கருப்பாயி மகனுடைய பெட்டி

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

கே.பாலமுருகன்



மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம்-தமிழ் பேரவை நடத்திய தேசிய அளவிலான 2008ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை
1
“ சுந்தரேசா! பாத்து போடா. . பேக்ல மிஞாக் ஆங்கின், சளி மருந்துலாம் வச்சிருக்கேன் பாரு. . ஒன்னோட புக்கு, படிப்பு சூராலாம் இந்தச் சின்ன பெட்டில வச்சிருக்க பாத்துக்கடா. . போய் எறங்கனோன போன் பண்ணுடா. . ”
பேருந்தின் இருட்டில் சாவகாசமாக இருக்கையைக் கீழே இறக்கியிருந்தேன். கொஞ்சம் வசதியாகத்தான் இருந்தது. முதுகில் மட்டும் இலேசான வலி. பேருந்திலுள்ள தொலைக்காட்சி இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஏதோ ஒரு சீனப் படம். அங்கேயும் இங்கேயும் அரக்கப் பரக்க பாய்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள். பேருந்தில் பாதி பேர் உறங்கி போயிருந்தார்கள். எந்தச் சத்தமும் காதில் போய் சேரவில்லைதான். அம்மா பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பலருக்கு மத்தியில் அப்படிச் சத்தமாக பேசியது மட்டும்தான் கேட்டுக் கொண்டே இருந்தது.
“சுந்தரேசா. . மாணிக்கம் அண்ணனுக்கு போய் எறங்கனோனெ போன் பண்ணிருடா. . அங்க புடுராயா ஆள் கூட்டம் எப்பயும் இருக்கும்டா.. பயப்படாத. . . சாப்பாடுலாம் பாத்துக்க. சனியன் பிடிச்சவனுங்க வேகமாதான் ஓட்டுவானுங்க பஸ்ச. . பாத்துடா. . டேய். . குளுருதா?”
எத்தனை முறை உதறினாலும் அம்மாவுடைய அந்த வசனங்கள் விட்டுவிலகாமல் மனதோடு இணைந்து கொண்டு அந்தப் பேருந்தின் நகர்வுக்கு மத்தியில் காதுகளை அடைத்துக் கொண்டிருந்தன. இரண்டு பக்க இருக்கையிலும் அமர்ந்திருந்த மலாய்க்காரப் பெண்மணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் தொலைந்து போயிருந்தார்கள். பின் இருக்கையிலிருந்து குரட்டைச் சத்தங்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தன. தலையை மேலே உயர்த்தி பார்க்கும் போது பேருந்து ஈப்போவை நெருங்கி கொண்டிருந்தது. நெடுஞ்சாலை அதிகாலை 3 மணியின் அமைதியில் படுத்துச் சுருண்டிருந்தது.
கால்மாட்டில் சுங்கைப்பட்டாணி பேருந்து நிலையத்தில் வாங்கிய இரண்டு சாக்லேட் ரொட்டிகளும் சோயா பின் கோத்தா தண்ணீரும் ஒரு வெள்ளை நிறப்பையில் அடைக்கப்பட்டு கிடந்தன. அதை எடுத்து பிரித்து வயிற்றை நிரப்பி கொள்ள ஒரு சோம்பல். அப்படியேதான் கிடந்தது. நானும்தான். பேருந்தின் கீழ் வலது புறத்தில் பெட்டிகள் வைக்கும் இடத்தில் என்னுடைய இரு பெட்டிகளையும் அம்மாதான் வலுக்கட்டாயமாகத் திணித்திருந்தார்.
அந்த மண்டி லெம்பு கம்பம் முழுவதும் போய் நான் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போகிறேன், பெரிய கம்பெனி, நல்ல சம்பளம் என்றெல்லாம் தகவலைக் கூறிவிட்டுதான் வந்தார். அதனால்தான் தாமதம்.
“சுந்தரேசா! பொட்டிய இங்குட்டு வை. . கொடு ஒனக்கு வைக்க தெரியாது, கொடு நான் வைக்கறென்” சின்ன ஆர்பாட்டத்துடன் அம்மா அந்தப் பெட்டி வைக்கும் இடத்தின் இருளில் புகுந்து கொண்டு என்னுடைய இரு பெட்டிகளையும் பலமாக திணித்துக் கொண்டிருந்தார். ஒரு பெட்டியில் என்னுடைய கல்வி சான்றிதழ்களும் பத்திரங்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதையும் அம்மாதான் அடுக்கி வைத்திருந்தார்.

“டேய்.. பாத்துடா. . எறங்க மோது பெட்டியலாம் எடுத்துக்க. . நீயே பயங்கர மறதி. அப்படியே இழிச்சிகிட்டு போய், மறந்திறாத”
அம்மா இப்படித்தான். எந்த இடமாக இருந்தாலும் அம்மா இப்படித்தான். யாராவது அம்மா எந்த எஸ்டேட்லேந்து வந்துருக்காங்கனு கேட்டுவிடுவார்கள் என்று ஒரு பயம் எப்பொழுதும் இருக்கும். சின்ன வயதிலிருந்து இப்படித்தான். மண்டி லெம்பு கம்பத்திலிருந்து பத்து டூவா கடை தெருக்களுக்கு அம்மாவுடன்

போகவே பயமாக இருக்கும். அந்தக் காலத்தில் பத்து டுவா கடைத்தெருக்கள்தான் மண்டி லெம்பு கம்பத்துக்காரர்களுக்குச் செலவு பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு ஏதுவான சின்ன பட்டணம் மாதிரி.
வெளுத்த கைலியை அணிந்து கொண்டு, அம்மா எப்பொழுதும் மிளிர்ந்து கொண்டிருக்கும் ஒருவகை துடுக்குடன் அந்தக் கடை தெருக்களில் ஆவேசமாக நடந்து கொண்டிருப்பார். வழியில் யாரைச் சந்தித்துக் கொண்டாலும் எனக்குள் வெறுப்பை ஏற்படுத்தும் அம்மாவுடைய அரற்றிக் கொண்டிருக்கும் வசனங்கள் தாராளமாக அவருடைய பொக்கை வாயிலிருந்து விழுந்து கொண்டிருக்கும்.
“ வாங்க தர்மலிங்கம்! முனியாண்டி என்னா பன்றான்? சோத்து மாடு மாதிரி சுத்திகிட்டு இருந்தான், எதாச்சம் வேல செஞ்சானா இல்லையா? இதலாம் போட்டு வெளுத்தா சரியா இருக்கும். இப்படித்தான் வீட்டுக்கு ஒன்னு ஊர் மேயுதுங்க. பிள்ளிங்கனா நல்லா படிச்சி வீட்டுக்கு அடங்கி இருக்கனும், தோ இது இருக்கே. . அப்பப்ப போட்டு உறிச்சி எடுத்துருவேன்”
இப்படித்தான். எதுவாக இருந்தாலும் அம்மா இப்படித்தான். யாரைப் பார்த்தாலும் அவர் இப்படித்தான். அம்மா மட்டும் மிகவும் கவனமாக அவருடைய கோலா கெட்டில் தோட்டத்துப் பாஷைகளை விட்டொழித்து இந்தக் காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறியது இல்லைதான். வாயில் எதையாவது போட்டு மென்று கொண்டிருப்பது போல ஒரு முகத் தோற்றம்.
“ நறுக்கு! நறுக்கு!” என்று அம்மாவைச் சிலர் கேலியாக அழைத்துப் பழகியிருந்தார்கள். எதுவாக இருந்தாலும் நறுக்குனு ஒரே துண்டு வார்த்தையில் கேட்டுவிடும் அம்மாவின் சுபாவத்தையோ அல்லது காலியான வாயில் எதையோ வைத்து அசை போட்டுக் கொண்டிருப்பது போன்ற பழக்கத்தையோ அடையாளப்படுத்தும் பெயர்தான் போலும். வலப் பகுதியிலுள்ள இரண்டு பற்கள் கம்பியில் கட்டப்பட்டிருப்பதால், அதை அடிக்கடி நாக்கால் அசைத்துக் கொண்டே இருப்பார். புதிதாக பார்க்கும் யாராகினும் அம்மா வாயில் எதையோ மென்று கொண்டிருக்கிறார் என்றுதான் நினைப்பார்கள்.
அம்மாவுடைய உண்மையான பெயர் கருப்பாயி. பாட்டி கனவில் பேச்சியம்மா வந்து அருள் கொடுத்த பிறகுதான் கருப்பாயி என்று பெயர் வைத்தார்களாம். ஆனால், நறுக்கு என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். நறுக்கைக் கண்டாலே நடையை வேகப்படுத்திக் கொண்டு ஓடும் சிலர் மண்டி லெம்புவில் இருக்கத்தான் செய்தார்கள். இதனாலே அப்பொழுதிலிருந்தே அம்மாவுடன் வெளியே செல்வதில் விருப்பமில்லைதான்.
“டேய் கேசவா. . நில்லுடா. . ஒங்கம்மா வீட்டு பக்கமே வரமாட்றா. . ஒனக்கு என்னா துமுறாடா.. தெரியாத மாதிரி, சவடால போற” யாராக இருந்தாலும் அம்மா இப்படிதான். இதென்ன நாகரிகம்?

2

பேருந்து இப்பொழுது ஈப்போவைக் கடந்து வேறு எங்கேயோ நகர்ந்து கொண்டிருந்தது. முன் இருக்கையில் பேருந்து ஓட்டுனர் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு பாடலுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தார். சரியாக விளங்கவில்லைதான். அவரின் பக்கத்து இருக்கையில் ஓட்டுனரின் உதவியாளர் உறங்கிப் போய் கிடந்தார். அவ்வப்போது பேருந்து மேலே எகிரிக் கொண்டிருந்தது. இலேசான உறக்கம். கண்களை மூட முடியவில்லை. பேருந்தின் இருட்டுக்கு மத்தியில் மெல்லிய மஞ்சள் ஒளி. அம்மா பேருந்துக்குள் நுழைந்து கொண்டிருப்பது போன்ற பிரமை. அந்த இருள் நேரம், ஒளி கீற்றுகளின் சுரண்டல், தொலைக்காட்சியின் சத்தம், விளங்காமல் போன அந்தப் பாடல், அதையும் கடந்து எங்கேயோ பறந்து கொண்டிருப்பது போல இருந்தது.
“மா. . யேன் இந்த பொடவய கட்டிகிட்டு வந்த?”

“யேண்டா? இதுக்கென்னா. . போஸ் கொடுக்கியா வந்துருக்கோம்? பையன் படிச்சி பட்டம் வாங்க போறான். . இதுல எனக்கென்னா மேக்காப்பு”
“சரிமா. . கத்தாதெ. . இங்கலாம் மெதுவாதான் பேசனும். கொஞ்சம் நாகரிகமா பேசுமா”
“என்னாடா மெதுவா பேசனும் மெதுவா பேசனும்? நாகரிகமா நாகரிகம். எப்படா வந்துச்சு ஒங்க நாகரிகம்? சும்மா பொலம்பிகிட்டு இருக்கெ? நம்ப எடத்துலேந்து எத்தன பேரு வந்துருக்காங்க.. அவங்கலாம் பாரு எவ்ள சந்தோசமா கொண்டாடுறாங்க. . அத வுட்டுட்டு. ஒங்கப்பாவெ வேற உள்ள உட மாட்டேங்கறானுங்க. வாங்கக்கா உங்க பையனும் இங்கதான் படிச்சானா? சொல்லவே இல்ல! எப்ப வந்தீங்க?”
பட்டமளிப்பு விழாவின் பரபரப்பில் அந்த மண்டபமே குரல்களின் உச்சத்தில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சி. பட்டம் பெறப் போகும் மாணவர்களின் உடலில் கனமான அந்த உயர்கல்விக்கூடத்தின் அங்கியைப் போர்த்தியிருந்தார்கள். நானும் மின் அணுவியல் பொறியியலாளர் படிப்புக்காக பட்டம் பெறப் போகிறேன் என்று கொஞ்சம் மறதியாகத்தான் இருந்தது. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்ட பின்பும், பார்வை அம்மாவைச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தது. எங்காவது அமர்ந்து கொண்டோ அல்லது யாருடனாவதோ மிக மோசமான நாகரிகம் கொண்ட மொழியில் அரட்டையடித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதி. பக்கத்திலுள்ள யாராவது அம்மாவைக் குறித்து அதிருப்தி கொண்டவராய் சகித்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள் என்பதும் நடக்கக்கூடியவைதான்.
“ என் பையன் அங்கனே உக்காந்துருக்கான் பாருங்க. . வீட்டுகாரரு வெளிய நிக்கராரு. . உள்ளுக்கு என்னமோ ஒரு ஆளுதான் வர முடியுமாமே? என்னா நடத்துரானுங்க. . எல்லாத்தையும் உட வேண்டியதுதானே.. பையன் பட்டம் வாங்கறான். . அத பாக்க வேணாமா?” இப்படித்தான் ஏதாவது ஒரு குறையைப் பற்றி கொண்டு அங்குள்ளவர்களைப் பேசியே இம்சைப்படுத்திக் கொண்டிருப்பார் அம்மா. அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் அம்மாவைப் பார்த்தேன். இருக்கைகளின் வரிசையில் எல்லாரும் மெல்லிய உரையாடலில் இணைந்திருக்க, அம்மாவின் கைகள் மட்டும் உயரே எழுந்து அசைந்து கொண்டிருந்தன.
“தோ அங்க பாருங்க. . தோ இங்க பாருங்க. . அவன் இருக்கானே. . இவன் இப்பத்தான் வந்தான். . நம்ப கம்போங் ரூசா முனியாண்டி இருக்கானே. .” இப்படி எதையாவது பேசிக் கொண்டிருப்பார் போலும். அதனால்தான் கைகளின் அசைவு இவ்வளவு அநாகரிகமாக இருந்தது.

உயர்க்கல்விக்கூடத்தின் மேலாளர் வந்து இருக்கையில் அமர்ந்த பின், நிகழ்ச்சி வழக்கம் போல தொடங்கியது. தேசியக் கீதம், மாநில கீதம், மேலாளர் உரை என்று தொடந்து கொண்டே இருந்தது. பிறகு ஒவ்வொரு துறையைச் சார்ந்த மாணவர்களுக்குப் பட்டமளிக்கப்பட்டது. அம்மா தனது அரட்டையை முடிப்பதாக தெரியவில்லைதான். கம்பத்துக்காரர்கள் சிலரைப் பார்த்துவிட்ட துடிப்பு.
“ sekarang acara penyampaian Ijazah kepada para lulusan tinggi bagi kursus Kejuruteraan elektronik. . . dijemput Lulusan Cemerlang Jagan a/l Arumugam, Kalaivaani a/l Tamilchelvan, Sunthareesan a/l Mohan. . . . .” மின் அணுவியல் துறைக்கான சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படவிருப்பதாக அறிவிப்பு வந்தது. அந்தப் பட்டியலில் என் பெயரும் வாசிக்கப்பட்டது.
“ ஐயோ என் பிள்ள பேர கூப்டறானுங்க. . என் வீட்டுக்கார்ரு பாக்கனுமே. . எங்க நிக்கறாரோ. . ஐயோ பிள்ள மேடைல ஏற போறான்.” தூரத்திலிருந்து அம்மாவைதான் கவனித்துக் கொண்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் பட்டம் வழங்கப்படவுள்ளது. அம்மா மட்டும் எழுந்து எங்கேயோ ஓடிக் கொண்டிருந்தார்.

“ halo! ini. . buka pintu bolehkah? Suami saya sana ada luar. . (கதவைத் திறக்க முடியுமா? என் வீட்டுக்காரரு வெளிய நிக்கராரு)
என்னாங்க! என்னாங்க! பையன் பட்டம் வாங்க போறங்க.. ஒடியாங்க. . சுருக்கா. . கண்ணாடிலேந்து பாத்தா தெரியும்”
“ Puan boleh masuk tak? tidak dibenarkan sesiapapun masuk pada masa sekarang”
(மேடம், நீங்க இப்பெ வெளிய போக முடியாது)
“அட இவன் ஒருத்தன். . லு பெர்கிலா. . . என்னாங்க. . ஆங். . ஆங்.. அங்கதான் நில்லுங்க. . தோ நம்ப பையன் பட்டம் வாங்க போறான். . பாருங்க. .” தூரத்தில் அனைவரும் அமைதியாகக் கைத்தட்டிக் கொண்டு அமர்ந்திருக்க அம்மா மட்டும் வாசல் கதவோரம் நின்று கொண்டு, அவரே உருவாக்கிவிட்டிருந்த பரபரப்புக்கு நடுவே என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். கையேதும் தட்டவில்லைதான். எளிமையான புடவையில் அங்கு நின்றிருந்தது நாகரிகமிழந்த மண்டி லெம்பு கம்பத்து அம்மாதான். கண்கள் மட்டும் கலங்கியிருந்தன. அப்படியென்ன நாகரிகம்?
3
இருக்கையை மேலே நிமிர்த்திவிட்டு, கால்மாட்டில் வைத்திருந்த ரொட்டியை எடுத்துப் பிரிக்கும் போது, பேருந்து சிரம்பானை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. முதுகில் யாரோ ஏறி மிதிப்பது போன்ற ஒரு வலி. இலேசாக நெளிந்து கொண்டேன். பேருந்து இன்னமும் வேகமாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. ரொட்டியைச் சாப்பிட்டு முடித்தப் பிறகு ஒரு பயங்கரமான ஏப்பம்.
மறுபடியும் இருக்கையைக் கீழே இறக்கிக்கொண்டேன். வசதியாகப் படுத்த அடுத்த கனத்தில், இருளுக்குள் அமிழ்ந்து தொலைவது போன்ற ஒரு பிரமை. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த மலாய்க்காரப் பெண்மணி எழுந்து இருக்கையைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தாள். மறுபடியும் அம்மாதான் பேருந்தின் இருட்டுக்குள். மீண்டும் ஓர் அகண்ட பிரமை.
“ஹலோ! சுந்தரேசா? எப்படிடா இருக்கெ? யேண்டா போனெ போட மாட்டற? ஒரு வாரத்துக்கு ஒரு தடவ போன் பண்றேனு சொல்லிட்டு போற, ஆனா அங்குட்டு போயி மறந்துர்ற”
“ நல்லாருக்கமா. . பிசிமா. . நெறைய வேல தராங்க. . ஒரு கம்ப்யூட்டர் வாங்க காசு அனுப்ப சொன்னென். . நீ அனுப்பவே இல்ல. அதான் என்னோட ரூம் மேட்டோட கம்ப்யூட்டரதான் பாயிக்கறேன்”
“இருடா, அப்பா கெளாங்குல நாளைக்குதான் சம்பளம். . . என்கிட்ட காய்கறி வித்த காசும் கொஞ்சம் வட்டிக்கு விட்ட காசும் அப்படியே சேத்து வச்சிறுக்கேன். . ஒனக்கு செலவுக்கு காசு இருக்குதானே?”
“ யேன் இப்படிக் கத்தற? போன தடவ கொடுத்தது கொஞ்சம் இருக்கு. . . பி. தி. பி. என். காசு இன்னும் பேங்க்ல போடலமா. . அடுத்த வாரம் போல போட்டுருவானுங்க போல. அத பாச்சிக்குறேன்”
“சரிடா. . நான் அடுத்த வாரம் காச கொஞ்சம் கூடவே சேத்து அனுப்பறேன். . பாச்சிக்க. . அந்தக் கம்பூட்டர். . ஏக்கனவே ஆள் பாச்சிதுனு சொன்ன, பாத்து வாங்கு”
“அதனாலதான் வெல கொறவு, இல்லனா செம்ம வெல”
“சரிடா. . அப்பறம் நாளைக்கு நேரம் இருந்தா போன் போடு”
அம்மா தொலைப்பேசி ரிசிவரை வைத்த பிறகு, ஏதோ ஒர் அகண்ட மனிதக் கூட்ட நெரிசலிலிருந்து விடுப்பட்டது போல இருந்தது. அம்மாவுடைய வேலை வீட்டு பின்புறத்திலுள்ள தோட்டத்துக் காய்கறிகளைச் சேகரித்துக் கொண்டு, டாமான் ஷிரி ஆமான், பத்து டுவா கம்பம் போன்ற இடங்களுக்குச் சென்று விற்றுவிட்டு வருவதுதான். வாரத்திற்கு இரண்டு முறை அப்படிப் போய்விட்டு வருவார். காய்கறிகளை ஒரு வக்குளில் சுமந்து கொண்டு, அவரைக் கடக்கும் எல்லாரிடமும் கத்தியே அம்மாவிற்குக் கத்தி பேசுவது வழக்கமாகி
போயிருக்கலாம்தான் போலும். மண்டி லெம்பு கம்பத்தின் குறுக்குச் சந்தில் புகுந்து மாரியம்மன் கோயிலைக் கடந்து பத்து டூவா கம்பத்திற்குள் நுழைந்து, அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் அரட்டையடித்துவிட்டு, காய்கறிகள் விற்றுத் தீர்ந்தவுடன்தான் வீடு வந்து சேர்வார் அம்மா. உயர்க்கல்விக்கூடத்திற்குச் சென்றபின் என்னுடைய தேவைகளுக்கு அவ்வப்போது அம்மாவுடைய அந்தக் காய்கறி கூடை காலியாகிதான் போக வேண்டும். எப்படியாவது வாரத்திற்கு ஒரு 50 வெள்ளியாவது கிடைத்துவிடும். அங்குள்ள சில செலவு பொருள் கடைகளுக்கும் அம்மாதான் காய்கறிகள் கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவார்.
“டேய்.. காசு இருக்காடா? அங்க ஒழுங்கான சாப்பாடு கெடைக்குதா?. . டேய்” என்று கத்தும் அம்மாவிற்கு எதோ ஒரு நாகரிகம் மெலிந்துதான் இருந்தது. என்னயா நாகரிகம்?
4
பேருந்து இப்பொழுது சிரம்பான் சாலையில் போய் கொண்டிருந்தது. தூரத்தில் இன்னமும் அந்தக் குரட்டைச் சத்தம் ஓயவில்லைதான். பேருந்து வேகக் கட்டுப்பாட்டை மீறி ஓடிக் கொண்டிருப்பது போல தோன்றியது. இருக்கையை மேலே உயர்த்தி, அமர்ந்து கொண்டேன். அதிகாலை மணி 5 இருக்கும். நெடுஞ்சாலையில் ஒரு நீளமான இருள். ஆங்காங்கே தெருவிளக்கின் ஒளி.
நாளை காலை 10 மணிக்கு, கோலாலம்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு. சம்பந்தப்பட்ட அனைத்துப் பத்திரங்களும் கல்வி சான்றிதழ்களும் கீழேயுள்ள பேருந்தின் பெட்டி வைக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருந்தன. அவசரத்தில் அம்மாதான் அங்கு வைத்துவிட்டிருந்தார். பேருந்து ஒரு நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் சிறிது நேரம் நின்றுவிட்டு மீண்டும் கோலாலும்பூரை நோக்கிக் கிளம்பியது. இப்பொழுது பேருந்தின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது எதிலோ பட்டு பேருந்தின் சக்கரங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.
சிறிது நேரத்தில், பேருந்தின் கீழ் பகுதியிலிருந்து பலமான சத்தம். டமார் டமார் என்று யாரோ பேருந்தின் கீழ் பகுதியை ஓங்கி அடிப்பது போன்ற ஓர் ஓசை. பயணிகள் எல்லாரும் எழுந்து கொண்டனர். பரபரப்பான ஒரு சூழ்நிலை. எதையும் சரியாக யூகிக்க முடியவில்லை. நெடுஞ்சாலையில் ஓரமாக பேருந்து நின்றதும் மீண்டும் மெல்லிய கலவரம் அனைவரின் முகத்திலும். சத்தம் வந்த இடத்தையும் பார்க்க முடியவில்லை.
பேருந்து நின்றதும், பேருந்து ஓட்டுனரைப் பின்தொடர்ந்து ஒரு சிலர் இறங்கி கீழே போய் கொண்டிருந்தனர். பிறகு ஒவ்வொருவராக கீழே இறங்க தொடங்கியதும், கலவரம் அதிகமாகியது. நான் இன்னமும் பேருந்தில்தான் அமர்ந்திருந்தேன். கீழேயிருந்து ஒரு மலாய்க்கார ஆடவரிடமிருந்து பழக்கமாகிப் போனது போல ஓர் அழைப்பு. கீழே இறங்கி ஓடினேன்.
பேருந்தின் பெட்டி வைக்கும் இடம் திறந்து கிடந்தது. மலாய்க்காரரிடமிருந்து அந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லைதான். பேருந்து வேகமாகப் போனதில், பேருந்தின் பெட்டிகள் வைக்கும் பகுதியின் கதவு திறந்து கொண்டதாம். அதில் சில பெட்டிகள் எங்கேயோ விழுந்துவிட்டதென்று அவர் கூறிக் கொண்டிருக்கையில் மூளையில் ஒரு கனமான அழுத்தம். இருதயம் படப்படத்துப் போனது. அந்தப் பெட்டி வைக்கும் இடத்தில் கலவரத்துடன் சிலரின் தலைகள் எதையோ அலசிக் கொண்டிருந்தன. அந்தப் பயணிகளுக்கு நடுவே நானும் நுழைந்து கொண்டேன். ஏற்கனவே எங்கேயோ விழுந்து காணாமல் போன, நாகரிகமிழந்த கருப்பாயி மகனின் பெட்டியைத் தேடுவதற்கு.
“டேய் சுந்தரேசா. . பெட்டிய மறந்திறாதடா.. . கஸ்த்தப்பட்டு படிச்சி சேத்ததுடா”
முடிவு

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்