ஆண் விபசாரிகள்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘விவாகமா, விபசாரமா ? ‘ என்கிற தலைப்பைப் பார்த்ததும், மீரா முதுகை நிமிர்த்திக் கொண்டு நேராக உட்கார்ந்தாள். அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் புதிய கதை பற்றிய விளம்பரம் அது. அதை உடனே வாங்கிப் படிக்க அவள் அவாவினாள். காசு செலவழித்துப் புத்தகம் வாங்குகிற அளவுக்கு அவள் செயலுள்ளவள் அல்லள். எனவே யாரிடமாவது இரவல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். ‘நாளைக்கே ருக்மிணியைப் பார்த்து இதைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவள் உடனே வாங்கிவிடுவாள். அவள் படித்ததும் நாமும் படிக்கலாம்… ‘ என்று எண்ணியவாறு அவள் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினாள்.

‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ‘ என்கிற தலைப்பில் பத்திரிகையின் ஆசிரியர் கறுப்புக்கட்டம் கட்டி ஒரு துணுக்குச் செய்தி எழுதியிருந்தார். அவள் அதைப் படித்தாள்…. ‘வரதட்சிணைக்கு எதிராக இப்போதெல்லாம் ரேடியோ அலறுகிறது. ‘வரதட்சிணை வாங்காதீர்கள், கொடுக்காதீர்கள் ‘ என்று அடிக்கடி விளம்பரம் செய்கிறார்கள். மக்களைப் பயமுறுத்துகிறார்கள். நாட்டில் எத்தனையோ தலை போகிற பிரச்சினைகள் இருக்கையில், இந்த வரதட்சிணைதானா பெரிய பிரச்சினை ? இதை ஒழிக்காவிட்டால் குடியா முழுகிவிடும் ? எரிகிற பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, இந்த அத்தைப்பாட்டிப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி நாள்தோறும் ரேடியோவில் அறுவைப் பிரசாரம் செய்கிறார்களே! இதென்ன தலைவேதனை ? இந்த அறுவைப் பிரசாரம் என்றுதான் ஒழியுமோ ? ‘

அதைப் படித்ததும் மீராவுக்கு உடம்பில் சூடேறியது. ‘ ஒன்று, இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பணக்காரராக இருக்கவேண்டும். அல்லது, பெண் குழந்தைகள் திருமண வயசில் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது, இது எப்படிப்பட்ட ஆழமான பிரச்சினை என்பதைப் பற்றிய சிந்தனையற்றவராக இருக்கவேண்டும்….அதுவும் இல்லாவிட்டால் பென்களைப் பிடிக்காதவராக இருக்கவெண்டும்…. மனித வாழ்க்கையில் வயிற்றுப் பசிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வகிப்பது

செக்ஸ்தானே ? மனிதனின் செக்ஸ் வாழ்க்கை நியாயங்களையும் நாகரிகப்பண்புகளையும் மீறியதாக அமையுமானால், மனிதகுலமே பாழ்பட்டுச் சீரழிந்து போகுமே ?… ‘

உரிய காலத்தில் பெண்களுக்குத் திருமணம் ஆவதற்கு வரதட்சிணை தடையாக இருக்குமாயின், அதனால் ஒரு பெண் கெட்டுப்போவதற்கோ, தப்பான வழியில் – அதன் விளைவுகளைக் கூடப் பொருட்படுத்தாது – அல்லது விளைவுகளை அழித்துக்கொண்டு – செயல்படவன்றோ அது அடிகோலும் ? ஒரு பெண் கெட்டுப் போனால் அவளுடன் 9:1 என்கிற விகிதாசாரத்தில் அல்லவா ஒன்பது ஆண்கள் சேர்ந்து கெட்டுப் போவார்கள் ?

