நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

யோகிந்தர் சிகந்த்


‘Crusading ‘ Do-Gooders : Why They Should Leave Us Alone

Yoginder Sikand

(மேலை நாடுகளில் இஸ்லாம் சைத்தானின் தூண்டுதல் பெற்ற மதமாகவும், மனிதகுலத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தைப் பரப்பும் மதமாகவும் கிறுஸ்துவத்திற்கு ஒரு பெரும் அறைகூவலாகவும் கணிக்கப் படுகிறது. கிறுஸ்துவ மதபரப்பிகளான அடிப்படைவாதிகள் முஸ்லிம் உலகின் மீது ‘சிலுவைப் போர் ‘ நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இந்தியா பெரும் எண்ணிக்கையில் முஸ்லீம்களைக் கொண்டிருப்பதால் , கிருஸ்துவ மதப் பரப்பாளிகளின் வரைபடத்தில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது.)

அமெரிக்க அரசின் நிறுவனக் கருத்துகளை மறைமுகமாய் ஒலிக்கும் ‘டைம் ‘ பத்திரிகை என் படிப்புப் பட்டியலில் இல்லை தான். ஆனால் சென்ற வாரம் சூன் 30,2003 இதழின் முகப்புப் படம் என்னைத் தூண்டிப் படிக்கச் செய்தது.இந்த முகப்புப் படத்தில் ஒரு கரம் உயர்ந்து சிலுவையை இறுக்கப் பற்றியுள்ளது. ‘தன் எதிரே ஒரு கேள்வி : கிறுஸ்துவர்கள் முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய வேண்டுமா ? ‘ மதங்களுக்கிடையேயான தகராறுகள் எனக்கு எந்த சுவாரஸ்யமும் இப்போது தருவதில்லை. வெறும் மதவெறியர்களின் கூக்குரலாகவே இந்தச் சண்டைகளை நான் கண்டு வந்திருக்கிறேன். ஆனால் முஸ்லிம்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் உள்ள உறவு எனக்கு ஆர்வமூட்டும் ஒரு விஷயம் என்பதால், மதிப்புக்குரிய ‘டைம் ‘ பற்றிய என் கருத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் இணையப் பக்கத்தைப் பார்வையிடலானேன்.

இந்த முகப்புக் கட்டுரையின் சாராம்சம் இது தான். வட அமெரிக்கா, மேற்காசியா முதலிய இடங்களிலிருந்து நிருபர்கள் அனுப்பிவைத்த கட்டுரைகளில், மேநாட்டு கிறுஸ்துவ மதப் பரப்பாளிகள் இஸ்லாமிற்கு எதிராக, எல்லா முனைகளிலும் ஓர் ஆன்மிகப் போரை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது. பார்பரா என்றழைக்கப் படும் ஒரு மதப் பரப்பாளி கூறுவது இது ‘ ‘இஸ்லாமே ஒரு பேரழிவு ஆயுதம். ஈராக்கிலும் ஆழ்ப்கானிஸ்தானிலும் எப்படி கிறுஸ்துவ மதப் பரப்பாளிகள் பெரும் உற்சாகத்துடன் ‘உதவி ‘ அளித்து – ஆன்மிக உதவியும், பொருளுதவியும் இதில் அடக்கம் (பொருளுதவியுடன் ஆன்மிக உதவி பின்னிப் பிணைந்தது) — பாவப்பட்ட இஸ்லாமியரிடையே எப்படி கிறுஸ்துவ மதம் பரப்பப் படுகிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மாசசூஸெட்ஸ் மானிலத்து ‘கார்டன்-கார்ன்வெல் இறையியல் செமினரி ‘ என்ற அமைப்பு முஸ்லிம் நாடுகளில் ஏறத்தாழ 27,000 கிறுஸ்துவ மதப் பிரசாரகர்களை அனுப்பியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கை இதில் பாதிதான்.

செப்டம்பர் 2001 நிகழ்ச்சிகள் அமெரிக்கச் கிறுஸ்துவ வலதுசாரி அமைப்புகளிடையே, ‘முஸ்லீம்களை ரட்சிப்பது ‘ பற்றி மிகத் தீவிரமாய் யோசிக்க வைத்துவிட்டது, என்று ‘டைம் ‘ தெரிவிக்கிறது. முஸ்லீம் நாடுகளில் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும் கூட , மேனாடுகளுக்கு இவை விடும் மிரட்டலாய்க் காணப் படுகிறது. இந்த மிரட்டலை எதிர்கொள்வது மதப்பரப்புதலில் தீவிரம் கொள்ளத் தூண்டுகிறது. இந்தக் காலனியாதிக்க முறையில் , ஒருவரை ஒருவர் பரஸ்பரம் சொறிந்து கொள்கிற சார்புறவு, அமெரிக்காவில் உலகு தழுவிய காலனியாதிக்கத்திற்கும், ஏகாதிபத்தியத்தை நிறுவத்துடிக்கும் அமெரிக்க ராணுவ அமைப்பிற்கும், கிறுஸ்துவ வலது சாரி மதப் பரப்பாளிகளுக்கும் ஒரு நெருங்கிய உறவாக உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியும் கிறுஸ்துவ மதப் பரப்பாளிகளை பெரிதும் ஆதரிப்பவர். தங்கள் பங்கிற்கு இந்த மதப் பரப்பாளிகள் அமெரிக்காவின் வெளியுறவுக் குறிக்கோள்களை நிறைவேற்ற உதவுகிறார்கள் – வலதுசாரி, பிற்போக்குத்தனமான இறையியலை, அமெரிக்க வாழ்முறையே பெரிதும் உயர்ந்தது என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் பிரசாரம் செய்கிறார்கள். தம்முடைய கிறுஸ்துவ மதம் தவிர்த்த பிற எல்லா மதங்களும் தவறானவை, சைத்தானுடையவை என்பது இவர்களின் தீவிர நம்பிக்கை. இதனால் தான் இந்த மதவாதிகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மிகத் தீவிரமாய் ஆதரிக்கிறார்கள். இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈராக் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு என்ற அவர்களின் நிலைபாடு , இஸ்லாம் பிரதிநிதித்துவப் படுத்தும் ‘தீய சக்திகளை ‘ வெற்றி கொண்டு , தம்முடைய நற்செய்தியை பிரகடனம் செய்யும் வாய்ப்பாக இதனைக் காண்கிறது. புஷ் பயங்கரவாதம் மீதான போரில் எம்முடன் இல்லையென்றால், நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்று முழங்குகிறார். அதே போல், இந்த பரப்பாளிகளும் ‘இருண்மைக்கு எதிரான போரில் ‘ எம்முடன் இல்லையென்றால் – முஸ்லிம், இந்து, பெளத்தராய் யாராய் இருந்தாலும் – சைத்தானின் சீடர்களே என்று முழங்குகிறார்கள்.

