விருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

யமுனா ராஜேந்திரன்


கிராமிய சமூகத்தில் சாதிய முரண்களும் நிலம் சார்ந்த சொத்துடமையும் மிகமுக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. அவர்களது அன்றாட பேச்சுவழக்குகளிலும் உரையாடல்களிலும் சாதியப் பெருமிதம் வெளிப்படும் அளவு வட்டாரச் சொற்களும் வசவுகளும் மிகச் சாதாரணமாக வந்து விழும். வட்டார இலக்கியவாதி கி.ராஜநாராயணனின் படைப்புகளில் இதனை நாம் அனுபவம் கொள்ளமுடியும். மனித உரிமை விவாதங்கள் குறித்த உரையாடல்களும், மதநீக்க, சாதி நீக்க உரையாடல்களும், ஐரோப்பிய நவீனத்துவ சிந்தனையில் விளைந்த தாராளவாத உலகியல் பார்வையின் பார்வையின் விளைவுகளாகும். தனிநபர் உரிமை, தேர்வு, மதச்சார்பற்ற தன்மை போன்ற இந்த நவீனத்துவ சிந்தனைகளை நாம் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் காணமுடியும். விருமாண்டியின் கதையில் இந்த இரண்டு பண்புகளும் ஊடாடியிருப்பைத ஒருவர் உணரமுடியும்.

தன் படம் குறித்த சுயதிருப்தியும் பெருமிதமும் அடிப்படையில் பார்வையாளர்களோடு கீழிறங்கி சமரசம் செய்துகொள்வது என்பதற்கு எதிரான பார்வையாகும். விருமாண்டியில் எவ்வித சமரசமும் அற்று, தமிழ் வெகுஜன சினிமாப் பார்வையாளரைத் தன்னுள் எடுத்தக்கொள்வதற்கு கமல்ஹாஸன் எத்தனப்பட்டிருப்பதையும் ஒருவர் அவதானிக்கமுடியும். இந்த அடிப்படையில்தான் வட்டார இலக்கியவாதி கி.ராஜநாராயணண், நவீன நாவலாசிரியர் சுந்தரராமசாமி போன்ற இருவரும் சேர்ந்து எழுதிய வசனங்கள் மாதிரி விருமாண்டி வசனங்கள் இருக்கின்றன என கமல்ஹாஸனின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் சொன்னபோது, இருவரும் தமது ஆத்மார்த்தமான எழுத்தாளர்கள் என்று சொன்ன கமல்ஹாஸன், தனது விருமாண்டியின் கதை குறித்த மகிழ்ச்சியையும் அப்போது வெளியிட்டிருந்தார்.

விருமாண்டியின் கதை மிகுந்த சமகாலப் பிரக்ஞைகொண்டதொரு கருவாகும். நிலம் விளைவதற்கான நீர் என்பது ஒரு அரசியல் பிரச்சினையாகியதை கர்னாடக தமிழக மாநிலங்கள் இடையிலான காவிரிநதிநீர்ப் பிரச்சினையின் போது நாம் கண்டோம். விருமாண்டி கதையைப் பார்ப்போம். தேனி மாவட்டம் சின்னக்கோளாறுபட்டியைச் சேர்ந்த நீர் வளம் நிறை ந்த பூமியைக் கொண்ட விருமாண்டியிடமிருந்து ( கமல்ஹாஸன்), அந்த நிலத்தை எடுத்துக்கொள்வதென்பது கொத்தாளத்தேவருக்கு (பசுபதி) தீராத வேட்கையாக இருக்கிறது. நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நல்லமநாய்க்கர் நேரடியாகவே அந்த நில்த்ைதை தன்வசப்படுத்த முயல்கிறார். விருமாண்டியோ அந்த நிலத்தைப் பொதுமக்களுக்கு எழுதிவைத்துவிட விருப்பம் வெளியிடுகிறார். தேவர் சாதிப் பெருமிதம் என்பது மட்டுமீறிய வன்முறையோடு பிணைக்கப்பட்டிருப்பதால், கொத்தாளத்தேவர் வஞ்சகமாக வன்முறை வழியில் அந்த நிலத்தைத் தன்வசம் கொணர நினைக்கிறார். அது முடியாத போது மிருகத்தனத்தின் எல்லைக்கும் அவர் செல்லத் தயாராக இருக்கிறார்.

தெலுங்கு மொழி பேசுகிற நல்லமநாயக்கர் ( நெப்போலியன்) கொத்தாளத்தேவரின் தந்தை தவசித்தேவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொள்றுவிட்டு சிறைக்குப் போய்வந்தவர். அவருக்கு இப்போது வீச்சறிவாளின் மீது காதல் இல்லை. கொத்தாளத்தேவருக்கு நல்லமநாயக்கரைப் பழிவாங்க வேண்டும் எனும் எண்ணம் அவனது அடிமனதில் தகித்துக் கொண்டிருக்கிறது. தனது அண்ணன் மகள் அன்னலட்சுமியும் ( அபிராமி) தனது சாதியைச் சேர்ந்த விருமாண்டியும் காதல் வயப்பட்டிருப்பதும் கூட கொத்தாளத் தேவருக்குச் சந்தோசமில்லை. விருமாண்டியை கொத்தாளத்தேவர் வஞ்சகமாகக் கொல்லத் திட்டமிட்டதை அன்னலட்சுமியின் மூலம் அறிகிறான் விருமாண்டி. கொத்தாளத்தேவர் நல்லமநாயக்கனிரின் சாதிசனங்களை வெட்டிக்கொன்றுவிட்டு, விருமாண்டியை அதற்குப் பொறுப்பேற்கச் செய்கிறான். விருமாண்டிக்கும் நல்லமநாயக்கருக்கும் இடையில் பகையை வளர்த்து விருமாண்டியைக் கொன்று தீர்ப்பது அவன் திட்டம். இதை அறிந்து கொள்ளும் அனனலட்சுமியும் விருமாண்டியும கிராமத்துக் கோவிலில் தாலி கட்டிக்கொண்டு, வேற்றூரிலிருக்கும் விருமாண்டியின் உறவினப் பெண்ணொருத்தியின் ( காந்திமதி) வீட்டில் அடைக்கலம் பெற்று வாழவிரும்பி, இருளில் ஊரைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

கொத்தாளத்தேவரின் கொலைவெறி இப்போது வெளிப்படையாகிறது. விருமாண்டி வீட்டில் இல்லாத தருணத்தில் அன்னலட்சுமியைக் கடத்திவரும் கொத்தாளத்தேவர், அவளது தாலியை அறுத்துவிட்டு தனது கையாள் ஒருவனை மறுதாலி கட்டச்சொல்லி அன்னலட்சுமியை பாலியல் பலாத்காரப்படுத்த அவனை ஏவி விடுகிறான். பலாத்காரத்திலிருந்து தப்ப அன்னலட்சமி தற்கொலை செய்து கொள்கிறாள். நல்லமநாயக்கரைக் கொலைசெய்துவிட்டு அந்தப் பழியை விருமாண்டி மீது போடுகிறான் கொத்தாளத்தேவன். வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறபோது குழந்தைகளையும் ஆண்களையும் பெண்களையும் கொன்ற குற்றத்திற்காகவும், கொத்தாளத்தேவரின் உறவினர்கள் இட்டுக்கட்டியபடி அன்னலட்சமியைக் கடத்திச் சென்று கற்பழித்த குற்றத்திற்காகவும், விருமாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. கொத்தாளத் தேவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

படத்தின் கதை கொத்தாளத்தேவரின் பார்வை, விருமாண்டியின் பார்வை என இருவரது பார்வையினூடே நகர்த்தப்படுகிறது. மீள் நோக்காகச் சொல்லப்படும் கதையில் இன்னொரு கிளைக் கதையும் இருக்கிறது. மரணதண்டனைக்கு எதிரான ஒரு மனித உரிமையாளரின் விவரணப்படக் கதை அது. வழக்கறிஞரும் தந்தையுமானவரின் மரணதண்டனை நிறைவேற்றத்தையடுத்து, மரணதண்டனைக்கு எதிரான இயக்கமென்பதை தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துவிட்டவர் (ரோகிணி) அஞ்சலா காத்தமுத்து. மரணதண்டனைக் கைதிகளையும் மனிதஉரிமையாளர்களையும் சிறை அதிகாரிகளையும் பிறகைதிகளையும் சமூகநல ஊழியர்களையும் நேர்முகம் கண்டு மரணதண்டனைக்கு எதிராக ஒரு விவரணப்படத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருக்கிறது. அவரது விவரணப் படக்காட்சியின் தொடக்கமாகவே விருமாண்டி படத்தின் தொடக்கமும் அமைகிறது. நீதிவானும் மன்ித உரிமைப் போராளியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் நேர்முகத்துடன் படம் தொடங்குகிறது. மரணதண்டனைக்கு எதிரான அபிப்பிராயங்களை அவர் முன்வைக்கிறார். திருத்திக்கொள்ளவே முடியாத தவறாக அமைந்துவிடக் கூடிய நிலைமை மரணதண்டனைக்கு என்றுமேயுண்டு. ஐரோப்பிய யூனியன் உள்பட உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளிலும் இதனாலேயே மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் மரணதண்டனை நடைமுறையிலுள்ளது. மரணதண்டனைக் கைதியான விருமாண்டியின் வாழக்கையை மீள்பார்வை செய்வதன் மூலம், மரணதண்டனை எனும் அம்சத்தின் பின்னுள்ள நிஜங்களின் அடிப்படைகள் குறித்த கேள்விகளை அலச முயல்கிறது விருமாண்டி படம்.

அடிப்படையில் வஞ்சகமற்ற குபீர் ஜாலி பிரதர்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த விருமாண்டிக்கு பாட்டியின் அன்பும், நிலம் தரும் வாழ்க்கை உத்திரவாதமும் இருப்பதால் அவன் ஜாலியாகவே திரிகிறான். நண்பர்களையும் கூட்டாளிகளையும் காப்பதற்காகக் கூட்டாளிகள் செய்யும் குற்றங்களையும் கூட தானே பொறப்பேற்பது அவனது இயல்பு. பெண்களின் மீது உயிர் ஜீவிகள் எனும் அளவில் மாறாத அன்பு கொண்டவன் அவன். அதனாலேயே குழந்தைகள் அவனிடம் வாஞ்சையாக இருக்கிறார்கள். அன்னலட்சமியின் சொல்படி கேட்கிற ஆண்மகன் அவன். மனிதர்களின் குற்றங்களை மன்னித்துவிடுதலை அவளிடமிருந்து கற்கிறான் அவன். அவன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு, கற்பழிப்புக் குற்றச்சாட்டுப் போன்றவற்றின் பின்னுள்ள, நிலம் சார்ந்த கிராமிய சாதிய அதிகாரம் சார்ந்த பல்வேறு விடயங்களை படம் நமக்கு விளக் குகிறது. போலீஸ் துறை எனும் அமைப்பின் வன்முறை எவ்வாறாக சாதிய வன்முறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதனைக் கூட கொத்தாளத்தேவரின் வகுப் புத்தோழன் பேயக்காமனுக்கும், கொத்தாளத்தேவருக்கும் இருக்கும் உறவின் அடிப்படையில் படம் நமக்கு விளக்குகிறது.

சண்டியரென அழைக்கப்பெறும் ஒரு அன்பு கொண்ட மனிதனின் தனிமனித வாழ்க்கைச் சோகமாக இப்படம் இருந்துபோதிலும், இன்றைய தமிழகத்தின் மிகமுக்கியமான பிரச்சனைகளை இப்படம் மிக நேரத்தியுடன் அலசுகிறது. சண்டியரெனும் சொல் கூட நையாண்டிப்போலியாகவும் நக்கலாகவுமே எடுத்துக் கொள்ளபடுகிறதேயொழிய, விளைவுகளறியாது அர்த்தமற்று சண்டைகளில் ஈடுபடுபவன் எனும் அர்தத்தில்தான் இடமட்பெறுகிறதேயொழிய அதனைக் கொண்டாடும் தன்மை இப்படத்தில் இல்லை. இப்படம் வன்முறையையும் பாலுறவுசார் காதலையும் அதிகமான காட்சிகளாகக் கொண்டிருக்கிறதுதான். ஆனால் அவை மிகுந்த மேதைமையுடன் படமாக்கப்பட்டுள்ளது. வன்முறையின் குரூர அம்சங்கள்தான் காட்சியாக்கப்பட்டிருக்கிறதேயொழிய, இரத்தம் பீச்சியடிப்தையோ நிதானமாக இரத்தம் மனித உடல்களில் இருந்து பெருகுவதையோ படம் காட்சிகளாகக் கொண்டிருக்கவில்லை. உடலின் மீதும் அவயவங்களின் மீதுமான வக்கிரம் வெறுப்பாக சாதியப் பெருமிதத்துடன், நில அதிகாரத்துடன் ஒருபுறம் பெருகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் மனித உடலின் மீதான தீராத காதலை, மனித உடல்தரும் அற்புதமான சந்தோசத்தைக் காமம் பெருகும் காதல் காட்சிகள் சித்தரிக்கின்றன.

உடல் சின்னாபின்னப்படுத்தப்பட அல்ல, அதன் வழி சந்தோத்தின் உச்சத்தையடையலாம் எனச் சொல்கிறது விருமாண்டி படத்தின் காதல் காட்சிகள். இப்படத்தில் அதிகதிகமான காதல் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. தனது பாட்டியான சுப்புத்தாய் இறந்துவிட்டபோது விருமாண்டி அவள் மீது காட்டும் வெறித்தனமான அன்பையும் அதில் விளையும் கையறுநிலை வசவுகளையும், அதனது உக்கிரத்தையும் ஒருவர் உணரமுடியுமானால், கிராம வன்முறையிலிருந்து தப்பிய தனியிடத்தில் அன்னலட்சுமியோடு அவன் கொள்ளும் கலவியில் விளையும் சாகசத்தையும் ஒருவர் உணரமுடியும். தமிழ் சினிமாவிலேயே ஆண்பெண் இடையிலான உடலுறவுசார் சந்தோசத்தை மிக இயல்பாகவும் அழகாகவும் சித்திரிக்கும் கலைஞன் கமல்ஹாஸன்தான்.

தமிழ்சினிமாவில் மகாநதி தொடக்கம் முத்தக் கலாச்சாரத்தைத் தொடங்கிவிட்டவர் என்கிற ஒழுக்கவாத விமர்சனத்தையும் கமல்ஹாஸன் மீது வைத்திருக்கிறார் பா.கிருஷ்ணசாமி அவர்கள். முத்தம் அன்பு மீதுர வெளிப்படும் ஒரு மனித நடவடிக்கை. உதட்டை இழுத்துக் கடித்துத் தரப்படும் எச்சில் அசிங்கத்துக்கும், மனம் கனிந்து இதழ்களை எடுத்துக்கொள்ளும் பரஸ்பர ஆண்பெண் ஸ்வீகரிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. பாலுறவு பாய்ஸ் படத்தில் சித்தரிக்கப்படும் விதத்துக்கும், மகாநதி தொடங்கி கமல்ஹாஸனின் படங்களில் சித்திரிக்கப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கமல்ஹாஸனின் வன்முறை குறித்த பெரும்பாலுமான படங்கள் வயது வந்தோர்களுக்காக சான் றிதழ்கள் பெற்றவை என்பதும் இந்கு குறிப்பிடத்தக்கது.

