விடியும்!- (19)

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அடைமழை இன்னும் இரண்டொரு நாட்கள் தொடரப் போவது நிச்சயம். ஒவ்வொரு துளியும் வரிவரியாக தடிதடியாக கூட்டாளிப் பேரிரைச்சலோடு சாய்ந்தபடி இறங்குவதைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சில்லென்றடித்த மழைக் கூதலில் ஒரு கணம் தோள் சிலிர்த்தார் பொன்னுத்துரை மாமா. வருசாவருசம் மாரியில் இப்படிப் பெரும்போக்காகக் கொட்டுவது வழக்கந்தான். பல மாரிகளில் இதுபோலக் கண்டு குளிர்ந்து ஈரம் அளைந்திருந்தாலும் இந்தக் கணத்தில் கண்ணெதிரே கானும் இந்த மழையே முன்னெப்போதும் பெய்திராத சரீயான மழையாகத் தெரிகிறது.

இப்போதே வளவிற்குள் குதிக்காலை மூடி வெள்ளம் போட்டு விட்டது. பள்ளப்பாங்கான வேலியோர மூலையில் கொத்தி வாய்க்காலெடுத்து தெரு வடிகாலுக்கு ஓட விட்டும் எதிர்கொண்டு மேவியதே தவிர வடியவில்லை. தெருவில் இருபக்க வடிகாலும் மூடிப் பாய்ந்து அரை அடி உயரத்தில் கிளம்பி ஓடியது. விறாந்தைக் கதிரையிலிருந்து பார்க்கையில் மதிலுக்கு மேலால் தெருவில் குடைகள் தனித்து நகர்ந்தன.

சுற்றுப்புற ஓசைகளை ஒரேயமுக்காய் அமுக்கிக் கொண்டு சர்வாதிகாரியாய் சோவென ஒலிக்கும் மழையின் நாதம் அவருக்குப் பிடிக்கும். அது போலவே, கோடைகாலத்தில் பன்னீர் தெளித்த மாதிரி அபூர்வமாகத் தூறும் மழை கிளப்பி விடும் மண்ணின் மணமும், பிசுபிசுக்கும் புழுக்கத்தினிடையில் தொட்டணைக்கும் குளிர்ந்த தென்றலும் அவரை வசப்படுத்திவிடும்.

மேகங்கள் சிறுகச் சிறுகக் கருக்கூட்டிப் பரவி காலக்கிரமத்தில் இணைந்து குளிர்ந்து மழையாகப் பொழியும் படிமுறையை அவர் அறிவார். எனினும் மழை துமிக்கிற ஒவ்வொரு முறையும் வாய் பிளந்து வியக்காமலிருக்க முடிவதில்லை. கோடைவெக்கை, மாரிக்கூதல், மார்கழிப்பனி, என எல்லாமே மாறுபடாத திட்டமான ஒரு கட்டளைக்குக் கட்டுப்பட்டு அதுஅது அந்தந்தக் காலத்தில் வந்து போவதைப் பார்த்து அவர் ஆச்சரியத்தில் சமைந்து போவார்.

எப்படி இதெல்லாம் நடக்கிறது! சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேரத்துக்கு வந்து போகிற நேரசூசி கொடுத்தது யார் ? கடலுக்கு மதிலாக நிற்கும் மலைகளைக் கட்டுமானம் செய்தது யார் ? அலை புரண்டோடும் ஆற்று வெள்ளத்திற்கு கடலில் வந்து கலக்கும் சுழற்சி எப்படித் தெரிந்தது ? சூரியனையே வாயில் போட்டு விழுங்கிவிடக்கூடிய இராட்சத கிரகங்களின் இருப்பிற்கு தேவையென்ன ? இவையெல்லாம் எங்கிருந்து வந்தன ?

ஆழங் காண முடியாத படைப்பின் மாயங்களை இதுமாதிரி சமயங்களில் எண்ணியெண்ணி மலைத்துப் போவார். இறைவா இதெல்லாம் என்னய்யா.. .. .. என்று வாய்விட்டுக் கேட்டு உருகிப் போவார்.