தம்முடைய நம்பிக்கையை ஒருவர் மாற்றிக் கொள்வதிலோ, அல்லது மற்றவர்களை தம்முடைய மதத்திற்கு ஒருவர் மாற்ற முயல்வதிலோ தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பிரசினையுமில்லை. தாம் பிறந்த மதத்தையே பின்பற்றவேண்டியது ஒருவரின் தலைவிதி என்ற கருத்தை எதிர்ப்பவன் என்ற முறையில், மதமாற்றம் என்பது அடிப்படை மனித உரிமை என்று நான் நம்புகிறேன். கிறுஸ்துவ மதப்பரப்பாளிகளின் இது பற்றிய உற்சாகம் கண்டிக்கத் தக்கதல்ல. எனினும், மதப்பரப்புதல் தம்முடைய இறுதி நோக்கங்களை மறைத்து , ஒளித்துச் செயல்படுவது தான் கண்டனத்துக்கு உரியது. ஒரு உவமை – இஸ்லாமின் சொல்லாடல் அல்ல இது – சொல்லலாம். உள்ளூர் நாட்டுச் சரக்கு கள்ளச் சாராயத்தை , உயர்ந்த ஃப்ரெஞ்ச் ஒயின் என்று ஏமாற்றுவதை ஒத்தது இது. டைம் பத்திரிகை இப்படி ஏமாற்று நடப்பதாய்த் தான் சொல்கிறது. முஸ்லிம் நாடுகள் வழங்கும் விசா அனுமதிச்சீட்டின் இறுக்கமான கெடுபிடிகளை ஏமாற்ற வேண்டி இவர்கள் நன்மை செய்யும் சமூக சேவகர்கள் அல்லது வியாபாரிகள் என்று தம்மை அழைத்துக் கொண்டு அனுமதிச் சீட்டு பெறுகிறார்கள். வளர்ச்சிப் பணிகளை ஆற்றுகிறார்கள் – இது தம் மதமாற்ற நோக்கங்களை மறைக்கும் ஓர் உத்தி. டைம் பத்திரிகை எப்படி இவர்கள் ஏதுமறியாத குழந்தைகளுக்கு பொம்மைகளை அளித்து அதன் மூலமாக தம்முடைய செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று பதிவு செய்கிறது. தம்முடைய உண்மையான அடையாளத்தை மறைத்து இவர்கள் செயல்படுகிறார்கள். சிலசமயம் முஸ்லிம்கள் போல் வேடமிட்டு மதம் மாறக் கூடியவர்களை ஏமாற்றுகிறார்கள்.

கிறுஸ்துவ மதமாற்றக் காரர்கள் தாம் பணி புரியும் சமூகங்களில் ஒப்புக் கொள்ளப் படுவதில்லை, தம்முடைய அன்னியமான கலாசாரப் பழக்கங்களையும், மத நம்பிக்கையுடன் சேர்த்து பிரசாரம் செய்கிறவர்கள் இவர்கள் என்று சரியாகவே இனங்காணப் படுகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் இவர்களை ‘மேனாட்டுக் கலாசாரத்தை ‘ப் பரப்புபவர்கள் என்று இனங்காணுவதால், இவர்களின் மதப் பிரசாரம் தடைபடுகிறது. இதைத் தவிர்க்கத் தான் இவர்கள் முஸ்லிம் நாடுகளில் ‘உள்ளூர்க் கலாசாரத்துடன் இணைதல் ‘ , ‘பின்னணியில் கலத்தல் ‘ என்று அழைக்கப் படும் உத்திகளைக் கையாள்கிறார்கள். அதாவது எந்த மக்களிடையே பணி புரிகிறார்களோ அந்த மக்களின் கலாசாரப் பிம்பங்களுக்குள் தம்முடைய செய்தியை மறைத்தும், ஒளித்தும் வைத்தும் இவர்கள் அளிக்கிறார்கள். இந்த உத்தி மூலமாக, கிறுஸ்துவம் பழக்கமான ஒன்றாகவும் அதனால் ஒப்புக்கொள்ளப்படுகிற ஒன்றாகவும் ஆகிறது. உதாரணமாக இந்தியாவில் ‘இந்து கிறுஸ்துவம் ‘ என்ற ஒன்றை ஸ்தாபிக்க இந்த மதப் பரப்பாளிகள் முயல்கின்றனர். அன்னை மேரி கவுனை விட்டு விட்டு பட்டுச் சேலை அணிகிறார். ஏசுநாதர் வெள்ளைக்காரராக இல்லாமல் பழுப்பு நிறத்தில் சித்தரிக்கப் படுகிறார். மாதாகோவில் , இந்து கோவில் வடிவில் கட்டப்படுகிறது. சிலுவையின் அருகில் ‘ஓம் ‘ டம் பெறுகிறது. இது போன்ற முயற்சிகள் முஸ்லிம் நாடுகளிலும் இப்போது நடப்பதை ‘டைம் ‘ பத்திரிகை பதிவு செய்கிறது. கிறுஸ்துவ மதப் பரப்பாளிகள் தம்மை சூஃபிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ‘ஏசுநாதர் மசூதிகள் ‘ அமைக்கப் படுகின்றன. ‘கடவுள் ஒருவரே, முகம்மது கடவுளின் இறைத் தூதுவர் ‘ என்றும் இவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

இந்தியாவில் நான் பல பிரயாணங்களின் போது இப்படிப்பட்ட உற்சாகமான பரப்பாளிகளைப் பார்த்திருக்கிறேன். தில்லியில் கனாட் பிளேசில் ‘உலகம் அழியப் போகிறது ‘ என்று அச்சிட்ட வண்ணப் புத்தகங்களுடன் அவர்கள் இறுதித் தீர்ப்பு நாளுக்கு உங்களைத் தயார் செய்கிறார்கள். இந்தியர்கள் பலவண்ணப் புத்தகங்களை விரும்புவார்கள் என்பதால் இதுவும் மிகை வண்ணத்தில் அச்சிடப் பட்டுள்ளது. ஏசுநாதர் தாடியுடன் மேகத்தில் அமர்ந்து ஒரு வாளை ஏந்தியிருப்பது போல் ஒரு படம்; ஐரோப்பிய முகங்கள் கொண்ட , வெள்ளுடை அணிந்த , சிறகுகள் கொண்ட தேவதைகள் குதிரையில் சவாரி செய்வதுபோல ஒரு படம்; சிலுவை அணிந்த பல ஆண்களும் பெண்களும் தேவதைகளின் சிறகுகளில் சவாரி செய்து சுவர்க்கத்தில் நுழைவதுபோல ஒரு படம்; கருப்பு நிறம் கொண்ட பலர் நரகத் தீயில் உழல்வது போல ஒரு படம். இந்தப் படங்கள் தமாஷாக இருந்தனவே தவிர கல்வி ஏதும் தருவதாய் இல்லை. இந்த மதப்பரப்பாளிகளின் வேண்டுகோளை நான் எதிர்கொண்ட விதத்தைக் கண்டு அவர்கள் எதிர்வினை இன்னும் தமாஷாய் ருந்தது. ஒட்டவைத்த புன்னகையுடன் ஒருவர் என்னைக் கேட்பார். ‘நீங்கள் கஷ்டப் படுகிறீர்களா ? ‘ என் பதிலுக்குக் காத்திராமல் வானை நோக்கிக் கரம் கூப்பி, ‘ஏசுநாதரே, இந்தச் சகோதரர் துன்ப ஆற்றைக் கடக்க உதவி பண்ணும் ‘ என்று இறைஞ்சுவார். என் கைகளில் , பட்டினி கிடக்கும் குழந்தைக்கு சாக்லேட் திணிப்பதுபோல, புத்தகங்களைத் திணிப்பார். அவர் கொடுத்த காகிதங்களைச் சுருட்டி குப்பைக் கூடையில் போடுவிடுவேன். அவருடைய முகத்தின் தேவதைப் புன்னகை மறைந்து கோபத்துடன் என்னைப் பார்த்துக் கத்துவார். ‘ நீ எப்படி சுவர்க்கம் போவாய் ? ‘ என்று திட்டுவார். நான் அவசரமாய் நகர்ந்து விடுவேன்.

இந்திய முஸ்லிம்களைக் குறிவைத்து

‘டைம் ‘ பத்திரிகைச் செய்திப்படி, மேனாட்டு மதப் பரப்பாளர்கள் முஸ்லிம் உலகின் மீது ‘ஆன்மிகப் போர் ‘ அல்லது ‘சிலுவைப் போரை ‘த் தொடுக்க பெரும் மூலதனத்தை ஈடுபடுத்தியுள்ளனர். இந்தியா அதன் பெரும் முஸ்லிம் ஜனத்தொகையால் முக்கிய இடம் வகிக்கிறது போலும். தனிப்பட்ட முறையில் இவர்களின் இந்தியச் செயல்பாடுகள் பர்றி எனக்கு ஏதும் தெரியாது. பல குழுக்கள் இப்படி மதமாற்றப் பணியுல் ஈடுபடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் இதை நேரடியாய் ஆய்வு செய்யவில்லை. இந்துக்களிடையே பணி புரியும் மதப்பரப்பாளர்கள் போன்றே , இந்த அமைப்புகளும் பணம் பண்ணும் வழி என்று அறிவேன். மேனாட்டின் பணக்காரர்களுடன் தொடர்பு கொண்ட சிலரின் முயற்சி இவை. உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு குழுக்களைப் பற்றி இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இரண்டுமே பெங்களூரில் உள்ளன. இவை போன்று தான் மற்ற மதப் பிரசார அமைப்புகளும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் மதப் பரப்பாளர்களின் சிலுவைப் போர் மனநிலையை அறிய இந்த உதாரணங்கள் உதவுகின்றன.

