கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

ஜெயமோகன்


அன்புள்ள மாலன்,

தங்கள் கேள்விகள் என்னை பெரிதும் யோசிக்கத் தூண்டின.அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.பொதுவாக அருவமான கருத்தாக்கங்கள் குறித்து நாம் சகஜமாக பேசுவதுண்டு,அது புரிந்துகொள்ளப் படுவதுமுண்டு .ஆனால் ஒருபொதும் அவற்றை நாம் தெள்ளத் தெளிவாக வரையறை செய்து கொள்வது இல்லை.அது சிரமமும் கூட.மனம் , அன்பு ,பாசம் ,காதல் ,மரியாதை , கலைத்தரம் முதலிய அருவக் கருத்தாக்கங்கள் இல்லாமல் நாம் பேசவே முடியாது.இதில் எது குறித்தும் எவரிடமும் திட்டவட்டமான நிர்ணயமும் இருக்காது.கலாச்சாரமும் அப்படிப்பட்டதுதான்.

அருவமான எல்லா கருத்தாக்கங்களும் அந்தரங்கமானவையும் கூட.அவை ஒரு பொதுப் [சமூகப் ]புரிதலின் வழியாகவே புறவயமாக ஆகின்றன.அவை அகவயமானவை என்பதனாலேயே அவை இல்லை என்று சொல்பவர்களும் உண்டு,அதுவும் ஒரு தரப்புதான்.கலாச்சாரம் என்று நான் என் சொந்த வரையறையை முன்வைக்கலாம் .அதில் ஒரு பகுதியை நீங்கள் ஏற்கலாம்.அவ்வாறு பரவலாக ஏற்கப்படும் அந்த பொதுவான பகுதியே புறவயமாக ஆகிறது.ஆகவே இவ்வரையறைகள் ஒரு எல்லைக்குள் தான் செல்லுபடியாக முடியும் .அந்த எல்லையை முன்பு பேசுதளம் [frame of reference ] என்றார்கள்.இப்போது சொற்களன் [discourse] என்கிறார்கள். பேசப்படும் எல்லைக்கு வெளியே எப்போதைக்குமாக ,முழுமையாக இவற்றை வரையறை செய்து விட முடியாது.அதாவது அருவமான சொல்லாட்சிகளுக்கு அகவயபுற அர்த்தம்தான் உள்ளது[subjective objectivity]

நவீன இலக்கிய விமரிசனத்தின் துவக்க காலத்தில் டி எஸ் எலியட் இரு அடிப்படைக் கருத்தாக்கங்கள் குறித்து வரையறை செய்வது இலக்கியம் குறித்த விவாதத்துக்கு முக்கியமானது என்று கண்டார் .ஒன்று படைப்பூக்கம் .இரண்டு கலாச்சாரம். ‘கலாச்சாரத்தை வரையறை செய்வது குறித்து… ‘ என்ற அவருடைய கட்டுரை இங்கு எனக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கித் தருகிறது.முக்கால் நூற்றாண்டில் கருத்துக்கள் பலவாறாக மாறி இன்று பின் நவீனத்துவர்கள் கலாச்சாரமே இல்லை என்று சொல்கிறார்கள்.மேலும் சிக்கலான ஒரு கருத்துருவை முன்வைக்கிறார்கள் ——– பொதுக்குறியீட்டுப் பரிமாற்றத் தளம் . நான் என் சொந்த அனுபவங்களை வைத்து இதைக் குறித்து யோசிக்கிறேன்.

கலாச்சாரத்தை நாம் ஏதாவது விதத்தில் உணரும் சந்தர்ப்பங்களை வைத்து அதைக் குறித்து பேசுவது நேரடியான வழி. வாழ்வின் சடங்குகள் ,மத நம்பிக்கைகள் ,உறவுமரியாதைகள் ,கலை இலக்கியங்கள் , அற விழுமியங்கள் ஆகிய தளங்களில் நாம் கலாச்சாரம் குறித்த உணர்வினை அடைகிறோம். ஒரு இடத்தில் அது ஒரு ஆசாரமாக அமையலாம் .உதாரணமாக வயது மூத்த ஒருவரின் முன் நான் வேட்டியை மடித்துக் கட்டியபடி நிற்க மாட்டேன்.இன்னொரு இடத்தில் அது ஒரு நம்பிக்கை . எல்லாம் வல்ல இறை மீதோ ,பிரார்த்தனைகள் மீதோ எனக்கு தர்க்க பூர்வமான நம்பிக்கை இல்லை .ஆனால் எங்களூரின் பெண் தெய்வங்கள் மீது என்னை மீறிய ஒரு ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது.என் குழந்தைகளுக்காக நான் வேண்டிக் கொள்வது உண்டு.இன்னொரு இடத்தில் அது ஒரு விழுமியம் .எந்த நிலையிலும் ஒருவர் எந்த ஒரு குழந்தையிடமும் பிரியமாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று என் அம்மா போலவே நானும் நம்புகிறேன். இன்னொரு இடத்தில் அது ஒரு அழகியல் கொள்கை . மேலான இலக்கியப் படைப்பில் ஒரு முழுமையும் சமநிலையும் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.மகாபாரதமும் கம்ப ராமாயணமும் தந்த நம்பிக்கை அது .இவை எல்லாமே கலாச்சாரத்தின் பகுதிகளே

இவற்றில் சில என் மதம் எனக்கு அளித்தவை.சில என் மொழி அளித்தவை .சில குலம் மூலம் கிடைத்தவை.சில கல்வி மூலம் கிடைத்தவை.கலாச்சாரத்தில் இவை அனைத்துமே பங்காற்றுகின்றன.ஆகவே இடம் ,மொழி ஆகியவற்றில் ஒன்றின் அடிப்படையில் கலாச்சாரத்தை வரையறுத்துவிடக் கூடாது. வரையறை அனைத்துக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.ஆகவே மிகத் தோராயமான ஒரு வரையறையையே தரமுடியும்.

இப்படி யோசிக்கிறேன் .நமது முதைய தலைமுறைகளில் இருந்து நமக்கு வந்து சேரும் விஷயங்களுக்கு பாரம்பரியம் என்று பெயரிடலாம் .[ மரபு என்ற சொல்லை மேலும் விரிவான பொருளில் , தொடர்ச்சி என்று உருவகித்து பயன்படுத்துவது என் பழக்கம்.சார்வாக மரபு ,நவீனத்துவ மரபு போல] பாரம்பரியத்தில் எல்லாமே உண்டு .மனிதகுலத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையிலுருந்து வந்து சேர்பவை முதல் நம் தந்தையின் சொந்தக் குணாதிசயங்கள் வரை .அதில் நமக்கு தேவையானவையும் உண்டு.தீங்கானவையும் உண்டு . ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் சிலவற்றை ஏற்று சிலவற்றை விலக்கிக் கொள்கிறோம். இந்தப் போக்கில் தொடர்ந்து பேணப்பட்டு வரக் கூடிய அம்சங்கள் முக்கியமானவை,சாராம்சமானவை என்று சொல்லலாம் .அவற்றை கலாச்சாரம் என்று வகுத்துக் கொள்ளலாம்.

கலாச்சாரத்தை ஒரு மனிதன் ,ஒரு காலகட்டம்,ஒரு இனம்,ஒரு சூழல் இப்படி ஏதாவது எல்லை வரையறுத்துக் கொண்டுதான் பேச முடியும்.அவ்வரையறையை தொடர்ந்து மாற்றியபடியும் இருக்கவேண்டியுள்ளது.கலாச்சரத்தில் நாம் அறிந்து ஏற்ற அம்சங்கள் உண்டு .அறியாமல் நம்முள் தொடரும் அம்சங்கள் உண்டு.அத்துடன் இப்படிப்பட்ட தத்துவ,இலக்கிய விவாதங்களிலிருந்து மரபணுவியல் போன்ற தளங்களை விலக்கி விவாதக் களனை வகுக்கவும் வேண்டியுள்ளது.

888888888

என் விஷயத்தை சொல்கிறேன்.நான் பிறந்தது குமரிமாவட்டத்தில் .தமிழுக்கும் மலையாளத்துக்கும் இடைப்பட்ட பகுதி இது.என் குடும்பத்திலேயே பேச்சு மொழி மலையாளம்.ஆனால் எல்லாருமே தமிழ் நன்கு அறிந்தவர்கள். மூதாதையரில் பலர் தமிழறிஞர்கள் .காரணம் சித்த வைத்தியம்.என் பெரியப்பாவும் தமிழறிஞரே ..அவரது அன்றாடப் பேச்சு முழுக்க மலையாளம்தான்,மேற்கோள்கள் மட்டும் தமிழில்.அதாவது மலையாளம் நாட்டார் அம்சமாக இருந்தது என்றால் தமிழ் செவ்வியல் அம்சம்.திருவிதாங்கூரில் சுவாதித் திருநாள் காலம் வரைக் கூட அரச ஆணைகள் தமிழில் இருந்திருக்கின்றன. கல்வெட்டுகள் தமிழில்தான் .நான் படித்தது தமிழ். 19 வயதில் தான் மலையாளம் படிக்க கற்றேன் 27 வது வயதில்தான் எழுதக் கற்றேன்.என் குடும்பத்தில் எல்லாருமே தமிழ் படித்தவர்கள் ,என் சகோதரனுக்கும் சகோதரிக்கும் மலையாளம் எழுதப் படிக்க தெரியாது.

ஆகவே என்னை இரு மொழிக்கும் பாரம்பரிய உரிமை உடையவன் என்று சொல்ல முடியும் .மலையாளம் எனக்கு நாட்டார் பாரம்பரியம் என்றால் தமிழ் செவ்வியல் பாரம்பரியம். பழைய முறைப்படி தமிழ் கற்றவனாதலால் சைவ வைணவ இலக்கியங்களுக்குள் என்னால் எளிதாக புக முடியும்.ஆனால் என் அகத்தில் உள்ளவை பகவதியும் இசக்கியும் மட்டுமே. விசுவரூப விஷ்ணு வை என்னால் படைக்க முடியும் ஆனால் அவர் நீலியின் காலடியில் ஒரு குமிழி போல உடைந்து போவதைக் காட்டினால்தான் என் அகம் நிறைவு பெறுகிறது .இவற்றில் எதையுமே என்னால் விட்டு விட முடியாது.என் படைப்புகளின் முக்கிய வலிமையே அவை நாட்டர் மரபுக்கும் செவ்வியல் மரபுக்கும் நடுவே இயங்குபவை என்பதுதான்.

ஆனால் செவ்வியல் மீதான ஈர்ப்பு ,தமிழ் மொழி மீதான ஈர்ப்பு இரண்டும் என்னை அதிகமாக தமிழ் நோக்கியே சாய வைக்கின்றன.அத்துடன் இன்னொன்றும் உண்டு .நான் மணம் செய்திருப்பது தமிழ் பெண்ணை.என் குழந்தைகளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் .ஒரு முறை கோவை மலையாளி சமாஜ விழாவில் நான் இவ்வாறு சொன்னேன் . ‘ ‘மலையாளம் என் தாய் மொழி.தமிழ் என் சேய்களின் மொழி .எனக்கு என் குழந்தைகளே மேலும் முக்கியம். ‘ ‘

மலையாளத்திலும் அதிகமாக எழுதிவருவதனால் இப்படிப்பட்ட சங்கடங்கள் அதிகமாகவே எழுகின்றன.சமீபத்திய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. சொல் புதிது சார்பில் நாங்கள் குற்றாலத்தில் தமிழ் மலையாளக் கவிஞர்களின் சந்திப்புகள் சில ஏற்பாடு செய்தோம் . அதைப்பற்றி மலையாளக் கவிஞர்கள் சிலர் அங்கு பாராட்டி எழுதினார்கள் .மலையாளக் கவிதையின் பெரும்பகுதி இப்போதும் பாடலாகவோ சொற்பொழிவாகவோதான் இருக்கிறது.தமிழ் கவிதையின் செறிவும் மெளனமும் ஒரு முக்கியமான வழிகாட்டல் என்று எழுதினார்கள் . இது பரவலாக மலையாள அகங்காரத்தை புண்படுத்தியது .மலையாளிகள் இந்தியாவில் வங்காளிகளை விட்டால் அவர்களே கலை கலாச்சாரம் எல்லாவற்றிலும் மேல் என்று எண்ணுகின்றவர்கள் .தமிழர்கள் குறித்த அவர்கள் மனப் பிம்பம் இங்குள்ள செல்வியையும் அங்கு பிழைப்புக்கு போகும் ஏழை த்தமிழ் மக்களையும் அடிப்படையாகக் கொண்டது. தொடர்ந்து மலையாள கவிதை குறித்தும் சிறுகதை குறித்தும் தமிழுடன் ஒப்பிட்டு நான் சில கருத்துக்களை சொன்னேன்.

இதை ஒட்டி நடந்த விவாதங்களில் பாஸ்கரன் என்ற ஓவியர் அவர் வரையும் கோட்டோவியத் தொடரில் விஷமத்தனமாக ஒரு சில வரிகள் எழுதியிருந்தார் .ஷொர்ணூரில் ரயில் தண்டவாளம் போடும் தமிழ்த் தொழிலாளர்களின் அறியாமை குறித்து எழுதி மலையாளக் கவிஞர்கள் தமிழ் கலாச்சாரத்தைக் காண குற்றாலத்துக்கல்ல ,ஷொர்ணூருக்கு போனால் போதும் என்று சொல்லியிீருந்தார்.அதற்கு நான் மிகக் கடுமையாக எதிர் வினையாற்றியிருந்தேன். கேரளத்தில் தமிழர்கள் செய்வதைத்தான் மலையாளிகள் வளைகுடா நாடுகளில் செய்கிறார்கள் .நாணயமாற்று விகிதமா கலாச்சாரத்தின் அடையாளம் என்று கேட்டிருந்தேன்.தமிழர்கள் உலகம் முழுக்க உயர்மட்ட விஞ்ஞானிகளாகவும் உள்ளனர்.உலகெங்கும் போய் சாயாக்கடை போட்டதுதானே மலையாளியின் சாதனை என்று எழுதியிருந்தேன். இதைப் பாற்றி மாதவன் குட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிலும் எழுதியிருந்தார் .

இச்சமயத்தில் தொடர்ந்து நான் எதிர்கொண்ட வினா ‘ நீ மலையாளியா தமிழனா ? ‘ என்பதே .என் கோபம் தமிழனாக என்னை நான் அடையாளம் காண்பதனால்தான் என்றார்கள் .இம்மாதம் கூட பனச்சி என்ற கட்டுரையாளர் மலையாளத்தில் என்னை ஒரு மூடத் தமிழன் என்று நிறுவ முயன்றுள்ளார். முன்பு இங்கு அக்னி புத்திரன் போன்ற பலர் என்னை மலையாளத்தான் என்று முத்திரை குத்த முயன்றுள்ளனர்.அப்படி ஒரு அடையாளத்தை நான் சுமந்தே ஆகவேண்டுமா ?நான் இரு மொழியையும் நன்கறிந்தவன்.இரு மொழியிலும் இலக்கியப் பங்களிப்பவன் .என் கலாச்சாரத்தின் ஊற்றுமுகங்களாக இரண்டுமே உள்ளன. எனக்கு இந்த நிமிடம் வரை எந்த அடையாளச் சிக்கலும் இல்லை.

என் கலாச்சாரத்தின் உடனடியான பின்புலம் குமரிமாவட்டம் .அடுத்த பின்புலம் கேரளமும் தமிழ் நாடும்.அடுத்த பின்புலம் இந்தியா.உலகமே என் பின்புலமாகும் .ஒன்று இன்னொன்றுக்குள் அடக்கம் .ஒன்று இன்னொன்றிலிருந்து முளைக்கின்றது.ஒன்று இன்றி இன்னொன்று இல்லை.நாராயண குருவின் தொடர்ச்சியை என்னுள் எப்படி உணர்கிறேனோ அப்படி தல்ஸ்தோயின் தொடர்ச்சியையும் உணர்கிறேன். மனிதக் கலாச்சாரம் ,கேரள கலாச்சாரம் தமிழ் கலாசாரம் ,குமரிமாவட்ட கலாச்சாரம் என்பவற்றுக்குள் எந்த முரண்பாடும் என்னளவில் இல்லை.

888888888888888

எந்த நிறுவனத்திலும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை .அதற்கு பொருள் எனக்கு செயல்பாடுகளிலேயே நம்பிக்கை இல்லை என்றல்ல.எந்த நிறுவனத்துடனும் எவ்வகையிலும் ஒத்துழைக்காமல் நான் எப்படி இஅயங்க முடியும் ?நான் சொன்னதற்கு ஒரே பொருள்தான் எந்த நிறுவனமும் தரும் விடைகளை ,தீர்வுகளை நான் ஏற்று செயல்படமுடியாது என் தேடலை நானே நிகழ்த்துவேன் என்பதே. கொள்கை என்றோ மாற்றிகொள்ளவே கூடாத நம்பிக்கை என்றோ கூட எதையும் நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

சிற்றிதழ்களை பொறுத்தவரை தமிழில் வேறு வழி இல்லை.ஓர் இலக்கிய தத்துவக் கட்டுரையை ,ஓரு சோதனைக் கதையை படிக்க எழுத தமிழில் வேறு என்ன வழி உள்ளது ?சுப மங்களா ,இந்தியா டுடே போன்ற நடுவாந்தர இதழ்கள் வழியாகவே நான் அதிகம் எழுதியிருக்கிறேன்.[இப்பொது அதற்கும் வழி இல்லை ] ஆயினும் நம் சூழலில் சிற்றிதழ்கள் கண்டிப்பாக தேவை.

அதேசமயம் சிற்றிதழ் இயக்கத்தை புனிதமாக பார்க்கும் பார்வை எனக்கு இல்லை .அதாவது இப்போது இல்லை.சிற்றிதழ்களின் பலவீனங்கள் பல .அனைத்துக்கும் மூல காரணம் போதிய வாசகர்கள் இல்லாமையே .இலக்கிய மதிப்பீடுகளை அடிபடையில் வாசகன் தீர்மானிக்க வேண்டும்.வாசகன் இல்லாத நிலையில் குழு அரசியல் ,தனிநபர் நட்புகள் , குரோதங்கள் போன்றவை மேலோங்குகின்றன.அவை [தற்காலிகமாகவேனும் ] மதிப்பீடுகளை தீர்மானிப்பவையாக ஆகின்றன.வெகு சில சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கே உண்மையில் வாசகன் என்று சிலர் உண்டு என்பது ரகசியமல்ல .அவர்கள் மீது சிற்றிதழின் மற்ற எழுத்தாளர்களின் கோபமும் ஆங்காரமும் பாய்ந்தபடியே உள்ளது.விஷ்ணுபுரத்துக்கு பெரிய வணிக இதழ்கள் கவனம் தந்திருக்காவிடில் அந்த நாவலே புறக்கணிக்கப் பட்டிருக்கும் .அதைப் பற்றி நம் சிற்றிதழ் சூழலில் பொருட்படுத்தும் தகுதி உடைய ஒரே ஒரு விமரிசனம் கூட வரவில்லை.

சிற்றிதழ் என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் .பெரிய இதழின் ஆசிரியராக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் .ஒரு பெரிய இதழ் என்பது சிக்கலான ஓர் நிர்வாக அமைப்பின் வெளிப்பாடு என்பதையும் அங்கு எதைச் செய்ய வேண்டுமானாலும் கண்ணுக்கு தெரிந்த தெரியாத பல்வேறு சக்திகளிடம் போராடியே செய்ய முடியும் என்றும் அறிந்திருப்பீர்கள் .அதாவது எந்த நகர்வும் ஒரு சமரசம் மூலமே அங்கு சாத்தியம். ஆகவே தான் இந்திய டுடே தினமணி போன்ற இதழ்களில் உங்கள் பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கது என்று கருதுகிறேன். இவற்றில் ஒரு புதிய அடி எடுத்து வைப்பதற்கு பின்னால் யாரோ சிலரின் கடுமையான முய்ற்சி உள்ளது. இது எல்லா சூழலிலும் சாத்தியமல்ல .எதிர்பார்க்குமளவு சாத்தியமும் அல்ல.ஆகவேதான் சிற்றிதழ் என்ற வடிவம் தேவையாகிறது. அது நிர்வாக அமைப்பின் பாரம் இல்லாதது. பொருளாதார கட்டாயங்கள் இல்லாதது .

ஓர் உதாரணம் சொல்கிறேன்.பின் நவீனத்துவம் குறித்து மிக மிக எளிமையான ஓர் அறிமுகக் கட்டுரையை நான் தினமணி யில் எழுதினேன். இன்று தினமணிதவிர வேறு எதிலும் அதை எழுத முடியாது. தினமணி வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது புரியவில்லை என்றார்கள் .காரணம் அதற்காக சிறிய சிரமங்களை எடுக்கக் கூட அதன் வாசகர்கள் தயாராக இல்லை .தொடர்ந்து அம்மாதிரி கட்டுரைகளை போட அவர்கள் விரும்பவில்லை .என்ன செய்யலாம் ? பின் நவீனத்துவம் குறித்து தமிழில் எதுவுமே வர வேண்டாம் என்று விட்டு விடலாமா ?சிற்றிதழ் என்ற வடிவம் உலகம் முழுக்க உள்ளது . வாரம் தரமான 200 பக்கங்கள் அச்சாகும் மலையாளத்தில் கூட உள்ளது. ஆம் வேறு வழி இல்லை .

சிற்றிதழ்கள் வளர்ந்துள்ள்னவா ? ஆம் என்று சொல்ல தயங்குகிறேன். பின் தங்கி விட்டனவா ? அதுவும் சரியல்ல.தன் வரலாற்று தேவையை தட்டுதடுமாறி நிறைவேற்றி வருகின்றன அவ்வளவுதான்.சிற்றிதழ்களின் உண்மையான பிரச்சினை உண்மையான எதிர் வினை இல்லை என்பதே .யார் படிக்கிறார்கள் ,என்ன கருதுகிறார்கள் என்பது புகை மூட்டமாகவே உள்ளது.எதிர்வினை இருந்தால் பல சிற்றிதழ்களின் மொழி இப்படி அபத்தமான குளறுபடிகளுடன் இருந்திருக்காது.தமிழ் சூழலின் தேவையுடன் நேரடி தொடர்பு இல்லாமல் மேல்நாட்டு இறக்குமதியாக கொள்கைகளையும் வடிவங்களையும் முன்வைப்பது,தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பது போன்ற போக்குகளும் இருக்காது. ஆனால் அதற்கு யாரை குறை சொல்வது .பொதுவாக தமிழ் மக்களுக்கு கேளிக்கையன்றி வேறு ஈடுபாடு இல்லாத நிலையில் வேறு என்னதான் செய்ய முடியும்.

8888888888888

தங்கள் கேள்விகள் என்னை பற்றி நானே சற்று யோசிக்க வைத்தன .நன்றி

.

ஜெயமோகன்

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்