செக்ஸ் என்பதைக் காட்டு விலங்குகளைப் போன்று அனுபவிக்கும் அநாகரிகத்துக்கு ஆண் பெண்கள் தாவினால், ஆரோக்கியமற்ற ஒரு சமூகமன்றோ உருவாகும் ? அதனால் வருங்காலத்து மனித வாழ்வே தரங்கெட்டுப் போகுமே ? குற்றங்கள் மலியுமே ? உலகத்தில் நடக்கும் கொலைகளில் முக்கால்வாசிக்கு மேல் செக்ஸ் தகராறு காரணமாகவே நடப்பதாய்ச் சொல்லப்படும் நிலையில், மனிதன் கட்டுப்பாடுகளைத் துறந்து வாழும் நிலை ஏற்படுமானால், மனித சமுதாயத்தில் கொலைகள் இன்னும் அதிகமாகவல்லவோ நிகழும் ? செக்சின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்து இவர் எழுதுவதில் ஆழமான கண்ணோட்டமே இல்லையே! ‘ – இப்படி யெல்லாம் மீரா சிந்தனை செய்யலானாள்.

அவளுக்கு உடனே தன் அப்பாவின் ஞாபகம் வந்தது. அவள் திருமண விஷயமாகத் திருச்செந்தூருக்குப் போயிருக்கும் அவர் மறு நாள் காலை வந்துவிடுவார் என்னும் எண்ணம் அதைத் தொடர்ந்தது. அந்த எண்ணத்தைத் தொடர்ந்து தன்னைப் பார்த்துவிட்டுப் போன பையனின் நினைப்பும் வந்தது. அவள் உதடுகள் புன்சிரிப்புக் கொண்டன. அவன் அவளுக்கு ஏற்ற அழகன்தான். நல்ல படிப்பாளி. பெரிய வேலையில் இருக்கிறவன். ஆனால் ஏழையாக இருந்து முன்னுக்கு வந்தவனாம். அப்பவுக்கு அவனை விடமனமில்லை. அதனால், ஊருக்குப் போய் எழுதுவதாகச் சொன்ன அவன் பெற்றோர்களிடமிருந்து ஒரு வாரம் கழிந்த பின்னரும் கடிதம் ஒன்றும் வராத நிலையில் அவர் தாமே கிளம்பிப் போய்விட்டார்.

பெண் பிடித்த பிறகு மற்றவை பற்றிப் பேசினால் போதும் என்பது ஏற்கெனவே அவர்கள் சொன்னதுதான். பிடித்ததற்கும் பிடிக்காததற்கும்தான் கடிதம் எழுதுவதாகச் சொல்லிச் சென்றிருந்தனர். ஆனால் எந்தத் தகவலும் வரவில்லை. எனவே இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு வரும் ஆவலில் அப்பா கணபதி புறப்பட்டுப் போயிருக்கிறார். தன்னைப் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிற நம்பிக்கை மீராவுக்கு உண்டு. மாநிறம் தானென்றாலும் அழகும் கவர்ச்சியும் கனிவான பார்வையும் உடைய தன்னை எவராலும் நிராகரிக்க முடியாது என்று நினைத்து அவல் சிரித்துக் கொண்டாள். இதற்கு முன்னால் அவளை இரண்டு பேர் பார்த்துவிட்டுப் போனார்கள். ஆனால் இரண்டும் பணத்தகராறினால்தான் குதிராமல் போயின. இதுவும் அப்படி ஆனால்தான் உண்டு. அவளைப் பிடிக்காததால் அப்படி ஆகாது.

‘மீரா! ஏ, மீரா! காப்பியைக் குடிச்சுட்டுப் போயேண்டி! ‘ என்று அம்மா அடுக்களையிலிருந்து கத்தியது அவள் எண்ணங்களைத் தற்காலிகமாக நிறுத்தியது. அவள் எழுந்து போனாள்…

காப்பியைக் குடித்துவிட்டு, ‘அம்மா! நான் ருக்கு வகத்துக்குப் போயிட்டு வறேன்… ‘ என்று கிளம்பினாள்.

‘சரி… போயிட்டு விளக்கு வைக்கிறதுக்கு முன்னாடி வந்து சேரு… ‘ என்று அம்மா அனுமதி யளிக்கும் குரலில் சொன்னாள்.

