு
சரினிகர் சமமாக,கல்வியிலும், அலுவலகத்திலும் கிடுகிடுவென முன்னேறியுள்ள பெண்களை
சமுதாயம் புதிய பார்வையோடு வரவேற்கிறது. பாரதி, பெரியாரின் பெண்ணியப்பார்வை,
நடைமுறையிலும் பெண்களின் முன்னேற்றத்துக்கு பாதை வகுக்கத் தொடங்கியபின்னர்,
எழுத்தாளர்களின் பேனாவும் தன் பங்குக்கு வஞ்சகமின்றி உழைத்துள்ளது.
யுனெஸ்கோ நிறுவனம் 1975ம் ஆண்டைப் பெண்கள் ஆண்டாக , அறிவிக்கத்
தொடங்கியபின்னர், எல்லா இடங்களிலும் பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் சார்ந்த
விழிப்புணர்வுத்திட்டங்களும்,, பெண் சுதந்திரத்துக்கான, நல்லியக்க
அமைப்புக்களும் ,
இன்றைய பெண்களுக்கு அசாத்திய, தன்னம்பிக்கையை வளர்த்து விட்டதும் கூட
சுடரொளியே.

ஆணுக்கு சரி நிகர் சமமாக பேசக்கூடத்தயங்கிய காலகட்டம், இன்றைய இளையரிடையே,
நகைச்சுவை விருந்தாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. திருமணங்களில் கூடதுன்பம்
தோய்ந்து , வெளியேறத்தெரியாமல், உழன்று கிடந்த நிலையல்ல இன்று.வேண்டாமென்றால்,
சட்டம் மூலம், பேசிப்பிரிந்து போகும் சுதந்திரம் இன்றைய பெண்களுக்குண்டு.
இன்னும் ஒருபடி மேலே போய், தாலிகட்டிக் கொள்ளாமலே, {சேர்ந்து வாழ்தல்}-[living
together]வாழ்ந்து பார்த்து விட்டு,பிடிக்காவிட்டால், தக்‌ஷணமே பிரிந்து
செல்லும் வாழ்வியலையும்,இலக்கியவாதிகள் தங்கள் எழுத்துக்களில், நவீனத்துவ
பார்வையில் எழுதுகிறார்கள். ஒரு பெண்ணின் நெருக்கடியான தருணங்களை,சிறுமை,
பெருமைகளை,பண்டைய கலாச்சாரங்களிலிருந்து, இன்றைய கலாச்சாரம் வரையுள்ள
பார்வையைக்கூட,பன்முகப்பார்வையாய் , அந்தந்த மொழிக்கே உரித்தான
லாவகத்தோடு எழுதியுள்ள, ஆண், பெண் எழுத்துக்களின் மீது பெருமிதமே ஏற்படுகிறது.
ஆண்கள் எழுத்தைவிட, சில பெண்ணிய எழுத்துக்களில்,ஜாதக தோஷம், வரதட்சிணைக்கொடுமை,
பெண்சிசுக்கொலை, ஆணாதிக்க எதிர்த்தல்,, வலிந்து திணிக்கப்பட்ட
அடிமைத்தனத்துக்கு எதிரான போர்க்குரல்,கற்புகுறித்த எள்ளல்,என எல்லாமே வீர்யம்
மிக்க கோஷங்களாகவே ஒலிக்கிறது.

பெண் சிந்திக்கக் கற்றுக்கொண்டாள்.சுதந்திரமான காற்றை சுவாஸிக்கக் கற்றுக்
கொண்டாள்.கடந்த நூற்றாண்டின் பிற்பகுதிக்குப்பிறகு, ஆண்களை விட பெண்களின்
பெண்ணியல் எழுத்துத்தான் தீவிரமடைந்துள்ளது. இலக்கியம் வழி சில்லென்ற தென்றல்
காற்றை சுகமாய் சுதந்திரமாய் அனுபவிக்கும், அனைத்துப்பெண்களுக்கும் இந்த
சாஹித்யக்காரியின் மனமுவந்த வாழ்துக்கள்.

[முற்றும்]
Kamaladevi Aravindan
Singapore

Series Navigation

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்