முள்பாதை 60

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மூன்று நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. மாமி, மாமாவின் அன்பான உரையாடலில், மதூவின் நட்புகலந்த பேச்சில் எங்களுடைய திருப்பதி பயணம் ஜாலியாகக் கழிந்தது. மாமி, மாமா, மதூ சென்னையில் இறங்கிக் கொண்டார்கள். மதூ எங்களை காரிலேயே மெலட்டூருக்கு போகச்சொல்லி வற்புறுத்தினான்.
நான்காவது நாள் மாலை நேரத்தில் நாங்கள் மெலட்டூரை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். கிருஷணன் திருப்பதியிலிருந்தே நாங்கள் வரப் போவதைப் பற்றி தந்தி கொடுத்திருந்தான். எங்கள் கார் மெலட்டூர் பஸ்ஸ்டாப் அருகில் போய்க் கொண்டிருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் நேரம். வானத்தில் சிவப்பு நிறம் எங்கும் பரவியிருந்தது. நெற்பயிறின் மீதிருந்து வீசும் இதமான காற்று, கூட்டுக்கு வந்து சேரும் பறவைகளின் கலகல சத்தம்… இதையெல்லாம் பார்க்கும் போது முதல் தடவை இங்கே நான் வந்த நாள் நினைவுக்கு வந்தது. ஏனோ இங்கே ஒரு நிமிடம் நின்று சூழ்நிலையை ரசிக்கணும் என்று தோன்றியது.
“தாகமாக இருக்கு” என்றேன்.
கிருஷ்ணன் காரை நிறுத்தச் சொன்னான். அவன் இறங்கி சோடா வாங்குவதற்காக கடையை நோக்கிப் போகும் போது சாமிகண்ணு எதிரே வந்தான்.
“சாமிகண்ணூ! நீ இங்கே வந்திருக்கிறாயா?” கிருஷ்ணன் கேட்டான்.
“ஆமாம் சாமி! உங்களுக்காக வண்டியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
“வண்டியை எதுக்குக் கொண்டு வந்தாய்? நாங்கள் நேராக வந்து விடுவதாக தந்தி கொடுத்திருந்தேனே? உன்னிடம் யாரும் சொல்லவில்லையா?”
“அம்மா சொன்னாங்க. ஆனால்…” தலையைச் சொறிந்தான் சாமிகண்ணு.
“சரி. நாங்கள் போகிறோம். நீ வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிடு.” கிருஷ்ணன் சோடா வாங்கி வருவதற்காகப் போனான்..
சாமிகண்ணு ஏமாற்றமடைந்தவன் போல் பார்த்தான். பிறகு என்ன நினைத்தக் கொண்டானோ என்னவோ. என் அருகில் வந்தான். இரண்டு கைகளையும் ஜோடித்து பணிவான குரலில் “அம்மா! உங்களுக்காக வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்க இருவரும் என்னுடைய வண்டியில்தான் வீட்டுக்கு வரணும்” என்றான். நான் ஒப்புக்கொண்டு விட்டால் கிருஷ்ணனின் ஆட்சேபணையுடன் வேலையில்லை என்ற எதிர்பார்ப்பு அவன் குரலில் பிரதிபலித்தது. அவன் முகத்தை, அவன் கேட்ட முறையைப் பார்த்த பிறகு அவனுக்கு ஏமாற்றம் தருவதில் எனக்கு விருப்பமில்லை.
“சரி. அப்படியே ஆகட்டும்” என்று காரை விட்டுக் கீழே இறங்கினேன்.
சாமிகண்ணு உற்சாகத்துடன் தலைபாகையை சரிசெய்து கொண்டு கீற்றுக் கொட்டகையின் பின்பக்கம் சென்றான். சோடா பாட்டில்களை எடுத்துக் கொண்டு பையன் ஓடிவந்தான்.
