9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

கே. ஆர். மணி



சில பதில் முயற்சிகள்:

திரு பத்ரிநாத்திற்கு, பதில்:
இது கேள்வி பதில் பகுதியல்ல. இது முதல்வரின் கேள்வி பதிலோ எதிர்கட்சிகளின் அறிக்கையோயல்ல. அவன் இப்படியில்லாவிட்டால்
அப்படித்தானிருக்கவேண்டும் என்று தத்துவ பெயிண்டிடத்து குழுக்களில் அடைக்கும் முயற்சி வேண்டாம்.
எந்த கேள்விக்கும் ஒரே தெளிவான, நிலையான பதிலோ தர்க்கமோ இருந்ததில்லை. இருக்கவும் கூடாது என் எண்ணம். சதா உண்மையை
தேடிக்கொண்டியிருப்பது எந்த கால கட்ட சிந்தனையாளனுக்கும் சவாலான ஒன்று.
என் பதில்கள் உங்களுக்கு ஆட்சேபனையெனில் அதே கேள்விக்கு வேறுபதில்களால் நிரப்பட்டிருக்கலாம். எனது கேள்விகளும்
பதில்களை நோக்கிய பயணமும் நடுநிலையானது. ஒரு செயல்/நிகழ்வு/சொல் தவறா, சரியா அதன் அடிப்படை ஊற்று என்ன
என்பதை நாமே கேட்டுக்கொள்வதன்மூலம் சுயபரிசோதனையில் நம்மை சுத்தம் செய்து கொள்ள இந்த கேள்விபதில் முறை உதவலாம்.
கேள்வியின் சத்தியமும், தேவையெனில் உணர்ந்து திருந்தலும் மாற்றுவழிகளின் கதவுகளை திறக்காவிட்டாலும், சில சாளரங்களாவது
திறக்கலாம். திசை திருப்பாது, திரும்பாது எந்த கலரும் அணியாது நீங்களே அந்த கேள்விக்கு பதிலளித்து பாருங்கள்.
மற்றவரின் பதிலுக்கும் உங்களின் பதிலுக்குமுள்ள இடைவெளி பற்றி எந்த சித்தாந்த சொறிதலுமின்றி
யோசிக்கபார்க்கலாம். முடிந்தால் கிடைத்தால் மையத்தில் எங்கோ கிடைக்கிற உண்மையை முகர்ந்துபார்க்கலாம்,
இருவருமாய்.

கேள்வி 1 :
ஒரு பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேச முடியுமா..? என்று கேட்டால், உண்மை.. முடியாதுதான். நம்நாடு எதைப் போல ஆக ஆசைப் படுகிறோம்.. இன்னொரு பாகிஸ்தானைப் போலவா.. அல்லது அமெரிக்க வல்லரசைப் போலவா..? பாகிஸ்தானில் அதன் அதிபராக இருந்த நவாஸ் செரீப்புக்கே ஜனநாயகம் இல்லையே.. அதைப் போலவா நம் நாடு ஆக ஆசைப் பட வேண்டும்..?
பதில் :
உங்களின் மொத்த லிஸ்டில் எனக்கு பிடித்த கேள்வியிதுதான். இந்த கேள்வி நம்மிருவரின் மையப்புள்ளி. அதீத பகுத்தறியாத கண்மூடித்தனமான மதவெறியும், கட்டுப்படுத்தப்படாத ஜனநாயகமும் நம்மை வளர்ச்சியிலிருந்து தடுத்துவிடுமோ என்கிற பயத்தின் ஊற்று என்னிலும் உண்டு.

பாகிஸ்தான்போல நாமாவது என்பது கனவிலும் நடக்ககூடாத ஒன்று. பேசப்படுகிற போலிமதசார்பின்மையும், ஒட்டுக்காக உண்மை மறுக்கப்படுகிற ஒரு ‘கை’ ஒசையும்தான் என்னை உறுத்துகின்றன. அமெரிக்கா வல்லரசை போல தீவிரவாதத்தின் மீது கண்டிப்பும், திறந்த பொதுவாழ்வுக்கு மதிப்பளிக்கிற அரசியல் ஜனநாயகமும், சரித்தர தேவையான சமூக மாற்றங்களுக்கு அரசியல் தாண்டி தோள் கொடுத்தல், பொருளாதாரத்தில் தன்னிறைவைத்தாண்டி உலகச்சந்தையின் மீதான பிடிப்புமான முதலாளித்துவத்தின் மீது எனக்கும் நம்பிக்கையும் ஆசைதான்.

இந்த ரீதியில் கருத்துகள் இப்போது மெல்ல பரவ ஆரம்பிக்கின்றன. எனது Bottom of Pyramid திண்ணை கட்டுரையும்
குருதாஸின் Times of India கட்டுரைகளும் முடிந்தால் படியுங்கள். அவற்றைவிட இந்தியா உலகத்திற்களிக்க கூடிய
மிக பெரிய கொடை ஆன்மீகம். இது விவேகானந்தரின் திண்ணமான எண்ணம். அமெரிக்காவின் மேலாண்மைத்தத்துவத்தைவிடவும்,
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியைவிடவும் ஜப்பானின் தரமான உற்பத்தி தொழில்நுட்பத்தைவிடவும், சீனாவின் பெருமளவு
உற்பத்தி திறனைவிடவும், நமது ஆன்மீகம் உலகச்சந்தையில் தேவைப்படுகிற ஒரு பொருளாகயிருக்கும் என எண்ணுகிறேன்.
எந்த நாட்டு ஆன்மீகத்தை விடவும் பழமையானது, சனாதனமானது (!) , தேவையெனில் புதுமைபடுத்தக்கூடியது என்கிற பயன்களோடு
நம் நாட்டின் ஆன்மீகத்தை உலக நுகர்வோர்களுக்கு கொடுத்தாலென்ன.. காலத்திற்கேற்ற தேவையான மூடநம்பிக்கைகள் அகற்றப்பட்ட பிராண்ட் நியூ இந்திய தத்துவத்தின் ஏற்றுமதி திறந்துவிடப்பட்ட உலகச்சந்தையில் சரித்திர தேவையும் கூட.
ஆகவே கண்டிப்பாய் பாகிஸ்தான் போல மூஸ்லிம் நாடாக மாறக்கூடாது. முழுக்க முழுக்க இந்து நாடாக மாறவேண்டிய கட்டாயம் இப்போதில்லை. பன்முகத்தன்மை கொண்ட ஆன்மீக மனிதவளம் பெற்ற வல்லரசாக மாறவேண்டுமென்பதே எந்த தத்துவமும்
சாரா நடுநிலை இந்தியர்களின் நிலையாய், அவாவாயிருக்கமுடியும்.

கேள்வி 2 :
நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனும் “Scientific Temperament” வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அப்படியென்றால் அது பகுத்தறிவு சம்பந்தப் பட்டதா ? அல்லது மதவெறி உணர்வா..?
பதில் : கண்டிப்பாய் மதவெறி/இனவெறி/மொழிவெறி/ சாதி துவேச உணர்வுகளில் பகுத்தறிவிற்கு இடமில்லை. வேதாந்தமும், ஆன்மீகமும்
அறிவியலுடன் கூடும் மையப்புள்ளிகளும் உண்டு. ஒசோ, ஜே.கே, வேதாத்திரியம் போன்ற சில பிரிவுகள் அந்த முயற்சியை மேற்கொண்டு
ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளதாக தெரிகிறது. இது எல்லா மதத்திலும் நடக்கிற internal growth. உலகம் உருண்டை சொன்ன கலிலியோவை ஆதரிக்காததால் கிருத்துவம் உலகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை, பகுத்தறிவற்றது என்று சொல்வது மட்டரகமான விமர்சனம். வெகு சாதாரணமாய் ஆன்மீகத்தில் பகுத்தறிவென்பதே கிடையாதென்று தூக்கி குப்பைத்தொட்டியில் போடுவதைத்தான் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பகுத்தறிவற்று, வளராத காலம் தொடர்ந்த துவேசத்தால் மட்டுமே அவ்வளவு இலகுவாய் முத்திரை குத்திவிடமுடியும்.

இது போக மற்ற உங்களின் கேள்விகளை வகைப்படுத்தினால், தொகுத்தால் கீழ்கண்டவாறு அமையும் :
பாபர் மசூதி பற்றி, கண்ணகி பற்றி, ராமன் சம்புகன் பற்றி etc.. etc.. எல்லா கேள்விக்கும் பதிலளிக்க முடியாவிட்டாலும்,
முடிந்தளவு என் சிந்தனையை பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் பாபர் மசூதி பற்றி
– சேது பாலம் புனித சின்னம், புராதனச் சின்னம் என்றால், பாபர் என்ற மன்னர் கட்டிய அந்த மசூதி மட்டும் புடலங்காய்ச் சின்னமா..?
பதில் : புடலங்காய் சின்னமில்லை.
– சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இசைவோடு சட்டப் படி ஆரம்பிக்கப் பட்ட ஒரு திட்டம்.
பதில் : அது உண்மையா இல்லையா என்பதில்தான் நம் நாட்டு மன்னர்கள், சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவா, அதுவா,
அதுமாதிரி இதுவா, இதுமாதிரி அதுவா என்று நம்மிடம் அத்வைத மாயாஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது இந்த அரசியல் கூட்டம். உண்மையைத்தவிர எல்லாம் வெளியே வருகின்றன.
– ஏந்த சட்டப்படி (?) பாபர் மசூதி இடிக்கப்பட்டது?
பதில் : இந்திய சட்டப்படி தவறான செயல்.
‘இந்த பகுதி வெறும் ஆக்கிரமிப்பு பகுதிதான், இங்கு நடப்பது தொழுகையல்ல, இது முன்னூறு வருட சரித்திர அழுத்தத்தின் நிவர்த்தி, முதன்முறையாக இந்துக்களின் ஒரு சின்ன எதிர்ப்பு செயல், உண்மையான மதசார்பன்மையை நோக்கிய விவாதத்திற்கான மையப்புள்ளி, பாலூட்டப்பட்ட பாம்பு பம்மும் என்ற மாயையிலிருந்து வெளிவரக்காரணமான நிகழ்வு’ என்றெல்லாம் ஏராளமான விவாதங்கள், வியாக்கியானங்கள் இந்துத்துவ அமைப்புகளிலிருந்து. சில உண்மைகள், சில மிகைகள், சில உணர்ச்சிகள், சில வெடிப்புகள். விசயம் கேட்ட வாஜ்பாயின் தழுதழுத்த முதல் குரல் ஒரு நடுநிலை இந்தியனின் குரலாகயிருக்கும் என நான் எண்ணுகிறேன். சுகந்திரத்திற்கு பிறகு அதிகபட்ச கண்டனங்களை, விமர்சனங்களை, பரிசுகளை காவுகளை வாங்கிய, இன்னும் வாங்கிக்கொண்டிருக்கிற ஒரே நிகழ்ச்சியாக இதுதானிருக்குமென எண்ணுகிறேன். பதினைந்து வருடம் கழித்தும் குண்டுவெடிக்கிறதென்றால் அதற்கு என்ன காரணமாயிருக்க முடியும்.

– இந்திய சட்டவழி முறைகளுக்கு உட்பட்டு ஒரு திட்டமாக நடப்பதையே எங்கள் மனம் புண் படுகிறது என்று கூவினால், அக்கிரமமாக ஒரு வழிபாட்டு இடத்தை இடித்துத் தரை மட்டமாக்கினால் அவர்கள் மனம் புண் படாதா..? அல்லது அவர்கள் மனம் உங்களுக்குக் கிள்ளுக்கீரையா..?
பதில் : மனம் புண்படத்தான் செய்யும். வழிபாட்டுத்தலத்தையையோ, நம்பிக்கைகளையோ இடிப்பதும், மனம் புண்படச்செய்யுமாறு பேசுவதும்
நல்லதல்ல. முடிந்தவரை தவிர்க்க கூடியவைகள். ஆன்மீக இந்து மனம் மற்றவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்காது எண்ணுகிறேன்.
– எந்த நாத்திகர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்..?
பதில் : சிலைகள் என்று வந்துவிட்டபின் அரசியல் வித்தகர்கள், நாத்திகர்கள், ஆத்திகர்களுக்கு அவ்வளவாய் வித்தியாசமிருப்பதாய் தெரியவில்லை. சிலைகள் வந்தால் தானகவே பக்தி வந்துவிடும் போலயிருக்கிறது. சிலைகள் தாண்டி யோசிக்கவேண்டிய நேரமிது.
– சிந்தனையைத் தூண்டுவது பெரியாரின் பகுத்தறிவா அல்லது பரிவாரங்களின் மதவெறியா ?
பதில் : எந்த வெறியுமே சிந்தனையை தூண்டாது. மதத்தை காப்பதற்கான சிந்தனையும் வெறியை தூண்டக்கூடாது. பகுத்தறிவு கட்டாயமாய் சிந்தனையை தூண்டியிருக்கவேண்டும். அதுவும் மதவெறிக்கு பதிலாக மற்ற இன்னபிற வெறிகளை தூண்டுவிட்டதென சிலர் அலுத்துக்கொள்கிறார்கள்.
-இந்து அமைப்புகள் தங்கள் கூட்டத்தில் பிற மதத்தினரை குறிப்பாக முஸ்லிம் மதத்தினரை எப்படிப் பேசுவார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா..?
பதில் : கேள்விப்பட்டிருக்கிறேன். திராவிட கட்சிகளின் உயர்சாதி இந்துக்களைபற்றியும், அவர்களின் இந்துக்கடவுளின் தூற்றல்பற்றிய வர்ணனைகளையும் கேட்டிருக்கிறேன். பகுத்தறிவு குட்டை எவ்வளவு நாறும், நாறியது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
பாவம் வேதாந்திகளுக்கு கம்பரசமும் 30, 40களின் தீவிர நாத்திக எதிர்ப்பு புத்தகங்களும் கிடைக்கவில்லை. வெறும் ஜூஜூபி இன்சினியரிங் கமெண்டிற்கே இந்த துள்ளு துள்ளுகிறார்கள். நீங்கள் முழுக்க முழுக்க மதவெறியரான பால்தாக்கரேவின் பேச்சில் கூட மிரட்டலும், துவேசமும் இருக்குமேவோழிய நாற்றமடிக்காது, நம்மூர் பகுத்தறிவுப்பேச்சுப்போல. துவேசத்தின், மூடத்தனத்தின் மூடை நாற்றம் நம் பகுத்தறிவிற்கு அதிகமென்பது என் எண்ணம். என் பார்வையில் கொஞ்சம் bias இருக்கலாம். இருப்பின் அந்த அளவிற்கு தள்ளுபடி செய்யும் ஏகபோக உரிமை உங்களுக்குண்டு.

மாலனின் பிரமாதமான விளக்கங்கள் : இதைத்தான் நான் உண்மையை நோக்கிய பயணமென்பேன்;

http://tamil.sify.com/art/fullstory.php?id=14535049

“திராவிட இயக்க பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற போது ராமன் மீது ஏற்பட்ட கசப்புணர்வை இத்தனை நாளைக்குப் பின் வெளியே கொட்டுகிறார் கலைஞர். ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர், என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்குத் தயாரா என்ற சவால்களும் அவரது ஆரம்ப திராவிடக் கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை”

[எனது செருகல் : நேரு ஒரு பக்கா நாத்திகவாதி என்பது நம்மெல்லாருக்கும் தெரியும். அரசு பதவிகளை அவர் வகித்தபோது தானது நாத்திகவாதத்தை மற்றவர் புண்படாதவாறு அமைதியான குரலில் எப்படி அடக்கி வாசித்தார் என்பது ஒரு நல்ல முன்னூதாரனமாய் சொல்வார்கள்]

“ஒரு சமூகத்தில் நிலவுகிற நம்பிக்கைகள் முற்றிலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைவதில்லை”
“கருணாநிதி கண்ணகி மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு அடிப்படை வரலாறு அல்ல, இலக்கியம்தான். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், கண்ணகிக் கோட்டத்திற்குக் கல் கொண்டு வநத கனக விசயன், அதியமான், ஓளவை, பாரி, குமரிக் கண்டம், போன்ற பல நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இலக்கியம்தான், வரலாறு அல்ல”

“ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினான் என்ற கலைஞரின் கேள்வி, இந்தியப் பாரம்பரிய அறிவாற்றல் மீது வீசப்பட்ட எள்ளல், ஏளனம். கல்லூரிகள் என்ற அமைப்பு ரீதியாகக் கல்வி பயிற்றுவிக்கிற முறை ஐரோப்பியர் வருகையை அடுத்து இந்தியாவில் அறிமுகமானது.”

“பூம்புகாரின் நகரமைப்பைச் சிலப்பதிகாரம் விவரிக்கிறது (சிலப்பதிகாரம் கதைதான், வரலாறு அல்ல எனக் கலைஞர் வாதிட முற்பட மாட்டார் என நம்புகிறேன்) கப்பல் கட்டுவது பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையில் காணப்படுகின்றன. இதைக் கட்டியவர்கள் எல்லாம் எந்தப் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து, சிவில் என்ஜினியரிங், டவுன் பிளானிங், ஷிப் பில்டிங் போன்ற படிப்புகளைப் படித்தார்கள்?”


Series Navigation

9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

கே. ஆர். மணி



நிறைய விழுமியங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் காலாவதியாகின்றன. சில மட்டும் முழுமையாகயில்லாவிட்டாலும் ஒரளாவாவது தங்களை சரிசெய்துகொண்டு உண்மையென்ற மையப்புள்ளி நோக்கிபோகின்றன. மக்களுக்கு எப்போதும் நாணயத்தின் இருபக்கங்களும் முழுவதுமாய் தெரிவதில்லை. தெரிந்தாலும் பகுத்துணர நேரமே, முதிர்ச்சியோ கிடைப்பதில்லை. சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதன் மூலமே உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி நம்தேடல் தொடங்கும்.
நீண்டு தொடரும்……..

சில நேரங்களில் சில கேள்விகள் :

1) பாஜக ஆட்சியில்தானே இந்த சேதுசமுத்திரத்திட்டம் ஆரம்பித்தது ? இப்போது ஏன்
அது எதிர்க்கிறது ? அரசியல் ஆதாயம்தேடித்தானே ?

அப்படித்தான் தெரிகிறது. அப்படியும் இருக்கலாம். எப்போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்கள் அரசியலின் வாக்குறுதியாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் உண்மை முகம் தோற்கடிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாத உண்மை.

2) தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குபதிலாக அவரின் மகள் வீட்டில் செய்தது தவறுதானே ?

ஆம். தவறுதான். மிகப்பெரிய தவறு. குடும்பம் வேறு. அரசியல் வேறு. அம்பை எய்தவனை விட்டுவிட்டு வேடிக்கைபார்ப்பவர்களை முட்டும் அலங்காநல்லூர் மாட்டின் கதைபோலயிருக்கிறது. எதிர்ப்புகள் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அங்கு செய்யமுடியாத கையலாகதனத்தின் வெளிப்பாடே இது. குடும்பம் ஆட்சியில் மட்டும் பங்குபெறுகிறது, பாபத்திலும் பங்கேற்கட்டுமே என்று வால்மீகிக் கேள்விகளை கேட்காதீர்கள். தவறு. தவறுதான். நல்ல மானிடதர்மத்திற்கு அது அழகல்ல.

2. அ) இதன் தொடர்ச்சி/ பின் விளைவு எவ்வாறு அமையலாம் ?

வாய்ப்பு 1 : கொஞ்ச நாளைக்கு பிறகு மறந்துபோகிற அரசியல் சண்டையாக மாறலாம்.
வாய்ப்பு 2 : நாளைக்கு தமிழரிருக்கும் எல்லாயிடங்களிலும் இது தொடரப்படலாம். எப்படி சங்க பரிவாரம்
இந்துக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளின் பிரதபலிப்பு என்று சொல்லப்படுகிறதோ, தமிழக முதல்வரின்,
ஒரு சில பழுத்து, விழப்போகிற திராவிடத்தலைகளின் காலம் காலமான எதிர்ப்பும், அடித்தளமற்ற ஆரவராமான இந்து எதிர்ப்பும் தமிழகத்தின் மொத்தக்குரலென நம்பப்படலாம். அல்லது நம்புவிக்கப்படலாம்.
வாய்ப்பு 3 : தமிழகத்தில் இந்துத்துவத்தின் வேர் மேலும் ஆழப்படலாம். தேசிய கட்சிகள் தமிழகத்தில் பலப்படுவது மிகமுக்கியமான ஒன்று. ராமரை ஆதரிக்காத திராவிட கட்சிகள் அடுத்த மாநிலத்திற்கு தாவுவதற்கு/ பரவுவதற்கு நல்ல காரியமாய் அமையலாம்.
வாய்ப்பு 4 : [நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள் ]

3) தமிழக முதல்வரின் பேச்சு இந்துக்களின் இதயத்தை புண்படுத்துவதாக அமைவதாயிருக்கிறதே. இவரது எதிர்ப்பை வேறு நல்ல வார்த்தைகளில் சொல்லியிருக்க கூடாது ?

இது என்ன புதுசா ? இந்து திருடன், இது சூத்திர ஆட்சி, ஏன் சீதை முதுகில் மூன்று கோடில்லை என்பதான மலிவான, ஆரோக்கியமற்ற தளத்திலிருந்து எழுந்த கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும். இரத்தத்திலே ஊறிய திராவிட பராம்பரியத்தின் எதிர்ப்புக்கொள்கைதானேயிது. எதிர்த்தாலும் நல்ல, ஆரோக்கியமான வார்த்தைகளால் எதிர்க்கிற கம்யூனிஸ்டு கட்சிகளின் முதிர்ச்சியை நீங்கள் எதிர்பார்ப்பது உங்களின் தவறு. மற்றவர்களை புண்படுத்துவதன் மூலமும், ஆக்ரோசமாய், நாராசமாய் பேசுவதன் மூலமே தங்களின் கருத்துக்கள் பரப்பப்பட முடியும் என்று நம்புகிற தத்துவ ஆதாரமும், சில போலியான வெற்றியும் கொண்டவர்களிடம் வேறேதை எதிர்பார்க்கீறீர்கள். கனிமீது நம்பிக்கையற்று காய் மீதான நம்பிக்கை கொண்ட பழைய தலைமுறையது. கனிந்தால் நல்ல மொழி வருமென எதிர்பார்ப்பதைவிட வேறென்ன சொல்ல ?

4) ராமசேது சமுத்திரத்தை ஒரு நடுநிலை இந்தியான எப்படி எதிர்கொள்வேன் ?

ராம் கட்டியதாகவேயிருந்தாலும், ராம் ஒரு தியாகத்தின் பிரம்மம். வேறு வழிகளிருந்தாலும் தான் கட்டிய பாலத்தை இடிக்கவேண்டுமென்றால் தயக்கமின்றி தருபவன். தனது அரசாங்கப்பதவியையே தந்தவனுக்கு இது சூஜுபி.. இதை இடிப்பதன் மூலம் மட்டுமே பாலம் கட்டமுடியும் என்ற நிலையிருந்தால் அவன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பிக்கலாம். மற்ற வழிகளிலும் குறைந்த செலவில் அதுமுடியுமென்ற பட்சத்தில் அதை கையாள்வதே சிறந்தது. நம்புவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் ஒரு லெவல்
ப்ளேயிங் பீல்டு கொடுத்தாகவேண்டும். நம்புவர்களுக்கு – நாட்டில் நலந்தான் முக்கியமென உணரச்செய்யலாம். என்ன தேர்தல்முடியும் வரை பொறுத்திருக்கவேண்டும் ஒரு ஆரோக்கியமான விவாத சூழலுக்காக.

5) ‘சிவில் போர். .போய்க்கொண்டிருக்கிறது. எரிகிற தீயில் முதல்வரின் வார்த்தைகள் எண்ணெய் ஊற்றும்..’ அத்வானியின் கமெண்ட் ?

பதில்: ஓவர் பில்டப். இல்லாத போரை எதற்கு தேவையில்லாமல் ஆரம்பிப்பானேன்..செய்ய வேண்டியது நிறையயிருக்கிறது. தமிழகத்தில் பாஜ காலுன்ற இந்த திராவிட மண்குதிரைகள் தேவைதான். எவ்வளவு சீக்கிரம் தேசிய கட்சிகளின் பலத்தை பெருக்கமுடியுமோ அவ்வளவு சீக்கரம் வளர்க்கப்பாருங்களய்யா..

6) ஒரு முஸ்லிம் கடவுளை இப்படி சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும் ?

இது ஒரு தேவையற்ற ஆனால் தேவையான ஒப்பிடு. உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி போகிற எந்த இந்துவுக்கும் இந்த உறுத்தலிருக்க கூடாது. அதுதான் வாசுதேவ குடும்பகத்தின் சிறப்பே. ஆனால் பொய் மதச்சார்பின்மை பேசுகிற காங்கிரசு முதலான கட்சிகள், இதை ஆழமாய் யோசிக்கவேண்டும்.

7) சங், தமுமுக, விஹபி போன்ற அடிப்படைக்குழுக்கள் தேவையானவையாயென்ன ? அவற்றை அழிப்பதால் நிரந்திரமான அமைதி ஏற்படுமல்லவா ?

வீட்டிற்கு எப்படி காவலாளி முக்கியமோ அதுபோல அடிப்படை குழுக்களான விஎஸ்பி போன்ற குழுக்கள் அவசியம். அவைகள் வீட்டிற்கு வெளியில் தேவையான வேலைக்கு மட்டுமே நிறுத்தப்படவேண்டுமேயன்றி, வீட்டின் தலைவனுக்கான அதிகாரத்தை வாசலின் கூர்கா எடுத்துக்கொள்ளக்கூடாது. அடிப்படை குழுக்கள் எல்லா மதத்திற்கும் அவசியமானதும் கூட. ஆனால் அவை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவை எழுப்பும் குரல்களின் நியாயம் பொதுத்தளங்களுக்கு உடனடியாக கொண்டுவரப்படவேண்டும். சரிசெய்யப்படவேண்டும். ஒரு தரமான ஜனநாயகத்தின் வேலை இதுபோன்ற அடிப்படைக்குழுக்களுக்கு அதிகமான வேலை இல்லாமல் செய்வதேயாகும். இது முஸ்லிம் குழுக்களுக்கு பொருந்தும். அவையனைத்தும் ஜனநாய
கோட்டுக்கள் நின்று செயல்படவேண்டுமென்பதை சொல்லத்தேவையில்லை.

8) காங்கிரசு ஏன் திமுகவை இப்படி பேசாதீங்க என்று சொல்லக்கூடாது ?

அப்பூ.. என்ன ஜோக் சொல்றீங்க.. ஏற்கனவே சிவப்பு குத்து தாங்கமுடியலை. திருப்பி கறுப்புகிட்டவேற அடிவாங்கணுமா.. எங்களுக்கு அப்படியெல்லாம் தீர்மானமான மானம், கொள்கை, கருத்துன்னு வெச்சிக்கரதில்லை.. நாங்க தீர்மானமாயிருக்கறது.. எப்படியாவது
அஞ்சு வருசத்தை கழிச்சு கூட்டிடணும்னுதான.. என்று யாராவது காங்கிரசுக்காரர் சொன்னால் நீங்கள் யாரும் அதிர்ச்சியடையமாட்டீர்கள்தானே.. காங்கிரசு, மற்றும் பிஜேபி கட்சிகளிடம் கொஞ்சம் கண்டிப்பாய் நடந்துகொண்டால் இந்த மாதிரி
தான் தோன்றித்தனமான பிரச்சனைகள் தாண்டி நம் தேசம் முன்னேறும்.

தேசிய கட்சிகளேநீங்கள் உண்மையிலே ஆன்ம பலம் பெறவேண்டிய நேரமிது. நீங்கள் அரசியல் அரங்குகளின் ஜோக்கர்களாக மாற்றப்பட்டீர்கள் என்பது தான் சோகமான உண்மை. சாட்டைக்குப்பயந்து உங்களின் ஆட்டம் நாட்டிற்கு நல்லதல்ல. இது உங்களுக்கான புழுதிவாரித்துற்றல் நேரமல்ல. வருகிற தேர்தலுக்கும் முகம் காக்கும் கவசமாய் வார்த்தை ஜம்பம் விளையாடவேண்டாம். ஒரு மத நம்பிக்கை எவ்வளவு தூரம் விவாதிக்கப்படலாம் என்பது பற்றிய ஆரோக்கியமான
கட்சிதாண்டி விவாதம் வருவதற்கான அருமையான தருணமிது. காங்கிரசு கட்சி நல்ல மென்மையான, முதிர்ந்த தலைவர்களை கொண்டகட்சி. அது தனது குரலை உயர்த்தி கோடு கிழிக்கும் நேரம். உங்களுக்கென எப்போதும் பயணிக்கிற திராவிடக்குதிரையென்று
எதுவுமில்லை. ஆனாலும், உங்கள் குரலின் உண்மை நடுநிலை இந்துக்களின் வலிக்கு கொஞ்சம் மருந்து தடவலாம். பாஜக மட்டுமல்ல காங்கிரசும் எப்போது தேவையோ அப்போது இந்துக்களுக்காக பேசும் என்று நம்புவார்கள்.

9) கண்ணகி கரடியென்றவுடன் கத்தியகுரல் ஏன் ராமனுக்கு மட்டும் அபஸ்வரம் வாசிக்கிறது ?

நம்பிக்கை என்பது எல்லாவற்றிகும் ஒன்றுதான் என்று நம்ப மறுத்து பழக்கப்பட்ட மனம். கண்ணகி ஒட்டு வாங்கித்தருவாள். ராமன் ஒட்டு வாங்கித்தருவாரா ? ராமன் தோட்டத்திலும் நம்பிக்கை மணக்கலாம் என்று நம்பவுதற்கு நாமென்ன பகுத்தறிவற்றவர்களாயென்ன ?

கூடிய விரைவில் தமிழக பாடப்புத்தகத்தில்/கேள்வித்தாளில் இவை இடம்பெறலாம் :

அ) ராம் – குடிகாரன் – கட்டுரை வரைக.
ஆ) இந்து என்றால் திருடன் என்று பொருள்.. விளக்கவுரை எழுதவும்.
இ) சீதை எந்த நர்சிங்ஹோமில் குழந்தை பெற்றாள் ? ஆதாரத்துடன் படம் வரைக.
ஈ) தசரதன் சாப்பிட்ட லேகியமேது ? எவ்வாறு இத்தனை மனைவிகளை சமாளித்தார் ?
எ) ஆரியமாயை – நீள்கட்டுரை வரைக..
ஏ) கண்ணகியின் திருப்புகழ் எழுதவும்.

[உங்களுக்கும் சில வினாக்கள் சேர்க்கவேண்டுமெனில் திண்ணைக்கு அனுப்புங்கள். திண்ணை ஆவன செய்யும்.]


mani@techopt.com

Series Navigation

author

கே ஆர் மணி

கே ஆர் மணி

Similar Posts