23 சதம்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

அ முத்துலிங்கம்


கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம் இந்த .23 சதத்தை எனக்கு தரவேண்டும். பல வருடங்களாக. அதை எப்படித் தருவது என்று அரசாங்கத்துக்கு குழப்பமாக இருக்கிறது. எனக்கும் எப்படி வாங்குவது என்பது தொியவில்லை. G8 என்று சொல்லப்படும் உலகத்து முக்கிய நாடுகளில் ஒன்றான கனடா நாடு இப்படி கேவலம் .23 சதத்துக்கு என்னை ஏமாற்றிக்கொண்டு வந்தது.

இந்தப் பிரச்சினை இப்படித்தான் ஆரம்பமானது.

என்னுடைய சமையல் வேலைக்கும், கணப்பு அடுப்பு எாிப்பதற்கும் கனடிய அரசின் இயற்கை வாயு கம்பனி காஸ் விநியோகம் செய்தது. என்னைக் குளிாிலிருந்தும், பட்டினியிலிருந்தும் காப்பாற்றியது. அதற்கு நன்றி.

மாதாமாதம் இவர்கள் கணக்கை அனுப்புவார்கள். இதர பில்களும் வரும். அவற்றை ஒரு சனிக்கிழமை காலை வேளையில் கணக்குப் பார்த்து நான் காசோலை எழுதி தீர்த்து வைப்பேன். சாளரம் உள்ள கடித உறையில் இவை இடப்பட்டு தகுந்த முத்திரை ஒட்டி அனுப்பப்படும்.

ஒரு முறை இந்தக் கம்பனி எனக்கு ஒரு பில் அனுப்பியது. அது டொலர் 199.77 ஆக இருந்தது. வசதி கருதியும், பூஜ்யத்தில் இருந்த பற்று காரணமாகவும் நான் டொலர் 200.00 க்கு ஒரு செக் எழுதி அனுப்பிவைத்தேன். அதாவது .23 சதம் கூடுதலாக காசு கட்டிவிட்டேன்.

நான் செய்த தவறு அப்படித்தான் ஆரம்பித்தது.

அதற்கு பிறகு நான் அந்த வீட்டை விட்டு வேறு வீடு மாறிப் போய்விட்டேன். அந்த பில் விஷயத்தையும் அடியோடு மறந்துவிட்டேன். ஆனால் மாதாமாதம் .23 சதத்துக்கு ஒரு மாதாந்திர கணக்கு பத்திரம் என்னை தேடி வந்தது. இந்த .23 சதம் நான் கொடுக்கவேண்டிய காசு இல்லை; எனக்கு அவர்கள் தரவேண்டிய காசு. இருந்தாலும் எனக்கு வரும் கடிதத்தில் சாளரம் வைத்த கடித உறையும், இன்னும் பல விளம்பர துண்டுகளும் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான ஒரு பெண்ணின் மாதவிடாய் போல இது தபாலில் வந்தது.

நான் கம்பனிக்கு கடிதம் எழுதினேன். பதிலில்லை. தொலைநகல் அனுப்பினேன். பதிலில்லை. மின்னஞ்சலில் முழு விபரத்தையும் பஞ்சிப்படாமல் எழுதினேன். ‘எனக்கு இந்த .23 சதம் தேவையில்லை. இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு வீடு மாறிவிட்டேன். நன்றி. இனிமேலும்கூட என்னை தொந்திரவு செய்யவேண்டாம். அரசாங்கத்தின் பணத்தை விரயம் செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. எனக்கும் அப்படியே. தயவு செய்து இந்தப் பத்திரத்தை இனிமேல் அனுப்பவேண்டாம். மன்றாடிக் கேட்கிறேன். நிலத்திலே புரண்டு கேட்கிறேன். ‘

அடுத்த மாதமும் 14 ம் தேதி கடிதம் வந்தது. வளைந்த E எழுத்து மஞ்சள் நிறத்தில் அலங்காிக்கும் கடித உறை. உள்ளே உடைத்தால் அதே கடிதம். ஆனால் ஒரு மாற்றம். உற்றுப் பார்த்தபோது அதன் அடியில் குண்டூசித் தலை எழுத்தில் இப்படி எழுதியிருந்தது. ‘ ஒரு டொலருக்கும் குறைவான தொகைக்கு நீங்கள் செக் அனுப்பத் தேவையில்லை. ஒரு டொலருக்கும் குறைவான தொகை நாங்கள் உங்களுக்கு தரவேண்டுமென்றால் அதற்கும் செக் அனுப்பமாட்டோம். ‘

