மாதா வெளியேற மறுத்தாள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

தீபச்செல்வன்


சனங்கள் மாதாவையும்
குழந்தை யேசுவையும்
கூட்டிச் சென்றிருக்கலாம்.

யேசுவின் குருதியால்
எழுதப்பட்ட பைபிள்களை
கிளைமோரில் சிதறிய
மாணவர்களின்
குருதி பிறண்ட
வெள்ளைச் சீருடைகளில்
ஆயர்கள்
கட்டி எடுத்துப்போனார்கள்.

வத்திக்கான் எங்கேயிருக்கிறது.

பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்
வெளியில் போன அருட்சகோதரிகள்
குருதி பிறண்ட
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.

மடு மாதாவின் தேவாலயம்மீது
எண்ணிக்கையற்ற
எறிகனைகள் நுழைந்தன
குழந்தை யேசுவின் அழுகை
வீறிட்டு கேட்க
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
எறிகனைகளும்
பிறை பொறிக்கப்பட்ட்
எறிகனைகளும்
சூலம் பொறிக்பப்பட்ட
எறிகனைகளும்
புத்தரின் மூடிய கண்களில்
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்
படையினரிடமிருந்து
வந்து விழுந்து கொண்டிருந்தன.

வளாகத்தை விட்டு
வெளியை விமானம் உழுதடித்தபோது
சனங்கள் மாதாவை குழந்தையோடு
தனியே விட்டுச் சென்றனர்.

பாப்பரசர் வத்திக்கானில்
பைபிளை திறந்தபோது
குருதி ஒழுகியது
அமெரிக்காவின் முன்னால்
குருதி காயாத
சிலுவையோடு நின்றார் யேசு.

மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற
பிள்ளைகளையும்
சவப்பெட்டியில் கண்டோம்
வண்ணத்துப்பூச்சி திரிகிற
பற்றைகளில்
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.

பாப்பரசர் மன்றாடவில்லை
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.

சனங்களோடிருந்த மாதாவுக்கும்
குழந்தைக்கும் எதிராக
அரசுகள் யுத்தத்தை புரிந்தன
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.

இனி இங்கிருக்கமுடியாது
என்று
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்
மாதா மறுத்தாள்
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.

சனங்கள் விட்டுப்போன
மாதாவையும் குழந்தையையும்
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
கட்டாயப்படுத்தி
நேற்றோடு கூட்டிச்சென்றனர்
மடு தேவாலய வளாகத்தை விட்டு..

(03.04.2008 அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர்.மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள்.சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.)


deebachelvan@gmail.com

Series Navigation