எங்கெங்கும்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நாகூர் ரூமி


மலைமுகட்டிலிருந்து கீழிறங்குகிறது
ஒளி ஆரஞ்சு —
முக்காடிட்ட உன் முகம்.

சிமிட்டிக்கொண்டே இருக்கின்றன
நட்சத்திரங்கள் —
உன் கண்கள்.

நூல் நூலாக இறங்குகிறது
மழை —
உன் பார்வை.

வைட்டமின் ‘டி ‘ அருள்கிறது
மாலையின் மஞ்சள் வெயில் —
உன் சிரிப்பு.

விரதம் முடிக்க
வயிறு நிரம்புகிறது —
உன் குரல்.

எழுந்து நின்று
நீ தரும் தேனீர் —
எனக்கான நோபல் பரிசு.

இடுப்பு தெரியாமல்
நீ உடுத்தும் சேலை —
புதுக்கவிதை.

கழுத்துவரை நீ மறைக்கும்
உன் உடம்பு —
என் ரகசியம்.

வேண்டாம் எனத் தள்ளும்
உன் கைகள் —
எனக்கான அழைப்பிதழ்.

வெதுவெதுப்பான நீரில்
குளியல் —
உன் அணைப்பு.

இப்படியும் அப்படியும் அலகை
தரையில் தேய்க்கிறது கோழி —
உன் முத்தம்.

எத்தனை முறை முயன்றாலும்
விடை தெரியாத புதிர் —
உன் மெளனம்.
—-
ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி