ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

மு இராமனாதன்


ஹாங்காங்கில் ஸார்ஸ் (SARS-Severe Acute Respiratory Syndrome) என்கிற இருபத்தியோராம் நூற்றாண்டின் வைரஸ் தாக்குதல் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோயின் சாம்பல்துகள் படிந்த நாட்களில் ஹாங்காங்கின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. நோயாளிகளின் எண்ணிக்கை பரபரப்பாகப் பேசப்படுகிறது. நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை அச்சுத்தாள்களில் கசிகிறது. சந்தேகமும் அச்சமும் மரணமும் பீதியும் புள்ளிவிவரக்கணக்குகளாக உலக நாக்குகளில் புரளும்வேளையில், இவற்றிற்கு அப்பால் சில விஷயங்களைக் காண்பதும் சாத்தியம். உதாரணமாக, ஒரு நெருக்கடியில் ஒரு அரசாங்கமும், நிர்வாக எந்திரமும், வல்லுநர்களும், மக்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது அந்த தேசத்தின் போக்கை நிர்ணயிக்கும் என்று சொல்கிறார்கள். முற்றிலும் எதிர்பாராத இந்தச்சூழலை ஹாங்காங் எங்ஙனம் எதிர் கொண்டது ?

மார்ச் மாதத் துவக்கத்தில் துண்டுச் செய்தியாய் நுழைந்த Atypical Pneumonia என்கிற ஸார்ஸ், மார்ச் இரண்டாம் வாரத்தில் பத்திகளை விழுங்கி வளர்ந்தது. பொது மருத்துவமனை ஒன்றில் ‘அசாதாரண நிமோனியா ‘ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் தாதியர்களும் பணியாளர்களும் தொடர்ந்து இந்த நோயால் பாதிக்கப் பட்டடனர். இவர்களிடமிருந்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நோய் தொற்றியது. மார்ச் மூன்றாம் வாரத்தில் ‘அமாய் தோட்டம் ‘ என்கிற குடியிருப்பில் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 15 கட்டிடங்கள்; ஒவ்வொன்றிலும் 33 தளங்கள்; தளத்திற்கு 8 வீடுகள். இந்தக் குடியிருப்பில் மட்டும் 321 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், நாற்பது சதவீதத்தினர் Block E என்கிற கட்டிடத்தைச் சேர்ந்தவர்கள்.

விரைந்து விரைந்து அலுவலகம் சென்று, விரைந்து விரைந்து வீடு திரும்புகிற மக்களைக் கொண்ட ஹாங்காங்கில், நெடிந்துயர்ந்த கட்டிடங்களின் நடுவே சுழல்கிற காற்றில் பயம் கலந்தது. எழுபது லட்சம் மக்களின் வீட்டு முன்னறைகளில் தயக்கமும் கிலியும் வந்து உட்கார்ந்து கொண்டன. தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் முகமூடிகளுக்குமேல் சுழன்றன கண்கள். சுரங்க ரயிலில், பேருந்துகளில், நடை பாதைகளில், அங்காடிகளில் எதிர்ப்பட்ட எல்லோர் முகத்திலும் சந்தேகம் தூறிக்கொண்டிருந்தது.

ஏப்ரல் துவக்கத்தில் உலக சுகாதார அமைப்பு, பயணிகள் ஹாங்காங்கைத் தவிர்ப்பது நலம் என்று அறிவுரை வழங்கியது (http://www.who.org). விமானப் போக்குவரத்து, ஓட்டல்கள், உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள், பொழுது போக்கு மையங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டன. நாளது(9/5/03) வரை பாதிக்கப்பட்ட 1667 பேரில் குணம் அடைந்தோர் 1015 பேர். 210 பேர் நோயோடு போராடித் தோற்றுப் போனார்கள். ஏப்ரல் இறுதியில் உலக சுகாதார அமைப்பு, ஹாங்காங்கில் ஸார்ஸின் பாதிப்பு உச்சத்தை எட்டி விட்டது என்று சொல்லியிருக்கிறது. இனி இறங்குமுகம் என்று பொருள். பிரதி தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-60 என்றிருந்த நிலை மாறி ஓரிலக்க எண்ணாகி இருக்கிறது. எல்லாம் சீராகிவிட்டது என்று சமாதானம் அடைய முடியாவிட்டாலும், வெளிச்சம் தெரிகிறது.

மனிதகுல வரலாற்றிலேயே புதிதான இந்தப் பிரச்சனையை ஹாங்காங் அரசு எப்படி அணுகியது ? எல்லாம் இயல்பாக இருக்கிறது என்பதான தோற்றத்தை ஏற்படுத்த அரசு துவக்கத்தில் முயற்சி செய்தது என்று தோன்றுகிறது. ஆனால் பிரச்சனையின் தீவிரம் புரிந்ததும் எந்தத் தயக்கமும் இன்றித் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக, மார்ச் மூன்றாம் வாரத்தில், பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்ற கல்வித் துறைச் செயலர், அதற்கு அடுத்த வாரமே அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டார். சுகாதாரத் துறைச் செயலரும் ஆரம்பத்தில் பெரிய அளவில் நோய் பரவ வாய்ப்பில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தார். ஆனால், ‘அமாய் தோட்ட ‘க் குடியிருப்பில் வசிப்போர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டபோது, அவர்களைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தி, வேறோர் இடத்தில் குடியமர்த்தியது அரசு. மருத்துவத் துறை இயக்குநர் நாள் தோறும் செய்தியாளார்களைச் சந்தித்து, தகவல்கள் தந்தது நம்பிக்கையை வளர்த்தது. சுற்றுச் சூழல் தூய்மை, தனி நபர் சுகாதாரம் போன்றவற்றை அரசு வலியுறுத்துயது; பிரச்சாரம் செய்தது. அரசின் வெளிப்படையான போக்கும், நம்பகத்தன்மையை வளர்க்கும் செய்கைகளும் பொதுவாக கவனிக்கப்பட்டன.

நோயின் வெப்ப அலைகள் விரைந்து பரவிக் கொண்டிருந்தக் காலத்திலும் தொடர்ந்து அந்த உலையின் மையத்தில் உழன்றுப் பணியாற்றியவர்கள் ஹாங்காங்கின் மருத்துவப் பணியாளர்கள். முகமில்லா எதிரியாக நாசிகளில் நுழைந்து நுரையீரலைத் தின்ற இந்நோயில் பாதிக்கப்பட்டோரில் நான்கில் ஒருவர் மருத்துவப் பணியாளர்கள். முகமூடிகள்,கையுறைகள், அங்கிகள், கண்ணாடிகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் ஆரம்பத்தில் போதிய அளவில் இல்லாதிருந்தது ஒரு காரணம் என்கிறார்கள். தாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருந்த போதும் அவர்கள் பணிகளைத் தொடர்ந்தார்கள். நோயாளியின் சுவாசக் குழலில் குழாயைச் செலுத்துகிற intubation என்கிற சிகிச்சையளித்த பணியாளர்களில் சரிபாதிப்பேர் நோயால் பாதிக்கப்பட்டனர் என்றுத் தெரியவருகிறது. ஆயின் இந்தச்சிகிச்சை அளிக்கப்படுவது நிறுத்தப்படவேயில்லை. மகப்பேறு விடுப்பில் இருந்த தாதியர் கூடப் பணிக்கு அழைக்கப்பட்டதும், அவர்களும் இந்தச் சூழலிலும் வேலைக்குத் திரும்பியதும் நடந்தது.

நோயை எதிர்த்துப் போராட அரசாங்கமும் மருத்துவத்துறையினரும் தயார். ஆனால் ‘மருத்துவர்களுக்கே அறிமுகமில்லாத இதை எப்படி எதிர்ப்பது ? ‘ என்ற கேள்வி அயர்ச்சிதரும்படி சூழலை நிறைத்திருந்தது. உலக அறிவியல் வல்லுநர்கள் தங்கள் பார்வைகளையும் கருவிகளையும் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், ஹாங்காங்கின் இரண்டுப் பிரதானமான பல்கலைக் கழகங்கள், தமக்குள் இருந்த போட்டி மனப்பான்மையைப் புறந்தள்ளி விட்டு ஆராய்ச்சியில் இறங்கின. ஸ்டாபன் ஸூய் என்கிற பேராசிரியரின் தலைமையில் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்த்ில் ராப் பகலாய் உழைத்த விஞ்ஞானிகள், இந்த வைரஸின் மரபுக் கட்டமைப்பைக் கண்டறிந்தார்கள். இதற்குக் காரணமான கரோனா வைரஸின் டி.என்.ஏ தொடர்ச்சியை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள விஞ்ஞானக் கழகங்களும் ஆராய்ச்சி செய்கின்றன. அவை சீனப் பல்கலைக் கழகத்தைக் காட்டிலும் டி.என்.ஏ தொடர்ச்சி குறித்த ஆராய்ச்சி வசதிகளில் 13 மடங்கு பெரியவை. குறைந்த வசதியில் அதிவேகமாக இந்த கண்டுப்பிடிப்பை சாத்தியமாக்கிய ஹாங்காங் விஞ்ஞானிகளின் உழைப்பு, உலக அளவில் மெச்சப்பட்டது. மரபுக் கட்டமைப்பை அவிழ்ப்பது நோயை அடையாளம் காண்பதற்கும் முறிவைக் கண்டறிவதற்கும் அவசியம் என்பதும், காலதாமதத்தை ஹாங்காங் தாங்காது என்பதும் தமது குழுவிற்கு நன்றாகப் புரிந்திருந்தது என்கிறார் ஸூய்.

பொறியாளர்களும் வல்லுநர்களும் பின் தங்கி விடவில்லை. ‘அமாய் தோட்ட ‘க் குடியிருப்பில் நேர்ந்த பாதிப்பை எட்டு அரசுத் துறைகள் ஆய்வு செய்தன. மலத்தில் இந்த வைரஸ் மணிக்கணக்கில் உயிர் வாழத் தக்கது என்பதும் கழிவு நீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவுதான் நோய் தீவிரமாய்ப் பரவியதற்கு காரணம் என்பதும் அவர்கள் முன் வைத்த முடிவுகள்(http://www.info.gov.hk/dh/ap.htm). இப்போது அந்த அறிக்கையில் விஷயம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

‘சுவாசிப்பதுகூட மரணத்திற்குக் கதவுதிறந்து விடுமோ ‘ என்று அஞ்சப்பட்ட இந்த அசாதாரண நிலைமையில், ஹாங்காங்கின் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டார்கள். முகமூடி அணிவது, தங்களைக் காப்பதற்கு மட்டுமின்றி, பிறருக்காகத் தாங்கள் செய்ய வேண்டிய கண்ணியமான நடவடிக்கை என்றும் உணர்ந்து நடந்துக் கொண்டார்கள். பொதுமக்களும் அரசாங்கப் பணியாளர்களும் கூடி, ஊரைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் வாங்க, South China Morning Post (http://www.scmp.com) என்கிற நாளிதழ் தொடங்கிய ஒரு திட்டத்திற்கு 10 தினங்களில் 15 மில்லியன் ஹாங்காங் டாலர் (ரூபாய் 9 கோடி) குவிந்தது. தங்களது நன்றியறிதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டி காத்திருந்தது போல், பெரிய நிறுவனங்கள் முதல் பள்ளிமாணவர் வரை நன்கொடை வழங்கினர். திட்டம் அறிவிக்கப் பட்டவுடன் உதவ முன்வந்த அமைப்புகளில், ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகமும் இருந்தது. கழகத் தலைவர் எஸ்.பிரசாத் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார்: ‘செப்டம்பர் 11 சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் எப்படி நாயகர்களாகக் கொண்டாடப் படுகிறார்களோ, அது போல ஸார்ஸுக்கு எதிரான இந்த யுத்தத்தில் முன்னணியில் நின்று போராடும் மருத்துவப் பணியாளர்கள்தாம் நாயகர்கள். இந்த எளிய உதவி எங்கள் நன்றியின் வெளிப்பாடு. ‘ நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மிகுதியும் உள் நாட்டுச் சீனர்கள். இது வரை இந்தியர்கள் யாரும் பாதிக்கப் படவில்லை. அதனால்தானோ என்னவோ, நாளிதழ் தனது தலையங்கத்தில், ‘தமிழ் பண்பாட்டுக் கழகம் என்கிற குடையின் கீழ், 250 தமிழ்க் குடும்பங்கள் சீன மக்களோடு இணைந்து நிற்கின்றன ‘ என்று எழுதியது.

யூன் கின் க்ஷிங் என்கிற இளைஞன் ஸார்ஸினால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து விட்டான். ஆனால் நோயின் கொடுங்கரங்களுக்கு அவனது பெற்றோர் இருவரும் பலியானார்கள். மரணப்படுக்கையிலும் பெற்றோருக்கு அருகிருக்க அவன் அனுமதிக்கப் படவில்லை. இந்தத் துக்கத்திற்கு அவனது எதிர்வினை எப்படி இருந்தது ? ‘மருத்துவமனையில் மருத்துவர்களும் தாதியர்களும் ஆற்றிய தொண்டை என்னால் மறக்க முடியாது. நான் சிகிச்சை பெற்றுவந்த ஸார்ஸ் வார்டில் பணிபுரியும் ஒரு முதிய துப்புரவுத்தொழிலாளி எனக்கு ஆதர்சமாகி இருக்கிறாள். நான் அங்கு இருந்தபோது, ‘தொடர்ந்து வார்டுக்கு வந்து வேலை செய்யறதுமூலம்தான், என் கூட வேலை செய்றவங்களுக்கு என்னாலானதைச் செய்யமுடியும் ‘ என்று அவள் சொன்னாள் ‘ என்கிறான் யூன். பெற்றோரை இழந்து நோயின் கொடுமை அனுபவித்துத் தப்பிவெளிவந்த யூன் இப்போது என்ன செய்யப் போகிறான் ? நோயினால் பாதிக்கப்பட்டு குணமானவர்களைப் பற்றியப் புள்ளிவிவரக் கணக்கில் ஒரு புள்ளியாக மறைவானா ? ‘நான் மருத்துவமனையில் பணியாற்ற விழைகிறேன். ஸார்ஸ் நோயாளிகளுக்கு நான் செய்யக்கூடிய உதவி இது ‘, என்கிறான் இந்த ஹாங்காங் இளைஞன்.

*******

ramnath@netvigator.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்