This entry is in the series 20090731_Issue

நட்சத்திரவாசி


வீட்டின் மேலிருந்த
ஒரு ஓடு பிளந்திருக்கிறது
இடைவெளியில் சிக்கிக்
கொண்டது வானம்
—
மீனவன்
மீன் பிடிப்பதற்க்காக
வலையை வீசுகிறான்
வலைக்கும்
ஆழத்துக்கும்
இடையில் மீனொன்று
நீந்திச் செல்லுகிறது
—
விமான பயணம்
சுகமானது
சுராஸ்யமானதும் கூட
என்றாலும்
எல்லோரையும்
போலத் தான்
பயணம் செய்கிறது
அச்சம்.
—
நீ
உரத்துச் சொன்னாலும்
மறுத்துச் சொன்னாலும்
சொல் பட்டு
கலைவதில்லை
மேகம்.
—
நீயொரு
நட்சத்ரவாசி
நட்சத்திரங்களுக்கிடையிலல்லாமல்
என் கவிதையில்
வாசம் செய்ய
உனை தூண்டியது எது?
—
வெளிச்சத்தில் உண்டு
ஆயிரம் தீர்க்க ரேகைகள்
என்பதை போன்றதா
உன் ஒரு துளி நிலவு
—
உதிர்ந்து விழுந்த போது
வெளிச்சம் தீய்ந்தது
மரணம் இல்லை என
உரத்துச் சொல்
—
வீடு பற்றிய கனவு
எனக்கும் உண்டு
சிறிதோ
பெரிதோ
ரோட்டோரமோ
துரமோ
நல்லதாய்
நாலு பேர் மெச்சுவதாய்
இருக்க வேண்டும்
கனவிலாவது
வந்து தொலைய
மாட்டேங்குது
அந்த வீடு
—
விண்முட்ட நின்ற
பெருமரத்தின்
கிளைகளிடையே
சிக்கிய
பெருந்துயரோ
நிலா.
—
அமர்ந்து இருப்பதிலும்
தியானம் இருக்க்கிறது
அடிக்கடி கண்களை
மட்டும் சிமிட்டி
எனது யோசனையை
தாறுமாறக்குவதில்
உனக்கேனோ
பெருமை?
—
தூர தூரமாய் இருக்கும்
மலைகள் எனது வெளியை
இல்லாமல் ஆக்கின
காது கொடுத்தால்
நீங்களும் கேட்கலாம்
வானுக்கும் உண்டு
ஆயிரம் புகார்கள்
—
mujeebu2000@yahoo.co.in

Series Navigation