மனசும் மாங்கல்யமும்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

கவிநயா


மாலை மணி ஐந்து ஆகி விட்டது. சமையலை ஆரம்பிக்க வேண்டியதுதான். கண்ணனும், அபியும் காலேஜில் இருந்து வந்து விடுவார்கள். யோசித்தபடி, பிரிட்ஜைத் திறந்து என்ன காய் இருக்கிறது என்று ஆராய்ந்தாள், சிவகாமி. கண்ணனுக்கு இன்று காம்பஸ் இண்டர்வ்யூ வேறு இருந்தது. எப்படிப் பண்ணினானோ ? எப்படியாவது அவன் படிப்புக்குத் தகுந்த வேலை சீக்கிரம் கிடைத்து விட்டால் பரவாயில்லை. அவன் தந்தை மாணிக்கம் சமீபத்தில் வேலையில் இருக்கும் போதே இறந்ததால், அவருடைய பாங்கிலேயே அவனுக்கும் ஏதாவது வேலை போட்டுத் தருவதாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்; ஆனால் இஞ்சினியரிங் படித்தவனுக்கு பாங்கில் என்ன வேலை இருக்கும் ? காய்கறிகள் ஒன்றும் திருப்தியாக இல்லை. இன்றைக்கு முள்ளங்கி சாம்பாரும், உருளைக் கிழங்கு கறியும்தான். அரிவாள் மணையையும், காய்களையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள். இந்த கீரைக்காரி பொன்னம்மாவை இப்போதெல்லாம் காணவே இல்லையே ?

காலையில் சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, பொன்னம்மா வந்து விடுவாள். அத்தனை அதிகாலையிலேயே, பைசா அகலக் குங்குமமும், துவைத்துக் கட்டிய கைத்தறிச் சேலையுமாகப் ‘பளிச் ‘சென்று இருப்பாள். எண்ணெய் தடவி சீவி முடித்த கூந்தலில், துணுக்குப் பூவாவது செருகி இருப்பாள். ‘காலங் காத்தால வீடுங்களுக்குப் போறேன்; தூங்கி எந்திரிச்ச மொகத்தோட அழுது வடிஞ்சுகிட்டுப் போனா யாரும்மா எங்கிட்ட கீரை வாங்குவாக ? ‘ என்பாள். அவளுக்கு வாய்த்த புருஷனுக்குக் குடிப் பழக்கம் இருப்பது அரசல் புரசலாக சிவகாமிக்குத் தெரியும். ஆனால் அவனைப் பற்றி ஒரு வார்த்தையும் தவறாகச் சொன்னதில்லை, பொன்னம்மா. எப்போதாவது ஒரு முறை, ‘என்னமோ அது ஒண்ணு உசிரோட இருக்கதுனாலதான என்னால இந்த அளவுக்கானும் பூவோடயும், பொட்டோடயும், கவுரதையாப் பொழக்க முடியுது ‘, என்று முணுமுணுத்துக் கொள்வாள். அப்போதெல்லாம் அவள் தனக்குத்தானே எதற்கோ சமாதானம் சொல்லிக் கொள்வது போல் தோன்றும், சிவகாமிக்கு. ஒரு முறை காலையில் கீரை விற்கப் போகையில், அவள் கழுத்தில் கிடந்த தாலியை எவனோ அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். தங்கம் போனதை விட, வெள்ளிக் கிழமையும் அதுவுமாக தாலி போய்விட்டதே என்பதுதான் பெருங் கவலையாயிருந்தது, பொன்னம்மாவிற்கு. கைக்கு மீறி செலவு செய்து ஏதேதோ பரிகாரங்கள் எல்லாம் செய்தாள்.

‘அம்மா, உங் கையால போணி பண்ணுனா கீரையெல்லாம் மளமளன்னு வித்துப் போவுது. ஒரு கட்டானும் வாங்கிக்கம்மா ‘, என்று வற்புறுத்தி தினமும் கையில் திணித்து விட்டுப் போவாள். மாணிக்கத்துக்கும் கீரை என்றால் மிகவும் பிரியம். அதனால் தினமும் பொன்னம்மா உபயத்தில் ஏதாவது ஒரு கீரை, ஏதாவது ஒரு ரூபத்தில் மெனுவில் இருக்கும். இப்போது அவர் இறந்த பின் இரண்டு மாதங்களாகப் பொன்னம்மாவும் வருவதில்லை. கணவர் இறந்தவுடன் கை ராசியும் அவருடனேயே போய் விட்டது போலும்.

நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. மாரடைப்பு. ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆபீஸிலேயே அவசரமாக உயிர் பிரிந்து விட்டது. இப்போதெல்லாம் சில இறப்புகள்தான் எவ்வளவு சுலபமாக முடிந்து விடுகின்றன! ஆனால் இழப்புகள் என்னவோ அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. சொல்லாமல் விருந்து வந்தாலே நம்மால் சமாளிக்க முடிவதில்லை; சொல்லாமல் சாவு வந்தால் ? ‘குபுக் ‘கென்று கண்ணீர் புதிதாகப் பிரவாகமெடுத்தது, சிவகாமிக்கு. கண்ணன் கடைசி செமஸ்டரும், அபி முதல் செமஸ்டரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டதால் ஓரளவு சமாளிக்க முடிகிறது. கண்ணீர் அது பாட்டிற்கு வழிய, கை இயந்திரமாக சமையலைக் கவனித்தது.

வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. பிள்ளைகள் வந்து விட்டார்கள். மாணிக்கத்தின் ஸ்கூட்டரை இப்போதெல்லாம் கண்ணன்தான் உபயோகப் படுத்துகிறான். காம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகி விட்டானாம்; கண்ணனின் முகம் முழுக்கப் பூவாக மலர்ந்து கிடந்தது. இனி அபியின் படிப்பைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அன்று இரவு படுக்கச் செல்கையில் சற்றே அமைதியாய் இருந்தது, மனசு.

மறு நாள் காலை. வாசலில் கோலமிடுகையில், ‘அம்மா, அம்மா ‘, என்று குரல் கேட்டது. ‘பொன்னம்மா குரல் மாதிரி இருக்கிறதே ‘, என்று திரும்பினாள்.

‘ஏம்மா, எப்பிடி இருக்கிற ? ‘ வாஞ்சையுடன் விசாரித்தபடி பொன்னம்மா கூடையை இறக்கி வைத்தாள்.

‘வா, பொன்னம்மா. என்ன இத்தன நாளா ஆளக் காணும் ? நேத்துக் கூட ஒன்னப் பத்தி நெனப்பு வந்துச்சு, இப்பல்லாம் போணி பண்ண வரக் காணுமேன்னு. ஒரு வேள அய்யா போய்ட்டதுனால… ‘ என்று அவள் முடிக்கும் முன்,

‘அய்யய்ய, என்னம்மா நீ ? என்னென்னமோ பேசிக்கினு போறே ? இத்தனி நாளும் உங்க வீட்டுக்கு ஆளும் பேரும் வரப் போவ இருந்தாங்க; நீயும் இப்பேர்ப்பட்ட துக்கத்துல இருக்கப்ப உம் மூஞ்சியப் பாக்கவே எனக்கும் தாங்காது. அதான் இத்தினி நா கழிச்சு வாரேன். ஒண்ணு தெரிஞ்சுக்கம்மா. நான் உங்கிட்ட போணி பண்றது உன் நல்ல மனசுக்காகத்தானே தவிர வேற எதுக்கும் இல்லம்மா. அதே மனசுதான ஒங்கிட்ட இப்பவும் இருக்கு ? அய்யாவோட அதும் போயிடுச்சா என்ன ? ‘ படபடவென்று பொறிந்து கொட்டினாள், பொன்னம்மா.

சிவகாமிக்கு ஒரு நிமிடம் பேச்சின்றி வாய் அடைத்துப் போனாலும், புன்னகை வந்து அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.

meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா