ஹனிஃபாவின் “அழைக்கின்றார் அண்ணா’

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

மலர் மன்னன்


நாகூர் ஹனிஃபா அவர்ளைப் பற்றி அப்துல் கையூம் எழுதிய கட்டுரை பழைய நினைவுகளையெல்லாம் கிளறிப் போட்டுவிட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தின் பின்புறம், ஆல மரத்தடியில் மேடை போட்டு, நாகூர் ஹனிஃபா அவர்களைப் பாடச் செய்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. மணிக் கணக்கில் சலிக்காமல் பாடி மகிழ்விப்பவர், அவர்.

அந்த நாட்களில் ஹனிஃபா தி.மு.க. மாநாடுகளில் தவறாமல் பாடும் பாடல் “அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா’ என்பது. இதனைக் கட்டுரை ஆசிரியர் கையூம் மறந்து விடாமல் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

சில சமயம் அண்ணா அவர்கள் மேடைக்கு வரும் நேரம் பார்த்து ஹனிஃபா அவர்களின் வெண்கலக் குரல் “அழைக்கின்றார் அண்ணா’ என்கிற பாடலைத் தற்செயலாகவோ குறிப்பறிந்தோ ஒலிக்கத் தொடங்கும். உடனே கூட்டத்தில் உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்தோடத் தொடங்கிவிடும்.

மேடையில் அண்ணா தோன்றி இளநகை புரிகையில் கரவொலிகள் ஹனிஃபா அவர்களின் குரலுடன் போட்டியிட்டுத் தோற்கும்.

தி.மு.கவின் தொடக்க காலத்தில் அதனை அசுர வேகத்தில் பரவச் செய்த பெருமையில் ஹனிஃபா அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. அண்ணாவை அவரது அபிமானிகள் புளகாங்கிதம் அடையச் செய்யும் அளவுக்குக் கொண்டாடியதும் ஹனிஃபா அவர்களின் குரல்தான்.

அண்ணாவை அன்றைய தி.மு.க. தொண்டன் தனது நாடி நரம்புகளில் எல்லாம் ரத்த ஓட்டம் போல ஓடச் செய்துகொண்டதற்கு ஒரு வலிமையான உந்து சக்தியாக இருந்தது ஹனிஃபாவின் குரலுந்தான்.

தான்பட்ட நன்றிக் கடனாக தி.மு. க. ஹனிஃபா அவர்களுக்குத் தமிழக சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் பதவியை ஒருமுறை வழங்கியதாக ஞாபகம். ஆனால் அதற்கு மேலும் உயர்ந்த பதவிகளைத் தி. மு.க. விடமிருந்து பெறுவதற்கான உரிமை அவருக்கு உண்டு.

பிற்காலத்தில்தான் ஹனிஃபா தாம் சார்ந்த சமயப் பிரசாரப் பாடல்களைப் பாடலானார். பகுத்தறிவாதிகளைவிடச் சமயச் சார்பினர் அவருக்குக் கூடுதலான ஆதரவு அளித்தது ஒருவகையில் புரிந்துகொள்ளத் தக்கதுதான்.

ஹினிஃபா இன்னமும் தி.மு.க.காரராகவே அறியப்படுகிறார். ஒரு முகமதிய அல்லது கிறிஸ்தவ சமயப் பிரசாரப் பாடகரோ பேச்சாளரோ திராவிட இயக்கங்களில் நீடிக்கலாம். ஹிந்து சமயத்தவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்காது. இது அவ்விடத்து சம்பிரதாயம்.
நாத்திகம், பகுத்தறிவு என்கிற வாதம் எல்லாம் ஹிந்துக்களை இகழத்தான் என்று இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தலின் போது அளிக்கப்படும் வாக்குகளுக்காக மட்டுமே தி.மு.க.வுக்கு ஹிந்துக்கள் தேவை. அதே போல ஹிந்துக்களின் கோயில்களும் அவற்றின் வருமானத்திற்காக மட்டுமே அதற்குத் தேவை.

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்