நானும் கிருஷ்ணனும் சோடா குடித்துக் கொண்டிருந்த போது சாமிகண்ணு வண்டியை எடுத்து வந்தான். அதைப் பார்த்ததும் நான் கிருஷ்ணனும் சோடா குடிப்பதை நிறுத்திவிட்டு ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டோம். பூக்களால் தோரணங்களை அமைத்து வண்டியைத் தேர்போல் அலங்கரித்து இருந்தார்கள். மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டிருந்தது. கழுத்திலும் ஜவ்வந்தி பூ மாலையைப் போட்டிருந்தார்கள். தன்னுடைய வண்டியில்தான் நாங்கள் வரணும் என்று சாமிகண்ணு எதற்காக பிடிவாதம் பிடித்தானோ இப்போ எனக்குப் புரிந்தது.
“என்ன இது? யார் செய்யச் சொன்னாங்க இந்த அலங்காரமெல்லாம்?” கிருஷணன் வியப்புடன் வண்டியை நோக்கி நடந்தான்.
“என் சந்தோஷத்திற்காகத்தான் சாமி! உன்னை என் கையால் வளர்த்து ஆளாக்கினேன். உன் கல்யாணத்தைப் பற்றி எத்தனையோ ஆசைகளை வைத்திருந்தோம். நீயானால் கிருஷ்ணன் ருக்மிணியைத் தூக்கி வந்தாற்போல் சத்தம் போடாமல் அழைத்து வந்து விட்டாய். இந்த சந்தோஷமாவது எங்களுக்குக் கிடைக்கட்டும் சாமி.”
பூந்தேர் போல் இருந்த அந்த வண்டியைப் பார்த்த போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு பலமான வரவேற்புடன் சாமிகண்ணு எங்களுக்காக கத்திருந்தது நல்ல சகுனமாக எனக்குத் தொன்றியது.
“நீ ஆசைப்படுகிறாய். ஆனால் சின்னம்மா என்ன சொல்வாங்களோ?” கிருஷ்ணன் சந்தேகத்துடன் என் பக்கம் பார்த்தான்.
“சின்னம்மா ஒப்புக் கொண்டாகிவிட்டது. சீக்கிரமாக கிளம்பினால் பொழுதோடு வீட்டுக்குப் போய்விடலாம்” என்றான் சாமிகண்ணு.
நான் வண்டியை நோக்கி நடந்தேன். கிருஷணன் என் இடுப்பைப் பிடித்துக் கொண்டு உயரே தூக்கினான். கம்பியை பிடித்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொண்டேன். வண்டியின் உள்ளே வைக்கோலை பரப்பி மேலே மெத்தையைப் போட்டிருந்தார்கள்.
“நீயும் ஏறிக்கொள் சாமி!” சாமிகண்ணு சொன்னான்.
“உன்னுடன் ரொம்ப தொல்லைதான் போ.” கிருஷ்ணன் சலித்துக் கொண்டான். வண்டியில் என் எதிரே அமர்ந்து கொண்ட கிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுக் கொள்வது போல் “டெலிகிராம் கொடுக்காமலே இருந்திருக்கணும். சாமிகண்ணு இப்படி படுத்துவான் என்று நினைக்கவில்லை” என்றான்.
“இது படுத்தலா? இவ்வளவு ரசனையுடன் நமக்கு வரவேற்பு தந்ததற்கு தாங்க்ஸ்தான் சொல்லணும்.”
சாமிகண்ணு வண்டியின் முன்னால் நடந்துக் கொண்டிருந்தான். பின்னால் மாட்டு வண்டியும், அதற்கும் பின்னால் காரும் ஊர்வலம் வந்து கொண்டிருந்தன. வீட்டிற்கு போனதுமே சாமிகண்ணுவுக்கு என் மோதிரத்தை பரிசாகத் தரவேண்டும் என்று முடிவு செய்தேன். பௌர்ணமி நிலா வானத்தில் எங்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தது.
வண்டி தோட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது போலும். திடீரென்று பேண்ட் சத்தம் §க்டது. கிருஷ்ணனும் நானும் திடுக்கிட்டு முன்னால் எட்டிப் பார்த்தோம். அங்கே பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பேண்ட் வாசிப்பவர்கள் எங்களுக்காக காத்திருந்தார்கள் போலும். எங்களுடைய வண்டி தென்பட்டதும் வாசிக்க ஆரம்பித்தார்கள்.
“ரொம்ப ஆர்பாட்டம்தான் செய்திருக்கிறான் சாமிகண்ணு.” லேசான கோபத்துடன் சொன்னான் கிருஷ்ணன்.
குப்பத்திருக்கும் ஜனங்கள் ஓடிவந்து வண்டியை நிறுத்தினார்கள். கிருஷ்ணனுக்கும், எனக்கும் மாலைகளைப் போட்டு இனிப்புகளை வழங்கினார்கள். வண்டி ஊருக்குள் நுழைந்தது. ஊர்மக்கள் திண்ணையில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.
“வீட்டுக்குப் போனதுமே நான் செய்யப் போகும் முதல் காரியம் என்ன தெரியுமா? சாமிகண்ணுவின் முதுகில் இரண்டு அடி கொடுப்பதுதான்.” கிருஷ்ணன் சொன்னான். எப்படியோ எங்களுடைய வண்டி வீட்டின் முன்னால் வந்து நின்றது. “கல்யாணப்பெண் எங்கே பார்ப்போம்.” ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு வண்டிக்குள் எட்டிப் பார்த்தார்கள்.
வண்டி நின்றது. கிருஷ்ணன் இறங்கினான். நானும் இறங்கப் போனபோது “இரு. ஸ்டூல் கொண்டு வரச் சொல்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.
“பெண்டாட்டி என்றால் எவ்வளவு கரிசனம் பார்.” யாரோ ஒருத்தி சொன்னாள். எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். வெட்கத்தினால் என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
ஸ்டூல் கொண்டு வந்து போட்டார்கள். ஒரு கையால் கம்பியை பிடித்துக் கொண்டு மெதுவாக வலதுகாலை ஸ்டூல் மீது வைத்தேன். இரண்டாவது காலையும் ஊன்றும்போது யாரோ கையை நீட்டினார்கள். கிருஷ்ணன்தான் என்று நினைத்துக்கொண்டு அழுத்தமாக பிடித்துக் கொண்டேன். வயதானவர்களின் கையைப் போல் நரம்புகள் புடைத்து, மோதிரவிரலில் ஏறகனவே எனக்கு மிகவும் பரிச்சயமான பவழ மோதிரம் தரித்து என் உதவிக்கு வந்த அந்தக் கையை பார்த்ததும் மின்னல் வேகத்தில் நிமிர்ந்து பார்த்தேன். எனக்கு உதவிக்கரம் நீட்டிய நபர் யாரோ இல்லை. சாட்சாத் என்னுடைய அப்பாவேதான்.
“டாடீ!” ஸ்டூலைவிட்டு குதித்து அப்படியே அப்பாவை அணைத்துக் கொண்டேன். திடீரென்று அப்பாவைப் பார்த்ததில் எனக்கு சந்தோஷமும், துக்கமும் ஒன்றாக ஏற்பட்டன. அப்பா என் முதுகை அன்புடன் தட்டிக்கொடுத்தார்.
“என்ன இது? மூன்று நாள்தானே ஆச்சு.” அப்பாவின் குரல் நடுங்கியது.
“மூன்று நாட்களா? மூன்று யுகங்கள் ஆனாற்போல் இருக்கு எனக்கு” என்றேன்.
“ஒரே மகளாம். பாவம்!” யாரோ சொல்வது காதில் விழுந்தது.
“சீக்கிரம் ஆகட்டும். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. தம்பதிகள் இருவரும் இந்தப் பக்கமாக வந்து சேர்ந்து நில்லுங்கள். ஆரத்தி எடுக்கணும்.” ஆணையிடுவது போல் குரல் கேட்டது. அப்பாவின் அணைப்பில் இருந்த நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். எதிரே அம்மா நின்றிருந்தாள். பக்கத்திலேயே திருநாகம் மாமி வெள்ளி கூஜாவுடன் பணிவாக நின்றிருந்தாள்.
“மம்மி!” அம்மாவை பார்த்ததும் ஒரே எட்டில் நெருங்கி கழுத்தை கட்டிக் கொண்டேன். அம்மாவை பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷம் அலாதியானது.
அப்பாவை போல் அம்மா என்னை கட்டிக் கொள்ளவில்லை. தலையை வருடிக் கொடுக்கவும் இல்லை. மெதுவாக என் கைகளை விலக்கிவிட்டு “மூன்று நாட்ளுக்கே இவ்வளவு ஏக்கம் என்றால் வாழ்நாள் முழுவதும் எங்களைப் பிரிந்து எப்படி இருக்கப் போகிறாய்?” என்றாள்.
அம்மாவின் பேச்சில் தொனித்த பொருள் என் ஒருத்திக்கு மட்டும்தான் புரிந்தது. அம்மா என்னை மன்னித்தாலும், என்மீது இருக்கும் கோபம் முழுவதுமாக போகவில்லை.
நானும் கிருஷ்ணனும் அருகருகில் நின்றுகொண்டோம். ராஜியும், அம்மாவும் எங்களுக்கு ஆரத்தி எடுத்தார்கள். நானும் கிருஷ்ணனும் உள்ளே அடியெடுத்து வைக்கும் போது மங்கம்மா குறுக்கே கையை நீட்டி தடுத்தாள். “என்ன கிருஷ்ணா? அன்னிக்கு மாமன் மகள் உனக்கு முறைப்பெண்தானே என்று நான் சொன்ன போது என்மீது எரிந்து விழுந்தாய் இல்லையா? இப்போ நீ செய்த காரியம் மட்டும் என்னவாம்?” என்றாள் நியாயம் கேட்பதுபோல்.
பதில் சொல்ல முடியாமல் கிருஷ்ணன் தலையைச் சொறிந்து கொண்டான். பிறகு பத்துரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அந்த அம்மாளின் கையில் வைத்துவிட்டு “சித்தி! கடவுள் உன் நாக்கில் ததாஸ்து மந்திரத்தை எழுதியிருப்பார். தயவுசெய்து இனி நல்லதையே பேசுங்கள்” என்றான்.
பத்து ரூபாயைப் பார்த்ததும் மங்கம்மாவின் முகம் மலர்ந்தவிடது. ரூபாயைப் புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டு அப்பாவின் பக்கம் திரும்பி “டேய் ஆனந்தா! உன் மாப்பிள்ளைக்கு ரொம்ப பெரிய மனசு. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தது உன்னுடைய அதிர்ஷ்டம்தான் போ” என்றாள்.
அத்தை சொன்னபடி நானும் கிருஷ்ணனும் அப்பா, அம்மாவுக்கு, அங்கே இருந்த பெரியவர்களுக்கும் வணங்கினோம். நாங்கள் உள்ளே வரும்போது சாரதி எதிரே வந்து “பயணம் நன்றாக நடந்ததா?” என்று விசாரித்தான். அவனைப் பார்ததும் நானும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
சாரதி கிருஷ்ணனி கையைப் பற்றி குலுக்கினான். என் பக்கம் நிஷ்டூரமாக பார்த்துவிட்டு புகார் செய்வது போல் கிருஷ்ணனிடம் “உங்க மாமா மகள் பலே கெட்டிக்காரி. ராஜேஸ்வரி யாரென்று சொல்லாமல் என்னை டான்ஸ் ஆட வைத்தாள்” என்றான்.
நான் உள்ளே வந்தேன். வீடுகொள்ளாமல் உறவினர்கள். சற்று நேரம் கழித்து “குளிக்கிறாயா?” என்று கேட்டபடி ராஜி என்னிடம் வந்தாள். அவள் கையை பற்றி அருகில் இழுத்துக் கொண்டேன்.
“ராஜி! நான் வந்த பிறகு அங்கே என்ன நடந்தது? தெரிந்துகொள்ளணும் என்று என் மனம் கிடந்து தவிக்கிறது” என்றேன்.
ராஜி சுற்றிலும் பார்வையிட்டாள். அம்மா அந்த சுற்றுவட்டாரத்தில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சொன்னாள். “நீ கிளம்பிப் போன ஒரு மணிநேரம் கழித்து மாமிக்கு நினைவு திரும்பியது. நீ எங்கே என்று கேட்டாள். நீ கிளம்பிப் போய்விட்டதாக மாமா சொன்னார். மாமி மாமாவின் மீது தலையணையை வீசினாள். இதெல்லாம் நீங்கதான் செய்தீங்க என்று மாமாவை வாய்க்கு வந்தபடி ஏசினாள். மாமா சமாதானப்படுத்த முயன்றார். “வேணி! எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாய்? இவ்வளவு அபூர்வமாக வளர்த்த மகளை, பட்டிக்காட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்பவனுக்குக் கட்டி வைப்பேனா? கிருஷ்ணனிடம் பிரியம் இருப்பது உன்மைதான். ஆனால் மகளை கட்டிவைக்கும் அளவுக்குப் பிரியம் என்றுமே எனக்கு இருந்தது இல்லை. இதை நீ நம்பவில்லை என்றால் அது என் தலையெழுத்து” என்றார்.
மாமி அழத் தொடங்கினாள். மாமா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அன்று இரவு முழுவதும் அப்படியே கழிந்தது. உங்க சித்தியும், சித்தப்பாவும் “இனி ஜென்மத்தில் மகளின் முகத்தில் விழிக்காதீங்க. அவளுக்கு அதுதான் தண்டனை” என்றார்கள்.
“வாயால் சொல்வது எளிது” என்றார் மாமா. “உயிரே போனாலும் மகள் முகத்தை இனி பார்க்க மாட்டேன்” என்று மாமி சொன்னாள்.
பிறகு என் கையைப் பிடித்த அருகில் இழுத்துக் கொண்டாள். “ராஜி! இனி நீதான் எனக்குத் துணை. உனக்கும் சாரதிக்கும் கல்யாணம் செய்து வைப்பேன். என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைத்து அவர்களுக்கு புத்தி வரும்படி செய்வேன்” என்றாள். எனக்கு பயமாக இருந்தது. அன்று மதியம் கட்டாயப்படத்தி சாப்பிட ¨வ்தேன். பாதி சாப்பாட்டிலேயே மாமி கையை அலம்பிக் கொண்டாள். என் கையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் அழுதாள். “பார்த்தாயா ராஜி! பெற்றவள் என்ற மதிப்பு கூட அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. ஒற்றைமகள்! அவளும் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாள். நாலுபேர் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க?” என்று கேவினாள். மாமி மனம் விட்டு வெளிப்படையாக பேசியதால் எனக்கும் தைரியம் வந்து விட்டது. மெதுவாக நடந்ததை எல்லாம் சொல்லிவிடேன். மாமி திகைத்துப் போனவளாக கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் உன்னிடமிருந்த கடிதம் வந்தது. மாமி கடிதத்தைப் படித்துவிட்டு “ராஜி! கதவைச் சாத்திவிட்டு போ” என்றாள். நான் வெளியே வந்துவிட்டேன்.
அரைமணி நேரம் கழித்து மாமா வந்தார். மாமிக்கு உன் கடிதம் கிடைத்த சமாசாரமும், பிறகு மாமி கதவைச் சாத்திக் கொண்ட விஷயமும் சொன்னேன். மாமா போய் கதவைத் தட்டினார். பதில் வரவில்லை. கதவைத் திறக்கவில்லை என்றால் கதவை உடைத்தக் கொண்டு உள்ளே வரப் போவதாக மாமா கத்தினார். மாமி கதவைத் திறந்தாள். ரொம்ப நேரம் அழுதாற்போல் மாமியின் கண்கள் சிவந்திருந்தன. நீ எழுதிய கடிதம் கையில் அப்படியே இருந்தது. மாமி மாமாவின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள். “எனக்கு குழந்தையே பிறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று புலம்பினாள்.
“ஒற்றை மகளாகப் பிறந்தது நம்முடைய துரதிர்ஷ்டம் வேணி!” என்றார் மாமா. அன்று இரவு நான் மாமியிடம் மறுநாள் காலையில் மெலட்டூருக்குப் போய்விடுவதாக சொன்னேன். மாமியும் சரி என்றாள்.
