மடியில் நெருப்பு – 16

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

ஜோதிர்லதா கிரிஜா


“தண்டபாணியைப் போலீஸ்ல வாட்ச் பண்ணிட்டிருக்காங்கன்ற விஷயம் உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?” என்று வினவிய ராஜாதிராஜனின் இதயம் தடதத்துக்கொண்டிருந்தது.

“கள்ளக்கடத்தல், விபசாரம், போதை மருந்து வியாபாரம் இதிலெல்லாம் அவனுக்கு ஈடுபாடு இருக்கிறதா போலீசுக்குத் தகவல் கிட்டியிருக்கு. என் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பிக்கிறதுக்கு அவன் உன்னைத் தொணதொணக்கப் பார்ப்பான். எதுக்கு ராஜா வம்பு? விலகிடு. உடனே கத்திரிக்க முடியாட்டியும், கொஞ்சங் கொஞ்சமா ஒதுக்கிடு அவனை. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். சீக்கிரமே செய்!”

“ட்ரை பண்ரேம்ப்பா. ஆனா, அவனைப் போலீஸ்ல வாட்ச் பண்ற விஷயம் உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?”

“அதைப்பத்தி உனக்கென்ன? என்னதான் உன்னோட பாலிய சிநேகிதன்னாலும் அவனுக்கு எச்சரிக்கை குடுத்துத் தப்ப வெச்சியானா, அது ஒரு சமூகத் துரோகச் செயல்ங்கிறதை ஞாபகம் வெச்சுக்க! தண்டபாணி மாதிரி சமூகத் துரோகிகளை யெல்லாம் கொக்கு சுட்ற மாதிரி சுடணும். ஓடஓட வெரட்டி வெரட்டி ஈவிரக்கமே இல்லாம சுடணும்!”

ராஜாதிராஜன் எச்சில் விழுங்கினான். தொண்டை வறண்டு போய்விட்டது. தண்டபாணியின் கூட்டுறவில் அவனும் அதுகாறும் போதை மருந்து வியாபாரமும், விபசாரமும் செய்துகொண்டிருந்தான். நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், அவன் மாட்டிக்கொள்ளுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்தன. தண்டபாணிக்கு முதலீடு அளித்து உதவியதும் அவனே. பின்னாளில் அவன் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் இவன் அவனுக்குக் காசோலைகளையே அவ்வப்போது அளித்து வந்துள்ளான். எனவே, அவனைத் தன் அப்பாவின் செல்வாக்கு வாயிலாகத் தப்புவிக்கத் தான் முன்வராவிட்டால், அவன் தன்னையே மாட்டிடிவிட்டுவ்¢டக் கூடியவன் என்பதால் அவன் மிரண்டு போனான். ஆனால் தன்னால் தப்பிவிடமுடியும் என்பதில் அவனுக்கு ஐயமில்லைதான்.

“என்ன யோசனை, ராஜா? உன்னோட பலநாள் சிநேகிதன் இப்படி ஒரு சமூகத் துரோகியா யிருக்கிறதை உன்னால செரிக்க முடியல்லையா? நான் எவ்வளவோ சொல்லியும் அவனோட சகவாசத்தை நீ விடவே இல்லை. இப்ப பாரு. என்ன, பதில் சொல்லாம இருக்கே? அவனை எச்சரிச்சு வைக்கணும்னுதானே யோசிக்கிறே?”

“இல்லேப்பா. ‘வார்ன்’ பண்ணக்கூடாதுன்னு நீங்க சொன்னதுக்குப் பெறகும் நான் பண்ணுவேனாப்பா?”

“அப்படிச் சொல்லி உன்னைக் கட்டாயப்படுத்த நான் விரும்பல்லே. நீ எப்படியும் என் பேச்சைக் கேக்கப் போறதில்லைன்னுதான் எனக்குத் தோணுது. ஆனா நீ அவனை ‘வார்ன்’ பண்ணாம இருந்தா நான் சந்தோஷப்படுவேன். “

“உங்க பேச்சை நான் மீறுவேனாப்பா? ஏம்ப்பா இப்படி நினைக்கிறீங்க?”

“காலேஜ்ல படிச்சிட்டிருந்த நாள்லேருந்து உன் தோஸ்தாச்சே! அதான்!”

அவன் பேசாதிருந்தான். ஒரு நிமிடம் கழித்து, “இந்தத் தகவல் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுதுன்னு சொல்லமாட்டீங்கல்லே?”