முதல் அமைப்பின் பெயர் ‘தார்-உல் நெஜத் ‘. இந்த அராபிய மொழி வார்த்தைத் தொடருக்கு மீட்பு இல்லம் என்று பொருள். இதன் தலைவர் ஃபஸல் ஷேக். கிறுஸ்துவராக மாறிய முஸ்லீமாய் இருக்கலாம். இது உலக அளவில் செயல்படும் ‘நம்பிக்கை அழைப்பு : முஸ்லீம்களுக்கு ‘ ‘நற்செய்தியை ‘ முஸ்லீம்களிடம் ‘கொண்டு செல்ல ‘ இது ‘முஸ்லிம் மாசிஹி அமைப்பு ‘ என்ற ஒன்றை நடத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு கிறுஸ்துவின் செய்தியைக் கொண்டு செல்ல பல செயல்திட்டங்களைக் கொண்டுள்ளது. முஸ்லிம்களை வீட்டில் சென்று சந்திப்பது அவற்றில் ஒன்று. இஸ்லாம் பற்றியும், கிறுஸ்துவம் பற்றியும் தபால் மூலமாகக் கல்வி கற்பிக்கும் ஒரு செயல் திட்டமும் உண்டு. ஆஸ்திரியாவில் இருக்கும் ‘கிறுஸ்துவ வாழ்க்கை ஒளி பைபிள் கல்லூரி ‘யுடன் இணைந்து இஸ்லாம் பற்றி , கிறுஸ்துவ மதப் பரப்பாளர்களுக்குக் கற்பிக்கிறது. மதம் மாற வாய்ப்புள்ள முஸ்லிம்களிடம் கிறுஸ்துவம் பற்றிப் பேசும்போது, முஸ்லிம்களுக்குப் புரியும்வண்ணம் பேச இந்தப் பயிற்சி உதவும். பெங்களூரில் இஸ்லாம்-கிறுஸ்துவம் பற்றி தொடர்ந்து மூன்று வாரப் பயிற்சி அளிக்க திட்டம் தீட்டி வருகின்றனர். பெங்களூரில் உள்ள ‘ஆசியா மதப்பரப்பும் பைபிள் கல்லூரி ‘யின் சார்பில் :இஸ்லாமிய இறையியலும் கிறுஸ்துவ மதப் பரப்பும் ‘ என்ற தலைப்பில் ஒரு பயிற்சி முகாம் தயாராகி வருகிறது.

தார்-உல்-நெஜாத் ‘கெளரவ மதப் பரப்பாளர்களை ‘க் கொண்டது என்று சொல்லிக் கொள்கிறது. இதன் பொருள் ஒரு வேளை, சன்மானம் பெறாத பணியாளர்களாய் இருக்கலாம். இவர்கள் பெங்களூரில் மதப் பரப்புதலில் இயங்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் ‘ இந்த அமைப்பு பெங்களூரின் மூலை முடுக்கெல்லாம் சென்று அடைந்துள்ளது ‘ என்று தெரிவிக்கப் பட்டது. பெங்களூரிலேயே பல மையங்கள் இதற்கு உண்டு. முஸ்லிம் இளைஞர்களைக் கவரும் வண்ணம் , ‘மதரஸத்-அல்- மாசிஹ் ‘ என்ற பெயரில் முஸ்லிம் பள்ளியை நடத்துகிறது. ஃபஸல் மாசிஹ் என்ற பாதிரியார் இதை நடத்துகிறார். உருது மொழியும், பைபிளும் கற்பிக்கப் படுகிறது. (பள்ளியின் பெயர் எப்படி இருக்கிறது பாருங்கள் – ஏதோ முஸ்லிம் பள்ளி போலத் தொனிக்க வேண்டும் என்பது நோக்கம்.) தூய பீட்டர் கிளினிக் என்ற பெயரில் ஒரு சிறு மருத்துவ மனையும் உண்டு. ஏழை முஸ்லிம்கள் தான் இதற்கு வருகை புரிகின்றனர். இந்த மனிதாபிமான முயற்சியின் பின்னாலும் மதமாற்றமே குறிக்கோளாய் இருக்கிறது. சுற்றறிக்கை சொல்வது இது : ‘ மருத்துவ மனை மூலம் நண்பர்களை உருவாக்கி ஆகமங்களை அவர்களுடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ‘

