இது போன்ற தருணங்களை மார்க்கம் தவறவிடக் கூடாது

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்



கவிஞர் ரசூல் அவர்களுக்கு ஊர்விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாநில ஜமாத்துல் உலமா சபையின் அறிஞர்குழுவின் முடிவு இதுவரை வரவில்லை.

ரசூல் எழுதிய அந்தக்கட்டுரை இஸ்லாத்தின் அறவியல் கோட்பாடுகள் தொடர்பானது. முழுமையாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும் அணுகி விவாதித்து உண்மையை பதிவு செய்திருக்க வேண்டும். இதை முடிவு செய்வது யார்?வடக்கே ஒருவன் கலைஞருக்கு பத்வா கொடுக்கிறான்.கருத்தை கருத்தால் அல்லவா எதிர்கொள்ளவேண்டும்.

ஊரின் நடைமுறைகளுக்கு மாற்றாக எதிராக ரசூல் ஏதாவது செய்திருந்தால் ஊர்ஜமாத் கூடி அதை ஆலோசித்து முடிவு செய்வதில் நியாயம் இருக்கிறது.. அவர் எழுதியது ஒரு ஆய்வுக் கட்டுரை.இதில் எந்த இஸ்லாமியருக்கும் உடன்பாடு இல்லைதான். இதற்கு ஊர்விலக்கம் அளிப்பது என்ன நடைமுறை? இதை எப்படி ஏற்றுக் கொள்வது?

ரசூலின் கட்டுரை தொடர்பாக அலசி ஆராய வேண்டியது மார்க்க அறிஞர்களின் கடமை. இந்தக் கடமையை இஸ்லாமிய அறிவுலகம் ஏன் இன்னும் நிறைவேற்றாமல் மவுனம் காக்கிறது. எந்த இஸ்லாமிய இதழும் இதுவரை ரசூலின் பிரச்சினையை அந்தக் கட்டுரையை கண்டுகொள்ளவோ விவாதிக்கவோ இல்லை.மார்க்க அறிஞர் பெருமக்களும் இதுபற்றி வாயை திறக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

ரசூலை மட்டும் தண்டிப்பதே தவறு என்ற நிலையில் அவருடன் அவர் குடும்பத்தையும் சேர்த்து ஊர்விலக்கம் செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? இவர்களூக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற ஜமாத் நிர்வாகங்களும் இந்த நடைமுறையை தொடர்ந்தால் இதை எப்படி எதிர் கொள்வது? ஊர்விலக்கம் என்பதும் ஒருவகை வன்முறைதான். இது அறிவுச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை.

சிந்திப்பவர்களுக்கு இதில் நிறைய படிப்பினை இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது திருக்குரான். அப்படிப்பட்ட மார்க்கத்தில் எழுத்துக்காக ஊர்விலக்குவது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதுதானா என்பதை சிந்தித்துப் பார்கக வேண்டும்.

கவிஞர் ரசூலுக்காக அனைத்துப் படைப்பாளிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் மார்க்கம் மெளனம் காத்து வருகிறது.

சகிப்புத்தன்மையற்ற மதம் இஸ்லாம் எனும் அவப்பெயரிலிருந்து தன்னை மீட்டெடுக்க இது போன்ற தருணங்களை மார்க்கம் தவற விடக் கூடாது. இதைத்தான் தமிழ் எழுத்துலகம் எதிர்பார்க்கிறது. மாநில ஜமாத்துல் உலமா என்ன செயயப் போகிறது?

நன்றி: காலச்சுவடு மாத இதழ் டிசம்பர் 2007


Series Navigation

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்