ஆஹா, சிவபெருமானின் கண்டத்தில் தங்கிய நஞ்சுபோல அந்தரத்தில் தொங்கியது. இவர்களும் அனுப்பமாட்டார்கள்; நானும் ஒன்றும் செய்ய முடியாது. வாழ்நாள் முழுக்க இந்த ஸ்டேட்மென்ற் என்னைத் தேடி வந்தபடியே இருக்கும்.

ஒரு முறை எப்படியோ முயற்சி செய்து ஓர் அதிகாாியுடன் பேசினேன். அவர் அனுதாபப்பட்டார். மிகவும் சிந்தித்தார். பிறகு சொன்னார். ‘இந்த தொகை ஒரு டொலருக்கு கீழாக இருக்கிறது. மாதா மாதம் கம்புயூட்டர்கள் இந்த பில்லை அடிக்கின்றன. அவை அப்படியே அனுப்பப்பட்டுவிடுகின்றன. மனித கைகள் இங்கே படுவதில்லை. இதை நிற்பாட்டுவதற்கு வழியில்லை. ஒரு கம்புயூட்டர் நிபுணரே இதை சாி செய்ய வல்லவர். விரைவில் இதை கவனித்து உங்கள் .23 சதத்தை அழித்துவிடுவார். அதற்கு பிறகு மாதாந்திர பத்திரம் வருவது நின்றுவிடும். தயவு செய்து பொறுமையாக இருங்கள். ‘

முன் வேகத்தில் ஓடவிட்ட படச்சுருள் போல பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் 14ம் தேதி கட்டளை வருவது நிற்கவில்லை.

என் நண்பன் ஓர் ஆலோசனை கூறினான். அருமையாகப்பட்டது. கம்பனிக்கு 1.00 டொலருக்கு ஒரு செக் அனுப்பி வைத்தேன். இப்பொழுது அவர்கள் எனக்கு 1.23 டொலர் தரவேண்டும். இது ஒரு டொலாிலும் கூடிய காசு. ஆகவே இந்தத் தொகைக்கு அவர்கள் ஒரு செக் எழுதி அனுப்பியதும் கணக்கு மூடப்பட்டுவிடும். மாதாந்திர பத்திரம் வராது. நான் சேமமாக இருக்கலாம்.

அந்த ஆசையிலும் மண் விழுந்தது. என் கணக்கில் பற்று இல்லை. ஆகவே வாயு கம்பனி நான் கொடுத்த செக்கை வாயு வேகத்தில் திருப்பி அனுப்பிவிட்டது.

இப்படியான நேரத்தில்தான் குரல் அஞ்சலில் தகவல் விடும் எண்ணம் எனக்கு வந்தது. 1-800 என்று தொடங்கும் வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை அமுக்கினேன். ஒரு பெண்ணின் குரல் மெசினில் ஒலித்தது. ‘ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஒன்றை அமுக்கவும்; பிரெஞ்சில் பேசுவதற்கு இரண்டை அமுக்கவும் ‘ என்றது. நான் ஒன்றை அமுக்கி வைத்தேன்.

மீண்டும் அதே பெண் குரல் ‘ உங்களுக்கு நாலு தொிவுகள் இருக்கின்றன. காஸ் கசிந்து மணம் ஏற்பட்டால் ஒன்றை அமுக்கவும்; பொருள் வாங்குவதென்றால் இரண்டை அமுக்கவும்; சேவைகள் தேவையென்றால் மூன்றை அமுக்கவும்; வேறு முறைப்பாடுகள் என்றால் நாலை அமுக்கவும், ‘ என்றது. நான் நாலை அமுக்கினேன். அடுத்த சுற்றில் நாலு தொிவுகள் இருந்தன; அதற்கு அடுத்த சுற்றில் மூன்று தொிவுகள் இருந்தன. மறுபடியும் அடுத்த சுற்றில் நாலு தொிவுகள் இருந்தன. கணக்கு சம்பந்தமான முறைப்பாட்டுக்கு உாிய எண்ணை அமுக்கினேன். அப்பொழுதாவது உயிரும், உடலும் சேர்ந்த ஒரு மனிதக் குரலுடன் பேசலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இப்பொழுது புதிய ஒரு பெண் குரல் மெசினில் வந்தது. ‘ நன்றி. தயவுசெய்து பொறுத்திருங்கள். ஒரு பணியாளர் உங்களுடன் விரைவில் பேசுவார். ‘ டெலிபோனில் பீதோவனின் ஒன்பதாவது இசைக்கோவை ஒலித்தது. நான் கைபேசியைப் பிடித்தவாறு காத்திருந்தேன். ஒரு நிமிடம் சென்றது. மறுபடியும் அதே குரல் வந்தது. ‘உங்கள் பொறுமைக்கு நன்றி. நீங்கள் எங்களுக்கு மிகவும் வேண்டிய வாடிக்கைக்காரர். தயவுசெய்து லைனில் காத்திருக்கவும். விரைவில் ஒரு பணியாளர் தொடர்புகொள்வார். ‘ அலுக்காமல் மறுபடியும் பீதோவன் தன் ஒன்பதாவது சிம்பனியை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார். நீண்ட நேரம். பத்தாவது சிம்பனியாக மாறும்வரை அது ஒலித்தது.

இறுதியில் தொடர்பு கிடைத்தது. அப்பொழுதுகூட மனிதக்குரல் வரவில்லை. மெசின் குரல்தான். உங்கள் முறைப்பாட்டை பீப் என்ற ஒலி வந்தவுடன் பதிவு செய்யவும் என்று சொல்லியது. அப்படியே காத்திருந்து பீப் ஒலி வந்தவுடன் நீண்ட ஒரு முறைப்பாட்டை அவர்கள் செவிகளுக்காக விட்டுவைத்தேன். அதற்குப் பிறகும் அவர்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் குரல் அஞ்சலில் தகவல் விடும் ஆசை என்னைப் பிடித்தது. அவர்கள் என் தகவல்களை கேட்கப்போவதில்லை; பதிலும் தரப்போவதில்லை என்ற நிச்சயத்தில் மெசினுடன் ஒளிவு மறைவின்றி பேச்சு வார்த்தைகள் வைக்கத் தொடங்கினேன். பனிக்காலம் மறைந்த ஓர் அதிகாலையில் நான் ஒரு தகவல் விட்டேன்.

‘வசந்தம் வந்துவிட்டது. இன்று வாசற்படியை துப்புரவாக்கினேன். தோட்டத்தில் முதல் பூ பூத்தது. இந்த தகவலை கேட்கும் உங்கள் இதயம், நண்பரே, எப்படி இருக்கிறது ? அதில் சிறிது கசிவு வேண்டும். 23 சதம் வரவு காட்டும் மாதாந்திர கணக்குப் பத்திரம் இன்னும் வந்துகொண்டேயிருக்கிறது. நீங்கள் மனது வைத்தால் இதை சாி செய்துவிடலாம். ‘

எதிர்பார்த்தபடி பதில் ஒன்றும் வரவில்லை. இன்னும் கொஞ்சம் துணிச்சல் கூடியது எனக்கு. பனிச்சேற்றில் ஒருமுறை விழுந்து கால் சுளுக்கிவிட்டது. அப்பொழுதுகூட சிரமம் பாராட்டாமல் அந்தக் காலத்து தமிழ் லையன்னா போல தவழ்ந்து தவழ்ந்து போய் தொலைபேசியில் செய்திகள் விட்டேன்.

‘இன்று காலை நான் பெண்ணின் சடைபோல பின்னப்பட்ட பிரெஞ்சு ரொட்டியை கையினால் பிய்த்து சாப்பிட்டேன். ஆனால் நேற்றிரவு மோசமாகப் போனது. கடல் பிராணிக்கு பேர் போன சீன உணவகத்தில் நானும் நண்பரும் உணவருந்தினோம். பொன் நிறத்தில் வதக்கப்பட்ட முழு நீள மீன் மரத்தட்டில் வைத்து பாிமாறப்பட்டது. என்னை பார்க்கும் ஒன்றையும் நான் உண்பதில்லை. உணவகம் மூடும்வரைக்கும் இந்த மீன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ‘

‘உங்கள் காலை உணவு திருப்தியாக இருந்திருக்கும். வரும் வழியில் Tim Horton ல் ஓட்டை வைத்த சீனிப்பாணை சாப்பிட்டு கடுங் கோப்பியும் குடித்திருப்பீர்கள். உமது நாள் நல்ல நாளாக ஆரம்பிக்கட்டும். என்னுடைய .23 சதத்திற்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அது இன்னும் சிறப்பான நாளாக அமையட்டும். ‘

சில நாட்களில் ஒன்றுக்கு இரண்டு தகவல்கள்கூட விட்டேன். எனக்காக அவர்கள் காத்திருப்பது போலவும், தகவல் விடாமல் ஏமாற்றக்கூடாது என்றும் பட்டது. ஒருமுறை பகல் தூக்கம் கலைந்து திடாரென்று எழுந்து ஒரு செய்தியை விட்ட பிறகுதான் என்னால் மீண்டும் நிம்மதியாக உறங்க முடிந்தது.

‘ இன்று நீலமான நாள். சூாியனை இரண்டுதரம் பார்த்தேன். இந்த நாள் முடிவை நெருங்குவதற்குள் இன்னுமொருமுறை சூாியனை பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை உண்டு. பவன அமுக்கம் 101.8, வெப்பம் 19 டிகிாி, காற்று வேகம் கிழக்கு 15 கி.மீ, ஈரப்பதன் 55, பார்வைத் தூரம் 2 கி. மீ; சிறு மழைத்துளிகள் விழலாம். ஆனால் இடிமுழக்கம் நிச்சயமாக இல்லை. ‘

‘கறுப்பு கழுத்து கனடிய வாத்துகள் திரும்பி போவதற்கு ஆயத்தமாகின்றன. இன்று என் தோட்டத்தில் இரண்டு பறவைகள் இறங்கின. ஒரு வெண்கல வாத்தியக்குழுபோல சத்தமிட்டன. ஏதோ வைத்ததை தேடுவதுபோல இரண்டும் வெகு நேரம் தேடின. பிறகு அப்படியே தெற்கு நோக்கி பறந்து போயின. அடுத்த வருடம் திரும்பும்போதும் இவை இறங்கி இளைப்பாறுமா தொியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ‘

இது நடந்து பல வாரங்களுக்கு பிறகு எனக்கு நடு இரவில் ஒரு தொலைபேசி வந்தது. அழைத்தது ஒரு அந்நியப் பெண் குரலாக இருந்தது.

இனிய குரல்கள் என்னை அழைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதிலும் நடு நிசியில் பெண்கள் அழைப்பதே இல்லை.

‘உங்கள் பெயர் நீண்டதாக இருக்கிறது. இடது பக்கம் தொடங்கி வலது பக்கத்தில் முடிகிறது. நீங்கள் ஆணா, பெண்ணா ? ‘ என்றது அந்தக் குரல்.

‘நேற்று மாலைவரை நான் ஆணாகத்தான் இருந்தேன். அதற்கு பிறகு சோதனை செய்ய சந்தர்ப்பம் வரவில்லை. அவசரமா ? ‘ என்றேன்.

‘க்ளுக் ‘ என்று சிாித்தாள். ‘மூச்சு எல்லாவற்றையும் வெளியே விட்டுவிட்டுத்தான் உங்கள் முழுப்பெயரையும் என்னால் உச்சாிக்க முடிகிறது ‘ என்றாள்.

‘நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். ‘

‘நீங்கள் பெண்ணா ? ‘ என்றேன். இந்தக் கேள்வி தேவையில்லாதது. ஆனாலும் சம்பாஷணையை வளர்ப்பதற்கு மிகவும் உதவியானது.

‘ஆம் ‘ என்றுவிட்டு சிாித்தாள். அல்லது சிாித்துவிட்டு ஆமென்று சொன்னாளோ ஞாபகமில்லை.

‘ உங்கள் பெயர் என்ன ? ‘ என்றேன்.

‘ அவசியம் சொல்லவேண்டுமா ? ‘ அவள் குரல் மெலிந்து, மேலும் தயக்கமாகியது.

‘நிச்சயம் சொல்லவேண்டும். உங்களுக்கு என் பெயர் தொிகிறது. நான் ஆணா, பெண்ணா என்ற அந்தரங்க விஷயமும் தொிகிறது. என் டெலிபோன் இலக்கம் தொிகிறது. ஆனபடியால் நீங்கள் ஒரு முறையற்ற அநுகூலத்தில் இருக்கிறீர்கள். நடு நிசி நேரத்தில், அமைதியைக் கிழித்து என்னை அழைக்கிறீர்கள். பிறகு உதவி கேட்கிறீர்கள். நான் நடு நிசியில் உதவி செய்வதில்லை. அதுவும் பெயர் தொியாத ஒரு பெண்ணுக்கு. ‘

‘ஸேர்லி ‘

‘உங்கள் பெயர் ஸேர்லியா ? அழகான பெயர். எங்கள் நாட்டில் இப்படி அழகான பெயர்கள் இல்லை. அழகான பெயர்களை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டார்கள். இப்போது எஞ்சியிருப்பது எல்லாம் அடிமண்டி. அழகில்லாதவை. ‘

‘க்ளுக் ‘

‘ஸேர்லி, இந்த நடு நிசியில், பேர் தொிந்த ஆனால் முகம் தொியாத அழகான பெண்ணுக்கு நான் என்ன உதவி செய்யமுடியும் ? ‘

‘பிழை, மிகப்பிழை ‘

‘மிகப்பிழையா ? ‘

‘ஆமாம், நடுநிசி என்பது சாி, பேர் தொிந்த என்பது சாி. ஆனால் முகம் தொியாத பெண் எப்படி அழகாக இருப்பாள் ? ‘

‘இருப்பாள். குரலை வைத்து நான் வயதைக்கூட சொல்லிவிடுவேன். எங்கள் நாட்டில் கால் பெருவிரலை வைத்து முகத்தை வரைந்து விடுவார்கள். தொியுமா ? ‘

‘நம்பமுடியாது. ‘

‘உங்களுடைய முகம் முக்கோணமாக இல்லை; சற்சதுரமாக இல்லை; நீள் சதுரமாகவும் இல்லை. ‘

‘ஆஹா! நல்ல ஆருடம்தான். ‘

‘உங்களுடைய கண்கள் வெட்டுக்கிளியின் கால்கள்போல நீண்டு விாிந்த இமைகளுடன் இருக்கும். ‘

‘இவ்வளவு தப்பாகச் சொல்வதற்கு மிகுந்த பயிற்சி தேவை. ‘

‘இல்லை, பெண்ணே! ஒன்ராறியோ வாவிக்கு இந்தப் பக்கம் உங்களை வெல்ல அழகி இல்லை. ‘

‘மிகையான புகழ்ச்சி. எங்கே, என் வயதைக் கூறுங்கள் பார்ப்போம் ? ‘

‘சாியாக 18 வருடம், மூன்று மாதம். ‘

‘மிகப்பிழை, மிகப்பிழை. ‘

‘இன்று ஐஸ்கிாீம் சாப்பிட்டார்களா ? ‘

‘இல்லையே. ‘

‘அதுதான் இந்த தவறு நடந்திருக்கிறது. நீங்கள் ஐஸ்கிாீம் சாப்பிட்டிருக்கவேண்டும். ‘

‘உங்களுடைய சாக்கு பாிதாபகரமாக இருக்கிறது. ‘

‘எத்தனை மாதம் தவறியது ? ‘

‘ஆறுமாதம். பரவாயில்லை, மன்னிக்கிறேன். என் உயரத்தையாவது சொல்வீர்களா ? ‘

‘குரல் சாஸ்திரத்தில் அதுவும் அடங்கும். ‘

‘எங்கே சொல்லுங்கள் பார்ப்போம். ‘

‘மிகச் சாியாக. ‘

‘மிகச் சாியாக. ‘

‘கடல் மட்டத்தில் இருந்து உங்கள் உயரம் மிகச்சாியாக 170 செ.மீ ‘

‘மிகத்தவறு. என்ன, இதற்கும் ஐஸ்கிாீம் சாப்பிட்டிருக்கவேண்டுமா ? ‘

‘அதுவல்ல. எங்கே இருக்கிறீர்கள் ? ‘

‘அறையில் ‘

‘அதுதான் எங்கே ? ‘

‘மாடியில் உள்ள படுக்கை அறையில். ‘

‘அதுதான் பார்த்தேன். கடற்கரையில் நின்று அளந்து பாருங்கள். மிகச் சாியாக இருக்கும். ‘

‘வெகு சமத்காரம்தான். இனிமேலாவது என்ன உதவி என்று கேட்பீர்களா ?

‘ஒரு பதினேழு வருடம், ஒன்பது மாதம் வயதான பெண்ணுடன்… ‘

‘அழகான பெண்ணுடன்… ‘

‘ஒரு 17 வருடம், 9 மாதம் வயதான அழகான இளம் பெண்ணுடன்.. ‘

‘மீண்டும் பிழை ‘

‘பெண்ணே, இப்போது என்ன தவறு செய்துவிட்டேன் ? ‘

‘ஒரு 17 வயதுப் பெண் இளம் பெண் அல்லவா ? அது என்ன 17 வயது இளம் பெண். இது ‘கூறியது கூறல் ‘ என்பது தொியாதா ? ‘

‘அவசரப்பட்டுவிட்டாய். எங்கள் இலக்கியத்தில் இதை மீமிசை என்பார்கள். கவிகளுக்கு இந்த சலுகை உண்டு. ஒரு 17 வருடம், 9 மாதம் வயதான அழகான இளம் பெண்ணுடன் நடு நிசியில் பேசுவது இதுதான் எனக்கு முதல் தடவை. என்ன உதவி நான் செய்யவேண்டும் ? ‘ என்றேன்.

‘உங்களுடைய குரல் அஞ்சல் கேட்டேன். ‘

‘குரல் அஞ்சலா ? என்னுடையதா ? எங்கே கேட்டார்கள். ‘

‘அந்த கறுப்பு கழுத்து வாத்து, உங்கள் வீட்டு தோட்டத்தில் வந்த வாத்து, அடுத்த வசந்தம் வரும்போதும் உங்கள் தோட்டத்திற்கு வரும். ‘

‘நன்றி. உங்களுக்கு இந்த தகவல் எப்படி கிடைத்தது ? ‘

‘சொல்ல மறந்துவிட்டேன். நான் இயற்கை வாயு கம்பனியில் வேலை பார்க்கிறேன். குரல் அஞ்சல் பகுதியில் எனக்கு பணி தற்காலிகமாக கிடைத்திருக்கிறது. என் பணி திருப்தியாக இருக்கும் பட்சத்தில் என் வேலை நிரந்திரமாக்கப்படும். ‘

‘எவ்வளவு காலமாக வேலை பார்க்கிறீர்கள் ? ‘

‘நான் சேர்ந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. எட்டுமணி நேரம் இரவு வேலை செய்கிறேன். வரும் குரல் அஞ்சல்களையெல்லாம் வகை பிாித்து பதிவு செய்து அந்தந்த பகுதிகளுக்கு செயல்படுத்த அனுப்பவேண்டும். உங்களுடைய குரல் அஞ்சல்கள் சந்தோஷத்தை அளித்தாலும் எனக்கு அவற்றை என்ன செய்வதென்றே தொிவதில்லை. ஒரு தவறு செய்துவிட்டேன். ‘

‘என்ன தவறு ? நீங்கள் தவறு செய்பவராகத் தொியவில்லையே! ‘

‘அது எப்படித் தொியும் ? ‘

‘அதுவும் ஒரு குரல் சாஸ்திரம்தான். ‘

‘நான் செய்த தவறு உங்களுடைய கடைசி மூன்று குரல் அஞ்சல்களையும் அழித்ததுதான். இது மிகவும் பாரதூரமான பிழை. எனக்கு அவற்றை எங்கே அனுப்புவதென்று தொியவில்லை. என்னுடைய வேலையை நான் இழக்கவேண்டி நோிடலாம். ‘

‘ஆகவே நான் என்ன செய்யவேண்டும் ? ‘

‘இனிமேல் குரல் அஞ்சல்கள் அனுப்பவேண்டாம். வாத்துகள் பற்றியும், போப்பாண்டவர் மின்கடிதம் மூலம் பாவ மன்னிப்பு வழங்க மறுத்ததைப் பற்றியும், உங்கள் கவிதையை பிணந்தின்னி பறவைகள் போல விமர்சகர்கள் கொத்தியதைப் பற்றியும் வரும் அஞ்சல்கள் என்னை குழப்புகின்றன. அவற்றை நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ‘

தொடர்ந்து வந்த மாதங்களில் நான் அஞ்சல்கள் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். வெண்ணெய் பூசி, மின் அடுப்பில் வாட்டிய ரொட்டியைப் பற்றியும், ரப்பர்போல இழுபடும் இறுக்கமான உடை அணிந்த பெண்ணைப் பற்றியும், என் முதுகுப்பையின் இடது பக்க வார் அறுந்துபோன துக்கமான சமாச்சாரம் பற்றியும் நான் ஒரு தகவலும் விடவில்லை. அந்த 17 வயதுப் பெண் நடு நிசிகளிலோ அல்லது மற்ற நேரங்களிலோ டெலிபோனுக்கு பக்கத்திலேயே வசித்த என்னை எந்தக் காரணம் கொண்டும் கூப்பிடவில்லை.

ஒவ்வொரு மாதமும் சாியாக பதினாலாம் தேதி எனக்கு ஒரு கடிதம் கிடைக்கும். இந்த கடிதத்தை சுமந்தபடி நீலக் கோடு போட்ட , சிவப்பும், வெள்ளையும் வர்ணம் அடித்து சாிந்துபோன தோற்றம் கொண்ட ஒரு தபால் வண்டி வரும். தடிப்பான உடல்வாகு கொண்ட ஒரு தபால்காாி அந்தக் கடிதத்தை தூக்கி வந்து என் வீட்டு கதவில் இருக்கும் துளையில் போடுவாள். அது ‘சதக் ‘ என்று சத்தம் செய்துகொண்டு இன்னும் பல கடிதங்களுடன் விழும். அதைத் திறந்தால் அதற்குள் ஒரு மாதாந்திர கணக்குப் பத்திரம் .23 சதம் வரவு காட்டிக்கொண்டு இருக்கும். அத்துடன் திருப்பி அனுப்புவதற்காக சாளரம் வைத்த ஒரு கடித உறையும் இன்னும் பல விளம்பர துண்டுகளும் இருக்கும். இப்பொழுதெல்லாம் இவற்றை திறந்து பார்க்கும்போது நான் பற்களை நெறுமுவதில்லை. பொறுமையாக அவற்றை ஆராய்வேன், பிறகு பேப்பர் கழிவுகள் போடும் சாம்பல் நிறப் பெட்டிக்குள் அடைத்து வைப்பேன். அவை சுழல் பாவிப்புக்காக அடுத்துவரும் புதன் கிழமை காலை சேகாிக்கப்பட்டுவிடும்.

இதனால் எனக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட நட்டம் பல நூறு டொலர்களை தாண்டிவிட்டது. இந்த தொகையில் அரசாங்கம் அனுப்பிய நூற்றுக் கணக்கான பத்திரங்களின் செலவும், தபால் கட்டணங்களும் அடங்கும். என் தரப்பில், நான் அனுப்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களும், தொலை நகல்களும், மின்னஞ்சல்களும், தொலைபேசி செலவுகளும் அடங்கும்.

இந்தக் கணக்கில் பல மணித்தியாலங்களை விரயமாக்கிய என் உழைப்பு நேரமும், பல அதிகாாிகளின் உழைப்பு நேரமும், நடு நிசியில் தயங்கிய குரலில் டெலிபோன் பேசிய 17 வயது இளம் பெண்ணின் உழைப்பு நேரமும் அடங்கவில்லை.

1818ம் வருடம் இறந்துபோன இசை மேதை பீதோவனின் ஒன்பதாவது சிம்பனி இசை அமைப்பு உழைப்பு நேரமும் அடங்காது.

***

Series Navigation