தூக்கிலிடப்பட்ட புடவை
கே.பாலமுருகன்

கதவுகளைத்
திறந்துவிடும் போதெல்லாம்
அம்மா வந்து விடுகிறாள்
பிறகொரு நாட்களில்
ஏனோ கதவைத் திறந்தே
வைத்திருந்தேன்
அம்மா
ஆனந்தமாக
சுற்றித் திரிகிறாள்
பிரவேசிக்கிறாள்
நிறைவேறாத கனவுகளை
என்னுடன்
பகிர்ந்து கொள்கிறாள்
அவ்வப்போது
காற்றாடியின் சுழற்சியைக்
காட்டி அச்சம் கொள்கிறாள்
ஒரு நாள்
அம்மாவாசை இரவில்
அம்மா தூரத்திலிருந்து
கதறுவது கேட்கிறது
“நீயும் ஒரு நாள் வந்து பார்”
கட்டிலுக்கடியில்
நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த
அம்மாவின் தூக்குப் புடவையை
அனைத்துக் கொண்டு
உறங்கினேன்
அம்மா
கனவுகளின் துயரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தாள்
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com