விடியும்! நாவல் – (17)

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


‘றத்தம்’ ஒரேயடியாக உறைஞ்சு கட்டிபத்தி தலை பொறுக்க விறைச்சது போல இருந்தது செல்வத்திற்கு அதைக் கேட்டதும்.

“அவரையா! ”

அவன் சத்தம் வெறும் காற்றாய் நுனி நாக்கோடு அமிழ்ந்து குருத்தோலை இழைத்து ஊதிய முதல் பீப்பீ ஒலியின் ராகம் தவறிய சரடாய் கசிந்தது. குப்பென்று வியர்த்து சட்டையில் ஒட்டிப் பிடித்த மசமசப்பு. ஏலவே காய்த்து வடமாய்க் கறுத்து பாதி புண்ணாய்ப் போன கழுத்தில் வண்டிப் பாரம் திடாரென விழுந்து அழுத்த, தலை நிமிர மாட்டாத மாட்டின் வெளிக்காட்ட வொண்ணாத வேதனை!

“உம்மையா ? ”

கொழும்பு புறக்கோட்டை பஸ் ஸ்ராண்டில் திருகோணமலைக்குப் புறப்படத் தயாராய் நின்ற பஸ்ஸில் அருகிலிருந்த அவரிடமிருந்து ம்.. .. .. என்று கண்ணால் மட்டுமே பதில் வந்தது. பக்கத்தில் நின்று பார்த்துவிட்ட வந்த பதைபதைப்பில் இன்னும் பதட்டம் தீராத அவரது தேகவெக்கை செல்வத்திலும் அடித்தது. முன்னுக்கு பின்னுக்கு கேட்டு விடக்கூடாத ஜாக்கிரதையில் அவனை நேராய் நோக்காமல் அக்கம் பக்கமும் திரும்பாமல் தனக்குத் தானே கதைப்பவர் போன்று அடித்தொண்டையில் கீச்சினார்.

“வெள்ளவத்தை ராமகிருஸ்ண ஒழுங்கைல என்னடா சனமாக்கிடக்கென்டு பாத்தா பட்டப்பகல்.. .. .. அநாதை மாதிரி அந்த இடத்திலயே சீவன் போயிற்றுது. சுத்தி நின்ட ஆக்களிட்டை விசாரிச்சாப் பிறகுதான் ஆள் ஆரெண்டு தெரிஞ்சுது – குமார் பொன்னம்பலம் ”

சொல்லிவிட்டு எதுவுமே சொல்லாதவர் போல கண்ணாடி ஜன்னலை இழுத்து காற்றுக்கு வழி விட்டவராய் அப்பிராணி கணக்கில் வெளியே பார்த்தார். எதற்காக ஜன்னலைத் திறந்து விட்டாரோ அது வரவில்லை. பஸ்நிலைய நெரிசலில் வசமாக மாட்டிக் கொண்ட காற்று உள்ளே வரமுடியாமல் திணறியது போன்ற பிரமை. அவரைத் தாண்டி வெய்யில்தான் அவன் தோளில் எறித்தது.

பஸ் கெதீல போனாக் காணும் போல இருக்க ஒரு இளம் நொண்டிப் பிச்சைக்காரன் றபான் அடித்து பாடிக் கொண்டே ஏறினான். இருபதைத் தாண்டியிருக்க முடியாத அவன் தாண்டித் தாண்டி வந்தான். வலது குறைந்தவர்கள் வயிற்றுப்பாட்டுக்காக பாட்டுப்பாடி கை நீட்டுவது இளக்காரமாக அவனுக்கு இருப்பதில்லை. ஊனத்தை முன்னிலைப்படுத்தாமல் திறமையை பண்டமாற்றுச் செய்வது எப்படி பிச்சையெடுப்பதாகும் ? ஏலாதவனாயிருந்தும் தன்மானத்தை விட்டுக்கொடாதவன்தான் இப்படிச் செய்ய முடியும். ஊனம் மாத்திரம் இல்லாதிருந்தால் இருக்கும் திறமைக்கு இந்நேரம் ‘ரூபவாஹினி’ தொலைக்காட்சியை ஒரு கலக்குக் கலக்கியிருப்பான்.

வேறு சமயமானால் அந்த ஏழையைப் பார்க்கப் பெருமையாக இருந்திருக்கும். கருணையும் பொங்கி வழிந்திருக்கும். அவனது கணீர்க்குரலை ரசித்திருப்பான். மேளத்தில் லாவகமாகத் தவழும் விரல்களின் நளினத்தைச் சிலாகித்திருப்பான். ஐந்தோ பத்தோ இருக்கிறதை மனசோடு கொடுத்திருப்பான்.

இப்போது.. .. .. ‘இதுக்குள்ள இது வேற’ என்றுதான் இருந்தது.

தன் முகத்தைக் கணக்குப் போட்டுக் கொண்டு பக்கத்திலேயே நின்று கன நேரமாய் அவன் தாளம் போட்டது தொந்தரவாயிருந்தது இழவு வீட்டுத் துக்கத்தினிடையே பக்கத்து வீட்டில் பெரிதாக வைத்த சினிமாப்பாட்டு கேட்ட மாதிரி. விளங்காத சிங்கள வரிகளைக் கேட்க அலுப்பாயிருந்தது.

நீ போனாக் கானும்டாப்பா.. .. .. நினைத்ததை வெளியே சொல்லாமல் சேட் பொக்கற்றைத் துளாவி இருந்த சில்லறைக் காசை அப்படியே பொத்திக் கொடுத்தான். வேறு இரண்டொரு பேரும் சில்லறை கொடுத்தார்கள். ஒருவர் தாளாக நீட்டினார். தானும் தாளாகக் கொடுத்திருக்கலாமோ என்று பட்டது. தொண்டை கிழியக் கத்தியதற்கு கொடுத்தது பத்தாதுதான்.

அவன் கீழிறங்கிப் போய் மறைந்ததுதான் தாமதம் நீறு பூத்த நெருப்பின் புகைச்சல் மீண்டும்.

கடவுளே எப்பேர்க்கொத்த சீவன் போயிற்றுது! அநியாயத்துக்கெதிராக கொதித்தெழும்பிய மனுசன். கூனிக் குறுகிப் போன சனத்தை அப்பப்ப முண்டு குடுத்து நிமிர்த்தி விட்ட சீவன். சிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே நின்று உயிர்ப்பயமின்றி உரக்கக் குரல் கொடுத்த வீரன். கொழும்பிலேயே இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகிற அநியாயங்களை பேச்சிலும் எழுத்திலும் முழு உலகிற்கும் பகிரங்கப்படுத்திய அஞ்சாநெஞ்சன்.

“மலய்.. .. .. மலய்.. .. .. திரிக்குணாமலய்” .. .. கட்டைக் கால்ச்சட்டைப் பையனொருவன் வண்டிக்கு ஆள் பிடிக்க வானத்திற்கு கத்திக் கொண்டிருந்தான். பெரிதாக சத்தம் வைக்கத்தான் சில்லறை கொடுக்கிறார்கள். கவனம் முழுக்க கையிலிருந்த சிகரட்டின் கட்டாக் கடைசி மிச்சத்தை ஆழத்துக்கு இழுத்து நெஞ்சுக்குள் விழுங்கி ஊதுவதிலேயே இருந்தது,

மிஞ்சி மிஞ்சிப் போனா, பதினைந்து அல்லது பதினாறு வயசிருக்கும். பதினாறை இனிக்கிற வயசென்பார்கள். சாப்பிட்ட மட்டில் செமிக்கிற வயசு. செமித்த மட்டில் நொறுக்குத்தீன் தேடுகிற வயசு. ஒரு இடத்தில் கால் தரிக்காமல் துள்ளித் திரிகிற வயசு.

இவனைப் பார்த்தால் அந்த வயசுக்கான எந்த இனிமையையும் நுகராமல் பிஞ்சிலே வெம்பிப் பழுத்து ஒரே பாய்ச்சலில் பெரிய மனிதனாய் மாறி விட்டவனாகவே தெரிந்தான். கொழும்பு எங்கிலும் ‘உனக்குள்ளே சிங்கம் இருக்கிறதா’ என்று கேட்கிற பிரம்மாண்டமான குடிவகை விளம்பரங்களுக்குக் குறைவில்லை. உள்ளுக்குள் இருக்கிற மிருகத்தை உசுப்பி விடுகிற இவ்வகை விளம்பரங்கள் இந்தச் சிறுவனை சும்மா விட்டுவிடுமா என்ன!

பஸ் நகரத் தொடங்கியதும் ‘வெட்டிமுறித்த’ களைப்பிற்கு இன்னொரு சிகரட் பற்றி நெஞ்சுக்குள் இழுத்து விட்டான். ஆர் பெத்த பிள்ளையோ!

வண்டி வேகமாகி விட, பொடியனில் பொதிந்திருந்த கவனம் தடம் மாறிற்று.

“ஆர் சுட்டிருப்பாங்கள் ? ”.. .. .. வண்டிச் சத்தத்தில் ஆருக்கும் கேளாதென்ற தைரியத்தில் அப்படியே கேட்டாலும் தமிழ் எங்கே விளங்கப் போகிறது என்ற துணிவில் பக்கத்தில் கேட்டான் செல்வம். பக்கத்திலிருந்தவரை ஊரில் கண்டு பழக்கம் ஆனால் முன்பின் கதைத்ததில்லை. பக்கத்தில் இருக்க நேரிட்ட பயணத்தால் உண்டான நெருக்கம்.

“வேற ஆர் ? கொழும்பில எல்லாரும் தலையாட்டுகிற போது இவர் மட்டும் கத்திப் பேசினாப் பொறுக்குமோ ? போன கிழமைதான் ஜனாதிபதி அம்மாவுக்கு எதிராக காட்டசாட்டமாக அறிக்கை விட்டவர். அப்பவே நினைச்சன் என்னவோ நடக்கப் போகுதென்டு”

பின்னால் வந்ததற்கு வழிவிட திடாரென வேகம் குறைந்து பஸ் ஓரமாகி நின்றது. அவர் ஜன்னலுக்கு வெளியே மூக்கை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தார். சண்டைத் தாங்கியொன்று வேவு பார்த்து வழிகாட்டிப் போக நீண்ட கொள்கலன்களை ஏற்றிய பார வண்டிகள் பின்னால்.. .. .. ஒன்று இரண்டு மூன்று நாலு ஐந்து .. .. எல்லாமாகப் பத்து அணி வகுத்துப் போய் பார்வையிலிருந்து மறைவதற்குள் வியர்த்து வழிந்தது.

கண்டெயினரில் ஆயுதம் போகுது. சமாதானத்துக்கான சண்டையல்லோ நடக்குது – அதுதான் வண்டி வண்டியாப் போகுது என்று வாயைக் கையால் மூடிக்கொண்டு சொல்லிப் பெருமூச்சு விட்டார் அவர்.

“இவ்வளவுமா! ”.. .. .. கிணற்றுக்கட்டில் ஓங்கியடித்துப் பிழிந்து போட்ட துணியாக ஒரு கணம் துவண்டு போயிற்று மனம். ஏற்கனவே எல்லாந் தரைமட்டம். இதுவும் போனால்!

குருநாகல் கடந்து பலாமரக்காட்டின் கரும்பச்சைப் போர்வைக்குள் பஸ் போய்க் கொண்டிருக்கும் போது ஒன்றுக்கு முடுக்கியது. பயக்கெடுதியில் உண்டான முடுக்கு. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அவனுக்கு இப்படித்தான். தெருவில் இறங்கி ஊசாடப் பயம். மனுசரோடு சளசண்டியாக கதைக்கப் பயம். எதுக்கு வம்பு என்று ஒதுங்கியே இருந்ததால் படிந்துவிட்ட பயம். பக்கத்து நண்பரும் அதற்குப் பிறகு அடைகாத்த கோழியாய் அசையாமலிருந்தார் அவருக்கு இவன் பரவாயில்லை மாதிரி.

கொழும்பு தலைநகர எல்லை கடந்து, வாகன நெரிசல் குறைந்து பஸ் ஓட ஓட பாய்ந்து வந்த தெருவோர மரங்கள் மறைந்து வெறும் பச்சையாய்த் தெரிந்தது. முந்தநாள் ஊரில் நடந்த சுற்றிவளைப்பு நெற்றிக்குள்ளிருந்து கிளர்ந்து பச்சையை மறைத்தது. மீட்டிப் பார்க்க விரும்பாத நிகழ்வு. விருப்பமோ இல்லையோ வந்துதான் தீருவேன் என்ற பலாத்கார முற்றுகை.

எல்லாத்தையும் ஒன்றுவிடாமல் நிகழ்ச்சிவாரியாக பதிவுசெய்து கொள்ளும் ஜீவயந்திரம் மூளை. வேண்டியவற்றை மீட்டிப் பார்க்கலாம். வேண்டாதவை காலஓட்டத்தில் தேய்ந்து மறந்தும் போகும். ஆனால் ஒன்று. சிலதை மட்டும் கேட்டுக்கேள்வியின்றி திணித்து வரிவரியாய் ஞாபகப்படுத்தும் கெட்ட குணம் மூளைக்குண்டு. அதிலும் பிரயாணங்களில் அதன் வீரியம் நிரம்பி வழியும்.