அவள் போன போது, ருக்மிணி, ‘விவாகமா ? விபசாரமா ? ‘ எனும் அந்த நாவலைத்தான் படித்துக் கொண்டிருந்தாள்.

‘ஹையா! நீ வாங்கிட்டியாடி ஏற்கெனவே ? நான் இதைப் பத்திச் சொல்லணும்னு தாண்டி உன்னைத் தேடிண்டு வந்தேன். நீ படிச்சதும் எனக்குக் குடு… ‘ என்றவாறே மீரா ருக்மிணிக்கு எதிரே அமர்ந்தாள்.

‘இந்தா! நீ படிடி. நான் படிக்கிறது ரெண்டாவது தடவை… ‘ என்று சொல்லிவிட்டு அவள் அதை இவள் புறமாக நகர்த்தினாள். மீரா அதை ஆவலுடன் கையில் எடுத்து இப்படியும் அப்படியுமாகப் புரட்டலாணாள்.

‘இந்த எழுத்தாளர் வரதட்சிணைக் கொடுமையைப் பத்தி அடிக்கடி எழுதறார், இல்லே ? ஒருவேளை கல்யாணத்துக்கு நிறைய பெண்களை வெச்சுண்டு கஷ்டப்பட்றவரோ ? ‘ என்று கேட்டு விட்டு மீரா சிரித்தாள்.

‘இருக்கலாம்… இதைப் பத்தி முன்னுரையிலே அவரே சொல்லியிருக்கார். ‘நிறைய பேர் நான் அடிக்கடி வரதட்சிணைக் கொடுமை குறித்து எழுதுவதைக் குறை சொல்லுகிறார்கள். ஒரு பிரச்சினை தீர்க்கப்படாத வரையில் அதை ஒரு புளித்துப்போன பிரச்சினை என்பதாக நான் ஒப்புக் கொள்ளாததால், அடிக்கடி அது பற்றி நான் எழுதத்தான் செய்வேன்! ‘ அப்படின்னு சொல்லியிருக்கார். ‘கல்யாணம் ஆகாமல் செத்து மடிந்தாலும் மடிவேனே யல்லாது, வரதட்சிணை கொடுக்க மாட்டேன் ‘ என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல முன்வரவேன்டும். ‘ என்னும் மகாத்மா காந்தியின் கூற்றைப் பல இடங்களில் எடுத்துதெழுதியிருக்கிறேன். நம் பெண்களுக்குத் துளியாவது மானவெட்கம் வருகிறதா என்று பார்க்கிறேன் ‘ அப்படின்னு கூடச் சொல்லியிருக்கார். ‘

ருக்மிணியின் கடைசி வாக்கியம் மீராவின் மனத்தில் சுருக்கென்று பாய்ந்தது. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மீரா புத்தகத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்….

அந்தக் கதை ஒரு குறு நாவல்தான். அதனால், ஒரு மனி நேரத்துக்குள் அவள் அதைக் கிடுகிடுவென்று படித்து முடித்துவிட்டாள். ஒரு நடுத்தரக் குடும்பம் பற்றிய கதை அது. ஓர் இலட்சியத் தகப்பன் வரதட்சினை கேட்பவனை மணக்கமாட்டேன் என்று சொல்லவேண்டும் அன்று தம் பெண்களுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார். அந்தப் பெண்களும் இலட்சியவாதிகளாக இருப்பதால், அதை ஏற்கிறார்கள். இதனால் அந்தக் குடும்பத்தில் யாருக்குமே திருமணம் ஆகவில்லை. பெண்களின் அம்மா கனவரைத் திட்டுகிறாள். அக்கம்பக்கத்தவரின் வம்புக்கும் கேலிக்கும் அந்தக் குடும்பம் ஆளாகிறது. கடைசியில், மூத்த மகள் தன் அலுவலகத்தில் ஒருவனைக் காதலிக்க முற்பட்டு அதை வீட்டிலும் சொல்லும் போது, அது காதல் திருமணமாதலால் வரதட்சினை இருக்காது என்பதில் எல்லாருமே மகிழ்ந்து போகிறார்கள்.

ஆனால், கடைசி நேரத்தில் காதலன் அவளைக் கைவிடுகிறான். காரணம், அவனை மேல் நாட்டுக்கு அனுப்பிப் படிப்பிக்க ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் முன்வருவதுதான். மேல் நாடு சென்று முன்னுக்கு வரும் ஆசையில் அவன் காதலியைத் துறப்பதோடு தன்னை மன்னிக்குமாறும் தன் வருங்கால முன்னேற்றத்தை மனத்தில் கொண்டு அவள் தன்னைத் துறக்க வேண்டும் என்றும் கேட்கிறான். எப்படியானாலும், மனத்தளவில் அவள்தான் தனக்கு மணைவி என்று பசப்புகிறான். கடைசியில் வேறு வழியின்றி அவள் அவனைத் துறக்க நேர்கிறது.

அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வீட்டில் திருமணப் பேச்சே எழவில்லை. இறுதியில், தன் அசட்டுத் தனமான இலட்சியத் திணிப்பின் விளைவாகத்தான் தன் பென்களில் மூத்தவளுக்குக் கூட வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை என்னும் கழிவிரக்கம் அந்தத் தகப்பனை வருத்துகிறது. தாயைப் படுக்கையில் தள்ளுகிறது. எனவே, தோற்றுப்போன அந்தத் தகப்பன் மூத்த மகளை யழைத்துத் தன் கொள்கையை அம்மாவின் பொருட்டேனும் அவள் கைவிட்டே ஆகவேண்டும் என்று சொல்லுகிறார். தனக்கும் ரொம்பவும் உறுத்தலாக இருப்பதாகவும் எனவே ஒரு பெண்ணுக்காவது மணமுடித்தால்தான் தன் மனம் நிம்மதியடையும் என்றும் கூறித் தன் மகளைக் கெஞ்சுகிறார். இறுதியில் மூத்தவள் தன் கொள்கையை விட்டுக்கொடுக்கிறாள்.

கொஞ்ச நாள்கள் கழித்து அவளுக்கு வேறிடத்தில் திருமணம் குதிர்கிறது. நாலாயிரம் வரதட்சினை. இன்னும் மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து இருபத்தைந்தாயிரம் ஆகிறது. அக்காவுக்குத் திருமணம் ஆனதில் தங்கைகளுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. அக்கா கணவனுடன் புறப்பட்டுப் போகிறாள்.

ஆனால், போன சில மாதங்களில் அவள் திரும்பி வருகிறாள். அவள் கணவன் அவளை நிரந்தரமாகப் பெற்றோர் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுகிறான்.

ஒரு ரெயில் பயணத்தின் போது, தனக்கு அறிமுகம் இல்லாத – தன்னையும் அறியாத -இரண்டு அன்னியர்கள் பேசியதைத் தற்செயலாய்க் கேட்க நேர்ந்தது என்றும், அதிலிருந்து தன் மனைவி திருமனம் ஆவதற்கு முன்னால் வேறு ஒருவனைக் காதலித்தது தெரியவந்தது என்றும், எனவே அவளைத் திருப்பி யனுப்புவதாகவும் அவள் கணவன் அவள் அப்பாவுக்குக் கடிதம் வேறு எழுதியிருந்தான்.

அப்பா மாப்பிள்ளைக்கு உடனே பணிவாய்க் கடிதம் எழுதுகிறார். ‘நீங்கள் கேள்விப்பட்டது பொய்யில்லை. ஆனால், அவர்கள் மனத்தளவில் மட்டும் உறவுகொண்டவர்கள் என்பதைத் தவிர வேறெந்தத் தவற்றையும் செய்யாதவர்கள். எனவே, நீங்கள் அவளைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்து நிராகரிக்கக்கூடாது. ‘ என்று எழுதுகிறார். அதற்கு அவன், ‘மனத்தளவில் சோரம் போவதற்கும், உடலளவில் சோரம் போவதற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, ஒரு விபசாரிக்கு ஒப்பான உம் மகள் எனக்கு வேண்டாம் ‘ என்று அதில் எழுதுகிறான்.

. அந்த மோசமான கடிதத்தைப் படிக்க நேர்ந்த தங்கைகளில் ஒருத்தி மனத்துள் குமைகிறாள். தன் அக்காவை விபசாரி என்று அவள் கனவன் சொன்னதை அவளால் தாங்க முடியவில்லை. உடனே அவனுக்குக் காரசாரமாகக் கடிதம் எழுதுகிறாள்…

‘அன்புள்ள அத்திம்பேருக்கு.

இந்தக் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் எழுதுகிறேன். தெரிந்தால் தடுத்துவிடக் கூடும் என்னும் பயத்தாலேயே யாருக்கும் சொல்லாமல் எழுதுகிறேன். தகாத வார்த்தை சொல்லி அக்காவின் மேல் களங்கம் சுமத்தி யிருக்கிறீர்கள். அந்த வார்த்தையைத் திரும்பவும் எழுத என் கை கூசினாலும், எழுதித்தானாகவேண்டி யிருக்கிறது. அது, ‘நீங்கள்தான் விபசாரி ‘ என்பதாகும். அதாவது, விபசாரி என்று அழைக்கப்படுவதற்கான தகுதி உங்களுக்குத்தான் உண்டு.

என் அக்கா உங்களுக்கு ஒரு சமையற்காரி, வேலைக்காரி, உற்ற தோழி ஆகிய மூன்றுமாக இருந்துவந்தும், உங்கள் உடலுறவை அவளுக்கு நல்குவதற்காக அவள்ிடம் திருமனம் நடப்பதற்கு முன்னாலேயே கூலியாக நாலாயிரம் ரூபாயை வரதட்சிணையின் பெயரால் வாங்கிக்கொண்டார்கள். அவளுடன் நீங்கள் வாழ்ந்தது மொத்தம் இருநூறு நாள்கள்.இந்த இருநூறு நாள்களிலும் நீங்கள் உங்கள் உடலுறவை அவளுக்கு அளித்திருக்க முடியாது. இருந்தாலும் இருநூறு என்றே வைத்துக்கொண்டு கணக்குப் போடுவோம். நீங்கள் அவளுக்கு அளித்த உடலுறவுக்கு அவள் உங்களுக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தாள் என்பதே கூலிக்குச் சமமாகும். அப்படியும் ஒரு நாளுக்குப் பத்து ரூபாய் என்று சராசரிக் கணக்குப் போட்டாலும், கழிக்கப்பட்ட தொகை இரண்டாயிரம் போக மீதி இரண்டாயிரம் உங்களிடம் இருக்கிறது. அதற்கு உடனே ஒரு ‘செக் ‘ எழுதி என் அப்பாவின் பெயருக்கோ அல்லது அக்காவின் பெயருக்கோ அனுப்பவும். மனச்சாட்சி

என்கிற ஒன்று உங்களக்கு இருப்பின் உடனே அதைச் செய்யுங்கள்.

உங்கள் பேச்சை மதித்து, அக்கா நல்ல வேலையை விட்டுவிட்டு இப்போது திரிசங்கு நரகத்தில் இருக்கிறாள். ஒரு நல்ல வேலையையும் நீங்கள் அவளுக்குப் பெற்றுத் தரவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. நீங்கள் அக்காவுக்கு வேலை வாங்கித் தருவது ஒரு புறமிருக்க, உங்களுக்கு அளிக்கப்பட்ட விபசாரப் பணத்தில் மீதியுள்ள இரண்டாயிரத்தையாவது உடனே திருப்பி யனுப்பவும். இந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு நேர்மையான ஒரு முடிவுக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்…. ‘ – மைத்துனியின் இக்கடிதத்துடன் கதை முடிகிறது.

மீராவின் சிந்தனை பெரிதும் கிளர்ந்தது. ‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவதற்கு நீ எனக்குக் காசு தரவேண்டும் ‘ என்று ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் சொல்லுவதற்கும், ‘என்னுடன் படுப்பதற்கு நீ காசு தரவேண்டும் ‘ என்று ஒரு விபசாரி ஓர் ஆணிடம் சொல்லுவதற்கும் இடையே என்ன வித்தியாசம் எனும் கேள்வி அவளுள் தோன்றியது.

அப்படியானால், ஒரு பெண்ணை மணப்பதற்கு அவளிடம் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பவர்கள் எல்லம் ‘கான்ட்ராக்ட் ‘ அடிப்படையில் காசு கேட்கும் ‘ஆண் விபசாரிகள் ‘ தானே என்று தோன்றிற்று. அதன்படி பார்த்தால், ‘உன்னுடன் படுப்பதற்கு நான் காசு தருகிறேன் ‘ என்று சொல்லிக்கொண்டு விபசாரியிடம் போகும் ஆணுக்கும், ‘வாழ்க்கை முழுவதும் உன்னுடன் படுப்பதற்கு உனக்கு நான் ஆயிரக்கனக்கில் பணம் தருகிறேன் ‘ என்று ஆண் ஒருவனிடம் தஞ்சம் புகும் பெண்ணுக்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை என்கிற உண்மையும் உறைத்தது. அவள் அருவருப்புடன் தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். அதிலும், அவனுக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டு, பிள்ளை பெற்றுக்கொண்டு, தொண்டு செய்துகொண்டு…சீ! அசிங்கம்!

… மறு நாள் திருச்செந்தூரிலிருந்து அப்பா திரும்பி வந்தார். பெண் பிடித்திருப்பதாகவும், ஆனால் தாங்கள் கேட்கும் வரதட்சிணையைத் தரும் சக்தி அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்குப் புரிந்ததால் ஒன்றும் எழுதவில்லை யென்றும் அவர்கள் சொன்னதாய்த் தெரிவித்தார். எட்டாயிரம் வேண்டுமாம். ஓர் ஆயிரம் கூடக் குறைத்துக்கொள்ள மாட்டார்களாம்!

பையன் அவரைத் தனியாகப் பார்த்து எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னானாம். மீராவுக்கு எரிச்சல் மண்டிற்று.

. ‘பையன் ராஜாவாட்டம் இருக்கான். ஏன்னா! ஊர்லே இருக்கிற நஞ்சை நிலத்தை வித்துட்டா என்ன ? ‘ என்று அம்மா ஆரம்பித்தாள்.

‘ஏண்டி, அறிவு கெட்டவளே! வித்துட்டு வயித்துல ஈரத்துணியைப் போட்டுக்க்கிறதா ? அதையும் மீராவுடைய சம்பாத்தியத்தையும் வெச்சுத்தானே வயிறு வளர்த்துண்டிருக்கோம் ? மீராவுடைய சம்பாத்தியம் என்னிக்கும் நமக்கு நிலைக்காதுங்கிறது என்னிக்கோ தெரிஞ்ச விஷயம். ஆனா, நிலத்தையும் வித்துட்டா, நாளைக்கு நான் ரிடைர் ஆனதுக்கு அப்புறம் எப்படி காலட்சேபம் பண்றதாம் ? நல்ல யோசனை சொல்றே, போ! ‘ என்று அப்பா கத்தினார்.

தன் கல்யாணத்தைப் பற்றி அதற்கு முன்னால் பேசியிராத மீரா முதன் முறையாக அப்பாவை அழைத்துச் சொன்னாள்: ‘அப்பா! ஒரு நிமிஷம்! நான் வரதட்சினை கேக்கற எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதனாலே எனக்குக் கல்யாணமே ஆகாம போனாலும் சரிதான். அப்படி ஒண்ணும் கல்யாணம் பெரிசில்லே. ‘ – சொற்கள் வெடித்துச் சிதறிய தினுசில் அப்பாவும் அம்மாவும் மலைத்துப் போனார்கள்.

‘மேலே பேச்சுக்கே இடமில்லை ‘ என்பது போல் அவள் உறுதியான தப்படிகளில் அவ்விடம் விட்டு அகன்றாள்….

ஆனந்த விகடன் / 23 – 12 – 1979

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா