This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue
வேதா மஹாலஷ்மி
தூவான நெருக்கத்தில் தனிமை நிச்சயம் கொடுமை தான்! தாங்கவே முடியாத தர்மசங்கடமான ஒரு வரம், இந்த இருபத்தெட்டு வயது இரவுக் குளுமை.. அனுபவித்துப் பார்த்தாலே புரியும் அதன் மென்மையும் அதில் சுகம் இன்மையும்.. மனசு பாட்டுக்கு என்னென்னவோ உளறியபடி இருக்க, தூரத்தில் சிக்னல் போட்டது அந்த இருட்டிலும் துல்லியமாகத் தெரிந்தது. காத்திருக்கக் காத்திருக்க, காலம் மட்டும் காது நுனிகளில் காற்றின் வருடலாய் கதைகள் சொல்லியபடி… தண்டவாளம் மெல்ல அதிர ஆரம்பித்தது. ரயில் எந்த ஊரில் இருந்து வருகிறது ? எந்த ஊருக்குப் போகிறது ? பெட்டியும் இருக்கையும் அதே தான்.. பெயர்ப்பலகையை மட்டும் மாற்றினால் புறப்படும் இடமும் சேரும் இடமும் வேறு வேறாகிவிடும். உலகத்தில் எல்லாமே மாற்றத்துக்குக் கட்டுப்பட்டவை… மனசு மீண்டும் உளற ஆரம்பித்தது.
‘நான் உன்னை அழைத்துப் போக வருவேன் ‘ என்று நினைத்திருப்பாயா என்ன ? இல்லை, வரவேண்டும் என்று மனதில் ஆசைப்பட்டிருப்பாய், ஆனால் ‘வரமாட்டான் ‘ என்று முடிவு செய்திருப்பாய்! என் பிடிவாதத்தால் உன்னை எத்தனை தடவைகள் சாகடித்திருக்கிறேன் ? உன் குழந்தை மனசை எப்படியெல்லாம் நோகடித்திருக்கிறேன் ? வா.. சீக்கிரம் வா.. பக்கம் பக்கமாய் நிறைய பேச வேண்டும், மனதில் இத்தனை மாதங்கள் பதுக்கி வைத்ததையெல்லாம்! என்ன செய்யட்டும் ? என் பாழாய்ப் போன தன்மானம் தடுக்கத்தான் செய்கிறது. உனக்காக வானம் கூட இன்று வசந்த கோலத்தில்.. உன் முகமாய் அழகு நிலவு.. அருகே ஒற்றையாய் ஒரு குட்டி நட்சத்திரம், உனக்காகப் பார்த்திருக்கும் என்னைப் போல… அய்யோ, என்ன இது ? மனசு ரயிலைத் தாண்டி வேகம் எடுக்கத் தொடங்கியது.
மார்கழிக் குளிரில் மயிர்க்காலெல்லாம் விறைத்தது. 4 மணிக்கு வரும் ரயில் இன்று அரை மணி தாமதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லியது அறிவிப்பு. இன்னும் சரியாக முக்கால் மணி நேரம் இருக்கிறது. எப்படியோ நடு இரவைக் கடந்தாயிற்று… மெல்ல மெல்ல காய்கறி மூட்டைகளும் மற்ற பார்சல்களும் வந்து குவிய ஆரம்பிக்க, உலகம் மெல்ல இயங்கத் தொடங்கியது. கண்களை மூடியபடி கொஞ்சம் தலைசாய்த்தேன். இதே போல் உன்னைக் கடைசியாக ஊருக்கு அனுப்பும்போது அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அப்போதும் கூட , நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாய், இடைமறித்து ‘இன்னொரு உயிர் ‘ என்று நீ எதைச் சொன்னாய் என்று கேட்டேன், மழுப்பியபடியே சென்று விட்டாய், அதற்கு இன்று வரை பதிலே சொல்லவில்லை… அவள் வந்ததும் என்ன பேசுவது ? எதை முதலில் பேசுவது ? அவள் சுகம் பற்றியா ? என்னைப் பற்றியா ? எப்படியும் அவளே கேட்பாள்… ‘எப்படிப்பா இருக்கீங்க ? ‘ சின்னக் கண்களில் சினேகம் நிறைய நிரப்பியபடி….
அந்த மெல்லிய முகம் மெல்ல மெல்ல மொட்டுவிட்டு மனசெல்லாம் பூக்க ஆரம்பித்தது. அவள் சொன்னது போல, பிரிவு தான் காதலை உணர்த்தும் அதிசய மருந்து! தூரம் போக அவள் முடிவு செய்ததும் உள்ளுக்குள் ஆற்றாமை பொங்கினாலும் தன்மானம் தடுத்ததால் எதையும் நான் அன்று வெளிக்காட்டவில்லை… அதை நிச்சயம் அவளும் கவனித்திருப்பாள். ‘உங்க ஒவ்வொரு ரேகையும் எனக்கு அத்துப்படி.. என்னை திசை திருப்ப நினைக்காதீங்க ‘ அவள் சொன்னது எத்தனை சரி ?!! கொஞ்ச காலம் விலகி இருக்க அவள் முடிவு செய்ததன் பலன், இன்று மனதளவில் எங்களுக்குள் தூரம் குறைந்து, கிட்டத்தட்ட மறைந்திருக்கிறது. இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான்! சம வயது ஆணைவிடவும் பெண்ணுக்கு நிறைய பக்குவம் அதிகம் என்று சொல்வது சரிதானோ ?
அவள் வந்ததும் நிறையப் பேச வேண்டும், இல்லை , இல்லை,.. அவளை நிறையப் பேசச் சொல்லிக் கேட்க வேண்டும். அவள் ‘அதுப்பா, இதுப்பா ‘ என்று ஒவ்வொன்றாய் அனுபவித்து விவரிப்பதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக, பாடச் சொல்லிக் கேட்க வேண்டும். இதயத்தின் பக்கம் உறுத்தியது மடித்து வைத்த கவிதைகள் இரண்டு.. அவளுக்காகவே எழுதியது… என்பதை இந்த முறையாவது பகிரங்கமாய் ஒப்புக்கொள்ள வேண்டும். வரட்டும்… நிச்சயம் நான் வந்திருப்பேனோ என்று கண்கள் தேடும் அழகை ஆசை தீரப் பார்க்க வேண்டும்; திடாரென்று முன்னே போய் நின்றால் என்ன ? ஒருவேளை ரயில் நிற்கும் முன்பே , சன்னல் வழியாக என்னப் பார்த்து விட்டால் ? ? சரி, வரட்டும்… அப்படியே அவள் மொத்தமும் சேர்த்து மனதால் அணைத்தபடி, எதை எதையோ நினைத்தபடி இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை!
கண்களை மெல்லத் திறந்தேன். மணி 5 ஆகி இருந்தது. ரயில் இன்னுமா வரவில்லை ? ஓ! பக்கத்தில் காய்கறி மூட்டையோடு யாரோ இருந்தார்களே… அவர் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்க, ‘சார்! 4 மணி வண்டி, அரை மணி லேட்டா வருதுன்னு சொன்னாங்க.. இன்னும் வரலையா ? ‘ அவர் பதிலே சொல்லாமல் முறைத்தபடி இருக்க, கொஞ்சம் தள்ளி இருந்த இன்னொருத்தர், ‘ பத்து நிமிஷத்துக்கு ஒரு மின்சார ரயில் வரும் தம்பி, நீங்க எதைக் கேட்கறீங்க ? ‘ ‘சென்னைல இருந்து, நீலகிரி எக்ஸ்பிரஸ்.. ‘ ‘ ஸ்ஸ்.. கொஞ்சம் சும்மா இருய்யா.. காலங்காத்தால போயும் போயும் அந்த பைத்தியத்துகிட்டயா பேசணும் ? ‘ ‘ஆங்.. அப்படியா ? பார்த்தா தெரியல…. ‘ ‘ஆமா, தினமும் ராத்திரி வருவான், விடிய விடிய ஏதேதோ பேசிட்டே இருப்பான்.. நல்லா கவிதை சொல்லுவான்…. அப்பறம் வண்டி வருமான்னு கேப்பான்; நாங்களும் அவனோட கவிதை கேக்கறதுக்காக ‘வரும் ‘னு சொல்லுவோம்… 5 மணி ஆனதும் வண்டி வராதுன்னு சொல்லி அனுப்பிடுவோம் ‘ ‘ஓ!!! அப்டியா சேதி.. ? ? ‘ இப்போது அவரும் முறைக்க… ஏன் யாருமே எனக்கு பதில் சொல்லத் தயங்குகிறார்கள் ? என்னாச்சு எல்லாருக்கும் ? ஏன் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் ? அவர்களைப் பார்த்து பதிலுக்கு நானும் முறைத்தேன். மனிதனை மதிக்கத் தெரியாத ஜென்மங்கள்… எனக்குக் கோபம் வந்தது. அவளைப் பற்றிய நினைவுகள் தந்த சுகத்தை இந்தக் கோபம் எங்கேயாவது குறைத்துவிடப்போகிறது… ஒரு நல்ல மனிதர் மட்டும் ‘அந்த ரயில் இன்னிக்கி வராதாம் தம்பி, போயிட்டு நாளைக்கு வாங்க.. ஆமா.. எதுக்கு குளிர்ல உட்கார்ந்துகிட்டு! ‘ என்று சொல்ல, நன்றியோடு அவரைப் பார்த்தேன். எழுந்து என் உடைகளை சரியாக்கிக் கொண்டேன். அவள் கடைசியாக அனுப்பி இருந்த மின்னஞ்சலை ஏதோ கோபத்தில் அழித்து விட்டேன்; அதைப் படித்திருந்தால் என்ன விவரம் என்று தெரிந்திருக்கும்.. இப்படி தினமும் வந்து காத்திருக்கும் படி ஆகி இருக்காது! ‘காத்திருப்பதிலும் கூட கடலளவு சுகமாமே ? நானும் காத்திருக்க ஆரம்பித்தேன்; காத்திருப்பதற்காக!! ‘ அவளின் கவிதை வரிகள் நினைவுக்கு வர, அவள் எப்போது வரப் போகிறாள் ? நாளை கூட வரலாம்… நம்பிக்கையோடு நடக்க ஆரம்பித்தேன்.. தூவான நெருக்கத்தின் தனிமையில் மனசுக்குள் ஒரு மெல்லிய வாசம், ஆம்.. என் மனமும் நினைவும் சகலமும் இனி அவள் வசம்….