திடாரெனக் குழந்தையாகி – சரிந்து பொழியும் மழைத்தடிகளில் ஒன்றைப் பிடித்து சளக் சளக்கென ஏறிப் போய் வான இருட்டின் சூனியத்தில் சஞ்சரித்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவருக்கு. கணக்கு வாத்தியார் கைப்பிரம்பு போல ஒவ்வொரு துமியும் சுளீர் சுளீரென மொத்தமாக இறங்கியதை அவர் சற்று பயத்தோடு பார்த்தார்.

தைப்பொங்கலுக்கு இக்கணம் வெள்ளம் போடப் போகுது.. .. .. தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார் மாமா. பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்த மகள் வயிற்றுப் பேரன் ஆதிபகவன் மழைக்கூதலுக்கு தாத்தா தன் பாட்டில் ஏதோ கதைக்கிறார் என்று நினைத்து என்ன அம்மப்பா சொன்னீங்க என்று கேட்டான்.

“ஒன்டுமில்லை நீ படி”

கூரைப்பீலி நீரில் நனைந்து மேலைச் சிலுப்பிக் கொண்டு விறாந்தையில் ஏறிய வீட்டுப்பூனை ஆதியின் காலடிச் சாக்கில் சூட்டுக்காய் ஒதுங்கிற்று. அடிவயிற்றில் காலைக் கொடுத்துக் கிளப்பி நோகாமல் எட்டத்தில் எற்றிவிட்டான் ஆதி. அது மீண்டும் வந்து காலில் உராய்ந்து செல்லம் கொஞ்சியது. அதன் தங்கநிற மயிர்த் தலைகளில் இன்னமும் குடை போலத் தங்கியிருந்த மழைத்துளிகளை குதிக்காலால் தேய்த்து உடைத்து விட்டான். பூனைக்கு இப்போது அவனுடைய சூடும் கதகதப்பும் மிருதுவான தடவலும் தேவை. சும்மா நேரத்திலேயே அவன் காலடி தேடித் தனக வருகிற பூனை இரண்டு நாளாக மேகம் உடைந்து கொட்டுகிற கொட்டுக்கு வேறு எங்கு போகும்!

ஆதியினால் இப்போது செல்லம் பொழிய முடியாது. இரவல் வாங்கிய நோட்ஸ் எழுதி முடிக்க வேண்டும். தந்த வகுப்புப் பொடியன் மழையென்றும் பாராமல் வந்து கதவைத் தட்டக்கூடியவன். ஆதி எழுதுவதில் கவனமானான். இன்றைக்கு ஒரு முடிவு காணாமல் விடுவதில்லை என்கிற மாதிரி பெய்யாமல் விட்டதற்கெல்லாம் வட்டி போட்டுப் பொழிந்து கொண்டிருந்தது வானம்.

சுவர்மணி நாலுதரம் அடிக்க, பொன்னுத்துரையார் உள்ளே எட்டிப் பார்த்தார். அடுப்படியில் பின்னேரத்தீனுக்கு அடுக்கு நடந்து கொண்டிருந்தது. எண்ணைத் தாச்சியில் ஏதோ ஸ்ஸ்ஸ்ஸென்று பொரிந்து ஆவி பரப்பும் இதமான வாசம். வடையா, முறுக்கா .. கொண்டா கொண்டா என்று நாக்கு பரபரத்தது. கூதலுக்கு எதென்றாலும் மறமறவெனக் கொறித்தால் கணகணப்பாயிருக்கும்.

ஆருக்கு இல்லாவிட்டாலும் ஆதிக்கு பின்னேரத்தீன் செய்ய வேண்டும். எதை எந்த நேரம் போட்டு அரைத்தாலும் டக்கென்று ஜீரணித்து விட்டு மீண்டும் வந்து நிற்பான். இந்த மார்கழியில் ஓலெவல் பரீட்சை எடுக்கப் போகிறான். இன்னமும் சுடுகுது மடியப்பிடி குணம். ஒரே பிள்ளையென்று எல்லாப் பக்கத்தாலும் செல்லம்! ஆனால் படிப்பில் சுட்டி.

பொன்னுத்துரையாரின் குடும்பம் சின்னக்குடும்பம். மொத்தமுமே ஐந்து பேர்தான். ஒரே மனைவி லட்சுமி. ஒரே மகள் பாக்கியலட்சுமி. ஒரே பேரன் ஆதிபகவன். மருமகன் நல்லதம்பி. நாமிருவர் நமக்கொருவர் மாதிரி குடும்பக்கட்டுப்பாடு அது இது என்று எதுவுமில்லை. லட்சுமிக்கு கன காலமாக கரு தங்கவில்லை.

பாராத இங்கிலிசு வைத்தியம் இல்லை, கேளாத சாத்திரம் இல்லை, ஏறாத உள்ளுர் கோயிலுமில்லை. கருவிற்குப் பதிலாக கவலையே அவளிடம் நிரந்தரமாகத் தங்கி விடுமோ என்று பயந்தார் பொன்னுத்துரை.

குறிப்புப் பார்த்து, பஞ்சாங்கம் புரட்டி – சனியின் பார்வை நீச்சம் பெற்றிருக்கிறதனால் சனிக்கிழமையில் விடாமல் எள்ளுப்பொட்டனி எரியுங்கோ என்று உப்புவெளி தில்லையம்பல சாத்திரியார் பரிகாரம் சொன்னார். இரண்டு வருசமாக எரித்த எள்ளுப் பொட்டனிக்குக் கணக்கில்லை. எரித்த எரிவையில் விளக்குக்கு திரிக்கும் பழஞ்சீலைத் துணிக்கு வீட்டில் பஞ்சம் உண்டாயிற்று. தான் சொன்ன சாத்திரம் பலிக்கவில்லையென்பதை சாடைமாடையாக அறிந்து கொண்டபின் சாத்திரியார் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

வெற்றிலையில் குறிபார்த்து நினைத்த காரியம் சொல்கிற மனுசியொன்று பெரிய கடையில் இருக்கெனக் கேள்விப்பட்டு வெள்ளனைக் காலையோடு தோய்ந்து குளித்து முதல் ஆளாகப் போய் நின்றாள் லட்சுமி. சும்மா சொல்லக்கூடாது, நினைத்துப் போன காரியத்தை மனுசி அச்சொட்டாகச் சொன்னாள். காரிய நிவர்த்தியை காதோடு குசுகுசுத்தாள். அது பெண்கள் மட்டுமே தங்களுக்குள் கூச்சநாச்சமில்லாமல் பரிமாறிக் கொள்ளுகிற சங்கதி. மனுசி சொன்னது பலித்தால் அரைப்பவுனில் ஒரு சோடி கல்லுத்தோடு செய்து காணிக்கையாகக் கொடுப்பதாக நேர்ந்து கொண்டு வந்தாள் லட்சுமி.

நாலாங்கட்டையில் ஐஞ்சுக்கும் பத்துக்கும் கைவைத்தியம் செய்கிற நாட்டு வைத்தியர் செல்லத்தம்புவிடம் போனார் பொன்னுத்துரையார். தகப்பனிடம் மகனும் மகனிடம் பேரனும் பேரனிடம் கொள்ளுப்பேரனுமாய் வழிவழியாக கேட்டுப் படித்து வைத்தியம் செய்கிற குடும்பம். தேங்காய் துருவுகிற மாதிரி தன்னை நெடுநாளாய் துருவிக் கொண்டிருந்த சந்தேகத்தை வைத்தியரிடம் போட்டு உடைத்தார் பொன்னுத்துரை.

“என்ர மனுசிக்கு பிள்ளைப் பாக்கியமே இருக்காதோ! ”

பிள்ளைப்பாக்கியம் இல்லாதவளுக்கு பிடிசாபம் கொடுத்து மலடி என்று ஒதுக்குவது மரபு. பொன்னுத்துரையார் அப்படியில்லை. மனைவியின் மனக்குறையைப் போக்குவதே அவரது குறி. பூட்டன் காலத்து புராதன ஏடு எடுத்து தூசு தட்டிய வைத்தியர் அதிலிருந்து ஒரு விருத்தம் எடுத்து விட்டார்.