மகாநதி, குருதிப்பனல், தேவர்மகன், ஹேராம், விருமாண்டி என அனைத்துப் படங்களுமே இந்திய தமிழக வாழ்வின் வன்முறை குறித்த படங்கள்தான். அரசியல் வன்முறை, சாதிய வன்முறை, மதவன்முறை, பாலியல் வன்முறை என சித்தரித்த இந்தப் படங்கள் அனைத்திலுமே ஆண்பெண் உறவுக்காட்சிகள் அனைத்தும் நெருக்கம் கொண்டதாகவும், இறுகிய உடல்களின் சங்கமத்தில் விளையும் முத்தங்கள் கொண்டதாகவுமே இருந்ததை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். விருமாண்டி படத்தில் ஒரு காட்சி காதலை எப்படிச்சொல்ல வேண்டும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. வன்முறை நிறைந்த கிராமத்திலிருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறும் விருமாண்டியும் அன்னலட்சுமியும் மேற்கொள்ளும் இரவுப் பயணக்காட்சி அது. காட்சி முழுக்கவுமே நீல இரவில் நடக்கிறது. கறுத்த இரவின் நீல வண்ணம் மோகத்தை எழுப்பும் தன்மை கொண்டது. அவர்கள் காட்டு நதியில் நீராடும் காட்சியும் நெருக்கமும், கூடார்த்தமாக வந்துபோகும் கலவிக் காட்சியும் நினைவை விட்டகலா உணர்ச்சி வேகத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சிறையுடைப் பு தொடர்பான இறுதிக் காட்சிகள் உக்கிரமான தமிழ்ச்சினிமா உச்சக்காட்சி எனும் அடிப்படையில அதிவேகக்காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளன. கொடுமைக்காரனின் மீது பழிதீர்க்கப்படவேண்டும் எனும் பார்வையாளனின் வீிருப்பார்வ நிறைவேற்றம் என்பது தவிர்க்கவியலாததாகும். இந்த விருப்பார்வ நிறைவேற்றத்தில் அதிக அளவிலான நாடகீயத் தனமையை எவ்வாறு தவிர்ப்பது என்பதுதான் பிரச்சினையாக இருக்கவேண்டும். அக்காட்சியில் மனிதஉரிமையாளர் தப்பவேண்டும். அவர்வழிதான் சிறை அமைப்பின் குரூரங்களும், அதனுள் நடக்கும் அதிகார துஷ்பிரயோகங்களும் வெளி உலகை எட்டும். அதற்கான நம்பகத்தன்மை கொண்ட ஒரு காட்சியமைப்பையே தேர்ந்து கொள்ள வேண்டும். முற்றிலும் இது சாத்தியமில்லை என்று நிராகரித்துவிடாமல இருக்குமாறு சிறைக் கலவரக் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா வீராவேச கதாநாயக மரபும் காப்பாற்றப்பட்டிருக்கிறது. வில்லன் குரூரமாகச செத்துப் போகிறான். கதாநாயகன் நீதியைக் காப்பாற்றுகிறான். வன்முறை குறித்த, மரணதண்டனை எனும் அமைப்பு குறித்த விசாரணைகளையும் கதாநாயகன் இறுதியில் எழுப்புகிறான். சாதிய வன்முறை நிறைந்த தமிழகச் சூழலில் அதற்கெதிரான குரலாக, விருமாண்டியின் குரல் கேட்கிறது. மறத்தலும் மன்னித்தலும் கொண்டு மனிதனாக வாழ முயல்வதே வன்முறைக்கான நடைமுறைத் தீர்வு என்பதனையும் படம் உரத்துச் சொல்கிறது. அகில இந்தியாவிலும் இத்தகைய பொறுப்புணர்வுள்ள ஒரே வெகுஜன சினிமாக் கலைஞன் கமல்ஹாசன்தான் என்பதை விருமாண்டி படத்தின் மூலம் மறுபடி ஒரு முறை கமல்ஹாஸன் நிருபித்திருக்கிறார்.

கமல்ஹாஸனின் தேவர்மகன் வெளியானபோது தமிழகத்தில் தலித் அரசியல் என்பது முனைப்புப் பெற்றிருக்கவில்லை. இலக்கிய தளத்தில் கூட தலித்திய விமர்சனம் என்பது கூட ஆரம்ப நிலையிலேயே இருந்தது. தலித்தியக் கோட்பாட்டில் ஆர்வம் செலுத்தியவர்கள் கூட சினிமாவில் அக்கறையற்றேயிருந்தனர். அன்றைய நிலைமையில் சாதியப் பெருமிதத்தையும் வன்முறையையும் இணைத்ததொரு பார்வையை வாழ்முறையாகக் கொண்டிருந்தவர்களான தேவர் சமூகத்தவர்களின் வன்முறையிலிருந்து அவர்கள் மீள்வதற்கான ஒரு அறைகூவல் போல, தேவர்மகன் வந்தது. பாரதிராஜா போன்றவர்களின் படங்களில் சித்திரிக்கப்பட்ட தேவர்சாதிப் பெருமிதம் வன்முறை வழிபாடு போன்றவற்றை விமர்சித்தததாகவே தேவர்மகன் படம் இருந்தது. தேவர் மகன் படம் இயங்கும் தளம் தேவர் சாதிக்குள்ளேயே, அவர்களது இரத்த உறவுகளுக்கள்ளேயே புரையோடிய வன்மறையை விமர்சித்த தளம்தான். அந்தக்கதைக்குள் இயங்கும் மாந்தர்கள் முற்றிலும் தேவர் சாதியினர்தான். மாயாண்டியினால் கைவெட்டப்பெறும் இசக்கி ( வடிவேலு), ஒப்புக்கொண்டபடி பஞ்சவர்ணத்தை ( ரேவதி) கல்யானம் முடிக்காது உயிர்ப்பயத்தில் ஓடிப்போகும் முனியன் என்று வரும் விளம்புநிலைக் கதாபாத்திரங்கள் கூட தேவர்சாதியைச் சார்ந்தவர்களாகவே, விவசாயக் கூலிகளாகவே இருக்கின்றனர்.

பிறசாதியினருக்கும் தேவர் சாதிக்கும் இருக்கும் சாதி உறவுகளையோ வன்முறையின் தோற்றுவாய்களையோ விளைவுகளையோ தேவர்மகன் படம் சித்தரிக்கவில்லை. தலித் மக்களின் பிரசன்னம் என்பது தேவர்மகன் படம் இயங்கும் தளத்தினுள் இல்லை. இன்னும் தேவர் சாதிக்குள்ளேயிருக்கிற அர்த்தமற்ற சாதிப் பெருமிதத்தையம் காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும், அடியாள் கலாச்சாரத்தின் அடிப்படையையும் விமரச்ித்ததாக அந்தப்படம் இருந்தது. தேவர்மகன் எனும் பெயர் கூட சிவாஜிகணேசனின் நடிப்புலக வாரிசு எனும் கமல்ஹாஸனின் நியாயமான ஆசையில் விளைந்ததாகவே அர்த்தம் பெறுமேயல்லாத வன்முறையை ஆதரிக்கிற தேவர்சாதிப் பெருமிதத்தை நோக்கம் கொண்டதாகக் கொள்ளமுடியாது. தேவனாக இருப்பதைவிடவும் வன்முறை தவிர்ந்த நாகரீக மனிதனாக இருப்பதுவே மேலானது எனும் செய்தியை அழுத்தமாக முன்வைத்த படம் தேவர்மகன்.

சுபாஸ்சந்திரபோசின் படம் நகர்ந்து முத்துராமலிங்கத் தேவரின படம் திரையில் தோன்ற அதன் மீது கரைந்து மேலெழுகிறது பெரிய தேவர் சிவாஜிகணேசனின் முதிர்ந்த வயது முகம். முத்துராமலிங்கத்தேவரும் சரி, சுபாஸ்சந்திரபோசும் சரி, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்தம் தேசபக்திப் பரிமாணமும, இந்திய தேசிய ராணவமும், தேசியப் பாதுகாப்புக்காகச் சென்ற அவர்தம் மறமும் மட்டுமே திரும்பத் திரும்ப மகிமைப்படுத்தப்படுகிறது. காலமாற்றத்தில் வரலாற்று முரணயிக்கத்தில் அவர்களது முன்னைய சில அரசியல் நிலைபாடுகள் கொள்ளும் மாற்றங்களும், நிகழ்கால முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கிற அவர்தம் பார்வையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தலித் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான அரசியல் அதிகார ஒதுக்கீட்டை சுபாஸ்சந்திரபோஸ் விரும்பியிருக்கவில்லை. அதற்கான அன்றைய காரணம் ஒன்றுபட்ட தேசியத்திற்கு அது முரணாணது என்பதாக இருக்கலாம். இருபத்தியொன்னாம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை அதுவல்ல. சமூகநீதிக்கு இன்று ஒதுக்கீடு என்பது ஒரு முன்நிபந்தனையாகும். இன்றைய பிரச்சனை தேகபக்தியல்ல மாறாக சாதிய வன்முறை.

தேவர் சாதியினர் தம் மீதான விமர்சன சினிமா குறித்து மிகவும் சகிப்புத் தன்மையற்றவர்கள் என்பதற்குச் சான்று, சேரனின் பாரதி கண்ண்ம்மா படத்திற்கு எதிரான அவர்களது அரசியல் தலையீடு. அவர்களைத் திருப்திப்படுத்தவே பாரதி கண்ணம்மா தயாரிபபாளர் ஹென்றி தேவர் சாதியை மகிமைப்படுத்தி மறுமலர்ச்சி படம் எடுத்தார். தொடர்ந்து தேவர்சாதியை மகிமைப்படுத்திப் படங்கள் வந்தன. இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. தேவர்சாதி பெருமிதம் சொல்லும் பசும்பொன், வீச்சறிவாள் கலாச்சாரத்தை வழிபடும் தாஜ்மஹால் மற்றும் கார்கில் போருக்குச் சென்ற தேவர்களை ஆராதிக்கும் ஈரநிலம் போன்றன இப்படங்கள். இவையனைத்துமே பாரதிராஜாவின் படங்கள். தேவர்மகன் கதையின் மையம் தேவர் சாதியின் பரோபகாரங்களையும் சாதிப் பெருமித்தையும் அவர்களது வன்முறையையும் நியாயப்படுத்தியது அல்ல. மாறாக அந்தச் சாதிக்குள்ளேயே இடம் பெறுகிற அர்த்தமற்ற கொலைவெறி குறித்த விமர்சனமாகவே தேவர்மகன் படம் இருக்கிறது. அதனால்தான் தேவர்மகன் என்ற பெயர் வைத்தாலும், சக்திவேல் என்று பெயர் வைத்தாலும் படத்தின் செய்தி மாறிவிடப்போவதில்லை எனச் சொல்கிறார் கமல்ஹாஸன்.

தேவர்சாதி வன்முறையை நியாயப்படுத்தும் படமாக இல்லாமல் நவீன சிந்தனைகள் கொண்ட, தாராளவாத வாழ்முறை கொண்ட, குட்டி முதலாளிததுவவாதியொருவனின் வன்முறை எதிரப்பை முன்வைக்கும் படமாக தேவர்மகன் இருக்கிறது. தேவர்மகன் சாதியைக் கடந்து நிற்கிறவன் என நிச்சயமாகச் சொல்லமுடியாது. சக்திவேல் (கமல்ஹாஸன்) தனது காதலியான தெலுங்கு பேசும் பெண் பானு ( கெளதமி) வைத் தனது தந்தைககு (சிவாஜி கணேசன்) அறிமுகம் செய்யம்போது, ஆந்திராவில் தேவர்சாதிக்கு இணையான மதிப்பு கொண்ட பணக்காரவீட்டுப் பெண் அவள் என்றுதான் அறிமுகப்படுத்துகிறான். இரத்த உறவுகளுக்குள் இணக்கமான பார்வை, தன்னளவில் சாதிமதம் கடந்த பார்வை என்கிற நவீன நகர்பபுறக் கல்வி கற்றவனாகவே அவன் இருக்கிறான். சக்திவேல் நிச்சயமாக தேவர்சாதிப் பெருமிதமோ சாதிய வன்முறை உணர்வோ கொண்டவன் இல்லை.

தென்மாவட்டங்களில் தொடர்ந்த சாதிக் கலவரங்களுக்கான காரணங்களில் ஒன்றாக தேவர்மகனைச் சொல்வதும், அதனடிப்படையில் கமல்ஹாஸன் மீது விரோதம் பாராட்டுவதும் நியாயம் கொண்ட வாதமில்லை. தேவர்மகன் படம் வீச்சறிவாள் கலச்சாரத்தை நியாயப்படுத்தவில்லை. சாதிய வன்முறையை நியாயப்படுத்தவில்லை. தலித் மக்களுக்கும் தேவர்சாதியினருக்கும் இடையிலான வன்மறையைச் சித்தரிக்கவில்லை. தலித் மக்களுக்கு எதிரான தேவர்சாதி வன்முறையை நியாயப்படுத்தவுமில்லை. தேவர் சாதி வன்முறையை தேவர்மகன் நியாயப்படுத்துகிறது, தென்மாவட்ட வன்முறைக்கான காரணம் அப்படம்தான் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ்ணசாமி அவர்கள் கருதுவாரானால், அதற்கான சமூகவியல் உளவியல் விளக்கங்கள் மட் டுமல்ல, புள்ளிவிவரங்களும் பதியப்படுவது, பொதுவாகச் சினிமா எனும் சாதனம் சமூகத்திலும் சமூக வன்முறையிலும் செலுத்தும் ஆதிக்கம் குறித்த ஆய்வுக்கு நிச்சயமாகவே பயன்தரக்கூடியதாக இருக்கும். அந்தத் தரவுகள் மிகுந்த பெருமதி கொண்டதாகவும் இருக்கும்.

சக்திவேல் எனும் இளைஞன் நீண்ட ஆண்டுகளின்பின் தனது ஹோட்டல் தொழிற்படிப்பை முடித்துவிட்டு தனது தெலுங்குக் காதலியுடன் தனது கிராமத்திற்கு வருகிறான். அந்தக் கிராமத்தில் கோயில் தகராறு ஒன்று இருக்கிறது. பெரிய தேவருக்கும் அவரது தம்பியான உடல் ஊனமுற்ற சிறிய தேவருக்கும இருக்கும் முரண்பாட்டினால் அந்தக் கோயில் பற்பல ஆண்டுகளாக பண்டிகை நடக்காமல் மூடிக் கிடக்கிறது. பெரிய தேவர் சிறிய தேவருக்கு (காகா ராதாகிருஷ்ணன்) மருந்து வைத்து, அவரை முடமாக்கிவிட்டார் என்று மூரக்கமாக நம்புகிறான் சிறிய தேவரின் மகன் (நாசர்) மாயாண்டித்தேவன். அவனுக்குப் பெரிய தேவரைக் கொன்றொழித்தால்தான் நிம்மதி. சாதியப் பெருமிதத்தினதும் வன்முறையினதும் மொத்த உருவம் அவன். பெரிய தேவருக்கு சாதிய உணர்வின் மிச்சசொச்சங்கள் உண்டு. தேசபக்திப் பெருமிதம, தேவர்சாதியின் வெகுஜனமறம் குறித்த பெருமிதம் போன்றன அவருக்கு உண்டு . தன்னை நம்பியவர்கள் அமைதியதாக வாழவேண்டும் என நினைப்பவர் அவர். நிலப்பிரபுத்தவ அதிகார வரம்புக்குள் இயங்குகிற மேல்தட் டுக்காரர்தான் அவரும்.

சக்திவேலினது காதலி பார்ப்பதற்காக பூட்டுக்கள் உடைத்துத் திறக்கப்பட்ட கோயில் நிகழ்வே மறுபடி கலவரங்கள் தோன்றுவதற்கான காரணங்களாகவிடுகிறது. மனிதர்கள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். உயிரோடு கொழுத்தப்படுகிறார்கள். சதிசெய்து கண்மாய்க் கரையுடைத்து, மக்கள் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். இந்த வன்முறையிலிருந்து தப்பிவிட நினைக்கிறான் சக்திவேல். நவீன கல்வியும் தாராளவாத வாழ்முறையும் கொண்ட அவனுக்கு, இந்தக் காட்டுமிராண்டித்தனமான வன்முறை சகிக்கமுடியாதாகிறது. தந்தை தன் மக்களுக்கு ஆற்ற வேணிடிய பொறுப்பை அவனுக்கு ஞாபகமூட்டுகிறார். தந்தை திடாரென இறந்துவிட சக்திவேல் தந்தையின் பொறுப்பைத் தான் எற்கிறான். பிறிந்த தனது சமூகம் ஒன்றுபட நிலப்பிரிவினை தவிர்க்கப்படவேண்டும் என நினைக்கிறான், பிரிந்த பகுதியினர்க்கிடையில கல்யாணம் ஏற்பாடு செய்கிறான். மணந்துகொள்ள ஒப்புக்கொண்டவன் மாயாண்டியின் பயத்தில் ஓடிப்போக, தானே அந்தக் கிராமத்துப் பெண்ணான பஞ்சவர்ணத்தை மணந்து கொள்கிறான். பானுவின் மீதான தனது காதலில் தோல்வியடைகிறான். சக்திவேலின் தலைமையில் நடக்கும் திருவிழாவில் வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்று குவிக்கிறான் மாயாண்டி. சக்திவேலின் கரப்பிணி மனைவி பஞ்சவர்ணம் பலியாகிறாள். குழந்தைகளும் பெண்களும் குழநை தகளும் வெடித்துச் சிதறுகிறார்கள். இரண்டு தரப்பிலும் கொலைவெறி கொண்டு மனிதர்கள் திரிகிறார்கள். கலவரத்திலிருந்தும் உயிர்க்கொலையிலிருந்தும் சிறிய தேவரையும் அவரது குடும்பத்தினரையம் தானே காப்பாற்றுகிறான் சக்திவேல். கொலைவெறியுடன் சிறிய தேவரது குடும்பத்தினரைத் தேடிவரும் தனது தரப்பு ஆட்களை இனிக் கொலை வேண்டாம் எனத் திருப்பியனுப்புகிறான் சக்திவேல்.

மாயாண்டி பழிவாங்க அலைகிறான். சக்திவேலின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து சக்திவேலைக் கொல்ல முயல்கிறான். தடுக்கவரும் தன் தாயை காயப்படுத்துகிறான். அவன் நடத்திய வெறியாட்டத்துக்கும் கொலைகளுக்குமாகச் சேர்த்து போலீசில் சரணடையுமாறு, அவனைச் சக்திவேல் துரத்திச் செல்கிறான். வாளும் வேலும் கொண்ட வீரம் கொண்ட தெய்வங்கள் நிற்கும் ஊர்க்கோடிக் கோயிலில் சண்டை நடக்கிறது. சக்திவேலுவின் வாளால் தலை தறிக்க முண்டமாகிறான் மாயாண்டி. தான் விரும்பியிராத இந்தக் கொலைக்கு அழுது கதறியபடி பொறுப்பேற்கிறான் சக்திவேல். கொலையை பிறர் ஏற்றுக் கொள்வதை மறுக்கிறான். இக்கொலையினால் மாயாண்டியின் மனைவிக்கும் அவனது தாயக்கும் தான் செய்த தீங்கினை நினைந்து குற்ற உணரச்சியில் மாய்ந்து அழுகிறான். என்னோடு போய் ஒழியட்டும் இந்த இரத்தச் சிந்துதல் எனும் சக்திவேலின் கதறலோடு முடிகிறது தேவர்மகன் படம். தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் கூறுகள் இந்தப் படத்தில் இருப்பதற்கான சான்றுகள் நிச்சயமாக எங்கும் இல்லை.

தேவர்மகன் படத்திற்கும் விருமாண்டிக்கும் ஒற்றுமைகள் இருக்கிறது. நிலத்தகராறு இரண்டு படங்களிலும் இடம் பெறுகிறது. இறந்து விறைத்த குழந்தையின் உடல்கள் இரண்டு படங்களிலும் முக்கியமான காட்சியாக இருக்கிறது. குழந்தையைப் பறிகொடுத்து மனம்பேதலித்து அரற்றும் பெண்ணின் ஓலங்கள் இரண்டு படங்களிலும் இருக்கிறது. தேவர்சாதிப் பெருமிதம் கொண்டவர்கள் இரண்டு படங்களிலும் இருக்கிறார்கள். விருமாண்டியில் கொத்தாளத் தேவரும் தேவர்மகனில் மாயணடிண்டியும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் வில்லர்களேயொழிய கதாநாயகர்கள் அல்ல. கருணையற்றுக் கொல்கிற இருண்ட மனம் கொண்டவர்கள் இந்த இருவரும். உடல்கள் ஒருபுறம் சின்னாபின்னப்பட, பிறிதொருபுறம் ஆண்பெண் உறவு சார்ந்த நெருக்கமான காட்சிகள் இரு படங்களிலும் இருக்கிறது. தேவர்மகனை விடவும் அதிவன்முறை கொண்ட படமாக இருக்கிற அளவில், காமம் பெருகும் தன்மையில் விருமாண்டி அதிகக் கலவிக் காட்சிகள் கொணடதாகவே இருக்கிறது.

இரு படங்களிலுமே வண்முறைக்கு எதிரான செய்தியே படத்தின் இறுதிச் செய்தியாக இருக்கிறது. தேவர்மகன் தேவர் சாதிக்கிடையிலான, இரத்த உறவுகளுக்கிடையிலான வன்முறையாக இருக்க, விருமாண்டி திரைப்படம் இரண்டு இடைநிலைச் சாதிகளுக்கிடையிலான வன்முறையாக இருக்கிறது. இரண்டு படங்களிலுமே சாதியப் பெருமிதமோ சாதிய வன்முறையோ கொணடாடப்படவுமில்லை. நியாப்படுத்தப்படவுமில்லை. பாரதிராஜா போன்வரகள் தோற்றுவித்த பிற மண்வாசனைப் படங்களில் இருந்து கமல்ஹாஸனின் தேவர்மகனும் விருமாண்டியும் வேறுபடுகின்றன. விளிம்புநிலை மக்களையோ தலித் மக்களையோ அவமானமாகவோ, வன் முறைக்கு ஆட்பட்டவர்களாகவோ சித்தரித்து அதை நியாபபடுத்திய ஒரு காட்சியைக் கூட இந்த இரு படங்களிலும் பாரக்கமுடியாது.

தலித் மக்களின் வாழ்முறையோ, அவர்களது பிரசன்னமோ ஆக்கபூர்வமாக தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டதேயில்லை. விதிவிலக்கான ஒரே படம் எம்.ஜி.ராமச்சநதிரன் அவர்களின் மதுரைவீரன். நக்கல் அல்லது நகைச்சவை எனும் பெயரில் தலித் வாழ்வு அவமானகரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது அல்லது அவர்களது வாழ்வ சித்திரிக்கப்படவில்லை என்பதற் காக முழு தமிழ் சினிமாவின் மீதும் விமர்சனங்களை மேற்கொள்ள முடியும். தலித் வாழ் வு தவிர்ப்புக்காக அந்தப் பொதுவான விமர்சனத்துக்குள் கமல்ஹாஸனும் நிச்சயமாகவே வருவார்.

கமல்ஹாஸனது குறிப்பிட்ட தேவர் மகனும் விருமாண்டியம் தலித் மக்களுக்கு எதிரானது என்ற சொல்லப்பட எந்த முகாந்திரமும் இல்லை. கமல்ஹாஸன் பிராமணக் கண்ணோட்டத்தடன் படமெடுக்கிறார், பிராமண அதிகாரததுடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரமில்லை. அப்படியெனில் தேவர் மகனில் சாதிச் சண்டடையில் வயிறு வளர்க்கிற வழக்கறிஞராக பிராமணரொருவரை (மதன்பாப்) அவர் சித்தரித்திருக்கமாட்டார். பிறப்பில் தலித்தியரான இசைக் கலைஞரான இளையராஜாவின் மேதமையை அங்கீகரித்தவர்களில் கமல்ஹாஸன் போல் தமிழ் சினமாவில் பிறிதொருவர் இல்லை. தனது சொந்தப்படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பெறுவதை ஒரு யாகம் போல் மேற்கொள்பவர் கமல்ஹாஸன். சாதிப்பெருமிதத்தையும், சாதிய வன்முறையையும், முஸ்லீம் மக்களின் மீதான வன்முறையையும் தலித் மக்களின் மீதான அவமானத்தை விதைப்பதையும் நோக்கமாகக் கொண்ட எத்தனையோ தமிழ் சினிமா நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருக்கிற சூழலில், அவர்களையெல்லாம் விடுத்து கமல்ஹாஸனைத் தனிமைப்படுத்தி விமர்சிக்கிற புதிய தமிழகம் கட்சித் தலைவர் பா.கிருஷ்ணசாமி அவர்கள், அப்பட்டமாக இந்துத்துவப் பார்வையையும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் தனது படங்களில் சித்தரிக்கிற ரஜினிகாந்த்துடன் அரசியல் ரீதியில் நட்பு பாராட்டுவதும, அவரது காவிரி நீரப்பிரச்சினை தொடர்பான உணணாவிரதத்தில் பங்கு பெறுவதும், தமிழ் சினிமா குறித்துச் சரியான பார்வை கொண்ட விமர்சன நிலைபாடாக இருக்கமுடியாது.

கமல்ஹாஸன் மீதான எவ்வகையிலுமான எதிர்மறையான விமர்சனமும் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரானதாகவே இருக்கும்.

***

yamunarn@hotmail.com

திண்ணை பக்கங்களில் சினிமா பற்றி யமுனா ராஜேந்திரன்

 • பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல்
 • பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல்-2
 • பிதாமகன்
 • அலைபாயுதே
 • ஹே ராம்
 • டெரரிஸ்ட்
 • எர்த்
 • 1084 – எண்ணின் தாய்
 • பாரதி

  யமுனா ராஜேந்திரனின் சினிமா நூல்கள்

  1.ஆப்ரிக்க சினிமா : 110 பக்கங்கள்

  தாமரைச் செல்வி பதிப்பகம் : சென்னை :1996

  2.அரசியல் சினிமா : பதினாறு இயக்குநர்கள் : 300 பக்கங்கள்

  தாமரைச் செல்வி பதிப்பகம் : சென்னை : 1997

  3.குழந்தைகள் சினிமா : 64 பக்கங்கள் : 1997

  சேவ் வெளியீடு : திருப்பூர்

  4.மணிரத்தினத்தின் சினிமா : 120 பக்கங்கள்

  கனவு வெளியீடு : திருப்பூர் : 1998

  5.புகலிட தமிழ் சினிமா- ஈழச்சினிமா : 180 பக்கங்கள்

  இணைத் தொகுப்பாளர்

  தமிழ் தகவல் நடுவம் : லண்டன் : 1998

  6.தமிழில் மாற்றுச் சினிமா :

  நம்பிக்கைகளும் பிரமைகளும் : 180 பக்கங்கள்

  பதிவுகள் பதிப்பகம் : கோயமுத்தூர் : 2001

  7.சினிமா-சித்தாந்தம்-கலை : 180 பக்கங்கள்

  பதிவுகள் பதிப்பகம் : கோயமுத்தூர் : 2001

  Series Navigation

 • யமுனா ராஜேந்திரன்

  யமுனா ராஜேந்திரன்