மறுநாள் காலையில் நான் கிளம்பும் போது “நாங்களும் உன்னுடன் வருகிறோம்” என்றார் மாமா. மாமி சாரதிக்கு போன் செய்தாள். அவரகள் இரண்டு பேரும் என்ன பேசிக் கொண்டார்களோ எனக்குத் தெரியாது. சாரதியும் எங்களுடன் கிளம்பினாள்.
எங்களைப் பார்த்ததும் அம்மா அடைந்த பதற்றம் கொஞ்ச நஞ்சமில்லை. நாங்கள் வந்து சேர்ந்த சற்று நேரத்தில் நீங்கள் வரப்போவதாக தந்தி வந்தது. மாமாதான் படித்துக் காண்பித்தார். இதுதான் விஷயம். அண்ணி! மாமிக்கு இந்த அளவுக்கு வேதனையைத் தந்ததற்கு உன்மீது எனக்கு ரொம்ப கோபம் வந்தது. நீ வாய்விட்டு சொல்லாததால் ஏற்பட்ட வினை இதெல்லாம்” என்றாள்.
நான் விலகி விட்டதால் அம்மா அப்பாவுக்கு நடுவில் கருத்து வேற்றுமைகள் விலகி இருவரும் நெருக்கமானது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் கிளம்பிவந்து விட்டதால் ஏற்பட்ட தனிமையைத் தாங்க முடியாமல் அம்மா அப்பாவின் பக்கம் திரும்பியிருக்கிறாள். நான் நினைத்தது நடந்துவிட்டது. பாரம் இறங்கிவிட்டது போல் பெருமூச்சு விட்ட நான் “அதுசரி. சாரதி இங்கே எதற்காக வந்தானாம்?” என்றேன்.
“எனக்கு எப்படி தெரியும்?” எனாறள் ராஜி.
“உன்னிடம் அவன் எதுவும் சொல்லவில்¨லா?”
“போ அண்ணி! நான் அவனிடம் இதுவரையில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.”
“பேசவில்லை என்றால் மட்டும் என்ன? கண்ணாலேயாவது பார்த்தாயா?”
“பார்த்தால் மட்டும் என்னவாம்?”
“கண்ணால் காவியங்களைப் படைக்க முடியும் தெரியுமா?”
“என்னவோப்பா. அந்த வித்தை உனக்குத்தான் தெரியணும். அதோ அம்மா அழைக்கிறாள்.” ராஜி அங்கிருந்து போய்விட்டாள்.
நான் குளித்துவிட்டு அறைக்கு வந்தேன். அம்மா அங்கே இருந்தாள். என்னிடம் சாவியைத் தந்துகொண்டே “இந்தா உன் பெட்டி சாவி. எதுவும் வேண்டாம் என்று நீ வந்துவிட்டாலும், கொண்டு வந்து கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கே” என்றாள்.
நான் தலையைக் குனிந்து கொண்டேன்.
அம்மா மேலும் சொன்னாள். “நான் இரண்டு நாட்களில் கிளம்பி விடுவேன். நீ எழுதிய கடிதம் கிடைத்தது. நீ இவ்வளவு துணிச்சலுடன் உன் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு சந்தோஷம். செயலில் துணிச்சலைக் காட்டியவளுக்கு வாய்விட்டு சொல்ல முடியாத கோழைத்தனம் ஏன் வந்ததோ எனக்குப் புரியவில்லை. நீ முன்னாடியே உன் முடிவை சொல்லியிருந்தால் எனக்கும், உங்க அப்பாவுக்கு இந்தத் தலைகுனிவு ஏற்பட்டிருக்காது.”
“மம்மி!”
“ஒருக்கால் உனக்கு பெற்றோரில் நினைப்பு இருந்திருக்காது. நீ மட்டுமே இல்லை. இளையதலைமுறையே இப்படித்தான் இருக்கிறது. பொறுப்புகள் வேண்டாம். ஆனால் உரிமைகள் மட்டும் வேண்டும். சிறுவயது முதல் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை விட உங்களுக்கு மற்றவர்கள் வேண்டியவர்களாக இருப்பார்கள். நான் இங்கே வந்தது உனக்காக இல்லை. உன் எதிர்காலத்துடன், வாழ்க்கையுடன் சமாதானம் செய்து கொள்வதற்காக வந்திருக்கிறேன்.”