“பாரப்பா பெண் மலடார் கர்ப்பக்கோளின் பக்குவத்தைச் சொல்லுகிறேன் பண்பாய்க் கேளு, ஆரப்பா ஆண் மலடே யாகுமல்லால் அப்பனே பெண்மலடு யாருமில்லை”

ஒரு வெள்ளிக்கிழமை நாத்து லட்சுமியின் நாடி பார்த்து நாக்கு பார்த்து மூச்சு பார்த்து முகம் தெளிந்தார் வைத்தியர். முகத்திற்கு கிட்ட எடுத்தாலே ஓங்காளிக்கும் சூரணம் தயாரித்து அதை உண்ணும் பத்தியமும் உரைத்தார்.

முந்திஷ்டிவேர், ஆடாதோடை, அடிதாங்கி, தூதுவளை, வேப்பிலகு, சிவதை, சிறுகுறிஞ்சான், சுக்கு இவை எட்டும் பசுநெய்யில் வேக வைத்து சூரணம் சேர்த்து குளித்தது முதல் ஏழு நாள் சாப்பிடத் தீரும் என்று வாழ்த்தியும் அனுப்பினார்.

மச்சாள் மூனு மாசமாக முழுகாம இருக்கிறா என்ற நல்ல சேதியை தங்கச்சி பொன்னுத்தங்கந்தான் முதன்முதலில் தமையனிடம் சொன்னாள். பூச்சிபுழுவிற்கு கர்த்தாவாக இருந்தாலும் புருசன்மாருக்கு மூன்றாம் ஆள் மூலமாகத்தான் இந்த விசயம் கசியும்.

ஆக, எரித்த எள்ளுப்பொட்டனிகளோ, சுற்றிய ஆல வேம்பு மரங்களோ, பாம்புக்கு வார்த்த பசும்பாலோ, ஏறியிறங்கிப் பார்த்த சாத்திரங்களோ, கேட்ட நினைத்த காரியங்களோ, பத்தியமாக இருந்து விழுங்கிய சூரணங்களோ, அயல்ப்பெண்களின் அனுபவ மகாவாக்கியங்களோ அல்லது இவை எல்லாமாகச் சேர்ந்தோ – லட்சுமியை முழுகாமல் செய்து விட்டன.

பாக்கியலட்சுமி பிறந்ததும் அயலுக்கும் அனைத்து உறவுகளுக்கும் சர்க்கரைப் பொட்டலம் தாராளமாய் வழங்கினார் பொன்னுத்துரையார். பெண் குழந்தைக்கு சர்க்கரை, ஆணுக்கு கற்கண்டு. அப்படியொரு வித்தியாசம் ஏன் ? ஆண்பிள்ளை கற்கண்டைப் போல உறுதியாயிருப்பான், பெண்பிள்ளை சர்க்கரையைப் போல மென்மையாக இருப்பாள் என்பதைக் காட்டுவதற்கு பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் வந்த குறியீடா தெரியவில்லை. பேறுகாலத்தில் குத்துவேதனையோடு மகவை ஈன்றெடுத்து மயங்கிக் கிடக்கிற நிலையிலும் ஒவ்வொரு தாயும் மருத்துவச்சியிடம் கேட்கிற முதல் கேள்வி, என்ன பிள்ளை ?

ஆம்பிளையென்றால் அந்த வருத்த ஈட்டத்திலும் ஒரு மலர்ச்சி ஒரு நிமிர்வு, பொம்பிளையென்றால் ஒரு சோர்வு ஒரு பெருமூச்சு.

ஆனால் லட்சுமிக்கோ பொன்னுத்துரையாருக்கோ போதும் போதுமென்ற மகிழ்ச்சி. ஏழு வருசமாய் ஏங்கியேங்கி இருந்ததுக்கு, கடும் கோடையில் இறங்கிய கன்னிமழையாய், கடும் விடாயில் கிடைத்த முதல் முடராய், இறைவனளித்த பாக்கியமாய் வந்த மகளுக்கு பாக்கியலட்சுமி என்று பெயர் வைத்து வாய் நிறையக் கூப்பிட்டு மகிழ்ந்தார்கள். பிள்ளையோடு கூடமாட விளையாட ஒரு தம்பிக்கோ தங்கச்சிக்கோ அவர்கள் முயற்சி செய்யாமல் இல்லை. பாக்கியலட்சுமிக்கு கொடுப்பினையில்லை. அம்மா வைத்த நேர்த்திகளுக்கெல்லாம் சேர்த்து பாவம் அந்த அப்பாவிப் பெண்குழந்தை ஏழெட்டு மொட்டைகள் போட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

பரம்பரைக் கொடுப்பினை மாறாமல் பாக்கியலட்சுமிக்கும் ஒரே பிள்ளை – ஆதிபகவன் பிறந்தான். அவன் பிறந்த காலம் கற்கண்டு சர்க்கரை காலாவதியாகி டொபி வழங்கும் ஸ்டைல் தொடங்கியிருந்தது. முந்தி சரையைக் கையில் வாங்கியதுமே அதன் ஸ்பரிசத்தில் என்ன பிள்ளையென்று விளங்கிவிடும். இது டொபிக் காலம். கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது.

பொன்னுத்துரையார் சின்னப்பிள்ளையில எப்படி மினுக்கின செம்பு மாதிரி மொழு மொழுவென்று இருந்தாரோ அப்படியேயிருந்தான் ஆதிபகவன். பதினைந்து வயசுக்குள் பலதையும் பத்தையும் தெரிந்து வைத்திருந்தான். பொன்னுத்துரையார் ஆச்சரியப்பட்டுப் போவார். அவனுடைய வயசில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் வீடும் வளவும் பள்ளிக்கூடமும் கோவிலும் முற்றவெளியுந்தான். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வாயும் கூட வளர்த்தியும் கூட.

ஆதிக்கு ஜெயம் மூனு வயசு மூப்பு. ஜெயத்தோடு பிசின் மாதிரி ஒட்டிக் கொண்டு திரிவான். பள்ளியில் இவருக்கு அவர்தான் பாதுகாப்பு. இரண்டாம் மூன்றாம் வகுப்பு படிக்கும் சின்னக் காலத்தில் ஜெயத்தைக் காட்டிக்காட்டி வகுப்புப் பொடியன்களை பயமுறுத்தியும் இருக்கிறான் ஆதி.

ஜெயம் போனதிலிருந்து பாக்கியலட்சுமிக்குப் பயம் வந்து விட்டது. தன் ஒரேயொரு கொழுந்தும் சேதாரமாகி விடுவதை அவளால் நினைத்துப் பார்க்க முடியாது. தந்தையிடம் முறைப்பாடு சொன்னாள்.

“இதுகளை நம்பேலாது. எங்க போறான் எங்க வாறான் என்று கொஞ்சம் கவனியுங்கப்பா. எனக்கென்றால் பயமாயிருக்கு. ”

“அவன் சின்னக்குழந்தையம்மா நீ வீணாப் பயப்பிடாதையனை”

“நீங்க இப்பிடித்தான் சொல்லுவீங்க, நாளைக்கு ஒன்று நடந்திற்றென்றால் என்ன செய்யிறது.”

மகளின் குழப்பம் அவரிலும் படியத் தொடங்கிற்று. பட்ட காலிலேயே பட்டுவிடுமோ! ஏற்கனவே ஜெயம் போன வழி தெரியவில்லை. கிணற்றில் விழுந்த பாறாங்கல் கணக்காக ஆடாமல் அசையாமல் அப்படியே கிடக்கு.

ஆறாங்கட்டைக்குப் போய்வருகிற ஆட்களிடம் தன்னை உடனே வந்து சந்திக்கச் சொல்லி பால்காரக் கந்தசாமிக்கு விசளம் அனுப்பியிருந்தார். கையில் அலுவலாக இருக்கு ரென்டுநாள் கழிச்சு வாறன் என்று அவரும் சொல்லி அனுப்பி நாலு நாளாச்சு. பத்தாததுக்கு அடிச்சுப் பொழிகிற மழை. வெளிய தெருவ வெளிக்கிட விடாத மழை.

இரன்டு மணித்தியாலத்திற்கு விட்டுத்தருகிற ஊரடங்குச் சட்டம் போல மழை சட்டென்று நின்றது. பீலித்தண்ணீர் பொல பொலவென மொத்தமாக விழுந்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டடியில் கன்டுத்தாச்சிப் பசுவின் .. ம்ம்மா கேட்டது. மழையிருட்டு மாறவில்லை.

வாசலில் ஆதியை ஆரோ பொடியன் கூப்பிட்டான். பொன்னுத்துரையார் விறாந்தையிலிருந்தே எட்டிப் பார்த்தார்.

“என்ன தம்பி ஆரது ?“

“நோட்ஸ் கொப்பி வாங்க வந்தனான். ”

எழுதுவதை நிறுத்திவிட்டு முற்றத்து வெள்ளத்தில் இறங்கி சளக் புளக்கென்று ஓடினான் ஆதி.

“இன்னம் ஒரு பக்கந்தான், முடிஞ்சிரும். வந்து இரு ஒரு நொடியில தந்திர்றன் ”

அவன் விறாந்தையில் ஏறி ஆதியின் பக்கமாய் இருந்த கதிரையில் இருந்தான். கால் ஈரத்தை சாக்கில் துடைத்தான். அவனோடு பழக்கமில்லாததால் மூலையில் ஒதுங்கியிருந்த பூனையை பக்கத்தில் வரும்படி விரல் சொடுக்கினான்.

“அம்மா சாந்தனுக்கு எதன்றாலும் குடுங்கம்மா”.. .. .. என்றான் ஆதி எழுதிக் கொண்டே. அப்படிச் சொன்னால் தனக்கும் கொண்டு வா என்றுதான் அர்த்தம். மூக்கைத் துளைத்த வாசத்தில் சாந்தனுக்கு வாயூறிக் கொண்டு வந்தாலும், வேண்டாம் அன்ரி இப்பதான் தேத்தண்ணி குடிச்சிற்று வந்தனான் என்று மரியாதைக்குச் சொன்னான்.

சின்ன வெள்ளித் தட்டத்தில் உழுந்துவடை வந்தது. அப்பதான் இறக்கினது, எடுத்து நோகாமல் பிய்க்க ஆவி நழுவிற்று. அவாவில் கடிக்க நாக்கு சுட்டது. சுட்ட வடையை நாக்கில் வழுக்கி கடித்துக் கொண்டே சாந்தன் எல்லாருக்கும் சொன்னான்.

“ஆறாங்கட்டையில கண்ணிவெடியாம். ஒரு கப்டனோட ஐஞ்சு ஆமி சரி”

“எப்ப ? ”

“இப்ப மூன்று மணிக்கு. மடத்தடியில ஆமி நிக்குது. சல்லிப் பக்கம் ஹெலிகொப்டர் பறக்குது பாக்கேல்லையா ? ”

பொன்னுத்துரையார் ஜெயத்தை நினைத்தார். அன்றைக்கு கதைத்துவிட்டு வந்தபின் இரண்டு நாளாக கொஞ்சம் நெஞ்செரிவு. அது முடிய, மழை பிடித்துவிட்டது. பால்காரக் கந்தசாமியையும் காணவில்லை. ஆறவிட்டால் பழங்கஞ்சியாகிவிடும். அவருக்கு குழப்பமாயிருந்தது.

மருமகன் நல்லதம்பியும் வேலை விட்டு வருகிற நேரம்! எங்க இன்னம் ஆளைக் காணேல்லை!

பல்லில் வைத்து நன்னிய வடையை முழுசாகக் கடிக்கும் ஆர்வமில்லாமல் தட்டத்தில் போட்டார் பொன்னுத்துரையார்.

நெஞ்சு உறைஞ்சு போனது போல ஒரு இறுக்கம்.

தெருவாசலில் ஆரோ மணியடிச்சுக் கேட்டது.

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்