“அது எதுக்கு உனக்கு? எப்படியோ தெரிஞ்சிச்சு.”

அவரிடமிருந்து அதற்கு மேல் ஒன்றும் பெயராது என்பதை உணர்ந்துகொண்ட ராஜாதிராஜன் வாயை மூடிக்கொண்டான். எது எப்படி யானாலும். சூர்யா எனும் கண்கொள்ளா அழகியைத் தான் மட்டுமே அபகரித்து அனுபவிப்பதற்கு எந்தத் தடையும் நேரக்கூடாது என்று அவன் பெரிதும் அவாவினான். தானும் அவளைப் பங்கு போட்டுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற தோரணையில் அவன் அன்று காலை தன்னுடன் பேசிய நாகரிகமற்ற சொற்களை எண்ணி அவன் அருவருப்பும் ஆத்திரமும் அடைந்தான்.

இவனும் அவனும் இணைந்து நடத்திவரும் விபசாரத் தொழிலில் வேட்டை ஆடப்படும் எந்தப் பெண்ணையும் இருவருமே பங்கு போட்டுக்கொள்ளுவார்கள் என்பது இருவரும் எழுதிக் கையப்பமிடாத ஒப்பந்தமாகும். சூர்யாவைப் பொறுத்தவரை அப்படி நிகழ்வது பற்றிய கற்பனையைக்கூட அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன்னைத் தவிர வேறு எவனும் அவளைப் பார்வாயால் தீண்டுவதைக் கூடத் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவன் எண்ணினான்.

தான் முதலீடு செய்து முன்பணம் போட்டுச் செய்யும் நிழலான தொழில்கள் யாவற்றிலும் தண்டபாணியே முழு நிர்வாகத்தையும் மேற்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த போதிலும் – அவ்வப்போது ராஜாதிராஜனுக்கும் ஆதாயத்தில் பங்கு என்று சொல்லி ஆயிரக் கணக்கில் பனம் கொடுத்துக்கொண்டிருந்த போதிலும் – அதற்காக அவனும் தன்னோடு சேர்ந்து சூர்யாவைப் பங்கு போட்டுக்கொள்ளுவது பற்றிய கற்பனையே அவனுள் குமட்டலை ஏற்படுத்தியது. ‘மொத்த லாபம் எவ்வளவு வந்தது, என்ன சங்கதி’ என்றெல்லாம் தான் அவனைக் கேள்விகள் கேட்டுக் குடையாமல் , அவன் கொடுத்ததைத் திருப்தியோடும் நம்பிக்கையோடும் வாங்கிக்கொண்டு வந்துள்ளதை அவனுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவன் எண்ணினான்.

ஜகந்நாதன் திடீரென்று மவுனத்தைக் கலைத்தார்: “தண்டபாணி மொடாக் குடியனாமே? நீ எப்படி? குடிக்கிறதுண்டா?”

“இல்லேப்பா. எப்பவாவது பார்ட்டிகளிலே ஒரே ஒரு அவுன்ஸ் விஸ்கி இல்லாட்டி பீர் குடிச்சதுண்டு. அது கூட கம்பெனிக்காகத்தான். மத்தவங்க கட்டாயத்துக்காக மட்டும். ஆனா அது கூட எனக்கு ஒத்துக்கிட்டதில்லே. உடனேயே நெஞ்செரிச்சல் வந்துடும். அதனால, நான் குடிக்கிறது கிடையாதுப்பா.”

“இதை நான் நம்பணுமா?”

“என்னப்பா இப்படிக் கேக்குறீங்க? நான் சொல்றது உண்மைப்பா. என்னை நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்!”

சில நொடிகள் வரையில் பேசாதிருந்த பின்னர், “லில்லியைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று அவன் பக்கம் திரும்பிப் பார்த்து அவர் கேட்டார்.

“நல்லவங்களாத்தாம்ப்பா தெரியறாங்க.”

“ஒரு அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கிறேன்னு சொல்லுதே லில்லி, அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“இதிலே நான் நினைக்கிறதுக்கு என்னப்பா இருக்கு? அது உங்க ரெண்டு பேரையும் பொறுத்த விஷயம். எனக்குன்னு இதிலே அபிப்பிராயம் எதுவும் கிடையாது.”

“பாவம், லில்லி! ஒரு பொண்ணுக்குன்னு இருக்கக்கூடிய ஆசைகள் அவளுக்கும் இருக்கத்தான் செய்யும்.”

லில்லியை ஒரு தாயாக்கும் எண்ணம் தன் அப்பாவுக்கு வந்துவிட்டதோ எனும் ஐயம் அவனுள் தலை தூக்கியது. தன் அதிர்ச்சியை மறைத்துக்கொள்ளாமலே அவரை ஏறிட்டான். அப்படி அவர் எண்ணி இத்தனை வயதுக்கு மேல் ஒரு குழந்தையையும் பெற்றால், அவருடைய சொத்துகளில் அதற்கும் பங்கு போகுமே என்னும் புதுக் கவலைக்கு அவன் ஆளானான்.

“இந்த முடிவை அவங்க காலாகாலத்துலே எடுத்திருந்தாங்கன்னா நல்லாருந்திருக்கும். அவங்களுக்கு என்னப்பா வயசு?”

“இன்னும் குழந்தை பெத்துக்குற வயசை அவ தாண்டிடல்லே. ஒரு அஞ்சாறு மாநத்துக்கு முன்னால கூட அவ அபார்ஷன் பண்ணிக்கிட்டா. என்னோட கட்டாயத்துல தான்.:” – அவர் இவ்வாறு மனம் விட்டுப் பேசியது அவனுக்கு எப்படியோ இருந்தது.

அவரே தொடர்ந்து பேசினார்: “பெத்துக்கிறதா யிருந்தாலும் சரி, தத்து எடுத்துக்கிறதா யிருந்தாலும் சரி, அதைக் காலா காலத்துல செய்யணும். இத்தனை வயசுக்கு மேல பண்ணினா அதனால பிரச்னைதான் வரும். “ – இவ்வாறு சொன்ன போது, அவருள் ஒரு குற்ற உணர்ச்சி பெருகியது. சின்ன வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விடாமல் தடுத்தது தாம்தானே என்னும் குற்ற உணர்வு.

“கரெக்டுப்பா நீங்க சொல்றது!”

அவன் இப்படிச் சொன்னதும், ஜகந்நாதன் பக்கவாட்டில் தலை திருப்பி அவனைக் கூர்ந்து பார்த்தார். பாகப் பிரிவினையை மனத்தில் கொண்டு தான் பேசியதை அவர் ஊகித்து விட்டது அவனுக்குப் புரிந்ததில், அவன் முகத்தில் அசடு தட்டியது.

“நான் எதுக்குச் சொல்றேன்னா, பையனோ போண்ணோ கல்யாண வயசை யடையும்போது, பெத்தவங்களுக்கு ரொம்ப வயசாயிடும். தங்களோட கடைசி காலத்துல அவங்க இருப்பாங்க. குழந்தைகளோட பிரச்னைகள் அவங்களுக்குப் பெரும் பாடாயிடும்.”

ஜகந்நாதன் ஒன்றும் சொல்லவில்லை.

‘இந்த வயதில் இந்த லில்லிக்குக் குழந்தை ஆசை என்ன வேண்டிக் கிடக்குது! என்னைப் பாத்ததும் ஆசை துளிர் விட்டிறுச்சு போல!’ என்று ராஜாதிராஜனின் சிந்தனை ஓடியது. அதன் பின்னர், வீட்டுக்கு வந்து சேர்ந்த வரையில் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. கார் நின்றதும் வேலையாள் வந்து கதவைத் திறந்தார். இருவரும் உள்ளே சென்றார்கள்.

ஜகந்நாதன் ஆயாசத்துடன் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டார்.

“என்னப்பா, படுத்துட்டீங்க? அலுப்பா யிருக்கா?”

“அப்படின்னு இல்லேப்பா. இன்னைக்குக் காலையில வழக்கத்தை விடவும் சீக்கிரமா முழிப்பு வந்திடிச்சு. ஒரு பத்துப் பதினஞ்சு நிமிஷம் கட்டையைச் சாச்சேன்னா, சரியாயிடும். . .”

“இன்னைக்கு நீங்க கம்பெனிக்கு வர வேணாம்ப்பா.”

“இன்னைக்கு நான் வந்துதாம்ப்பா ஆகணும். சேலத்துலேர்ந்து எவர்சில்வர் டீலிங் விஷயமா நம்மாள்வார் வர்றதா யிருக்காரு.”