“மம்மி!” வேண்டுவதுபோல் அழைத்தேன். எனக்கு உடனே போய் அம்மாவை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் அந்தப் பார்வையின் மகிமை என்னவோ தெரியவில்லை. என்னால் ஒரு அடிகூட நகரமுடியவில்லை.
அம்மாவின் முகம் சிவந்து கன்றியிருந்தது. விரக்தி கலந்த முறுவல் இதழ்களில் தவழ்ந்தது. “ஹ¤ம்! குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரையில் எல்லாப் பெற்றோர்களும் என்னைப்போலவே பைத்தியமாக இருப்பார்கள். “எங்க குழந்தைகள்தான் உலகிலேயே உசத்தி. எங்களுடைய வளர்ப்பு அப்படிப்பட்டது” என்று பூரித்துப் போவார்கள். என்னையே எடுத்துக்கொள். உன்னைச் சுற்றிலும் எத்தனை ஆசைகளை வளர்த்துக் கொண்டேன்? எத்தனை கனவுகளைக் கண்டிருப்பேன்? வானத்தில் நட்சத்திரமாக உன்னை உட்கார வைத்துப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு தவித்திருப்பேன்? என் ஆசைகள், கனவுகள் என்னுடனே தங்கிவிட்டன. சிறகு முளைத்ததும் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போவதுபோல் நீ என்னை விட்டு விலகிப் போய்விட்டாய். கடைசி காலத்தில் எனக்கு மிஞ்சியதென்ன? தனிமை! ஏமாற்றம்! இதற்காகத்தானா உன்னை இவ்வளவு செல்லமாக வளர்த்தேன்? இப்படி அவமானப் படுவதற்காகவா இத்தனை நாளும் தவம் செய்தேன்?”
“மம்மீ! நீ தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறாய்?” தடுக்கப் போனேன். அம்மா காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“உன்னை எவ்வளவு அபூர்வமாக வளர்த்தேனோ உனக்கு நினைவு இல்லாமல் இருக்கலாம். உன் சிறுவயதில் ஒரு தடவை சமையல்காரன் உனக்கு பால் சுட வைத்து தருவதற்கு ஐந்து நிமிடங்கள் தாமதம் செய்தான் என்று எரிந்து விழுந்து அவனை வேலைவிட்டே அனுப்பியிருக்கிறேன். ஜுரம் வந்து நீ கண்ணைத் திறக்காமல் படுத்திருந்தபோது வாழ்க்கையே இருண்டுவிட்டது என்று நான் பயந்த நாட்கள் உண்டு. உன் மேனியின் நிறம் தங்கமாக ஜொலிப்பதற்கும், உன் தலைமுடி கருகருவென்று வளர்வதற்கு நான் படாத பாடு, செய்யாத முயற்சி பாக்கி இல்லை. உன்னை ஒத்த குழந்தைகள் யாராவது உன்னைவிட அழகாக, ஸ்டைல் ஆக இருந்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னை எந்த அளவுக்கு நெசித்தேன் என்றால் இன்னொரு குழந்தை பிறந்தால் உன்மீது பிரியம் குறைந்து விடுமோ என்று பயந்த இரவுகள் உண்டு. அந்த அளவுக்கு உன்னை நேசித்தேன். இந்த உலகில் நான் ஒருத்திதான் தாய் என்பதுபோல் நடந்துகொண்டேன். நான் அடையாதவற்றை எல்லாம் நீ அடைய வேண்டும் என்றும், என்னால் எட்ட முடியாத உயரத்தை நீ எட்ட வேண்டும் என்றும் தவித்தேன். கடைசியில் எனக்குக் கிடைத்தது என்ன? பத்து பேருக்கு நடுவில் அவமானம்! தலைகுனிவு! இப்போ தோன்றுகிறது நானும் மற்றவர்களைப் போல் சாதாரணமானவள்தான். மற்றவர்களைப் போல் குழந்தைகளுக்கு வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கும் அதிர்ஷ்டம் கூட எனக்குக் கிடைக்கவில்லை. பெற்ற மகளே என்னை மதிக்காத போது மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்?” திடீரென்று அம்மாவின் விழிகளில் நீர் சுழன்றது.
“மம்மி! நான்..” சட்டென்று அருகில் போகப் போனேன். ஆனால் அம்மா கையை உயர்த்தி நில் என்பது போல் ஜாடை கட்டினாள்.
“குறைந்தபட்சம் பணத்தின் மீது ஆசை இருப்பனை நீ கல்யாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இவ்வளவு வருத்தம் இருந்திருக்காது. என்னிடம் இருக்கும் பணத்தால் அவனுக்கு அந்தஸ்தை ஏற்படுத்தி அவனை நான் நினைத்த உயரத்தில் உட்கார வைத்திருப்பேன். ஆனால் நீ பண்ணிக் கொண்டிருக்கும் இந்த ஆள் மகா முரடன். தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள்தான் என்று பிடிவாதம் பிடிப்பவன். எதிரில் இருப்பவர்கள் அவனுடைய பேச்சைக் கேட்க வேண்டுமே தவிர அவன் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டான். இப்போ எனக்கு எப்படிப்பட்ட நிலைமை வந்துவிட்டதோ நீயோ பார். உன்னை பிரிந்த என்னால் இருக்க முடியாது. உன்னை அவன் என்னிடம் அனுப்ப மட்டான். எனக்கு இப்போ இரண்டே வழிகள் இருக்கு. நான் என்னுடைய சுயகௌரவத்தை விட்டுவிட்டு உங்களிடம் வந்து இருக்கணும். இல்ல¨யா உன்மீது இருக்கும் பிரியத்தை மறந்துவிட்டு வாழணும். இவை இரண்டும் என்னால் முடியாத காரியங்கள் என்று உனக்குத் தெரியும். இனி எஞ்சியிருப்பது ஒன்றுதான். அமைதியில்லாமல் வாழ்நாள் முழுவதம் நரகத்தில் உழல வேண்டியதுதான்.” அம்மாவின் கன்னத்தில் நீர் சுழன்றது.
“மம்மி!” இயலாமையுடன் பார்த்தேன். அத்தை ஏதோ வேலையாக உள்ளே வந்தாள். அத்தையை பார்த்ததும் அம்மா சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“புகுந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் இல்லையா. மாமியார், நாத்தனாருடன் எப்படி பண்பாக பழகணுமோ சொல்லித் தருகிறேன்” என்றாள்.
அதைக் கேட்டதும் அத்தையின் முகம் வாடிவிட்டது. “அண்ணி! மீனா எனக்கு வேற்று மனுஷியா என்ன? ராஜி எப்படியோ அவளும் அப்படித்தான். சொல்லப் போனால் ராஜியை விட மீனா கொஞ்சம் உசத்தியும்கூட” எறாள்.
“கமலா! இந்தக் காலத்து குழந்தைகளுக்கு ரொம்ப சலுகைகள் தருவது நல்லது இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு அம்மா அங்கிருந்து போய்விட்டாள்.
அத்தை கையோட கொண்டு வந்த பூச்சரத்தை என் தலையில் வைத்துக் கொண்டே “மீனா! கிருஷ்ணன் திருமண சமாசாரத்தை எழுதியபோது ரொம்ப பயந்துவிட்டேன். இந்த முரடனையும், உங்க அம்மாவையும் ஒன்றாக இணைக்கும் சாமர்த்தியம் உன்னிடம்தான் இருக்கிறது. உன் தயவால் அண்ணாவும், அண்ணியும் இந்த வீட்டில் நடமாடும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உன்னை மனைவியாகக் கொடுத்து என் மகனுக்கு நல்ல மூக்கணாங்கயிரை மாட்டிவிட்டான் அந்தக் கடவுள்.” அத்தை என் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தாள்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்