பெங்களூரில் இயங்கும் இன்னொரு கிறுஸ்துவ மதப்பரப்பும் அமைப்பு முஸ்லிம்களிடையே வேலை செய்கிறது. ‘அகில உலக உதவிக் கரங்கள் ‘ என்ற சந்தேகம் எழுப்பாத பெயர். குழந்தைகள் இல்லம் அமைப்பது, பள்ளிகள் மற்றும் தொழில்வினை நிலையங்கள் அமைப்பது, விவசாயப் பயிற்சி மையங்களும், மருத்துவ சேவை அளிப்பதும் இவர்கள் பணி என்று அறிக்கை சொல்கிறது. இந்த உன்னத நோக்கங்களுக்குப் பின்னால் ‘மதம் பரப்புவதும், முஸ்லிம்களிடையே திருச்சபையை நிறுவுவதும் ‘ தான் நோக்கம். மார்ச் 27, 1996-ல் மதப்பரப்பு மிஷன்களுக்கும், பைபிள் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த அமைப்பின் செயலாளர் ஜி எம் தனராஜ் குறிப்பிடுகிறார். ‘ இஸ்மாயிலின் வழித்தோன்றல்கள் ( அதாவது முஸ்லீம்கள் ) இந்தியாவில் திருச்சபை சென்றடையாத மக்களாய் இருக்கிறார்கள் . முஸ்லிம் மக்களில் 98 சதவீதம் பேர் கிறுஸ்துவின் நற்செய்தியை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். ‘ அவர் மேலும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் : ‘ ஒரு லட்சம் முஸ்லிம்களுக்கு ஒரு மதப் பரப்பாளர் என்ற விகிதத்தில் கூட பணியாளர் இல்லை. ‘

இஸ்மாயில்வாதிகள் என்று ஏதோ இரக்கத்துக்குரியவர்களாய் இவர்கள் அழைக்கப் படுவதைக் கவனியுங்கள். முஸ்லீம்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்குக் கூட உரிமை இல்லை போலும். தம்மை இஸ்மாயில்வாதிகள் என்று குறிப்பிட்டால் அவர்களுக்கே புரியாது. பைபிள் கதைப்படி, அராபியர்கள் இஸ்மாயில் (ஹாகரின் மகனாக இவர் குறிப்பிடப்படுகிறார் – குரானில் இது இல்லை.) ஆப்ரகாமின் அடிமைப் பெண் தான் ஹாகர். இவளின் பரிதாப நிலையை சுட்டுவதுபோல், எல்லா முஸ்லீம்களும் இப்படி அழைக்கப் படுவதன் மூலம் அராபியர்களாகி விடுகின்றனர், வெறும் அடிமைப் பெண்ணின் வழித்தோன்றல்கள் ஆகிவிடுகின்றனர். அவர்களின் முன்னோரின் நிலையைக் கருதி, இவர்கள் ஆன்மிகக் கொத்தடிமைத்தனத்திலிருந்து , கிறுஸ்துவ நல்லோரால், விடுவிக்கப் படவேண்டியவர்களாகி விடுகின்றனர்.

இந்த வருத்தத்துக்குரிய விஷயம் பற்றி ‘அகில உலக உதவும் கரங்கள் ‘ அமைப்பு கருணை கூர்ந்து இந்தப் பணியை மேற்கொண்டிருப்பதாய் தனராஜ் குறிப்பிடுகிறார். ‘இஸ்மாயில்வாதிகளின் மீட்புக்காக இந்த அமைப்பு பாடுபடும். ‘ அதாவது முஸ்லிம்களை கிறுஸ்துவர்களாய் மதம் மாற்றப் பாடுபடும் என்பதைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தக் குறிக்கோளை முன்னிறுத்தி 2000 ஆண்டுக்குள் எட்டு மானிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் தொடங்கி , எல்லா மானிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தன் மையங்களைத் திறக்கும் என்று குறிப்பிடுகிறார். கிறுஸ்துவ மதப் பரப்பாளர்களிடையே இதற்காக ஒரு பயிற்சித் திட்டத்தையும் இவர் ஆரம்பித்தார். தன் பின் பயிற்சி பெற்றவர்கள் முஸ்லிம்களிடையே மதப் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். ஒரு வருடம் பயிற்சியும் உண்டு, குறுகிய காலப் பயிற்சிகளும் உண்டு. பெங்களூரிலும் , நாக்பூரிலும் இந்தப் பயிற்சி மையங்கள் உள்ளன. பல தேவாலயங்களிலிருந்து பயிற்சி பெற வருகிறார்கள். பயிற்சிக்குப் பின் திரும்பிச் சென்று மதப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். தினமும் ஒரு முஸ்லீமையாவது சந்திக்க வேண்டும், ஒரு மணி நேரம் கிறுஸ்துவைப் பற்றி போதிக்க வேண்டும் ‘ என்பது விதி. பயிற்சிகளில் ஆய்வும் உண்டு, மேற்பயிற்சிகளும் உண்டு. முதல் சொன்ன பயிற்சி போல்தான் இவை என்றாலும் மிக ஆழமும் தீவிரமும் கொண்டவை.

பயிற்சி பெறுபவர்களுக்கு உதவ நிறைய புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ளது. அராபிய மொழியில் இதற்கு அல்-நூர் ( ‘வெளிச்சம் ‘) என்று பெயரிட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து 50 வேறுபட்ட பொருள்கள் பற்றிய புத்தகங்கள் உள்ளனவாம். சில புத்தகங்களின் தலைப்புகள் ‘இஸ்மாயில்வாதிகளிடையே கிறுஸ்துவம் பரப்புதல் ‘, ‘இஸ்மாயில்வாதிகளை அணுகுவது எப்படி ? ‘ ‘முஸ்லீம்களாய் இருந்து கிறுஸ்துவர்களாய் மாறியவர்களின் வாக்குமூலம் ‘. இதில்லாமல் ஒலி நாடாக்களும், ஒளிநாடாக்களும் இதே விஷயம் பற்றி உண்டு. முஸ்லீம்களிடையே மதப்பரப்புதலில் ஈடுபடும் கிறுஸ்துவர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் உண்டு. ‘உலக உதவும் கரங்கள் ‘ இந்தப் பணிக்காக ‘இஸ்மாயில்வாதிகளின் ரட்சணியச் சங்கம்(I S A- Ishmaelite Salvation Association) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐ எஸ் ஏ விவிலியம் பற்றி இதுவரையில் 37 சிறு ஏடுகளைப் பிரசுரம் செய்துள்ளது. 18 புத்தகங்களும், ஒரு தொலைக் கல்வித் திட்டமும் உண்டு. குறிப்பாக முஸ்லீம்களை மதமாற்றம் செய்வது எப்படி என்பது இதன் உள்ளடக்கம். கிறுஸ்துவர்களிடம் இந்தப் பணியின் முக்கியத்துவம் பற்றிப் பிரசாரம் செய்ய, முஸ்லீம்களை மதமாற்றம் செய்யும் பணியில் இதுவரை செய்தது என்ன என்று விளக்கி புத்தகம் வெளியிட்டுள்ளது. ‘இஸ்மாயில்வாதிகளை எபப்டி மதமாற்றம் செய்வது ? ‘ என்ற தலைப்பில் பல உரைகளையும் நிகழ்த்தியுள்ளது. இந்த உரைகள் பல ஆய்வுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டவை. 21 தலைப்புகளில் மூன்று பகுதியாய் இவை அமைக்கப் பட்டுள்ளன. இந்த உரைகள் பல விவிலியக் கல்லூரிகளிலும், இறையியல் பயிற்சிக் கல்லூரிகளிலும் உலகில் பல இடங்களில் நிகழ்த்தப் பட்டவை. இது வரை 200 கருத்தரங்குகள் மேற்கண்ட படி நிகழ்த்தியிருப்பதாக ஐ எஸ் ஏ பெருமிதம் கொள்கிறது. இதன் தலைப்பு விசித்திரமானது : ‘மத்திய கிழக்கு கலாசார கிறுஸ்துவ அணுகுமுறை ‘

இப்படிப்பட்ட சிறப்பான நுணுக்க பயிற்சி இருப்பதால் ஐ எஸ் ஏ மற்ற மதமாற்ற அமைப்புகளுக்கும் முஸ்லிம்களை மதம் மாற்றப் பயிற்சி அளிக்கிறது. ஆகமத்தை முஸ்லிம்களிடத்தில் எப்படிக் கொண்டு செல்வது என்பது பற்றிப் பயிற்சி அளிக்கிறது. குறிப்பாக மாணவர்கள், நோயுற்றோர், பெண்கள், கைதிகளை முன்னிறுத்தி செயல்படுகிறது. ஐ எஸ் ஏ இப்படிப் பலரை பயிற்சி அளித்துத் தயாராக வைத்திருப்பதால் தேவைப்படும் மற்ற அமைப்புகளுக்கு இவர்களை அனுப்பி, முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய உதவுகிறது. மற்ற கிறுஸ்துவ அமைப்புகள் போலவே, ஐ எஸ் ஏ பல சமூகப் பணிகளையும் ஆற்றுகிறது. ஆனால் இறுதி நோக்கம் மதமாற்றமே. மதமாற்றம் ஆகிவிட்டவர்கள் திரும்பப் போய் விடாதபடிக்கும் இந்தச் சேவைகள் உதவுகின்றன. ஏழை முஸ்லிம் சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது, பெண்கள் விடுதிகள், சிறார் விடுதி நடத்துவது, வேலை வாய்ப்பு அளிப்பது, மருத்துவ உதவி அளிப்பது இவையும் ஐ எஸ் ஏ செய்கிறது. இதற்காக ஆறு மையங்களை ஐ எஸ் ஏ கொண்டுள்ளது. சிராஜ் என்று இதன் பெயர். (Social Industrial Rehabilitational Agricultural Job Program)

நான் முன்னமே சொன்னதுபோல் தங்கள் மதத்தை மாற்ற விரும்புகிறவர்கள் பற்றி எனக்கு எந்தப் பிரசினையும் ல்லை. ஒரு தெய்வீகப் பொறுப்புணர்ச்சியை மேற்கொண்டு தம்முடைய ‘உண்மை ‘யை மற்றவர்களிடம் எடுத்துச் செல்பவர்களிடமும் எனக்குப் பிரசினை இல்லை. எனினும், வலது சாரி மதப் பரப்பாளிகள் தம்முடைய வட்டத்திற்கு வெளியே இருக்கும் எல்லோரும் நரகத்தில் விழுவார்கள் என்று நம்பினால் அது தான் பிரசினை. அப்படி எண்ணமுள்ள இந்து, முஸ்லிம், கிறுஸ்துவர்கள் இந்தியாவில் ஏற்கனவே பலர் இருக்கிறார்கள், வெளியே இருந்து வரவேண்டிய அவசியமே இல்லை. ரட்சிப்புக்கு இது தான் வழியென்றால் நான் நரகத்தையே தேர்வு செய்வேன்.

***

மார்க்ஸியவாதியான யோகிந்தர் சிகந்த் அவர்கள் http://www.islaminterfaith.org என்ற இணையத்தளத்தின் நிறுவனர். மிலி கேஸட் என்ற இந்திய இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

***

Series Navigation

யோகிந்தர் சிகந்த்

யோகிந்தர் சிகந்த்