“இந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒருவர் மட்டும் இருக்கலாம். மற்றவர்கள் உடனடியாக கலாசார மண்டபத்திற்குப் போக வேண்டும். ஓட முயற்சித்தால் சுடப்படுவீர்கள்”

காகங்கள் இன்னும் கரையத் தொடங்காத விடிந்தும் விடியாத காலை. காலங்களிலேயே இது ஒரு அற்புதமான கூறு. இருட்டுக்கும் ஒளிக்கும் இடைப்பட்ட கலவை. மரங்களுக்குப் புகையடித்து விட்ட மாதிரி பனி படர்ந்திருக்கும் பொழுது. இன்னும் கொஞ்சம் படுப்பம் என்று தலைமுழுக்கப் போர்த்துக் கொண்டு கால்களுக்குள் கைஒடுக்கி சுருண்டு சுகம் காணும் நேரம்.

நித்திரைப்பாயில் யாரோ பிடித்து உலுக்கியதைப் போல் திடுக்கிட்டு ஏமலாந்தினான் செல்வம். தடாரென எழுந்து முற்றத்தில் பாய்ந்து சுவரோடு ஒட்டினான். எட்டிப் பார்த்தால் தலை தெரியும். கதவைத் திறக்கத் துணிவில்லை. நடுமுற்றத்தில் வந்து காது கொடுத்தான். மீன்காரன் சந்திக்குச் சந்தி கூவிக் கொண்டே போவது போல் ‘ஓடினால் சூடு’ அறிவித்தல் கேட்டது. மனிதர்களைச் சுடுவது தோசை சுடுவது போல ஆகிவிட்டது.

தெருவின் இருமருங்கிலும் மறிப்பாக நிற்கும் ஆமிகளை கதவிடுக்கால் பார்த்தான். இருட்டுப்பச்சை படங்கு போர்த்த பெரிய ட்றக்கிலிருந்து மேலும் ஆமிகள் டப்டப்பென இறங்கினார்கள். முன்வளவு தகரவேலி ஓட்டையால் பதுங்கி மூக்கை நுழைத்த நாயொன்று உடனேயே உள்ளே இழுத்துக் கொண்டது. நாய்களும் ஆமிகளைப் புரிந்திருந்தன.

வந்ததிலிருந்து பொலிசில் பதியச் சொல்லி சின்னம்மா தொந்தரவு செய்தது ஏன் என்று இப்போது புரிந்தது. வெளியிலிருந்து புதிதாக யார் வந்து வீட்டில் தங்கினாலும் பொலிசில் பதிய வேனும். பிறந்து வளர்ந்த சொந்த வீடானாலும் சரி. பதியாமலிருந்தால் பயங்கரவாதிகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

“சின்னம்மா இப்ப என்ன செய்யிறது ? ”

வீட்டுக்குள்ள வந்து எல்லாத்தையும் கொட்டிக் கிளறப் போறாங்கள். அறையளைத் திறந்து காட்ட வேனும். ஏன் என்டு எதுவும் கேக்கேலாது. பொலிசில பதிஞ்ச துண்டு கேப்பாங்கள். எல்லாம் றெடியா வைச்சிருக்க வேனும். நல்ல நேரம் நீ பதிஞ்சது என்று சொல்லிக்கொண்டே சின்னம்மா கடகடவென அலுவலில் இறங்கினாள்.

“ஆர் வீட்ட நிக்கிறது ? ”

“அப்பாவுக்கு ஏலாது. அவரை விட்டுட்டு நாங்கள் போவம். நீ வெளிக்கிடு”

இன்றைக்கு நேற்றா! பத்து வருசமாக நடக்குது. ஆனால் பரிமாணங்கள் மாறியுள்ளன. தெருவிற்குத் தெரு ரவுண்டப் பண்ணியவர்கள் இப்போது மொத்தமாக ஒரு பெரிய ஏரியாவை சுற்றி வளைக்கிறார்கள். ஆனால் வெட்ட வெட்ட வீரியமாகத் தளைக்கிற விந்தை கூடிப் போச்சு.

அண்ணா கோப்பியைக் குடியுங்க என்று செவ்வந்தி நீட்டினாள். அதற்குள் எப்படித்தான் ஆயத்தமானாளோ! எல்லாம் அனுபவ பாத்தியம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து விட்ட ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்துக் கொடுத்து மனக்காயங்கள் காய்த்துப் போய்விட்டன. வீடுகளில் குழந்தை, குமர், கிழடுகட்டை ஆருக்குமே சுற்றிவளைப்பில் விதிவிலக்கில்லை, நாய் பூனை ஆடு மாடு கோழி தவிர்த்து. வீட்டைத் திறந்து காட்ட, கேள்விக்கு மறுமொழி சொல்ல ஒரு ஆள் மட்டும் நிற்கலாம்.

கம்பளிச்சட்டைக்குள் மறைந்த அப்பா சாய்மனக்கதிரையிலிருந்து பிள்ளைகள் வெளிக்கிடும் பரபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா பயப்படுகிற அளவிற்கு சின்னம்மாவோ செவ்வந்தியோ பயந்ததாகத் தெரியவில்லை. பெண்கள் தாங்கிக் கொள்கிற அளவிற்கு ஆண்களால் முடிவதில்லை என்பது உண்மைதான்.

போட்டது போட்டபடியிருந்த தட்டுமுட்டுகளை தாயும் மகளும் சரி செய்தார்கள். முக்கியமாக காசு புழங்குகிற வீடாகத் தெரியக் கூடாது. கண்ணைக் குத்தும் பெறுமதியான பொருட்களை அலுமாரிக்குள் பக்குவப்படுத்தினார்கள். ஜன்னல்களைப் பூட்டி காற்றைத் துரத்தினார்கள். சுவாமி அறைக்குள் விளக்கு வைத்து கடவுளைக் கெஞ்சினார்கள். எல்லாம் சரியா என்று கடைசியாக ஒருதரம் கண்ணால் மேய்ந்தார்கள். ஆயத்தமானார்கள்.

“ஐடென்ரிகாட் எடுத்திற்றியா ? ” ஒருமுறைக்கு நாலு முறை எல்லாரையும் கேட்டார் அப்பா.

சுவரால் எட்டி வசந்தி குரல் கொடுத்தாள். பின்வளவால் ராணி முகம் தெரியாமல் கதைத்தாள்.

“அம்மா வெளிக்கிட்டாங்களா. அண்ணா எழும்பிற்றாரா ? ”

“ஓம் நாங்கள் வெளிக்கிடப் போறம். வாறீங்களா ? ”

“ஓம் இந்தா வாறம் ”

காளிகோயில் தேருக்குப் போவதென்றால் இப்படித்தான். வீடு தலைகீழாகப் போய்விடும். பாவாடையை ஒருக்கா இழுத்து விடம்மா என்று சரிகை சரசரக்க பின்னுக்கும் முன்னுக்கும் திரியும் செவ்வந்தி. என் கனகாம்பரமாலை கட்டியாச்சாம்மா என்று கத்தும் வசந்தி. இந்தப் பொட்டு சரியா பாரம்மா என்று சின்னம்மாவைக் கண்ணாடியாகப் பாவித்து நெற்றி காட்டும் ராணி. கனகம் ஒரு கையால் எல்லாத்துக்கும் ஈடு கொடுத்து தானும் வெளிக்கிடுவாள். அந்தரந்தான். ஆனால் அது ஆனந்த அந்தரம்.

இது! குறி போட வரிசை கட்டிப்போகிற மாடுகள் மாதிரி காலமை வெள்ளனை பிள்ளைகள் புறப்படுவதைப் பார்க்க அப்பாவுக்கு நெஞ்சு எரிந்தது.

“தம்பியைப் பற்றிக் கேட்டா ?” என்று பத்தாவது தடவையாக அப்பா சந்தேகத்துடன் கேட்டார். சின்னம்மாவின் முகம் மாறியதை செல்வம் கவனித்தான். அப்பா கீறல் விழுந்த ஓடியோ மாதிரி தொடர்ந்து ஒரே கேள்வியிலேயே நின்றார். அவர் கேட்கக் கேட்க இது வழக்கமான ரவுண்டப் இல்லையென்றே செல்வத்தின் உள்ளுணர்வு சொன்னது. ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேனும். பொடியன்கள் போன விசயம் பொலிசுக்குக் கசிந்திருக்குமோ! காட்டிக் கொடுக்க ஆளா இல்லை!

அதெல்லாம் கேட்க மாட்டாங்களப்பா என்று செவ்வந்தி தெம்பூட்டினாள். அப்பாவின் காதுகளை மறைத்து மப்ளர் கட்டி விட்டாள். சரியச் சொல்லி கம்பளியால் காலைப் போர்த்து மூடி விட்டாள். எழும்ப இயலாத வருத்தக்காரர் மாதிரி தெரிந்தால் நிறைய அலுப்புக் கொடுக்கமாட்டார்கள் என்பது அவளது சமீபத்தைய கண்டுபிடிப்பு.

செவ்வந்தியைப் பார்க்க அந்த வேளையிலும் செல்வத்திற்கு பிரமிப்பாயிருந்தது. வீட்டுக்கு ஒரு பிள்ளை போதும் இப்படி. சிதறாமல் பதறாமல் எல்லாத்தையும் தாங்கிக் கொள்கிற செட்டான பெண். சின்னம்மா பெற்ற பிள்ளை பின்ன எப்படியிருப்பாள்!

“தம்பி, அப்பா சரியா பயப்பிடுகிறார். நீங்க போங்க நான் நிக்கிறன். ” அப்பாவை தனியே விட்டுப் போக மனமில்லாமல் சின்னம்மா சொன்னாள்.

செல்வமும் செவ்வந்தியும் தெருக்கதவைத் திறக்க, வாசலிலேயே ஒரு ஆமி. கையில் பெயர் தெரியாத புதுரகத் துப்பாக்கி. இருட்டோடு எழும்பி வந்த சிடுசிடுப்பு முகத்தில். சிரிப்பது பிழையில்லையென நினைத்து செல்வம் சிரித்தான். மனுசர் சிரிச்சா பதிலுக்குச் சிரிப்பதுதான் முறை. சிரிக்காவிட்டால், உங்களோடு என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு என்றுதானே பொருள்! ஆமி சலனமில்லாமல் விறைப்பாக நின்றான்.

அந்தத் தெருவின் அத்தனை குடும்பங்களும் இப்பவோ எப்பவோ என ஊசலாடுகிற ஒரு கிழடுகட்டையை வீட்டில் விட்டுட்டு கனத்த நெஞ்சோடு கூட்டங் கூட்டமாக நடந்து கொண்டிருந்தன. சந்தியில் சைக்கிளில் வந்த பையனை இறங்கிப் போகச் சொன்னான் ஆமி. குறுக்கு ஒழுங்கையால் தெருவிற்குள் நுழைந்த பாண்காரனைத் தடுத்து வைத்திருந்தான். வாட்டிய பாணின் வாசனை சுற்றிலும் பரவியிருந்தது. கிண்ணியாவிலிருந்து கோழி முட்டை கொண்டு வருகிற மனுசி திரும்பிப் போய்க் கொண்டிருந்தாள் தன் வயிற்றலடித்த ரவுண்டப்பை நொந்தபடி.

செத்த வீட்டில் பறை தட்டின மாதிரி அடுத்த தெருவிலும் ‘ஓடினால் சூடு’ கேட்டது.

இன்றைய பொழுது இனி அவ்வளவுதான். இவர்கள் பரிசோதித்து முடிக்கிறதெப்ப சேதாரமில்லாமல் திரும்பி வாறதெப்ப! வெய்யில் காய்ந்து மனம் சூம்பி கருவாடாய்ப் போக வேண்டியதுதான்.

வழியெல்லாம் கொஞ்சம் விட்டு விட்டு எதிர் எதிராக ஒரு சோடி ஆமி நின்றார்கள். பூமாலையில் இடையிடையே இலை மடிச்சுக் கட்டின மாதிரி, ஆணும் பெண்ணுமாகக் கலந்திருந்தார்கள். பொம்பிளைகள்தான் சரியான அட்டகாசம் என்று வசந்தி குசுகுசுத்தாள். நிறையக் கூரைவீடுகள் இருந்த வளவிலிருந்து ஒரு பையன் வந்தான். கால்பந்து விளையாட்டுக்குப் போகிறவன் போல இருந்தான். எதையும் சுதந்திரமாகப் பார்க்கிற வயசு. விளையாட்டும் படிப்பும் சிரிப்பும் பகிடியுமாக திரிகிற வயசு. உயிராபத்தைக் கூட புரிந்து கொள்ளாத வயசு.

முறைக்கு முறை வரும் ரவுண்டப் பார்த்து பயம் தெளிந்து விட்டது பிள்ளைக்கு.

தம்பி ஜெயம் மனதில் வந்தான்.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்