விவேகனுக்கு எனது பதில்

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


சிந்திக்க மறந்து அல்லது சிந்திக்க மறுத்து விட்ட நிலையில் விவேகன் “அரிதார அரசியல்” கட்டுரையை படித்ததனாலேயே சிரித்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பொதுவாக தட்டையான வாசிக்கும் தன்மையுடையவர்களாகவே இருப்பர். தமிழகத்திற்கு திராவிட இயக்கம் எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றாலும் அது சில குறைபாடுகளுடன் கூடியதாக இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் முன்வைத்தே இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. உதாரணமாக தலித் மக்கள் ஆதிக்க சாதிகளின் பிடியில் இருந்து விடுதலை பெறுவதற்கு எந்த வகையிலும் திராவிட சித்தாந்தம் உதவவில்லை. இன்று வரை அவர்கள் விடுதலை பெறவுமில்லை. அதே போல முஸ்லிம்களுக்கு சுதந்திரத்துக்கு முன்னர் கிடைத்த இடஒதுக்கீட்டை கூட திராவிட இயக்கம் கொடுக்கவில்லை. நோன்பு காலங்களில் வந்து திராவிட
இயக்க தலைவர்கள் கஞ்சி குடித்ததோடு சரி. முஸ்லிம்களுக்கு
உருப்படியாக ஒன்றைக் கூட திராவிட இயக்கம் செய்யவில்லை. இ.எம்.ஹனீபாவுக்கு அவர் பாடகர் என்பதாலேயே திராவிட இயக்கம் இடம் கொடுத்ததேயன்றி முஸ்லிம் என்பதற்காக இல்லை.

அதே சமயம் பிற சாதி மக்கள் (அதாவது இந்துக்களில் 95 சதவிகதத்திற்கும் அதிகமான மக்கள்) பார்ப்பனீயத்தின் கொடுங்கரங்களில் பிறப்பின் அடிப்படையில் மறைமுக அடிமைகளாக இருந்ததில் இருந்து அவர்களை மீட்டு அவர்களை தன்மானமுள்ளவர்களாக ஆக்கியதிலும், பார்ப்பனர்களுக்கு சரிநிகர் சமமாக அரசுப் பணிகளில் அவர்களை அமர்த்தியதிலும் திராவிட இயக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. குறிப்பாக பெரியாரின் பங்கு இதில் மிகுதியானது. பெரியாரை வெறுமனே நாத்திகராக
மட்டும் பார்க்காமல் சீர்திருத்தவாதியாகவும் பார்ப்பவர்களுக்கே இந்த எளிய உண்மை விளங்கும். அதனால் தான் பெரியாரை இந்து ஆன்மீகத்தில் ஊறித்திளைத்த பக்திமான்களில் பலர் (பிராமணரல்லாதவர்கள்) சந்தித்து பார்ப்பனீயத்தின் கொடுமையிலிருந்து பெரும்பான்மை இந்துக்களை விடுவிக்க ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

பிறப்பின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி வைத்திருத்தல் தான் ஹிந்து தர்மம் என்றால் அதை தமிழகத்தின் பெரும்பான்மை இந்துக்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற முடிவுக்கு தான் நம்மால் வர இயலும். ஏனெனில் இந்த ஹிந்து தர்மத்தை காக்க புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பரிணாமமான பா.ஜ.க வை தமிழக மக்கள் தீண்டாமை கட்சியாகவே இன்னும் பார்க்கின்றனர். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளில் மதபேதம் பார்க்க கூடாது என்ற ஓர் கோரிக்கையை மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட எல்லோரும் வலியுறுத்தினர். ஏனெனில் சென்ற வருடம் வரை அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கைதிகள் இல்லை. இந்த வருடம் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம் கைதிகளில் உண்மையான விடுதலை நாளின் பட்டியல் இதோ. அரசு எந்தளவுக்கு முஸ்லிம்களை ஏமாற்றுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
அஸ்ரப், இபுராஹீம் : 19-09-09
அப்பாஸ், ரவுப் : 24-09-09
அப்துர் ரஹ்மான் : 01-10-09
ரபிக், பாருக் : 06-10-09
பக்ருதின், சாகுல், யூசுப் : 10-05-10

இவர்களை அரசு விடுவிக்காமல் இருந்தால் கூட அவர்கள் இன்னும் ஒரிரு மாதங்களில் விடுதலையாகி விடுவார்கள் என்பதே நிஜம். “மெய்ப்பொருளை” ஆய்வு செய்ய சொல்கிறான் வள்ளுவன். “பரம்பொருளை” அறிந்து கொள்வதற்கு கூட சிந்திக்கும் திறன் அவசியம். சிந்திக்கும் திறன் இருப்பவர்கள் ஆய்ந்தறிந்து தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில் விவேகன் போல சிரித்துக் கொள்ளலாம்.

pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்