கேள்வி
முத்துக்குமார் பொன்னம்பலம்

கூர்கொம்பு நீள்தலையை
மருளவைக்க மிகவுலுக்கி
வால்சுழற்றி சுள்ளென்று
அயர்ந்திடாது விரட்டியும்
எருமையின் கொம்பமர்ந்த
மருளாத சிறுகுருவி
அண்டையில் நான்செல்ல
பதறிச் சிறகடித்து
நெஞ்சுக்குள் கேள்வியிட்டு
சட்டென்று பறந்துபோச்சு.
புவியதிர மண்சிதற
புகையாய் புழுதிகிளப்பி
பாய்ந்தோடும் காட்டெருது
தினந்தோறும் நடந்தேக
குளம்பிடுக்கில் சிரிப்போடு
தலைநீட்டும் பசும்புற்கள்
நாலுநாள் நான்நடக்க
மரணித்துப் பாதையாச்சு;
மனசெல்லாந் துக்கமாச்சு;