This entry is in the series 20020210_Issue

மதுரபாரதி


ராவணனைவிட
அதிகமுகங்கள் உண்டெனக்கு.

ஒவ்வொரு சட்டைக்கும் பொருத்தமாய்
ஒரு முகம் வைத்திருக்கிறேன்.
சில சமயம் கடிகார முள்ளுடன் கூட
மாற்றிக்கொள்வதுண்டு.

பிடித்த சில முகங்களை
பிடித்த சிலருக்காக
ஒதுக்கிவைத்திருக்கிறேன்.

இன்ன இடத்தில்
இன்னாருக்கு இந்தமுகம் என்று
யோசிக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.

பல காலப் பயிற்சியில்
நொடிப் பொழுதில் முகம் மாற்றத்
தேர்ந்துவிட்டேன்.

துன்பம் எதுவென்றால்
பிறக்கும்போதிருந்த முகம்
எங்கேயென்று தெரியாமல்
தவிப்பதுதான்.

Series Navigation