அது ஒரு விழாக்காலம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

குரல்செல்வன்



சூரன் தன் நண்பன் நிக்கலஸைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறான். அவனுடன்தான் சூரன் தினமும் மதிய உணவைச் சாப்பிடுகிறான். பள்ளிக்கூட பஸ்ஸில் அவன் பக்கத்தில்தான் உட்காருகிறான். அவனோடுதான் கம்ப்யூட்டரில் விளையாடுகிறான், ஒருவன் வாழ்வு முடிந்து போனால் மற்றவன் அவனுக்காகப் பழி தீர்த்துக் கொள்கிறான். அப்படிப் பட்ட நிக்கலஸின் தந்தை ஜோசஃப் ரொமானோவை இது வரை சாமி சந்தித்ததில்லை. பள்ளிக்கூட சம்பத்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும் அவன் அம்மா மரிதான் வந்திருக்கிறாள். ஜோசஃப்பிற்கு வேலையிலிருந்து வர முடியவில்லை என்று காரணம் சொல்வாள். இன்று நிக்கலஸ், சூரன் இருவரையும் பாஸ்டோரல் அகடெமியில் நடக்க இருக்கும் ஒரு கணிதப் போட்டிக்கு அழைத்துப் போக வேண்டும். அதற்கு ஜோசஃப் துணையாக வரப் போகிறான்.
புதிய ஊரில் புதிய பள்ளியில் சூரனுக்கு இது முதல் போட்டி, நன்றாகச் செய்ய வேண்டுமே என்று சாமிக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. வகுப்புகள் முடிய இன்னும் முக்கால் மணிக்கு மேல் இருந்தது. பார்வையாளர்கள் இடத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கினான். டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன். அவ்வளவு ஒன்றும் குளிராக இல்லை என்று காரின் மேல் சாய்ந்து கொண்டான். திரும்பி வரும் போது குளிராக இருக்கலாம் என்பதற்காக ஒரு ஜாக்கெட் காரில் இருந்தது. எதிர்ப் புறத்தில் வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கியவன் அவனை நோக்கி வந்தான். பக்கத்தில் நெருங்கி, கை நீட்டினான். ‘ஹாய்! நீதான் சூரனின் அப்பா சாமாக இருக்க வேண்டும், சரியா?” அகன்ற முகம், பெரிய மூக்கு, பரந்த நெற்றி, கோதுமையின் நிறம், மெல்லிய வட்ட வடிவில் கண்ணாடி. ஏற்கனவே அந்த முகத்தைச் சாமி பார்த்திருக்கிறான். எங்கே என்று உடனே நினைவுக்கு வரவில்லை.
சாமி அவன் கையைப் பிடித்து, “சரிதான்! அது போல் உன்னைப் பார்த்தால் ஒரு ரொமானோ என்று உன் நெற்றியில் எழுதி ஒட்டி இருக்கிறது” என்றான்.
‘நூற்றுக்கு நூறு இத்தாலியன்” என்று பெருமைப் பட்டுக் கொண்டான் அவன். சராசரி உயரம், சற்று பருமனான, ஆனால் உறுதியான உடல். அவனுடைய பகட்டில்;லாத உடை சாமிக்குப் பிடித்திருந்தது.
ஊருக்கு வந்த இந்த நான்கு மாதங்களில் வீடு கட்டிய போதும், பிறகு அதை வாங்கிய போதும், பல்கலைக் கழகத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களை வரவேற்க அளிக்கப் பட்ட விருந்துகளிலும், மருத்துவ மையத்தின் மற்ற ஆராய்ச்சிக் கூடங்களிலும், கடைகளிலும் பார்த்த புதிய ஆண் முகங்கள் சாமியின் மனக் கண்ணில் பவனி வந்தன. ஜோசஃப்பை பார்த்த உடனே அடையாளம் செய்ததால் தூரத்திலிருந்தே குறுகிய நேரம் பார்த்த முகங்களை ஒதுக்கினான். அவனுடன் பேசியதாக நினைவில்லை. அதனால் நேருக்கு நேர் சந்தித்து உரையாடிய முகங்களும் அந்த வரிசையிலிருந்து மறைந்தன. மிச்சம் இருந்த முகங்களில் மணலில் கிளிஞ்சலுக்காகக் கிளறுவது போல் ஜோசஃப்பின் முகத்தைத் தேடினான்.
“சாம்! உன் பாஸ் எப்படி இருக்கிறார்? பழகுவதற்குச் சுலபமான ஆள் மாதிரி தெரிந்ததே.”
‘சுலபமான ஆள்தான்.”
‘வேன்டர்பில்ட்டில் உன் ஆராய்ச்சி எப்படி போகிறது?”
‘நன்றாகப் போகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குக் கிரான்ட்டில் பணம் இருக்கிறது.”
முதல் முறை சந்தித்தாலும் பல நாள் பழக்கம் போல் தடையின்றி ஜோசஃப் பேசியது சாமியை மயக்கியது. திருப்பி ஏதாவது கேட்கலாம் என்றால் அவனைப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டு என்னை எங்கே சந்தித்தாய் என்று கேட்க மனம் ஒப்பவில்லை. கணிதப் போட்டிக்குச் சென்று திரும்ப மூன்று மணிக்கு மேல் ஆகும். அதற்குள் ஞாபகம் வராமலா போகும்?
‘பையன்களை அழைத்து வரலாமா?”
‘நிச்சயமாக.” இருவரும் பள்ளியின் முகப்பைக் கடந்து அலுவலக அறைக்குள் நுழைந்தார்கள். சாமி வண்ண ஊசி விளக்குகள் அலங்கரித்த, உயர்ந்த மேஜையின் மேல் வைத்திருந்த எழுத்துப் பலகையில் ‘மிஸ் ஜான்சனின் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் நிக்கலஸ் ரொமானோ, சூரன் நாதன் இருவரையும் கணிதப் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று எழுதினான். பிளாஸ்டிக் மாலையைச் சுவரில் மாட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் முன்னால் வந்து அதைப் படித்தாள். ‘நான் அவர்களைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லி விட்டு மிஸ் ஜான்சனுடன் தொடர்பு கொண்டாள். ‘அவர்கள் சில நிமிடங்களில் வருவார்கள்.”
‘தாங்க்யூ!” பின்னால் திரும்பிய சாமியைப் பார்த்து ஜோசஃப், ‘நான் அப்போதிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் கவலைப் படுவது போல் முகத்தை வைத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ‘இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பண்டிகைக் காலம். கணிதப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளப் போவது நம் பையன்கள், நாமில்லை, ஞாபகம் வைத்துக் கொள்!” ஜோசஃப் கூறுவது சரிதான், கிறிஸ்மஸ_க்கு முன் வேலை பறி போனால்தான் கவலைப் பட வேண்டும் என்று சொல்லக் கேட்டதுண்டு.
“எல்லாம் உன் பையனால் வந்த வினை. ஜூலை மாதம் இந்த ஊருக்கு வந்து போது சூரன் பொழுது போகவில்லை என்று முனகினான். அப்போது அவனுக்கு நான் அல்ஜீப்ராவின் முதல் பாடங்களைக் கற்றுக் கொடுத்தேன்.”
“விடுமுறையில் அல்ஜீப்ரா கற்றுக் கொடுத்தாயா? பார்த்துக் கொண்டே இரு, உன்னை ஒரு நாள் தன் பையனை வதைக்கிறான் என்று போலிஸில் புகார் செய்யப் போகிறேன்.”
“சூரன் அதை நிக்கிடம் பெருமை அடித்துக் கொள்ள, அவன் மிஸ் ஜான்சனிடம் சூரனுக்கு அல்ஜீப்ராவில் நிறைய தெரியும் என்று சொல்லி அவளை நம்ப வைத்துவிட்டான். அதனால் அவள் அவனை இன்று ஆரம்பக் கணிதத்திற்குப் பதிலாக அல்ஜீப்ரா பகுதிக்கு அனுப்புகிறாள். ஏழாவது, எட்டாவது படிப்பவர்களோடு அவன் போட்டி போட வேண்டும். அந்தக் கவலைதான்.”
“உனக்கு மிகவும் நன்றி, சாம்!”
“நான் ஒன்றும் செய்துவிடவில்லையே.”
“நிக்கிடம் எதாவது திறமை இருக்குமோ என்று இத்தனை ஆண்டுகளாகத் தேடியும் எனக்கு ஒன்றும் அகப்பட்டதில்லை. சூரனின் ஆரம்ப அல்ஜீப்ரா அறிவைப் பெரிது படுத்தி அதைக் கேட்ட ஆசிரியையை நம்ப வைத்திருக்கிறானே, அந்த சாதனை விளம்பரம் செய்வதற்கு உதவும். எதிர் காலத்தில் அவன் அந்த வழியில் தேர்ச்சி பெறலாம்.”
தங்கள் பைகளைத் தோளில் சுமந்து நிக்கலஸ_ம், சூரனும் வந்தார்கள். பள்ளியிலிருந்து முன்னதாகக் கிளம்பும் மகிழ்ச்சியில் கணிதப் போட்டியைப் பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் காரை நோக்கி நடந்தார்கள். கோடைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள் சாமி சூரனுக்குத் துணையாகச் சென்றிருந்தான். தான் கண்ணாடி அணிந்திருப்பதை மற்ற பையன்கள் கேலி செய்வார்களோ என்ற கவலை சூரனுக்கு. அதனால் மாணவ கும்பலில் கண்ணாடி அணிந்த இன்னொரு பையன் இருப்பதைக் கண்டு அவனிடம் சாமி சூரனை அழைத்துச் சென்றான்.
‘ஹாய்! நான் நிக்கலஸ் ரொமானோ. நான் இந்த ஊருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்தான் வந்தேன். இதற்கு முன் லாஸ் ஏஞ்சலஸில் இருந்தேன்.”
‘ஹாய்! நானும் புதுப் பையன்தான், நார்த் கரோலைனாவிலிருந்து வருகிறேன். என் பெயர் சூரன்.” அதிலிருந்து ஆரம்பித்தது அவர்கள் ஒட்டுதல்.
சாமி காரின் கதவுகளைத் திறந்தான். நிக்கலஸ_ம், சூரனும் பின்னால் உட்கார்ந்தார்கள். தனக்குப் பக்கத்தில் இருந்த ஜோசஃப்பைப் பார்த்து, ‘நீதான் எனக்கு வழி சொல்ல வேண்டும், ஜோ!” என்றான் சாமி.
‘என்னை நம்பி காரோட்டுகிற ஆசாமி நீ ஒருவன்தான்.”
சாமி காரைக் கிளப்பினான். வெகு விரைவிலேயே நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டார்கள்.
‘இதிலேயே முப்பது மைல் போக வேண்டும்.”
கிறிஸ்மஸ_க்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தாலும் சாலையில் வாகனங்களின் நெரிசலுக்குக் குறைவில்லை. அதனால் ஜோசஃப் அவ்வளவாகப் பேசவில்லை. ஆனால் நிக்கலஸ் வாய் ஓயவில்லை. “லாஸ் ஏஞ்சலஸில் என் நண்பர்களிடம் நாங்கள் ப்ரென்ட்வுட் போகப் போகிறோம் என்று சொன்ன போது பெரிய பணக்காரர்கள் வசிக்கும் கலிNஃபார்னியா ப்ரென்ட்வுட்டிற்கு நாங்கள் எப்படி போக முடியும் என்று ஆச்சரியப் பட்டார்கள். அவர்களிடம் நாங்கள் போகப் போவது டென்னசியில் இருக்கும் ப்ரென்ட்வுட் என்று விளக்க வேண்டி இருந்தது.” அப்போது சாமிக்குப் புதிய பள்ளியில் சேர்ந்தவுடன் தான் முதன் முதலில் சந்தித்த நண்பன் சுந்தரேசனின் நினைவு வந்தது.

“தாங்க் யூ கனகசாமி சார்! சாமி! மறக்காம அவர் சொன்னபடி நட!” அப்பா ஸ்கூட்டரைப் பள்ளிக்கூடத்தின் வாயில் வரைத் தள்ளிக் கொண்டு சென்று, பிறகு அதை உதைத்து இயக்கினார். ‘படிப்புக்கு மதிப்புக் கொடுக்கும் மனிதர்” என்றார் கனகசாமி. சுவாமிநாதன் அப்பாவுக்காக அந்தப் பாராட்டை ஏற்றுக் கொண்டான்.
அவன் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டையைப் பார்த்து கனகசாமி, ‘நீ இந்தப் பள்ளிக்கூடத்திலே காகி டிராயரும், வெள்ளை சட்டையும்தான் போட்டுக்கணும்” என்றார். அவர் குரலில், கண்ணாடியில், கழுத்து வரை பட்டன் போட்ட கறுப்புக் கோட்டில் கண்டிப்பு பூசியிருந்தாலும் பயத்தை ஏற்படுத்தவில்லை.
‘கிறிஸ்மஸ் லீவ்லே தைச்சிக்கறேன், சார்!”
“சார்! இதைக் கொஞ்சம் கவனிச்சுட்டுப் போறீங்களா?” என்ற குரல் கேட்டுக் கனகசாமி திரும்பினார்.
“நீ இங்கேயே இரு!” போகன்வில்லா படர்ந்திருந்த சிறிய கட்டிடத்திற்குள் அவர் நுழையும் போது அங்கிருந்து வெளியே ஒரு காலை ஊன்றி ஊன்றி நடந்து வந்த ஒரு பையன் சுவாமிநாதனைப் பார்த்து நிதானித்தான். தாத்தாவின் பழைய மடிசஞ்சியின் நிறத்தில் சட்டை. சுவாமிநாதன் புதிய பள்ளியில் நண்பனைப் பிடிக்கும் ஆசையில் அவனைப் பார்த்துக் கை ஆட்டினான்.
“நீ புதுசா?”
“ஆமாம்.”
“இப்ப காகி டிரெஸ் போட்டுண்டு ஸ்கூட்டர்லே போனாரே அவர் யாரு?”
“என்னோட அப்பா.”
“என்ன பண்றார்,”
“ஏர்Nஃபார்ஸிலே ஆஃபீசர்.” அவன் ஒட்டிய முகத்தில் கண்கள் மதிப்பினால் விரிந்தன.
“எந்த கிளாஸ் போகப் போற?”
“தேர்ட் ஃபார்ம், நீ?”
“நானும் அதேதான்.” சுவாமிநாதனுக்கு முக்கால் உயரம்தான் இருந்தான்.
“நான் போகணும்.” ஒரே இடத்தில் நின்றதால் கால் வலித்திருக்கலாம். ‘உனக்கு இரண்டு மூன்று வயதான போது பல குழந்தைகளுக்குப் போலியோ வந்தது’ என்று அவன் அம்மா சொல்லி இருக்கிறாள்.
வெளியில் வந்த கனகசாமி, “சுந்தரேசா!” என்று அழைத்தார். “உன்னோட கிளாஸ_க்குத்தான் இவன் புதுசா வந்திருக்கான். அழைச்சுட்டுப் போறியா?”
“சரி சார்!”
விந்தி நடந்தபடி, “பாதியிலே ஏன் வந்திருக்கே?” என்று வினவினான்.
“எங்கப்பாவுக்கு அம்பாலாவிலே இருந்து தாம்பரத்துக்கு நவம்பர் மாசம்தான் டிரான்ஸ்ஃபர் ஆச்சு. அப்ப நான் தாத்தா பாட்டி வீட்டிலே படிச்சிண்டிருந்தேன். நேத்திக்கி அரைப் பரீட்சை முடிஞ்சப்புறம் கிளம்பி இன்னிக்கி கார்த்தலதான் இங்க வந்தேன்.”
“உங்க வீடு எங்க இருக்கு?”
“தாம்பரம் கேம்ப்புக்குள்ள இருக்கு.”
“என்ன ஒரு நாள் அழைச்சிண்டு போறியா?”
“தாராளமா. உள்ளே போகும் போது கேட்டிலே கையெழுத்து போட்டுட்டுப் போகணும்.”
அவனைப் பற்றி கேள்வி கேட்பதற்குள் ஒரு பெரிய கட்டிடத்தின் வாயிலுக்கு வந்தார்கள். சுந்தரேசன் ஒவ்வொரு படியாக காலை வைத்து ஏறி முதலாவதாக இருந்த வகுப்பில் நுழைந்தான். தனக்குப் பின்னால் வந்த சுவாமிநாதனைக் காட்டி ஆசிரியரிடம், “இவன் நம்ம கிளாஸ_க்கு வந்திருக்கிற புதுப் பையன்னு போஷகர் சொன்னார் சார்!” என்றான். பிறகு முன் வரிசையில் போய் அமர்ந்தான்.
“வா! உன் பேரென்ன?”
“சுவாமிநாதன், சார்!”
“காலைலேதான் உன்னைப் பத்தி போஷகர் சொல்லிட்டிருந்தார்.” அவனை எங்கே உட்கார வைக்கலாம் என்று பார்வையை ஓட விட்டார். சுவாமிநாதனும் அப்போதுதான் கவனித்தான். அவனையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கண்களில் பாதி பெண்களுடைய கண்கள். பையன்கள் பள்ளியிலே படித்து வந்த அவனுக்கு அது சற்று கூச்சமாக இருந்தது.
அவன் உயரத்தைப் பார்த்து கடைசிக்கு முன் பெஞ்சில் உட்காரச் சொன்னார். அங்கே சுவாமிநாதன் போவதற்கு முன், ‘ஸ்கூலை சுத்திப் பாத்துட்டியா?” என்று கேட்டார். இல்லை எனத் தலை ஆட்டினான். சுந்தரேசன் டெஸ்கில் கை வைத்து ஊன்றி எழுந்தான். ‘வீட்டுக்குப் போரதுக்கு முன்னால சுவாமிநாதனுக்கு நான் காட்டறேன், சார்!”
“வெரி குட்! இன்னிக்கி கடைசி எக்சாம், மாரல் ஸ்டடீஸ். நீயும் எழுதலாம்.” நீதி போதனைக்குப் பரீட்சை கூட வைப்பார்களா?
சிறு இடைவேளையின் போது நாலைந்து பேர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பார்ப்பதற்கு வசதி உள்ள பிராமணப் பையன்கள். அவர்கள் அப்பாக்கள் நல்ல உத்தியோகம் வகித்தவர்கள் என்று அவர்களுடைய வெள்ளை சட்டை சுத்த வெள்ளையாகவே இருந்ததில் தெரிந்தது. செல்வத்தின் மெருகு ஒரு பையனின் பருத்த உருவத்தில் பளபளத்தது
“இதுக்கு முன்னாடி எங்க படிச்சே?”
“கரூர்லே முனிசிபல் ஸ்கூல்லே படிச்சேன்.”
“அது எங்க இருக்கு?”
“திருச்சிக்குப் பக்கத்திலே.” எங்கோ குக்கிராமத்திலே இருந்து வந்த ஒருவனால் தங்கள் ராங்க்கிற்கு ஆபத்து வராது என்று திருப்தி பட்டவர்கள் போல்; தோன்றினார்கள்.
“லங்கடா சுந்தரம் வந்த உடனே புது பையனை ஃப்ரெண்ட் பிடிச்சுனுட்டான்டா” என்று பின்னால் யாரோ சொன்னார்கள். திரும்பிப் பார்க்கும் ஆவலைக் கட்டுப் படுத்தினான் சுவாமிநாதன்.
“அவனுக்கு ‘பாகப்பிரிவினை’யோட அப்பா என்ன வேலை பண்றார்னு தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சப்புறம் பாரேன்!”
“அப்படி என்னவா இருக்கார் அவர்?”
“ராஜா ஓட்டல்லே சரக்கு மாஸ்டர்.”

சரக்கு மாஸ்டர் – சாமியின் நினைவில் தெரிந்த முகங்களின் வரிசை கணிசமாகக் குறைந்தது. எந்த உணவகத்தில் ஜோசஃப் சமைப்பதைப் பார்த்தோம்? பெருந்தன இத்தாலிய உணவகம் எதிலும் சமைப்பவரைப் பார்க்க முடிவதில்லையே.
‘நீ இப்போது நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற வேண்டும். வலது பக்கம் திரும்பிய உடனேயே ஒரு போக்கு வரத்து விளக்கு வரும். அங்கே இடது பக்கம் திரும்பினால் அந்தத் தெருவின் கோடியில் பாஸ்டோரல் அகாடெமி. இரண்டாவது நுழை வாயிலில் புகுந்தால் கார்கள் நிறுத்தும் இடம் தென்படும்.”
ஜோசஃப் குறிப்பிட்ட வழியைச் சாமி பின் பற்றினான். ஒரு சமையல் காரரின் மகன் என்று நிக்கலஸை யாரும் கேலி செய்திருக்க மாட்டார்கள். ஆனால் சுந்தரேசன் இழிவாக நடத்தப் பட்டதை நினைத்து மனம் குறுகினான்.
நாஷ்வில்லின் பல பள்ளிகளிலிருந்து போட்டிக்கு மாணவர்கள் வந்து இறங்கினார்கள். பள்ளிக்கூடத்தின் பெயர் போட்ட ஒரு சிறிய வண்டி கூட கண்ணில் பட்டது.
வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் ஆரம்பக் கணிதம், அல்ஜீப்ராவுக்கு முன், அல்ஜீப்ரா ஒன்று என்று அறிவிப்புப் பலகைகளைப் பிடித்த ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னால் நின்றிருந்த வரிசையில் நிக்கலஸ_ம், சூரனும் சேர்ந்து கொண்டார்கள்.
‘குட் லக் நிக்!”
‘குட் லக் சூரன்!”
ஆசிரியர்களைப் பின் தொடர்ந்து மாணவர்கள் ரயில் வண்டிகள் போல் சென்ற பிறகு ஜோசஃப், ‘இன்னும் ஒரு மணி காத்திருக்க வேண்டும். அது வரை மாணவர்கள் சாப்பிடும் இடத்திற்குப் போகலாம்” என்றான். பள்ளிக்கூடத்தின் மற்ற இடங்களைப் போல அங்கேயும் கிறிஸ்மஸ் அலங்காரம் கண்ணைப் பறித்தது. குறுக்கும் நெடுக்குமான நீண்ட மேஜைகளில் மாணவர்களை அழைத்து வந்தவர்கள் குழுமி இருந்தார்கள். கதவுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மேஜை காலியாக இருந்தது. அதைப் பார்த்து வேகமாக நடந்த ஜோசஃப் சுவரை ஒட்டிய நாற்காலியில் போய் அமர்ந்தான். அவனுக்கு எதிரில் உட்கார்ந்த சாமியின் கவனத்தை ஜோசஃப்பின் தலைக்கு மேல் சுவரில் தொங்கிய ஒரு பெரிய அறிவிப்புப் பலகை கவர்ந்தது.

கிறிஸ்மஸ் தீர்மானம்
கீழ்க் கண்ட கடைகளை ஆதரிக்க வேண்டாம் என்று பெற்றோர்களையும், விசுவாசமுள்ள மற்றவர்களையும் கேட்டுக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த முறையும் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ என்று குறிப்பிடாமல் ‘சந்தோஷமான விடுமுறை நாட்கள்’ அல்லது ‘விழாக்கால வாழ்த்துக்கள்’ என்கிற வாசகங்களைத்தான் அங்கே பயன் படுத்துகிறார்கள் என்று தெரிய வருகிறது. அப்படிச் செய்தால் உங்கள் கடைகளைப் புறக் கணிப்போம் என்று இரண்டு மாதங்களுக்கு முன் நாம் செய்த எச்சரிக்கையையும் அவர்கள் மதிக்கவில்லை.

அதற்குக் கீழே ஜே-மார்ட், பென்னி என்று பெரிய கடைகளின் பெயர்கள். அடுத்த வரிசையில் பர்nஃபக்ட்பீட்ஸா, ஏசியன் ஃபுட்ஸ். சாமிக்குப் பளிச்சென்று ஞாபகம் வந்து விட்டது, பர்nஃபக்ட்பீட்ஸா உணவகத்தில் பேராசிரியர் டாய்லுடன் கும்பலாகச் சாப்பிட்டது. அங்குதான் சாப்பிடும் இடத்திலிருந்தே மாவைத் தூக்கிப் போட்டு வட்டமாகப் பரப்புவது, அதன் மேல் தக்காளி சாஸ் வார்ப்பது, மேல் பொருட்களைத் தூவுவது, அதை அடுப்பில் வைத்து எடுப்பது – எல்லாம் பார்க்கலாம். அன்று அதில் ஈடு பட்டிருந்த ஜோசப் தலையில் உயரமான வெள்ளைத் தொப்பி அணிந்திருந்தான். அதனால்தான் அவனைப் பார்த்தவுடன் யார் என்று சொல்ல முடியவில்லை. சமையலறையில் வேலை செய்ததோடு சாப்பிடும் இடத்திற்கு வந்து வாடிக்கையாளர்களுடன் அவன் சிரித்துப் பேசியதும் நினைவுக்கு வந்தது.
அவர்கள் மேஜைக்கு வந்து டாய்லிடம், “ஹலோ மிஸ்டர் சேர்மன்! சாப்பாடு எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
“பிரமாதம்! அது சரி, நான் சேர்மன் என்று உனக்கு எப்படி தெரிந்தது? என் தலை மயிரை எண்ணிச் சொன்னாயா?” என்று டாய்ல் தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார்.
“இல்லை! இல்லை! இல்லவே இல்லை! உணவு வருதற்காகக் காத்திருக்கும் போதும், அது வந்த பிறகு அதைச் சாப்பிடும் போதும் மற்றவர்கள் எல்லோரும் உங்களுக்கு ‘ஆமாம் சாமி’ போடுவதைப் பார்த்தேன். அத்துடன் உங்கள் முகத்தில் தலைவர் என்பதற்கு அடையாளமாகத் தனிக் களை இருக்கிறதே.”
முன்பு எப்போதோ கேட்டிருக்க வேண்டிய கேள்வியை சாமி இப்போது கேட்டான். ‘ஜோ! பர்nஃபக்ட்பீட்ஸாவில் வியாபாரம் எப்படி போகிறது?”
‘நான் சென்ற ஜனவரியில் இந்த ஊருக்கு வந்து வேலையில் சேர்ந்த போது கடையில் எப்போதும் கூட்டமாக இருக்கும். மாலை வேளைகளில் இடம் கிடைக்காமல் பலர் கடைக்கு வெளியில் காத்திருப்பார்கள். இப்போது இரண்டு மாதங்களாகக் கும்பல் மிகவும் குறைந்துவிட்டது.”
‘என்ன காரணம்?’ என்று சாமி கேட்பதற்குள் ஒலி இயக்கத்திலிருந்து வந்த குரல் குறுக்கிட்டது.
‘தலைமை பாஸ்டர் என்கிற முறையில் போட்டிக்கு வந்திருக்கும் எல்லோரையும் பாஸ்டோரியல் அகடெமிக்கு வரவேற்கிறேன். முதலில் எல்லோரையும் பிரார்த்தனை செய்ய அழைக்கிறேன். உங்களில் பலர் அரசாங்கப் பள்ளிகளிலிருந்து வந்திருக்கலாம். பிரார்த்தனை செய்வது எப்படி என்று நீங்கள் மறந்து கூட போயிருக்கலாம். உங்களுக்குத் தரப் பட்டிருக்கும் கேள்வித்தாளின் முதல் பக்கத்தில் இருக்கும் வரிகளை என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்!”

‘பர மண்டலங்களில் இருக்கும் எங்கள் பரம பிதாவே! ஆமென்!” மாணவர் வரிசைகள் வௌ;வேறு நேரத்தில் வார்த்தைகளை உச்சரித்து முடித்தன. அந்தக் கும்பலில் கிறிஸ்மஸ் விடுமுறையின் போது புதியதாகத் தைத்த சீருடையில் சுவாமிநாதனும் நின்றிருந்தான். இப்படிப் பட்ட இறை வணக்கமும் அவனுக்குப் புதிது.
எல்லோரும் அவரவர் வகுப்புக்குத் திரும்புவதற்கு முன் கனகசாமி கையை உயர்த்தினார். இன்றும் காலர் இல்லாத கறுப்புக் கோட்டில் அவர் உருவம் சுவாமிநாதனைப் பிரமிக்க வைத்தது. “உங்களிடம் ஒரு புதிய விஷயம் சொல்ல வேண்டி இருக்கிறது. நம்ம பள்ளிக்கூடத்தின் முதல் போஷகர் நல்லசகாயம் போன வருஷம் கடவுள் கிட்ட போய்ச் சேர்ந்தது உங்களுக்குத் தெரியும். அவர் பேர்ல மட்டுமில்ல. நடைமுறையிலேயும் பலருக்கு உபகாரமாக வாழ்ந்தவர். அவர் நினைவாக இனி மேல ஒவ்வொரு திங்கள் கிழமையும் ப்ரார்த்தனை கடைசியிலே ஒரு நல்ல சகாயம் சொல்லப் போறோம். சொல்லப் போறோம் என்றால் நான், மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் யார் வேணும்னாலும் சொல்லலாம். நல்ல காரியங்களிலே சிறியது, பெரியது என்கிற வித்தியாசம் எதுவும் கிடையாது. மற்றவங்களுக்கு பயன் பட்டால் சரி. வெள்ளிக் கிழமைக்குள் அடுத்த திங்கள் யார் சொல்லப் போகிறார்கள் என்று தீர்மானிக்கலாம். இப்படி சொல்லறதுக்காகவே நல்ல உதவிகளை நீங்கள் செய்தால் அதனால சந்தோஷப் படறவர் சொர்கத்திலே இருக்கிற நல்லசகாயம் தான். இன்றைக்கு முதலாவதாக நான் சொல்லலாம்னு இருக்கேன்.” அந்தக் குரலின் விசுவாசம் சுவாமிநாதனின் கவனத்தைக் கட்டிப் போட்டு வைத்தது.
“ராஜா ஓட்டல் மசாலா தோசை எனக்கு ரொம்பவே பிடிக்கும். கிறிஸ்மஸ_க்கு சில நாளைக்கு முன்னால நான் ராஜா ஓட்டலுக்குப் போயிருந்தேன். மசாலா தோசை எப்பவும் போல நன்றாக இல்லாமல் சுமாராகத்தான் இருந்தது. முதலாளி கிட்ட போய் என்ன விஷயம்னு கேட்டேன். அவர் ‘சரக்கு மாஸ்டர் ராமமூர்த்தி கண் சரியாகத் தெரியாமல் உப்பு அதிகம் போட்டு விடுகிறார், எண்ணையை நெருப்பில் விட்டு விடுகிறார். அதனால வேலையை விட்டுப் போகச் சொல்லிட்டோம்’ என்று சொன்னார்.”
சுந்தரேசனைச் சுற்றி, “டேய்! உன் அப்பா” என்று முணுமுணுப்பு எழுந்து அடங்கியது. அவன் அப்படியே காற்றில் கரைந்து போய்விட மாட்டேனா என்று உருகி இருப்பான்.
“கண் சரியா தெரியாட்டா கண்ணாடி போட்டுக்கறது. இதுக்கா வேலை விட்டுத் தள்ளினீங்கன்னு கேட்டேன். ‘கண்ணாடி போட்டோம் அப்ப இன்னும் அதிகமாத் தப்பு பண்ணினார்’ என்று சொன்னார். அவர் கிட்ட விலாசத்தை வாங்கிட்டு ராமமூர்த்தியை வீட்டிலே போய் பார்த்தேன். அவரை ஒரு கண் டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னேன். எனக்கு எதுக்குக் கண்ணாடி, வேலைதான் இல்லையேன்னு சொன்னார். முதலிலே சரியான பவர் இருக்குற கண்ணாடி போட்டுக்குங்க, வேலையைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம் அப்படின்னு கட்டாயப் படுத்தினேன்.
‘நம்ம பள்ளிக்கூட வாசலுக்கு வெளிலே அசுத்தமான பொருள்களை விற்பதை என்னால் முழுக்கவும் தடுக்க முடியறதில்ல. அதனால நம்ம பள்ளிக்கூடத்துக்கு உள்ளாற ஒரு கேன்டீன் மாதிரி ஆரம்பிக்கணும் அப்படின்னு ரொம்ப நாளா ஒரு ஆசை. அதை ராமமூர்த்தி கிட்ட சொன்னேன். நாளைலேர்ந்து தினம் இட்லி, வடை, சாதம் எல்லாம் செய்து வந்து அவர் நியாயமான விலைக்கு விற்கப் போறார். மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணி வரை இது நடக்கும். இந்த முயற்சி வெற்றி அடையும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுடைய ஒத்துழைப்பும் இதற்கு ரொம்பவும் அவசியம்.”
கனகசாமி சுந்தரேசனின் குடும்பம் நிமிர்ந்து நிற்பதற்காகச் செய்த சகாயத்தைக் கேட்ட சுவாமிநாதனின் கண்ணில் நீர் தேங்கியது. அதை மற்றவர்களிடமிருந்து மறைக்கக் கண்களை மூடி மூடித் திறந்தான்.

சாமி கண்களைத் திறந்த போது ஒலி இயக்கத்தில் வந்த குரலுக்குரியவர் முன்னால் நின்றிருந்தார். மிகக் கவனமாகத் தயாரிக்கப் பட்ட விலை உயர்ந்த வணிக உடை. நீல நிறத்தில் வெள்ளைக் கம்பிக் கோடுகள். தலை மயிர் ஒவ்வொன்றும் அதற்கென்று ஒதுக்கப் பட்ட இடத்தில் பணிவோடு அடங்கிக் கிடந்தது. எஜமானர்களுக்கே சொந்தமான மிடுக்கு. அவரைப் பார்த்து ஜோசஃப், “ஹலோ ஃபாதர்! மன்னிக்கவும், பழக்க தோஷம். ஹலோ பாஸ்டர்!” என்றான்.
‘ஹலோ நண்பர்களே!” தலைக்கு மேல் இருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டினார். “அதைப் பார்த்தீரகளா? நீங்கள் இந்த கடைகளுக்குப் போவதைத் தவிர்ப்பது மிக முக்கியம்.”
சாமிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஜோசஃப் எழுந்து திரும்பி நின்று அந்தத் தீர்மானத்தைப் படித்தான். பிறகு நிதானமாக அவரைப் பார்த்து பதில் சொன்னான். ‘பாஸ்டர்! உங்கள் அறிவுரையைக் கேட்டு அப்படியே நடக்கப் போகிறேன். பர்nஃபக்ட்பீட்ஸா கடைக்கு இந்த ஊருக்கு வந்ததிலிருந்து சனி ஞாயிறு என்ற வித்தியாசம் பார்க்காமல் வாரத்தில் ஆறு நாட்கள் போய்க் கொண்டிருந்தேன். இனி நான் அங்கே போகப் போவதே இல்லை. போக வேண்டிய அவசியமும் கிடையாது.”


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்