திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
அதிகாலைச் சூரியனுக்குக் கண் கூசிய போதே அடுத்து வரப்போகிற காண்டாவனத்தின் காட்டம் தெரிந்தது. ஆறு மணிக்கே ஒரு அமுசடக்கமான புழுக்கம். தவணை முறையில் விட்டு விட்டு வந்தது காற்று. சூரியனுக்கும் காற்றுக்கும் இரகசிய உடன்படிக்கை ஏதாவது இருக்கிறதோ தெரியவில்லை – ‘நீ தகிக்கும் போது நான் அடக்கி வாசிப்பேன் என்று ‘.
என்ன வெய்யில் எறித்தாலும் பூக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டியிருக்கிற கிணற்றடியோர செம்பருத்திச்செடியும் நித்தியகல்யாணியும் பூத்துக் குலுங்கியிருந்தன. தினமும் கணக்குவழக்கில்லாமல் இப்படி பூத்துக் கொண்டேயிருந்தால் மொட்டுகளின் இருப்பு தீர்ந்து போகாதா என்ற சந்தேகம் வந்தது செல்வத்திற்கு.
கிட்டடியில் அடைகாத்து பொரித்தெடுத்த ஐஞ்சாறு பஞ்சுக் குஞ்சுகள் கீச் கீச் என்று பின்னால் வர, ராணியின் வெள்ளைக்கோழி தண்ணீர் ஓடி சேறாயிருந்த வாழைப்பாத்தியை வழமை போல உரிமையோடு கிண்டிக் கிளறி காலில் சிக்கிய நாக்கிலிப்புழுவை குதறிக் கொண்டிருந்தது. அது என்னவோ தெரியவில்லை – அந்த வெள்ளைக் கோழியைக் காணும் போதெல்லாம் ராணியின் நினைப்பு உடனே வந்து விடுகிறது. இரை வகையாக மாட்டிக்கொண்ட அந்தக் கணத்திலும் திடாரென ஞாபகம் வந்தாற் போல் தன் பார்வையின் எல்லையிலிருந்து பின்தங்கிவிட்ட ஒரு பழுப்புநிறக் குஞ்சைத் திரும்பிப் பார்த்து ‘காக் ‘ என்றது அந்தக் கோழி. அன்னையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஓடி வந்த குஞ்சை அள்ளி எடுத்துத் தடவ ஆசைதான். அவனுக்கு மனஞ் சரியில்லை. மாப்பிள்ளை வீட்டுக்குப் போன இடத்தில் மரியாதையீனப்பட்டு வந்தது எப்படி மறந்து போகும்!
கொய்யா மரத்தில் புதிதாகப் பிஞ்சுகள் பிடித்திருந்தன. எட்டுகிற தூரத்திலிருந்த முற்றிய காய்களைச் சுற்றி அணில் கோதாமலிருக்க அம்மா கட்டியிருந்த பழஞ்சீலைகளில் குறுக்குமறுக்காக கறுத்த தடிப்பான எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்த பின்புலத்தில் ஒரு அணிலின் அடர்த்தியான வால்மட்டும் அவ்வப்போது தோன்றி மறைந்தது. கொய்யாப் பழங்களை அணில்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாது எனத் தெரிந்திருந்தும் பழஞ்சீலை சுற்றிக்கட்டுவது நின்ற பாடில்லை.
செல்வம் அள்ளிய வாளித் தண்ணீரை தலையில் வார்த்தான். கிணற்றுநீர் மட்டம் வலுவாக கீழே போய்விட்டதால் கப்பி வாளியை நிறைய இழுக்க வேண்டியிருந்தது. கப்பி உருளை எண்ணையில்லாததால் கிறீச்சிட்டதில் எரிச்சல் உண்டாக, தோய்ந்த அரைகுறையோடு ஈரம் சொட்டச்சொட்ட பின்பக்கமாக அடுப்படிக்குள் போய் எண்ணைப் போத்தலோடும் சீலைத்துண்டோடும் வந்தான். எண்ணையை சீலையில் ஊற்றி கப்பி உருளையில் பூசிவிட்டு இழுக்க சத்தம் மாயமாய் மறைந்து போயிற்று. சிந்திய எண்ணைத் துளிகளால் கிணற்றுநீர் வானவில்லின் நிறம் எடுத்ததை பிறகுதான் கண்டான்.
இன்னும் சிறிது கவனம் எடுத்திருந்தால் எண்ணை கிணற்றுள் சிந்தியிருக்காது. எதையும் பொறுமையாக என்னால் செய்ய முடியாதோ! மாப்பிள்ளை வீட்டில் விசயத்தை வெல்லவென்று போய் இருந்ததையும் குழப்பிக் கொட்டிவிட்டு வந்தாயிற்று. வயசானவரென்றும் பாராமல் வேண்டாத வாதத்தில் இறங்கி தோற்றுப் போய் வந்தாயிற்று. அவர்கள் முகத்தில் இனி முழிக்க முடியாத படிக்கு கத்திப் பேசிவிட்டு வந்தாயிற்று. தங்கச்சியின் காரியத்தை இனி வேறு இடத்தில் அரிவரியிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். முதலில் தம்பியின் விசயத்தில் தோல்வி. இப்போது தங்கச்சியின் விசயத்திலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.
எனக்கு எதையுமே ஒழுங்காகக் கையாளத் தெரியவில்லை. மச்சான் சொன்ன மாதிரி நேரில் பேசியிருந்தால் தம்பியைக் கூட்டி வந்திருக்கலாம். தங்கச்சியின் விசயத்தில் கிழவரின் கையைக்காலைப் பிடிச்சிருந்தால் ஒப்பேற்றியிருக்கலாம். என்னிடத்தில் என்னவோ குறையிருக்கு!
வேப்பை உச்சிக்கு குச்சியொன்றைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு மீண்டும் பறந்து போனது ஒரு காகம். பறந்து போன அடுத்த கணத்தில் கூட்டிலிருந்து கொத்தாக ஏதோ கீழே விழுந்ததையும் விழுந்த இடத்தில் குச்சுகள், தும்புகள், வைக்கோல் இழைகள் சிதறியதையும் கண்டான். அது தெரியாமல், அந்த மடைக்காகம் தவறாமல் அடுத்தடுத்து குச்சிகளைக் கொண்டு வந்து சேர்க்கத்தான் போகிறது என நினைத்தான் அவன்.
தலையைத் துவட்டிக் கொண்டு வாழைகளுக்குள் வந்து நின்றான். இதரை வாழையடியில் நிலத்தைப் பிளந்து கொண்டு இரண்டு குட்டிகள் கூரிய முனையோடு முகம் காட்டின. பட்டுப் போன்ற அவைகளின் ஸ்பரிசத்தைக் குந்தியிருந்து அனுபவிக்க விருப்பந்தான். அவனுக்கு இன்றைக்கு மனஞ் சரியில்லை.
இந்த மனதிற்கு எல்லாமே நினைத்த மாதிரி நடக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் சோர்ந்து போகப் பார்க்கிறது. அந்தச் சோர்வில் எதிர்காலம் இருண்டு போய்விட்டதாகத் தோன்றுகிறது. சில நாட்கள் சென்ற பின்னரோ அல்லது நினைத்த மாதிரி இன்னொரு விடயம் நடந்தேறுகிற போதோ மனம் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்குகிறது. எப்படிப் பார்த்தாலும் காலம் தான் கண்கண்ட மருந்து.
தன் விடயத்தில் காலம் ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்பது போலவும் தன்னில் பிடித்திருக்கும் சோர்வு நெடுங்காலத்திற்கு தீராது போலவும் அவன் நினைத்தான். வீட்டிற்குள்ளோ முன் முற்றத்திற்கோ போனால் அம்மாவின் முகத்தில் முழிக்க வேண்டி வரும். முழுசா நாலு மாசமாச்சு வந்து – என்னத்தைச் செய்து கிழிச்சனி என்று அம்மா ஒருபோதும் கேட்கமாட்டாள். அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். கனடாவிற்குத் திரும்ப இன்னும் நாலு நாட்களேயிருக்கிற உண்மை அந்தக் கணத்தில் அநியாயத்திற்கு ஞாபகத்தில் தட்ட அடிவயிற்றில் கலக்கிக் கொண்டு வந்தது. புறப்படவிருக்கும் நாள் குறுகக் குறுக புண்ணில் புளி தடவிய வேகரம்!
