ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

மன்சூர் ஹல்லாஜ்



நண்பர் ஹெச்.ஜி.ரசூல் தனது கவிதைகளுக்காக மதவாதிகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தவர். உயிர்மையில் எழுதிய கட்டுரைக்காக ஜமாத் அவரை தள்ளி வைத்து விட்டது. இது போன்ற எந்த செயல்களாலும் எழுத்தாளனின் உறுதி கொண்ட நெஞ்சை நொறுக்கி விட முடியாது என்பதை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் சரித்திரம் காட்டிக் கொண்டிருக்கிறது.

கலிலியோவை மதம் என்ன பாடு படுத்தியது. சூரியனை பூமி சுற்றுகிறது என்கிற உண்மையை சொன்ன அவனை முடக்கிப் போட்ட மதம் கிட்டதட்ட மூன்று நூற்றாண்டுகள் கழித்து 1990களின் மத்தியில் குற்றமற்றவர் என்று அறிவித்ததுகொஞ்சம் கூட வெட்கப்படாமல். பார்க்கும் திறனை இழந்து மனம் நொடிந்து தடவி தடவி தன் முதுமையை சுமந்தபடி புழுங்கிச் செத்த கலிலியோவிற்கு ஞாயம் கிடைத்த அவலம் இதுதான்.வல்லான் வகுத்ததே வாய்க்கால். வல்லான் தனக்கு சாதகமாக தன் தேவைகளுக்கு ஏற்ப தான் வாய்க்காலை வகுத்துக் கொள்வான். அந்த வாய்க்காலை வெட்ட குறைந்த கூலியையோ அல்லது கூலியையே கொடுக்காமல் மிரட்டியோ அந்த வாய்க்காலின் சிறுபயன் கூட கிடைத்து விடாதபடிக்கு தன் பக்கமாய், அவன் ஒடுக்கி வைத்திருக்கும் மக்களைக் கொண்டே சாதித்துக் கொள்வான். கிராமத்தின் மூலையில் இருக்கும் சாதிய வல்லரசாக இருந்தாலும் உலகத்தின் உயர்தர அமெரிக்க வல்லரசாக இருந்தாலும் இதுதான் நடக்கும். இதனால்தான் நாம் ஒருபோதும் வல்லரசு என்கிற கொள்கையை ஒப்புக் கொள்வதில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கனவுகண்டு சொன்னபோது நமக்கு அது கசக்கிறது.நல்லரசாக நாம் இருக்க முயல வேண்டும்.

துயரங்களால் துரத்தப்படுபவர்களுக்கு நாம் இளைப்பாறலை தருகிறவர்களாக இருக்க வேண்டும்.கருத்து சுதந்திரத்திற்கு முழுமரியாதை கொடுக்கும் அற்புத நிலமாக நாம் இருக்க வேண்டும்.அதைவிடுத்து இப்படிப்பட்ட வன்முறைகளை நாம் அனுமதிக்க கூடாது. இந்த வன்முறைகளை நாம் முற்றிலும் நமது முழுசக்தி கொண்டு எதிர்ப்போம்.
கவிஞர் சுகன்,செளந்திரசுகன் திங்கள் இலக்கிய இதழ் செப்டம்பர் 2007

கவிஞர் எச்.ஜி.ரசூலின் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற கட்டுரை ஒரு ஆய்வரங்கில் படிக்கப்பட்டு உயிர்மை இதழில் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரைக்காக அவரும் அவரது குடும்பத்தினரும் ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் முன் வைத்த வாதங்களின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரையை ரசூல் வடிவமைத்துள்ளார். இதற்கு தன்னிலை விளக்கமான ரசூலின் விளக்கத்தை பரிசீலிக்காமல் ஊர்விலக்கம் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு தனிநபருக்கான வாழ்வுரிமையை இந்த செயல் மறுப்பதாக உள்ளது.ஜனநாயகரீதியாக மற்றுக்கருத்துக்களை கேட்கவும் விவாதிக்கவும் நிலபிரபுத்துவ,முதலாளித்துவ சமூகத்தில் இடமில்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இந்துஅடிப்படைவாதம் எவ்வளவு தவறானதோ அதே அளவு இஸ்லாமிய அடிப்படைவாதமும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்,இன்றைய சூழலில் இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை ஆகியவைகளை கணக்கில் கொண்டு ரசூலின் மீது ஊர்விலக்க நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய உங்கள் நூலகம் கேட்டுக் கொள்கிறது.
உங்கள்நூலகம் இருமாத இதழ் தலையங்கம். செப்டம்பர் – அக்டோபர் 2007


mansurumma@yahoo.co.in

Series Navigation