வெறுமை

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

ஈழநாதன்


எதையும் கொள்ளக் கூடியது
வெறுமையென்றறியா ஒருவன்,
எதுவுமே இல்லாதது
வெறுமையென்று
சொல்லிப் போனான்.

அவசர அவசரமாக
எதையாவது கொண்டு
நிரப்பிவிடப்பட்ட
மண்டையோடுகளுக்கு
புரிவதேயில்லை.
வெறுமையின் அருமை;

எதையாவது கொண்டு
நிரப்பி விடப்பட்ட
பாத்திரத்தை விட
விலை மதிப்பில்லாதது.
எதையும் ஏற்கும்
வெற்றுப் பாத்திரம்.

ஒருவரின் இல்லாமையை,
சூழும்
வெறுமைதான்
சுட்டிக் காட்டுகிறது.

தனக்குப் பின்
வெற்றிடமொன்றை
விட்டுச் செல்லவே
எல்லோரும் விரும்புகிறார்கள்.

எதுவுமேயற்ற
மோனப்
பெருவெளியில்தான்
ஞானம் கிட்டுகிறது.

ஆயிரம் எழுத்தை விட
வெற்றுத் தாள்
ஓராயிரம் கருத்துகளைச்
சொல்லிவிடக் கூடும்.

மெளனத்தின் கனத்தை
முழுதாக நிரப்பிவிட
வார்த்தைகளால் முடிவதில்லை.

இத்தனைக்கும்,
ஏனோ
நாம்
வெறுமையை
விரும்புவதேயில்லை!

ஈழநாதன்
—-
eelanathan@hotmail.com

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்