“தம்பி, மாமா ஆள் விட்டிருக்கிறார். ஒருக்கா அவசரமா வந்திட்டுப் போகட்டாம். ஆரோ உன்னைக் காண வந்திருக்கினமாம். ‘ முருங்கைக்கீரை வார்ந்து கொண்டிருந்த சுளகுக் கையோடு வந்து சொல்லிவிட்டு உடனேயே திரும்பினாள் சின்னம்மா.
“ஓம் போறன்.”
சின்னம்மா அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்ப்பது போல ஒரு மின்னல் வெட்டிற்று. இரண்டொரு நாளாக அவனும் பார்க்கிறான் – அம்மாவின் முகம் வழக்கமான முகமாக இல்லை. ஆனால் சின்னம்மா எதையுமே மனதில் வைத்து நடக்கிற மனுசியல்லவே! எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறது. வீட்டிற்குள் வந்து சட்டையை மாட்டினோமா நடந்தோமா என்று விரைவு கொண்டான். சட்டைப் பொத்தான் இடம் மாறி விழுந்தது. அவசரத்தில் இழுக்க மறந்த தலையை விரல்களால் நீவி விட்டான்.
தெருவில் போவோர் வருவோரின் முகங்கள் கோரமானதாகத் தெரிந்தன. சைக்கிள் கரியரில் இரண்டாள் உயரத்திற்கு கொள்ளிக்கட்டுகள் கட்டிக் கொண்டு அந்தரத்தில் வந்த ஒருவன் முட்ட வந்தவன் போலவே கிட்ட வந்து விலகிப் போனதை ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டு நிற்பதுக்கிடையில் வழக்கமாக வருகிற, அதிலும் கொஞ்ச நாட்களில் நன்றாக அறிமுகமாகிவிட்ட மரக்கறி வியாபாரி, அவனுக்கு எரிச்சலூட்டுவதற்காகவே தேவைக்கதிகமாக கூவிக் கொண்டு போனது போல் தோன்றிற்று. பின்னால் வந்த ஆட்டோக்காரன் கூட பக்கத்தில் வந்து ஹோர்ன் அடித்து தொத்துப்பறியில் விலகிச் சென்றான்.
இன்றைக்கு முழித்த முழிப்புச் சரியில்லை. கைமணிக்கூட்டில் திகதியைப் பார்த்தான் – ஏப்றில் 22. கூட்டுத்தொகை நாலு. நாலு நமக்கு ஒத்துவராது! மாமா வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கிறதோ!
வளவுவாசலில் நிற்பாட்டியிருந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என ஊகிக்க முடியாமல் உள்ளே போனான். விறாந்தை சாய்மனக்கதிரையில் தோளில் சால்வையோடு தெளிவான முகத்தில் இருந்த மாமா வா செல்வம் என்று வரவேற்றார். அருகில் காலைப்பூசைக்குப் போய் வந்த சந்தண நெற்றியோடு சிவலோகநாதன். எப்போது கண்டாலும் ஓடி வந்து கால்களுக்குள் பின்னுகிற மாமாவீட்டு நாய் முன்பின் தெரியாத சிவலோகநாதனுடன் அதற்குள் நெருக்கமாகி விட்ட மாதிரி பக்கத்தில் நின்று அவனுக்கு வெறுப்பேற்றியது.
மாமாவிடம் புகார் சொல்ல வந்திருக்கிறானோ! என்ன சொல்றான் பாப்பம். வந்திருப்பவனிடம் விருந்தோம்பலுக்குத்தானும் பல்காட்டும் சம்பிரதாயம் வரப் பெறாதவனாய் விறாந்தைக்கட்டில் ஏறினான். கிழவன் அவ்வளவு பேசியதற்கு ஒரு வார்த்தை மரியாதைக்குத்தானும் சொல்லாதவன் எந்த முகத்தோடு இங்கு வந்திருக்கிறான்!
“என்ன மாமா கூப்பிட்டனுப்பினீங்க ?”
“இரு செல்வம்.”
வெளியில ஒரு வேலையிருக்கு போக வேனும் சொல்லுங்க என்றான். அது மாமாவிற்குச் சொன்ன பதிலல்ல – சிவலோகநாதனைக் குறி வைத்து எறிந்த கணைகளில் ஒன்று.
“இரன் சொல்றன்.”
பக்கத்திலிருப்பவனைப் பற்றிய பிரக்ஞை சிறிதும் இல்லாதவனாகத் தன்னைக் காட்டிக் கொள்வதில் மிகுந்த அக்கறையுடன் மாமாவின் தலைமாட்டில் வந்து கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு, அதனாலேயே திருப்தியுற்றவன் போல இருந்தான். நாயை தன் பக்கத்தில் பலாத்காரமாக அழைத்து தலையைத் தடவிக் கொடுத்தான்.
“நேற்று வீட்டை போனனியாம்.”
“ம்.”
தம்பி ஏதோ சொல்ல வந்திருக்கு என்று மாமா சொன்ன உடனேயே நிலத்தோடு பேசுவது போல குனிந்தபடி சிவலோகநாதன் பேசினான்.
‘நேற்று நடந்ததுக்கு என்னை மன்னிச்சிருங்க, அப்பா உங்களோட அப்படி பேச வேனும் என்டு பேசேல்லை. எல்லாம் என்ர பிழை. நான்தான் சின்ன விசயத்தை ஊதிப் பெரிசாக்கிப் போட்டன். அப்படி வரும் இப்படி வரும் என்டு பயந்து போய் வீட்டாக்களையும் பயம் காட்டிப் போட்டன். நான் விட்ட பிழையை நான்தான் சரி செய்ய வேனும். உங்களெல்லாருக்கும் வீணா மனக்கலக்கத்தை உண்டு பண்ணீற்றன் ‘.
சிறிது நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன் நீங்க எப்ப கனடா போறீங்க ? என்று கேட்டான்.
பதில் வராமலிருக்க, 29ந் திகதி நிக்க மாட்டாங்களா ? என்று மீண்டும் கேட்டுவிட்டு காளிகோயில் ஐயரிட்டை நல்ல நாள் கேட்டனான். 29ந்திகதி இரவு ஏழரை மணிக்கு நல்ல நேரமாம். எங்கட எழுத்தை அன்டைக்கு வைக்கலாமென்டுதான் கேக்கிறன் என்றான்.
கேட்டவுடன் பதில் சொன்னதாக இருக்கக் கூடாதென்ற ஜாக்கிரதையுடன் இருந்த செல்வம் எதிர்க்கேள்வி மட்டும் கேட்டான்.
“அம்மா அப்பா ஒத்துக் கொண்டாங்களோ ?”
அது பிரச்னையில்லை. என் விருப்பத்துக்கு மாறாகப் போக மாட்டாங்க என்றான் சிவலோகநாதன்.
செல்வம் டக்கென்று வியர்த்துப் போனான். தலைப்பாரம் காணாமல் போயிற்று. உண்மையைச் சொல்வதானால் தம்பியினால் உண்டான குழப்பம் அவன் வரமாட்டானென ஓரளவிற்கு புரிந்து போனபின் குறைந்து போயிருக்க, அந்த இடைவெளியை தங்கச்சியின் குழப்பம் மனம் முழுக்க நிறைத்திருந்தது. இப்போது குழப்பத்திற்குக் காரணகர்த்தாவே நல்ல தீர்வோடு வந்திருக்கிறான்.
“உங்க லீவு எக்ஸ்ரென்ட் பண்ண முடியாட்டி வேற நேரம் கேட்டு வரட்டா ?”
இல்லைத்தம்பி என்று செல்வம் அவசரமாகத் தடுத்தான். ஐயர் சொன்ன திகதியிலேயே வைச்சுக் கொள்ளுவம். நான் நேற்றுப் பேசினதை மனசில வைச்சுக் கொள்ளாதீங்க, குழப்பத்தில இருந்ததால் டக்கென்டு பொறுமையிழந்து போச்சு.
குத்துக்கல்லாட்டம் இருந்த மாமா வாய் திறந்தார்.
“இதுக்குத்தான் சொல்றது ஆறுதலா மனம் விட்டுப் பேசினா பிரச்னை தானாப் போயிரும் என்டு. இதில ஆரையும் பிழை சொல்லேலாது நாட்டு நிலைமை அப்படி. சரி அந்தப் பஞ்சாங்கத்தை எடுத்து வா.”
செல்வம் சாவி கொடுத்த பொம்மையானான். பஞ்சாங்கம் எடுத்து வந்தான். மாமாவிடம் கொடுத்துவிட்டு கைகட்டி நின்றான். அவனுக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது. ஆர்வமும் இல்லை. மாமா இதிலெல்லாம் கவனமாக இருப்பார். திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டுச் சொன்னார்.
“எல்லா நாளும் நல்ல நாள்தான். ஏதோ மன ஆறுதலுக்காக பாத்துப் பாத்துப் பழகிப் போச்சு. 29ந் திகதி இரவு நல்ல நேரந்தான். என்ன சொல்றீங்க இரண்டு பேரும்.”
அவர்கள் ஆளையாள் பார்த்து மெலிதாகச் சிரித்து தலையாட்டினார்கள்.
“அப்ப நான் வாறன். எங்க பக்கத்தில நாங்க நாலு பேருந்தான். சிம்பிளா செய்தா நல்லதென்டு நினைக்கிறன்.”
“எங்க பக்கத்தில நாங்களும் மாமாவுந்தான்.”
“அப்ப நான் வாறன் அத்தான்”
சிவலோகநாதன் எழுந்தான். திருமணத்தால் உண்டாகிற உறவுமுறைகள் தாலி கட்டுக்குப் பின்னரே தீர்மானப்படுவதுதான் வழக்கம். இப்போதே உறவுமுறையைச் சொல்லி அழைத்து மிக நெருக்கமாகி விட்ட அவனை மொத்தமாகப் பிடித்துப் போயிற்று செல்வத்திற்கு.
“இரு தம்பி. முதன்முதலில வீட்டுக்கு வந்திருக்கிறாய். ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டுப் போ என்றார் மாமா.”
எழுந்தவன் இருந்தான். செல்வம் எழுந்து உள்ளே போய் வந்த சற்று நேரத்தில் இரண்டு பேருக்கும் மாமி சுடச்சுட கோப்பி கொண்டு வந்தாள். குடித்த கையோடு சிவலோகநாதன் புறப்பட, வாசல்வரைக்கும் கூடவே போய் மோட்டார் சைக்கிள் புறப்பட்டு தெருச்சந்தியில் மறையும் வரை நின்று கையசைத்துவிட்டு வந்து இருந்தான்.
மாமா சொன்னார். “செல்வம் உன்னோட ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேனும் இப்ப உனக்கு ஏதும் வேலையிருக்கா ?”
“இல்லை மாமா சொல்லுங்க.”
“உன் விசயத்தைப் பற்றித்தான்.”
“என்னைப் பற்றி என்ன ?”
“நீ தனியொரு ஆளா நின்டு இந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறாய். வயசும் ஏறுது. தான் பெத்த பிள்ளைகளுக்காக இவ்வளவு காலமும் நீ கல்யாணம் கட்டாமலிருக்கிறதைப் பற்றி அம்மாவுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கு. செவ்வந்தியின் எழுத்தோட உன் எழுத்தையும் வைச்சா நல்லதென்டு நினைக்கிறன். நீ என்ன சொல்றாய்.”
“அதுக்கென்ன அவசரம் மாமா இப்ப.”
“அம்மாதான் ஒரே பிடியா நிக்கிறா. இனிமே நீ எப்பப்ப வரப் போறியோ. எனக்கும் ஏலாது. அப்பாக்கும் ஏலாது. நல்ல காரியத்தை இனிமேலும் தள்ளிப் போடக்கூடாது. அம்மா சொல்லத்தான் இருந்தவ. தம்பியிட குழப்பத்தால முடியாமப் போச்சுது.”
“தம்பியிட விசயத்தை இன்னம் அம்மாட்டை சொல்லேல்லை. அதுக்குள்ள இதெல்லாம் வேண்டாம் மாமா.”
“அதை என்னட்டை விடு. நீ போறதுக்கு முதல் பிள்ளையைப் பாத்தால் என்ன ?”
மாமா!!!
“ஏன் ?”
“நீங்க பொம்பிளை பகுதிக்கு ஏதாவது நம்பிக்கை குடுத்திட்டாங்களா ?”
“இன்னும் இல்லை. உன் முடிவு தெரியாம எப்படிச் சொல்றது ?”
“இப்ப வேணாம் மாமா.”
“ஏன் ?”
அவன் நிலம் பார்த்தான். பின்னல் கதிரையில் பிய்ந்து தொங்கிய பிரம்பினை உடைத்து நார் நாராகக் கிழித்தான். ஏற்கனவே வீட்டில் குழப்பம் மிகுந்திருக்கும் போது எதைச் சொல்லக் கூடாதென நினைத்திருந்தானோ அதை தயங்கித் தயங்கி பட்டும் படாமலும் சொன்னான். டானியல் தனக்குப் பெண் பார்த்ததை சொன்னான். அந்தப் பெண்ணின் சமயத்தை மட்டும் குறிப்பிடவில்லை. நேருக்கு நேர் சொல்வதை விட கனடாவிலிருந்து கடித மூலம் எழுதுவது அவனுக்கு வசதியானது. நல்ல சமயம் வரும் போது அவர்கள் கிறீஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வீட்டார் ஏற்றுக் கொள்வதில் பிரச்னையிருக்காது என அவன் நம்பினான்.
“ஆர் ஆக்கள் ?”
“மானிப்பாய் ஆக்கள். ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளை.”
“உனக்குப் பிடிச்சிருக்கா ?”
“ம்.”
“ஏன் முதலில சொல்லேல்லை ?”
“தம்பீர பிரச்னையில எப்படிச் சொல்றதென்டுதான்.”
“சரி நீ தங்கச்சியின்ரை எழுத்து வேலையைப் பார். லீவுக்கு எழுத வேனுமல்லோ ?”
“ஓம் இன்னம் பத்து நாள் கூடக் கேட்க வேனும்.”
மாமாவைச் சரிக்கட்டிய நம்பிக்கை வந்தது. எந்தப் பிரச்னையாயினும் மிகவும் தெளிவாகச் சிந்திக்கக் கூடியவர் மாமா. அவர் ஒப்புக்கொண்டால் மொத்தக் குடும்பமே ஏற்றுக் கொண்டதிற்குச் சரி. மனப்பாரம் எவ்வளவோ இறங்கிவிட்டது. அவன் உள்ளே எட்டி மாமியிடம் சொல்லிக் கொண்டான். அறையில் புத்தகமும் கையுமாயிருந்த ஆதியிடம் நல்லாப் படிக்க வேனும் பரீட்சை கிட்டுதல்லோ என்று சொல்லி தலையைத் தடவி விட்டான். தெருவில் இறங்கி நடந்தான். சரியாக மாட்டியிராத சட்டைப் பொத்தான் இப்போது அவன் கண்ணில் பட்டது.
சைக்கிள்களில் வந்த இரண்டு பொடியன்கள் விசில் அடித்துக் கொண்டு போனார்கள். எதிரெதிராக வந்த ஆட்டோக்காரர்கள் பக்கம் பக்கமாக நடுத்தெருவை அடைத்துக் கொண்டு நின்று ஏதோ பேசிவிட்டுப் போனார்கள். சடசடத்த ஆட்டோக்களின் சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. அவன் புறப்பட்டு வந்த போதிருந்த சூழலுக்கும் இப்போதுள்ள பரபரப்பிற்கும் வித்தியாசமிருந்தது. சலூன் வாசலில் அந்தோனி நின்று கொண்டிருந்தார். உள்ளே வாடிக்கையாளர் யாருமில்லை.
“என்னன்னை ஏதும் பிரச்னையா ? அந்தோனியிடம் கேட்க, அவர் அவனை உள்ளே கூட்டிப் போய் பக்கத்தில் எவரும் இல்லாமலிருந்தும் யாரோ இருப்பதான கவனத்தோடு காதில் குசுகுசுத்தார்.
ஆனையிறவுக் காம்ப் விழுந்துட்டுதாம். புலிக்கொடி பறக்குதாம்!
karulsubramaniam@yahoo.com
- நாம் புதியவர்கள்
- வீீடு
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பட்டேல்கிரி
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- நூல் வெளியீட்டு விழா
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- ஒளவை பிறக்க வில்லையா ?
- விந்தையென்ன கூறாயோ ?
- மாலைநேரத்தின் பிரவேசம்
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மழையாக நீ வேண்டும் – 1
- பாட்டி கதை
- கவிதைகள்
- அழவேண்டும்
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- உள்ளத்தனைய உயர்வு
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- பேசாத பேச்சு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- விடியும்!- நாவல் – (37)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- மரம்
- பிறவி நாடகம்
- வரமொன்று வேண்டும்
- இறைவன் எங்கே ?
- சுண்டெலி
- பூரணம்
- என் கேள்வி..
- நீயின்றி …
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- கவிதைக் கோட்பாடு பற்றி…