This entry is in the series 20081204_Issue

துவாரகன்



மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்

நம் கைவிட்டு நழுவிப் போகிறது.

உடைந்த கூரைகளும்

விழுந்த மரங்களும்

சிதைந்த உடல்களும்

எம் கண் முன்னால்.

பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம்

இப்போ எங்கள் கண்களுக்கு சப்பாத்தி முட்களோ

நாகதாளிப் பற்றைகளோ பெரிதில்லைத்தான்.

மருதமரங்களையும்

மலைவேம்புகளையும் கைவிட்டு

பற்றைகளிலும் பாம்பு புதர்களிலும் படுத்துறங்குகிறோம்.

வானம் கூரையாக

முட்கள் படுக்கையாக

வெறும் மனிதர்கள் மட்டும் இருக்கிறோம்.

இன்னும் கொஞ்ச நேரத்தில்

எங்கள் உடல்களும் செத்துப் போகும்.

பனிமலையேறிகள் மரத்துப்போன

உடல்களைக் கண்டு கொள்வதுபோல்…

நாளை வரும் ஒருவன்

இந்தப் பாம்புப் புதரிலோ

சூரைப் பற்றைகளுள் இருந்தோ

சிதைந்து போன எங்கள் உடல்களைக்

கண்டு கொள்வான்.

அப்போது அவனும் கூட

கொஞ்சம் கொஞ்சமாக

செத்துக் கொண்டிருப்பான்.


mskwaran@yahoo.com

Series Navigation