எங்கள் வீட்டுக் காளைக்கன்று

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

செங்காளி


(என் தாயார் அவர்களின் நினைவாக)

நாங்கள் கிராமத்திலுள்ள எங்கள் தோட்டத்திற்குப் போய் கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குமேல் ஆகிவிட்டன. கடைசியாகச் சென்றது எங்கள் பசுமாடு கன்றுபோட்டு ஒரு வாரம் ஆனபோது.

இந்தத் தடவை பசு காளைக்கன்றைப் போட்டால் நன்றாகவிருக்கும் என்று அப்பா விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே நடக்க அப்பாவைவிட அம்மாவுக்கு மிகவும் திருப்தி. பசுமாடு கன்று ஈனுவதற்கு முதல் நாளே, எங்கள் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளும் பெரியசாமி, அடுத்த நாள், அதாவது அந்த ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையிலோ அல்லது அந்த நாள் முடியுமுன்னரோ கண்டிப்பாக மாடு கன்று போட்டுவிடுமென்று சொல்லியனுப்பியிருந்தார். அப்பா ஞாயிற்றுகிழமை காலையில் போகலாம் என்று எவ்வளவோ சொல்லியும் அம்மா மிகவும் வற்புறுத்தவே சனிக்கிழமை இரவே கிராமத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். பெரியசாமி சொன்னபடியே அடுத்த நாள் காலை ஆறுமணியளவுக்கு யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காமல் பசு அழகான ஒரு காளைக் கன்றை ஈன்றது.

பிறந்த தனது கன்றுக்குட்டியைத் தாய் அன்போடு நக்கிக் கொடுக்க, எழுந்திருக்க முயன்று, முடியாமால் விழுந்து, மறுபடியும் மறுபடியும் முயன்று கடைசியாக சிறிது நடுங்கிக்கொண்டே நின்ற கன்றுக்குட்டியைப் பார்த்த அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அன்றைய நாள் முழுவதையும் அவர் பசுவைத் தடவிக்கொடுப்பது கன்றுக்குட்டியைப் பரிவோடு பார்த்துக்கொண்டிருப்பது இப்படியே கழித்தார்.

அந்த வாரம் முழுதும் நானும் அம்மாவும் நாள் தவறாமல் நாமக்கல்லிலிருந்து வந்து பசுவையும் கன்றையும் பார்த்துத் திரும்பினோம். ஒவ்வொரு தடவை வரும்பொழுதும், கன்று சிறிது நேரம் தனது தாயின் மடியிலே பாலைக் குடிப்பதையும், பிறகு திடாரென்று வாலைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் ஓடுவதையும், குதிப்பதையும் அம்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

கிராமத்தில் எல்லாருடைய தோட்டங்களும் கிராமத்தைவிட்டுக் கொஞ்சம் தள்ளியே இருக்கும். எங்கள் தோட்டமும் அப்படித்தான். பெரியசாமிக்கு எங்கள் தோட்டத்தில் நடக்கும் உழவு மற்றும் நாற்று நடவு போன்ற வேலைகளைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்ததினால் கறவைமாட்டையும் கன்றுக்குட்டியையும் பார்த்துக்கொள்ள பக்கத்துத் தோட்டத்து வெங்கிடாசலத்தின் மூலம் பெருமாள் என்ற ஒரு பையனை அவரே ஏற்பாடு செய்தார். காலையிலும் மாலையிலும் பாலைக் கறந்து நாமக்கல்லுக்குக் கொடுத்து அனுப்புவது, மற்றபடி பசுவை மேய்ப்பது, தண்ணீர் காட்டுவது, கன்றைப் பார்த்துக்கொள்வது போன்றவை பெருமாளின் வேலை.

காலையில் இரண்டு படி பாலும் மாலையில் ஒரு படியும் நாமக்கல் வீட்டிற்கு அனுப்புவதாக ஏற்பாடு. இவ்வளவு பாலைக் கறப்பது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. கன்றுக்குட்டிக்குப் போதாது என்று கவலைப்பட்டார். ஆனால் பெரியசாமி, ‘அம்மா நம்ம பசு பெரிய மாடுங்க..காலைல எப்படியும் ஐந்து படியும் சாயங்காலம் மூன்று படியும் கறக்கும். நாம பாதிக்கும் கம்மியாத்தானே கறக்கப்போறோம்..அதனாலே கன்னுக்குட்டிக்கு நெறையவே பால் இருக்கும்..அதுவும் போவ கன்னுக்கு வேணுங்கிற அளவுக்கு பாலை அடக்கிக்கிட்டு மிச்சத்தத்தான் மாடு நமக்குக் கொடுக்கும் ‘ என்று சொல்லவே அம்மா சமாதானமடைந்தார்.

நாமக்கல்லிலிருந்து வலயபட்டி செல்லும் முதல் பேருந்து காலை ஐந்து மணிக்குப் புறப்படும். அது மோகனூர் பொகும் சாலையில், அணியாபுரத்தைக் கடந்து பிறகு கிழக்கே திரும்பி இரண்டு கல் தொலைவிலுள்ள பரளி (எங்கள் கிராமம்) வழியாக வலயபட்டிக்கு ஆறு மணி வாக்கில் போய்ச்சேரும். அதே மாதிரி வலயபட்டியிலிருந்து புறப்படும் முதல் வண்டி நாமக்கல்லுக்கு ஆறு மணிக்கு வந்து சேரும். இரவு கடைசி வண்டி இரண்டு இடங்களிலிருந்தும் ஒன்பது மணிக்கு. காலையில் நாமக்கல்லுக்கு வரும் முதல் வண்டியிலும் மாலையில் நான்கு மணியளவுக்கு வந்துசேரும் வண்டியிலும் ஒரு கூஜாவில் பால் வரும். பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பையன் சைக்கிளில் அதை வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுவான். எங்கள் வீட்டில் யாரும் இல்லையென்றால் எதிர் வீட்டில் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவான்.

கன்று போட்ட முதல் வாரத்திற்குப் பிறகு அடுத்த நான்கு வாரங்களில் சொந்தத்திலும் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் திருமணங்களுக்கும் மற்ற காரியங்களுக்கும் எல்லாரும் போகவேண்டி இருந்ததினால் தோட்டத்துப் பக்கம் யாரும் போகமுடியாமல் போய்விட்டது. அம்மா பசுவையும் கன்றையும் பார்க்கப் போகவில்லையே என்று ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தார். எப்படியாவது அன்றைக்குப் போயேதீருவது என்று முடிவு செய்து மதியம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு இரண்டு மணி வண்டியில் நாமக்கல்லிலிருந்து புறப்பட்டோம். அப்பா வரமுடியாமையினால் நானும் அம்மாவும் மட்டுமே சென்றோம். நாங்கள் வருவதைப்பற்றிச் சொல்லியனுப்பியிருந்தமையால் பெரியசாமியும் எங்களுக்காக வழியில் காத்திருந்தார். வண்டி நின்றவுடனே ‘வாங்கம்மா,..வாங்க தம்பி ‘ என்று பெரியசாமி வரவேற்க, எல்லாரும் அருகிலுள்ள எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம். வீட்டிற்கும் பேருந்து செல்லும் சாலைக்கும் ஒரு கால்கல் தொலைவு இருக்கும்.

அவ்வளவு ஆவலோடு சென்ற எங்களுக்கு, கன்றுகுட்டியைப் பார்த்ததும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. வழக்கமாகக் குதிபோட்டுக்கொண்டு அங்குமிங்கும் ஓடித்திரியும் கன்று ஏனோ சோர்ந்து போய் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தது. பளபளக்கும் மேனிக்குப் பதிலாக பெருமயிர் பாய்ந்த உடம்போடு மிகவும் இளைத்துப்போய் எந்தவிதமான உணர்வும் இல்லாதது மாதிரி நின்றுகொண்டிருந்தது. அதை அந்த நிலையில் பார்த்தவுடனே அம்மாவுக்கு அழுகையே வந்துவிட்டது. பெரியசாமிக்கோ மிகவும் கவலை வந்துவிட்டது. ‘இந்தப் பெருமாள் பாத்துக்குவான்னு நெனைச்சிதனாலே நான் இந்தப் பக்கமே எட்டிப்பாக்கலீங்க..தோட்டத்திலேயே இருந்திட்டேன்..பெருமாளும் கன்னு இப்படி இருக்குதுன்னு எங்கிட்ட ஒண்ணும் சொல்லலீங்க ‘ என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். பெரியசாமி மிகவும் நம்பிக்கையானவர். எங்கள் தோட்டத்திலே ரொம்ப காலமாக வேலை பார்த்து வருகிறார். தோட்டவேலை பளுவினாலும் பெருமாள் நன்றாக கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கையினாலும் ஏனோதானோவென்று இருந்துவிட்டார்.

அவர் பெருமாளை, ‘ஏலெ இங்க வாடா.. ‘ என்றார். மாட்டுக்குத் தட்டுப் போட்டுக்கொண்டிருந்தவன் அவர் கூப்பிட்டதும் ஒடி வந்தான். ‘என்னடா கன்ன நல்லா பால்குடிக்க விடுறயா இல்லையா ‘ என்று கேட்டார். அவன் ‘அதெல்லாம் நல்லாப் பாத்து விடறேனுங்க.. ‘ என்று சொல்ல, ‘அப்ப ஏன் கன்னுக்குட்டி இப்படி இருக்குது…இப்படி இருக்குதுன்னு ஏன் எங்கிட்ட வந்து சொல்லலை ‘ என்று கேட்டார். அதற்கு அவன் ஒன்றும் சரியாகப் பதில் சொல்லாமல் ஏதொ முனகினான். ‘என்னடா முணுமுணுக்கிற ‘ என்று சொன்ன அவர் பின்னர் கன்றின் வாயைத் திறந்து பார்த்தார்; வயிற்றைப் பிடித்துப் பார்த்தார். ‘என்னான்னு தெரியலீங்க அம்மா..நாளைக்கு நானே மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டுபோய் காமிச்சிட்டு வந்திடறேன் ‘ என்றார்.

பக்கத்துத் தோட்டத்துக்காரரிடம் உள்ள ஒற்றை மாட்டுவண்டியில் கன்றுக்குட்டியை ஏற்றிக்கொண்டுபோய் அணியாபுரத்திற்குப் பக்கத்திலுள்ள கால்நடை மருதுவமணையில் பெரியசாமி காட்டிவருவதற்கு ஏற்பாடு செய்துகொண்டோம். பின்னர் அங்கிருந்து தோட்டத்திற்குச் சென்று ஒருமுறை எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்துவிட்டு, திரும்பி வீட்டிற்கு வந்து ஆறுமணிக்கு வலயப்பட்டியிலிருந்து வரும் வண்டியில் நாமக்கல் போய்விடலாம் என்று புறப்பட்டோம். அம்மா மிகுந்த கவலையுடனேயே வந்தார்.

எப்பொழுதும் பேருந்துக்காக, எங்கள் வீட்டிலிருந்து வரும் பாதை வண்டி செல்லும் சாலையை சந்திக்கும் இடத்தில் நாங்கள் நிற்போம். நாங்கள் நிற்பதைப் கண்டால் ஒட்டுனர் வண்டியை நிறுத்துவார். ஆனாலும் சில சமயங்களில் வேகமாக ஓட்டிச்சென்று கிராமத்தின் நடுவிலுள்ள தேநீர்க் கடைக்கு அருகில் நிறுத்துவதும் உண்டு. அந்தக் கடைக்கு எங்கள் சாலையிலிருந்து அரைக்கல் தூரம் போகவேண்டும். இன்று, எதற்கும் கடைக்குப் பக்கத்திலேயே போய் காத்திருக்கலாம் என்று மெதுவாக நடந்து சென்று, கடைக்குப் பக்கத்தில் போட்டிருந்த ஒரு பலகையில் அமர்ந்தோம். பெரியசாமியும் வழி அனுப்புவதற்காக எங்களுடனேயே வந்தார்.

கடை வைத்திருப்பவர் உள்ளூர்க்காரர்தான். விவசாயத்தை விட்டுவிட்டு ஊரிலேயே ஒரு சிறிய கோழிப்பண்ணையை வைத்துக்கொண்டு கூடவே இந்தக் கடையையும் நடத்தி வருகிறார். எங்களைப் பார்த்தவுடனே, ‘வாங்கம்மா..என்ன கொஞ்ச நாளா இந்தப்பக்கமே காணோம்.. ‘ என்று கேட்டவர் அம்மாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், ‘டா சாப்பிடறீங்களா.. ‘ என்றார். அம்மா ‘இல்லீங்க வேண்டாம் ‘ என்று சொல்ல என்னைப்பார்த்து, ‘நீங்க சாப்பிடறீங்களா தம்பி ‘ என்று கேட்டார். நானும் வேண்டாம் என்று சொல்ல, ‘என்ன அப்படிச் சொல்லீட்டிங்க..நம்ம மாட்டுப்பால்தாங்க..டா போடறேன்..குடிச்சுப் பாருங்க ‘ என்றார். அவர் சொன்னதைக்கேட்டு நாங்கள் மூவரும் உடனே அவரைப்பார்க்க, அவர், ‘ஆமாங்க..உங்க மாட்டுப் பால்தான்..நீங்க விக்கச் சொன்னதாச் சொல்லித்தான காலையிலே ரெண்டு படியும், சாயங்காலம் ரெண்டுபடியும் உங்க மாட்டுக்காரப் பையன் கொண்டுவந்து ஊத்தறான்.. ‘ என்றார்.

இதைக்கேட்டவுடன் அம்மாவின் முகம் மிகவும் மாறிப்போய்விட்டது. நம்மை இந்தப் பெருமாள் இப்படி ஏமாற்றிவிட்டானே என்ற கோபமும், பாவம் பாலில்லாமல்தானே கன்றுக்குட்டி அப்படி இருக்கின்றது என்ற எல்லையற்ற வருத்தமும் அவர்கள் முகத்தில் தெரிந்தன. ‘கன்றுக்குக்கூட விடாமல் இப்படி சுண்டக் கறந்து இன்னும் யார்யாருக்கு விக்கறானோ ‘ என்ற அம்மா சொல்ல, எல்லாரும் சிறிது நேரம் அப்படியே அசந்துபோய் நின்றோம். தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்ட அம்மா, ‘சரி..வீட்டுக்குப் போய்ட்டு அடுத்த வண்டியிலே ஊருக்குப் போகலாம் ‘ என்று எங்களிடம் சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பிறகு என்ன நடந்திருக்குமென்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன்.

———————————————————————————————————

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி