தேவமைந்தன்
சென்ற நூற்றாண்டின் எண்பதுகளின் தொடக்கம், தமிழ்நாட்டில் ‘மசாலாப் பத்திரிக்கைகள்’ தலைதூக்கிய காலகட்டம். வாசகர்களில் படித்த பிரிவினர்களில் முற்போக்கானவர்கள் அழுத்தமும் செறிவும் மிக்க படைப்புகளைத் தேடத் தொடங்கிய பொழுது, நீர்த்துப்போகாததும் பொருள் கனமும் மிக்க படைப்புகளை நாங்கள் தருகிறோம் என்று சிற்றிதழ்கள் சில முனைப்புக் காட்டின. அவற்றுள் சுட்டி அளவால் சிறியது. 13×9 செ.மீ. கடையில் தொங்கப் பார்த்தபொழுது வியந்தது மனம். “விலை எவ்வளவு?” என்று கேட்டபொழுது கடைக்காரர் சொன்னார், “35 காசு.”[இதழ் 1 முதல் 8 வரை விலை 25 காசு மட்டுமே என்று – பின்னால், முதல் 17 இதழ்களை அஞ்சலில் தருவித்தபின் அறிந்து கொண்டேன். 23ஆம் இதழ் முதல் 50 காசு.] சுட்டியின் (ஜூலை.15-ஆகஸ்ட் 14, 1982 நாளிட்ட) 18ஆம் இதழைத்தான் இவ்வாறு நான் முதன்முதலாகக் கடையில் கண்டேன். வாங்கி, சட்டைப்பையில் போட்டுக்கொண்டு காலாற நடந்து ஆனந்தரங்கப்பிள்ளை வீதியைக் கடந்து, ஆளுநர் மாளிகைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவின் மர நிழலில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.
அட்டைப்படம், புதிய – ஏழாவது குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா பற்றிய கேலிச் சித்திரம் கொண்டது. “……..கடவுள் பெயரால் சத்தியம் செய்வது என்னவென்றால்… இந்திய மக்களின் நலனுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்..” என்று ஒளிவெள்ளத்தில் சொல்கிறார் அவர். வெளியே இருட்டு. வளர்ந்த தாடியும் பரட்டைத் தலையுமாய் ஏழைகள். சொல்கிறார்கள் – “இதுவரைக்கும் ஆறுபேர் இப்படிதான் சத்தியம் பண்ணினாங்க. ஆனா எங்க பொளப்பு முப்பத்தஞ்சு வருஷமாகியும் இப்படியே இருட்டாத்தான் இருக்குது.” கேலிச் சித்திரத்தின்கீழ் ‘ஷேக்..’ என்ற கையொப்பம்.
உள்ளே “திருமண அறிவிப்பு” ஒன்று.
“அன்புடையீர்!
எனக்குத் திருமணம்.
ஜனாப் ஏ.என்.ஏ. முகம்மது மீரா அவர்களின் மகள் ஜவஹர் நிசாவுடன் 13-6-82 ஞாயிறு மாலை 10 மணியளவில் இளையான்குடியில் நடக்க இருக்கும் திருமணத்தில் இணைந்து என் மனைவாழ்வைத் தொடங்குகிறேன் என்பதை எல்லோர்க்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள,
ஏ.பீ. அசனார் (‘வால்’ பொறுப்பாசிரியர்)
_________________________________________
குறிப்பு: தலைப்பைக் கவனித்தீர்களா? இது அறிவிப்புதான்: அழைப்பிதழ் இல்லை. அதனால் நீங்கள் சந்தோஷப்படலாம். ‘பாவிப்பயல் அழைப்பிதழ் அனுப்பி விட்டானே, அன்பளிப்புச் செய்ய வேண்டுமே! அல்லது தந்தியடிக்கலாம் என்றாலும் தந்திக்கட்டணம் தலைக்குமேலல்லவா உயர்ந்துவிட்டது…’ என்றெல்லாம் நீங்கள் வயிறெரிய வேண்டியதில்லை. ஒரு காசு செலவில்லாமல் மனசுக்குள்ளேயே வாழ்த்துங்கள். அது போதும்.”
அதனடியில் ‘சுட்டி’யின் அறிவிப்பு –
பாராட்டுகிறோம்
சுட்டி இதழ்: 16(மே15)இல் வெளியான திருமண [‘அழைப்பு’ என்ற சொல், குறுக்கே அடிக்கப்பட்டுள்ளது] அறிவிப்பு என்ற திரு. சுயராஜ் எழுதிய ஆவேசமான கட்டுரை வாசகர்களுக்கு நினைவிருக்கும். அந்தக் கட்டுரையின் உணர்வை, இளையாங்குடியிலிருந்து வெளியாகும் ‘வால்’ பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர் நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார். இளைஞர் அசனாரின் சீர்திருத்தத் துணிவைப் பாராட்டி, அவர் மணவாழ்வில் எல்லா நலமும் பெற சுட்டி வாழ்த்துகிறது. இதுபோல திருமண அறிவிப்பு செய்யும் முற்போக்கு இளைஞர்கள் எங்கிருந்தாலும், நமது பாராட்டாக சுட்டி தொடர்ந்து ஊக்கப் பரிசாக அவர்கட்கு அனுப்பப்படும் என்பதையும் அறிவிக்கிறோம்- ஆயுள் முழுவதும்
‘வால்’ பத்திரிக்கை முதல் பக்கத்தில் வெளியான திருமண அறிவிப்பு இது. முகவரி: வால், 5,பாரதியார் தெரு, இளையான்குடி-623 702.
‘சுட்டி’யைப்பற்றித் தெரியாத நண்பர்கள் தெரிந்து கொள்ளவே முழுதாக மேற்படிப் பகுதியைத் தந்தேன்.
இனி, “தமிழில் சிறு பத்திரிக்கைகள்”(1) என்ற தன் விரிவான நூலில், வல்லிக்கண்ணன் ‘சுட்டி’ குறித்துச் செய்த பதிவு:
“…கையகல அளவில் வரும் சிறு பத்திரிக்கை இது. மாதம் தோறும் முதல் தேதியன்று தவறாது வெளிவரும் சுட்டி பல வருடங்களாகப் பிரசுரமாகிறது.
வணிகப் பத்திரிகைகள் பலவற்றினது உண்மைத் தன்மையையும் ‘மசாலாப் பத்திரிகைகள்’ என்ற தலைப்பில் சுட்டி வெளியிட்டு வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தது. அதே போல் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் எழுதியது.[ஓவியர் ஜெயராஜையும் விட்டு வைக்கவில்லை. சுட்டி சொன்ன குறைகளுக்கு அவர் தந்த மறுப்பையும் விளக்கத்தையும் 19ஆம் எண் இதழில் வெளியிட்டது] சினிமா உலகப் பிரமுகர்கள் பற்றி கட்டுரைத் தொடர்கள் இதில் வெளிவந்துள்ளன. சமூக, அரசியல் துறைகளில் மலிந்துவிட்ட ஊழல்கள், குறைபாடுகள் பற்றிச் சிறு சிறு கட்டுரைகளும் தகவல்களும் வருகின்றன.
கிண்டலும் பரிகாசமும் கலந்த கவிதைகள், குறிப்புகள் சுட்டியில் அதிகம் காணப்படும். வீட்டு வைத்தியம், மனித உடல் உறுப்புகள் பற்றிய மேலோட்டமான கட்டுரைகள், புத்தகங்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. வரவர ‘சுட்டி’ துணுக்குகள் — பிற பத்திரிகைகளிலிருந்து ‘நன்றி’யுடன் எடுத்துப் பிரசுரிக்கும் புதுமையான, ரசமான, சூடான, சுவையான தகவல்கள் முதலியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரிகிறது………
ஆரம்ப காலத்தில் ‘சுட்டி’யின் துணிச்சலான போக்கினால் தாக்கம் பெற்ற இளைஞர்கள், தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில், சுட்டி மாதிரி பத்திரிகைகள் தொடங்குவதில் முனைப்புக் கொண்டார்கள். அம்முயற்சிகள் பலவும் ஒரு சில இதழ்களோடு முடிந்து போயின.”
****
‘சுட்டி’யின் ஆசிரியர் நிர்மலா சுந்தர் என்று குறிப்பிருப்பினும் ஒரு தெளிவான அர்ப்பணிப்புணர்வு கொண்ட ஆசிரியர் குழுவே இதழை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று வெளிக்கொணர அயராது பாடுபட்டிருக்கிறது. கொள்கைவழி நடக்கும் இதழ் ஒன்று சுட்டியைக் கொச்சைப்படுத்தியது தாங்காமல் ஆசிரியர் குழு வெளியிட்ட அறிக்கை:
“சுட்டி ஒரு சமூக மாறுதலுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு எந்த நசிவு சக்திகளுக்கும் துளியும் பலியாகாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேதி தவறாமல் இதழ்களைக் கொண்டு வரவும் படும் பிரசவ வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த 32 மாதங்களில் நிறைய ஆயிரங்களை இழந்து, மேலும் இழக்காமலிருக்க, மிகவும் துல்லியமான கணிப்புகளுடன், கட்டுப்பாட்டுடன், கடும் உழைப்புடன் பத்திரிக்கையியல் நுட்பங்களை அதிகப்பட்சம் பயன்படுத்தி எல்லாவற்றிற்கும் மேலாக உயிருக்குயிரான எங்கள் வாசகர்களின் பேராதரவுடன்தான் இந்த முயற்சியை வெற்றியாக்கியிருக்கிறோமே தவிர, வேறு எந்தப் பின்னணியுடனும் அல்ல என்பதை மடியில் கனமின்றி, வழியில் பயமின்றி உறுதிப் படுத்துகிறோம்.”(எண் 32. அக்டோபர் 1983)
மேற்படி உறுதிப்படுத்துதல் சரியே என்பதற்குச் சான்று ஒன்று. சுட்டியின் வெளியீட்டாளர் பொறுப்பை 32ஆமிதழ் வரை ஏற்றிருந்த வழக்கறிஞர் திரு பொ.இரத்தினம் தன் வழக்கறிஞர் தொழில் சம்பந்தமாக புது தில்லிக்கு நிரந்தரமாகச் செல்கிறார் என்றபோது, அடுத்த வெளியீட்டாளராக அதன் ஆசிரியர் குழு உறுப்பினரும் அச்சுப் பொறுப்பாளருமான திரு கி,இராமச்சந்திரன் அவ்விதழ் முதல் பொறுப்பேற்கிறார் என்ற செய்தியையும் இதழுக்குள்ளேயே வெளியிட்டு, தன் வாசகர்களோடு பங்கிட்டுக் கொண்டது ஆசிரியர் குழு.
ஒருமுறை(1983 இறுதியோ, ’84 தொடக்கமோ என்று நினைவு)சென்னை-600066ஐச் சேர்ந்த பாலன் சகோதரர்கள், டாக்டர் அ.சிதம்பரநாதன் அவர்களின் ‘தமிழில் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற புத்தகத்தை இலவசமாக இலக்கிய ஆர்வலர்களுக்கு வழங்க முன் வந்தபொழுது ‘சுட்டி’ உதவியது. அந்த நூல், சென்ற எழுபதுகளில் சிறுகதை ஆராய்ச்சியாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பெற்ற முதல் நூல். இப்பொழுது கிடைப்பதில்லை.
சுட்டியில் வெளிவந்த கவிதைகளுக்கு ஒரு பதம்:
மாடுகள் நாய்களாகும்(/b>)
கல்யாணச் சந்தையிலே
மலிந்து போன
சில மாப்பிள்ளை மாடுகள்
ஒரு நொடியில்
வாலைக் குழைக்கும்
நாய்களாகும்
சித்து வேலை செய்வது
எங்கள் வரதட்சணை எலும்பு
-கோவை. தாமரை
***
சீ.இரகுராமன், சித்தன் என்பவர்கள் “ஆங்கிலம் என்பதோர் நாகரிகம்” என்றொரு சிறு கட்டுரை எழுதியிருந்தார்கள். நவம்பர் 1983 ‘சுட்டி’யில் அது வந்தது. அதில் ஒரு பகுதி:
“……….தந்தை மகற்காற்றும் உதவி, ஆங்கிலப் பள்ளியில் இடம் தேடிப் பிடிப்பதாகி விட்டது.
இங்குள்ள அரசியல்வாதிகளோ, தங்கள் விளம்பர அரசியலுக்குத் தவிர வேறெதற்கும் தமிழ் உதவாது என்று முடிவு கட்டி, நெடுநாளாயிற்று.
“தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்று மொழிகளுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ் நாட்டிலிருக்கும் அளவு வேற்று நாட்டிலில்லை” என்று கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் வருந்திக் கூறியது இன்றைக்கும் உண்மை.”
**
அஞ்ஞானி என்ற பெயரில் ஒருவர் ஒளிப்படி[Xerox] எந்திரம் பற்றி ஒரு பக்கம் துல்லியமான தகவல்கள் தந்திருந்தார்.(நவம்பர் 1983.) 1938இல் செஸ்டர் காரிலிசன் இதுகுறித்த தன் கண்டுபிடிப்பைப் பதிவு செய்தார்; கிரேக்கச் சொல்லான ‘சிராக்ஸ்’ என்பதன் பொருள் ‘உலர் எழுத்து’; சிங்கப்பூரில் ஒளிப்படி ஒரு பக்கத்துக்கு[1983இலேயே] 10 காசுதான் முதலான சேதிகளுக்குப் பிறகு அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான தெளிவான விளக்கம்.. இவ்வளவும் 13×9செ.மீ அளவுள்ள ஒரே பக்கத்தில்.
எளிய மக்களுக்கு உதவும்-செயல் சாத்தியமான மருத்துவக் குறிப்புகள் சுட்டியில் தொடர்ந்து வெளிவந்தன.
வெளியில் அவ்வளவாகத் தெரியாத செய்திகள் சிலவற்றையும் ‘சுட்டி’ வெளியிட்டது. சான்று:
“ரிச்சர்ட் ஆட்டன்பரோவுக்கு முன்பே காந்தி திரைப்படத்தைத் தயாரிக்க இலண்டனிலிருந்து மார்க் ராப்சன் முயன்றிருக்கிறார். இதில் காந்திஜியாக நடித்தவர் ‘காஷ்யப்’ என்ற இந்திய நடிகர். காந்தி போன்ற முகச் சாயலுடையவர். 1962இல் நடிகர் சிவாஜி கணேசன் லண்டன் சென்றிருந்தபோது இந்த நடிகரை சந்தித்துப் பேசி விவாதித்திருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ராப்சன், சிவாஜிக்கு முதல் 1000 அடிகளைப் போட்டுக் காண்பித்து “இப்படத்தை உங்கள் நாட்டவர் வரவேற்பார்களா?” என்று கேட்டபோது சிவாஜி, “படம் உண்மையான வரலாற்றைச் சித்தரிப்பதாக இருந்தால் நிச்சயம் வரவேற்பார்கள். அப்படி இல்லாமல் தவறாக இருக்குமானால் படத்தை ஒதுக்கியே விடுவார்கள்” என்று பதிலளித்திருக்கிறார். இப்படம் தொடர்ந்து எடுக்கப்பட்டு வெளிவரவே இல்லை.”(எண்:30. ஆக.’83)
**
பொதுமக்கள் பிரச்சினைகளுக்குப் பவகையான வடிவங்களில் உதவியது சுட்டி. ‘அனுபவக் கட்டுரைப் போட்டி’ நடத்தி, பரிசுகள் தந்து, மற்றவர்களுக்குதவும் மனப்பான்மையை இளைஞர்களிடையே ஊக்குவித்தது.
*
சிற்றிதழ்கள் பற்றிய சுவையான சேதி ஒன்று.
82 வயதான, முதிய-பெரியவர் குன்றம் மு. இராமரத்நம் அவர்கள் ஆசிரியராக இருந்து (கோவை-7 சுகர்கேன் அஞ்சல், புலமைப் பண்ணை) நடத்தும் ‘முங்காரி’ என்ற சிற்றிதழின் 98-ஆவது வெளியீடு வந்துவிட்டது என்றால் பாருங்களேன்.
******
அடிக்குறிப்பு:
(1) வல்லிக்கண்ணன், தமிழில் சிறு பத்திரிக்கைகள், ஐந்திணைப் பதிப்பகம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1991.
****
karuppannan.pasupathy@gmail.com
- விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?
- கடிதம்
- தன் வினை
- படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;
- எனது துயரங்களை எழுதவிடு…!
- பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?
- 1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்
- இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!
- இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)
- புறநானூறும் தமிழர் வரலாறும்
- சர்வைவல் ஆப் பிட்நெஸ்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.
- INTERNET BROADCASTING SCHEDULE – National Folklore Support Centre
- கடிதம்
- பம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்
- உனக்கும் எனக்குமான உரையாடல்
- தவறாமல் வருபவர்
- கால நதிக்கரையில்……(நாவல்)-29
- யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?
- அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
- தனிமையில் ஒரு பறவை
- சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
- அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து
- கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்
- கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்
- காலத்தின் தழும்புகள்
- காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !
- தேரோட்டி இல்லாது !
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- எல்லைகளற்று எரியும் உலகு!
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 33