“அந்தாளை எப்படி டீல் பண்ணணும், என்ன பேசணும், என்ன, ஏதுங்கிறதை யெல்லாம் விவரமாச் சொல்லுங்கப்பா. நான் பார்த்துக்கறேன். நீங்க டயர்டாத் தெரியறீங்கப்பா. இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுங்களேன். “

“ நோ, நோ! அந்தாளு பெரிய கில்லாடி, ராஜா. முழிச்சிட்டு இரும்கிறப்பவே முழியைப் பிடுங்கிடுவான். ஏற்கெனவே அவன் நமக்கு அம்பதாயிரம் தர வேண்டியது இருக்கு. ஞாபகம் இருக்கில்ல?”

“இருக்குப்பா.”

“அதனால, நானே அவனை டீல் பண்றேன். நாளைக்கு வேணும்னா நான் கம்பெனிக்கு வரல்லே. உன் யோசனைப்படியே ரெஸ்ட் எடுத்துக்குறேன். சரியா? . . . தேங்க்ஸ், ராஜா!”

. . . சேலத்து ஆளுடன் பேச்சு வார்த்தைகள் முடிந்து, அவர் கிளம்பிச் சென்றதன் பிறகு, ஜகந்நாதனும் ராஜாதிராஜனும் அலுவலக அறையில் இருந்த போது, சூர்யாவின் தொலைபேசி யழைப்பு வந்தது. அலுவலகப் பொருளாளரும் அப்போது அவ்வறையில் உடனிருந்தார். எனவே, வேலையாக இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறி அவன் தொடர்பைத் துண்டித்துவிட்டான். அவள் பேசியதற்குக் கால் மணி நேரத்துக்கு முன்னால், தண்டபாணியும் அவனைக் கூப்பிட்டிருந்தான். கூப்பிட்டவன் தண்டபாணி என்பதை அவன் வெளிப்படுத்தா விடினும், ‘அப்புறம் பேசறேம்ப்பா. இப்ப ஒரு மீட்டிங்ல இருக்கேன்’ என்று கூறியிருந்தான். இப்போது சூர்யா கூப்பிட்டதும், பேசியது யாரென்று ஜகந்நாதனுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக, “ நான் தான் அப்பவே சொன்னேனில்ல, மீட்டிங்ல இருக்கேன், அப்புறம் பேசறேன்னு?’ என்று குரலில் கண்டிப்புக் காட்டி அவளிடம் பேசினான்.

சேலத்து ஆசாமியின் வரவால், ராஜாதிராஜனால் வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் இன்று கிளம்ப முடியவில்லை. சரியாக ஐந்து மணிக்குக் கிளம்பி, சூர்யாவைக் காரில் ஏற்றிக்கொண்டு வெளியே போகத் திட்டமிட்டிருந்த ராஜாதிராஜன் ஏமாற்றத்துக்கு உள்ளானான்.

ஜகந்நாதன் திடீரென்று ஞாபகம் வந்தவராய், “ என்னோட கார் டேஷ் போர்ட்ல ஒரு புது டயரி இருக்கும். அதைக் கொஞ்சம் எடுத்துட்டு வா,” என்று பணிக்கவே, அவன் எழுந்து செல்ல வேண்டியதாயிற்று. ஜகந்நாதன் என்றுமே நான்கு மணிக்குக் கிளம்பிப் போய் விடுவார். இன்று இருவரும் சேர்ந்து அலுவலகத்துக்கு வந்திருந்ததால், ஒரே காரில் வந்திருந்தனர். தான் பிறகு வருவதாய்ச் சொல்லி, அவரை அனுப்பிவிட்டு, டாக்சி அமர்த்திக்கொண்டு அதில் சூர்யாவுடன் கடற்கரைக்குப் போக அவன் திட்டமிட்டிருந்தான்.

அவன் வெளியேறிய இரண்டே நிமிடங்களில், மறுபடியும் தொலை பேசி கிணுகிணுத்தது. ஜகந்நாதன் ஒலி வாங்கியை எடுத்து, “ஹல்லோ!” என்றார்.

“ஹல்லோ! உங்கப்பா பக்கத்துல இருந்ததால அப்படி நருக்னு கத்திரிக்கிற மாதிரி பதில் சொன்னீங்களா? நான் வீட்டுக்குப் போறேன். நாளைக்குப் பாக்கலாம். . .” என்ற இனிமையான பெண் குரல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

jothigirija@vsnl.net – (தொடரும்)

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா