This entry is in the series 20071220_Issue

தீபச்செல்வன்


எல்லா வார்த்தைகளும்
தகர்ந்து விட்டன
மிக வேகமாக வீசியெறியப்பட்ட
அந்தக் குரூரக்கல்லில்
நமக்காயிருந்த
வார்த்தையின் கடைசிமலர்
உடைந்து கிடக்கிறது.

மிஞ்சியிருந்த சொற்களின்
வாசனையும்
குளிர்மையும்
நெருப்பாய் தகிக்கிறது.

எல்லோரும்
சேர்ந்து வெளியிட்ட
மிகப்பெரிய புன்னகை
ஒரு சூரியனில் பிறந்து
அதுவாய் விளங்கியது.

அதன் நிறம்
சிதறடிக்கப்பட்டிருக்கிறது
கீற்றுக்கள்
பிய்க்கப்பட்டுள்ளன.

எல்லாக் கைகளின் முன்பும்
மலராய்க்கிடந்தது.

நமது குரல்களின்
எல்லா வார்த்தைகளாயும்
சிறகுகளாயும்
விரிந்து பறந்தன.

பூந்தோட்டத்தில் வைத்தே
நமது மலர்
சாகடிக்கப்பட்டது
ஒரு அதிகாலையிலேயே
நமது சூரியன்
கிழித்துப் போடப்பட்டது.

கிணறு வற்றி
வெறுமையாய்க் கிடக்கிறது.

நிறம் மாறிய புன்னகைகளும்
ஒலியின் முனைப்புகளுமற்ற
வார்த்தைகளும்
நமது வேலியில்
சிக்குப்பட்டுக் கிடக்கிறது.

வேலியில் அமர்ந்து காத்திருந்த
பறவையின் முகத்தில்
இப்பொழுது
மாடு ஒட்டப்பட்டிருக்கிறது.

கிணற்று வாழியில்
தண்ணீர் குடித்த மாடு
மலரை சிதைத்துவிட்டு
சூரியனை மேய்ந்து கொண்டு
வெள்ளையாய்ப் போகிறது.


deebachelvan@gmail.com

Series Navigation