நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘நரசேவையே நாராயண சேவை ‘ – ஸ்வாமி விவேகானந்தர்

‘வாழ்வனைத்தும் யோகம் ‘ – மகாயோகி ஸ்ரீ அரவிந்தர்

போஸ்டன் நகர போக்குவரத்து காவலர் விரைந்து கொண்டிருந்த அந்த வாகனத்தை அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தார். அதன் டிக்கியிலிருந்து மெலிதாக வழிந்து கொண்டிருந்தது இரத்தம். தன்னுடைய பைக்கில் விரைந்து சென்று வழி மறித்து அதிலிருந்த இருவரையும் டிக்கியை திறக்க சொன்னார். அந்த வாகனத்திலிருந்த இருவரில் ஒருவரான இந்தியர் அமைதியாக டிக்கியை திறந்தார். அதற்குள் இருந்தது கிலோ கணக்கில் விலங்கு ஈரல். மனித உடலை எதிர்பார்த்திருந்த அந்த காவலருக்கு நிம்மதியும் ஐயமும் கலந்து எழுந்தன. ‘இந்த ஈரல்களுக்குள் எதுவும் ஒளிந்திருக்கவில்லையே ? ‘ கடுமையுடன் எழுந்தது கேள்வி. அந்த இந்தியர் புன்னகையுடன் பதிலளித்தார், ‘நிச்சயமாக ஏதோ ஒளிந்திருக்கிறது ஐயா! அதைத்தான் நாங்களும் தேடிக்கொண்டிருக்கிறோம். ‘ அவர்கள் இருவரும் ஹார்வார்ட் மருத்துவ கல்லூரியைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்பதை அறிந்த அந்த காவலர் அன்று நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார். விரைவில் இரத்த சோகை நோயால் (pernicious anaemia) துன்புற்ற பல நோயாளிகளும் நிம்மதியடைந்திருப்பார்கள். ஏனெனில் அந்த நோய்க்கு குணமளிக்கும் வேதிப்பொருளை விலங்கு ஈரலிலிருந்து பிரித்தெடுப்பதில் ஹார்வர்ட் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். வயிற்றைக் குமட்ட வைக்கும் ஈரலை மருந்தாக இனி இரத்த சோகை நோயாளிகள் உண்ண வேண்டியதில்லை.அந்த ஆராய்ச்சியாளர்கள் அணியின் தலைவரும் முக்கிய பங்கு வகித்தவரும், எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948) எனும் பாரத அறிவியலாளர்.

ஆந்திர மாநிலத்திலிருக்கும் பீமாவரத்தில் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் எல்லப்ரகாத சுப்பாராவ் (1/டிசம்பர்/1895). ஐந்து குழந்தைகளை கொண்ட தன் குடும்பத்தின் வறுமையில் தானும் ஒரு பாரமாக இருப்பதாக கருதி தன் இளம்வயதில் காசிக்கு சென்று அங்கே பழங்கள் விற்க முடிவு செய்து வீட்டைவிட்டு ஒரு முறை ஓடிப்போய் பின்னர் உள்ளூர் ஓடக்காரரால் மீட்டுக்கொண்டு வரப்பட்ட அனுபவம் அவருக்கு உண்டு. இந்த மனநிலையில் எங்கே படிப்பது ? மெட்ரிக்குலேஷன் தேர்வில் தோற்றபோது அவர் அவரது அண்ணனான புருஷோத்தம் பள்ளிஆசிரியராக பணியாற்றிய ராஜமுந்திரிக்கு மீள்தேர்வு எழுத அனுப்பப்பட்டார். மீண்டும் தோல்விதான். இந்நிலையில் அவரது தந்தை காலமானார். இம்முறை மீள்தேர்வு எழுத தேர்வுகட்டணம் அவரது அன்னையின் தங்க ஆபரணங்களை விற்று கட்டப்பட்டது. இது இளம் சுப்பாராவின் மனதை வைராக்கியம் கொள்ள வைத்தது. 1913 இல் அவர் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றிபெற்று சென்னை பிரெசிடன்ஸி கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில் ஆன்மிகத்தில் அவரது ஈடுபாடு அதிகரித்தது.

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனுக்கு அடிக்கடி வந்து செல்வார் சுப்பாராவ். தன் இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற கையோடு அடுத்து தன்வாழ்வின் முக்கிய முடிவினை எடுக்கவேண்டிய தருணத்தில் இருப்பதை உணர்ந்தார். தான் ஒரு சன்னியாசி ஆக வேண்டுமென முடிவெடுத்து அம்முடிவினை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைவருடன் கூறி தன்னை சன்னியாசியாக ஏற்க வேண்டினார். ‘பிரம்மத்தை அடைய நர சேவையே சிறந்த மார்க்கம் ‘ என கூறிய சுவாமிஜி, அவரை ஒரு மருத்துவராகும் படி அறிவுரை கூறினார். இவ்விதமாக சுப்பாராவ் சென்னை மருத்துவகல்லூரியில் சேர்ந்தார். ‘நரசேவையே நாராயண சேவை ‘ எனும் சுவாமிஜியின் வார்த்தைகளை செயல்முறையில் அனுபவிக்க அனுபவிக்க சுப்பாராவின் மனதில் ஒரு நெருப்பு சிறிது சிறிதாக வளர்ந்து வரலாயிற்று. மருத்துவ கல்லூரியில் அவர் கண்ட மானுட துயரங்கள் அவரது மருத்துவ படிப்பின் மீதான ஆர்வத்தை மேலும் மேலும் வளர்த்தன. இந்நிலையில் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் சுப்பாராவ் குடும்பத்துக்கு பண உதவி செய்துவந்த கஸ்தூரி என்ற செல்வந்தரின் மகளான சேஷகிரியை 1919 இல் அவர் மணந்தார்.

திருமணத்தின் போது மருத்துவகல்லூரியில் நான்காவது ஆண்டு மாணவர். 1920 இல் மகாத்மா காந்தி தன் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். சுப்பாராவ் அதற்கு தன் ஆதரவை காட்ட அறுவையறை துணிகளை (surgical gowns) காதியில் அணிந்தார். மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.ப்ராட்பீல்ட் சுப்பாராவின் கதர் துணைகளை கண்டு ஏளனமாக, ‘என்ன மிஸ்டர் சுப்பாராவ் கதர் அணிந்திருக்கிறீர்கள் ? காந்தி இந்தியாவின் அடுத்த வைசிராய் ஆகிவிடுவார் என்று நினைப்போ ? ‘ என வினவினார். சுப்பாராவ் அதே ஏளனத்தொனியில், ஆனால் மரியாதை சற்றும் குறையாமல் அனைத்து மாணவர்கள் முன்னும் தன் பேராசிரியருக்கு விடையளித்தார், ‘அத்தகைய ஒரு பதவியை ஏற்கிற அளவுக்கு காந்திஜி கீழிறங்கி வரமுடியாது என கருதுகிறேன். ‘ இதனை ப்ராட்பீல்ட் எளிதில் மறக்கமாட்டார் என சக மாணவர்கள் சுப்பாராவை எச்சரித்தனர். தேர்வின் முடிவுகள் வெளியாயின. அனைத்து புலங்களிலும் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த சுப்பாராவ் அறுவை சிகிச்சைக்கான தேர்வில் தோல்வியடைந்திருந்தார். அறுவை சிகிச்சை பேராசிரியர் திருவாளர்.ப்ராட்பீல்ட். இதன் விளைவாக சுப்பாராவுக்கு MBBS பட்டம் அளிக்கப்படாமல் அதற்கு அடுத்த நிலையான LMS பட்டமே அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜ்முந்திரியில் அவரது சகோதரர் புருஷோத்தம் காலமானார். இதற்கு எட்டு நாட்களுக்கு பின் அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தியும் காலமானார். சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அது போல ஆன்ம பலம் பெற்ற சான்றோருக்கு ஏற்படும் துயரங்கள் கூட மானுடம் அனைத்திற்கும் நன்மை அளிக்கும் கடுந்தவ முயற்சிகளுக்கு வழி வகுக்க கூடும். தன் இரு சகோதரர்களை நோயால் இழந்த சுப்பாராவின் வாழ்வு முழுவதுமே நோய்களை அழிக்கும் வேதிப்பொருட்களை உருவாக்கும் வேள்வியாக அமைந்தது. சுப்பாராவ் இப்போது தன் கவனத்தை ஆயுர்வேத ஆராய்ச்சியில் திருப்பினார். சென்னாபுரி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட டாக்டர்.லஷ்மிபதி ஆயுர்வேத கல்லூரியில் அவர் பணியாற்றிய போது ஆயுர்வேத மூலிகைகளின் கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கினார். அலோபதியில் இல்லாத பல நோய்களுக்கான தீர்வுகள் ஆயுர்வேதத்தில் இருப்பதை அவர் கண்டறிந்தார். ஆனால் இதற்கான ஆராய்ச்சி சூழல், உபகரணங்கள் அந்த கல்லூரியில் இல்லை.எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்ய அவர் அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்து ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுக்கழகத்திற்கு எழுதினார். அவர்களுக்கு ஆயுர்வேதத்தில் அக்கறை இல்லை. எனினும் வெப்பமண்டல நோய்களை குறித்து ஆய்வு செய்ய வருமாறு சுப்பாராவினை அவர்கள் அழைத்தனர்.

‘ஒவ்வொரு வருடமும் ஒரு ஹிந்து இளைஞனை மேல்நாட்டிற்கு தொழில்நுட்ப கல்விக்காக அனுப்ப ‘ உருவாக்கப்பட்ட மல்லாடி சத்தியலிங்க நாயக்கர் உபகாரநிதி உதவியுடனும் தன் மாமனாரின் உதவியுடனும் அவர் அமெரிக்கா சென்றார். அவரிடமிருந்த ரூபாய் 2500 இல் பயணசெலவு ரூபாய் 1300. அவர் போஸ்டனை அடைந்த போது அவரிடம் 100 டாலர்கள் இருந்தன. மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தில் சேர்க்கை கட்டணம் 150 டாலர்கள். மருத்துவ கல்லூரி டானான ரிச்சர்ட் ஸ்ட்ராங் உதவியுடன் சேர்க்கை கட்டணத்தை அளித்து ஆய்வுக்கல்லூரியில் சேர்ந்தார் சுப்பாராவ். ஆனால் அவருக்கு உதவிதொகைகள் ஏதுமில்லை. அத்துடன் அவரது இந்திய மருத்துவ கல்வி அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே ஒரு நல்ல வேலையை செய்தபடியே பயில சுப்பாராவ் திட்டமிட்டிருந்தது பாழ்பட்டது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீர்-கழிவு பாத்திரங்களை சுத்தம் செய்யும் வேலையினை செய்தவாறே படிக்கலானார். இக்கடும் சூழலில் வெப்பமண்டல நோய்களில் பட்டய தேர்வு பெற்ற சுப்பாராவ், ஹார்வர்ட் மருத்துவ கல்விமைய உயிர்வேதி துறையில் பயிற்சியை மேற்கொண்டார். அங்கு அவரது ஆசிரியர் சைரஸ் ஹார்ட்வெல் பிஸ்கெ (C.H.Fiske).

சுப்பாராவுக்கு முதலில் அளிக்கப்பட்ட பணி இரத்தம், சிறுநீர் மற்றும் திசுக்களில் பாஸ்பரசை கண்டறிய ஒரு தேர்வுமுறையினை உருவாக்குவது. நான்குமாத கடும் உழைப்பினால் அம்முறையை சுப்பாராவ் உருவாக்கினார். சுப்பாராவின் கடும் உழைப்பும் அறிவும் அவரை விரைவில் ஆசிரியரையும் மாணவரையும் சக-ஆய்வாளர்கள் ஆக்கியது. இன்று உயிர்வேதியியலில் சுப்பாராவ்-பிஸ்கெ முறையே உயிர்திசுக்களில் பாஸ்பரஸ் கண்டறிந்து அளவிட பயன்படுத்தப்படுகிறது. சுப்பாராவ்விற்கு உயிர்வேதி வினைகளில் பாஸ்பரஸின் முக்கியத்துவத்தை அறியவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஹார்வர்ட் மருத்துவ கல்விமையத்தில் இப்போது முதுகலை அறிவியல் மாணவராக சுப்பாராவ் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஒரு தசை இயங்குகையில் அதில் பாஸ்போ-கிரியாட்டின் அளவு குறைவதையும், பின்னர் அது ஓய்வெடுக்கையில் அந்த அளவு அதிகரிப்பதையும் அவர் அறிந்தார். எனவே உடல் ஆற்றலுக்கும் பாஸ்போகிரியாட்டினுக்குமான உறவினை இவ்விதம் சுப்பாராவ் வெளிப்படுத்தினார். 1922 இல் மருத்துவத்துக்கான நோபெல் பரிசு ஹில் மற்றும் மெயர்காஃப்பிற்கு உடல் ஆற்றலின் மூலக்கூறாக க்ளைகோஜனை கண்டறிந்ததற்காக கொடுக்கப்பட்டிருந்தது. இக்கண்டுபிடிப்பினை பொய்ப்பித்தது சுப்பாராவ்வின் கண்டுபிடிப்பு. எனில் ஆற்றலை உடலெங்கும் கொண்டுசெல்லும் ஆற்றல் சுமக்கும் மூலக்கூறாக செயல்படுவது எது ? என்பதனை அறியும் தேடல் வேட்டை தொடங்கியது. அடினோஸின்-ட்ரை-பாஸ்பேட் என்பதே அம்மூலக்கூறு என்பதனை சுப்பாராவ்-பிஸ்கெ அணியினர் சர்வதேச அறிவியலாளர் கழகத்தில் அறிவித்தனர். துரதிர்ஷ்ட வசமாக ஜெர்மனியிலிருந்து மெயர்காஃப் ஆய்வகத்தை சார்ந்த கார்ல் லோஹ்மான் 16 நாட்களுக்கு முன் ஐரோப்பாவை சார்ந்த ஒரு ஆய்வு இதழில் வெளியிட்டிருந்தார். உண்மையில் சுப்பாராவ் ATP என கண்டுபிடித்து ஓரிரு வாரங்களில் வெளியிட்டிருந்தால் கூட அவர்கள் ஜெர்மனியை முந்தியிருக்கலாம். ஆனால் அனைத்து அறிவியலாளர்களும் ATP கண்டுபிடிப்பு சுப்பாராவ்வின் பாஸ்போ-கிரியாட்டின் தொடர்பினை கண்டுபிடிக்காதிருந்திருந்தால் சாத்தியமாகியிருக்காது என்பதை ஒப்புக்கொண்டார்கள். அதைப்போல ATP யினை கண்டுபிடித்தது அதிகாரபூர்வமாக சுப்பாராவ் என கூறப்படாவிட்டாலும் கூட அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மையாகவே அது விளங்குகிறது. ஆனால் சுப்பாராவ் இது குறித்து கூறிய வார்த்தைகள் பல்லாயிர ஆண்டு பாரத மதிப்பீடுகளின் பிரதிபலிப்பாக விளங்கின, ‘கண்டுபிடிப்புதான் முக்கியமே ஒழிய யாருக்கு புகழ் கிடைக்கிறது என்பது முக்கியமல்ல ‘

1990 இல் புகழ்பெற்ற ‘தி சயிண்டிஸ்ட் ‘ பத்திரிகை ஒரு ஆய்வு நடத்தியது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு வருடங்களில் (1945-88) மிகவும் சக ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்வுத்தாள்கள் எவை என ஆராய்ந்து அத்தகைய பத்து ஆய்வுத்தாள்களை ‘பெரு மதிப்பிற்குரிய ஆய்வுத்தாள்கள் ‘(Venerable Papers: Ten Classic Articles Over 50 Years Old ‘) என வெளியிட்டது. அதில் முதல் இடத்தில் இருப்பது, 1925 இல் Journal of Biological Chemistry இல் சுப்பாராவும் பிஸ்கெயும் இணைந்து வெளியிட்ட ‘The colorimetric determination of phosphorus ‘ . அதுவும் 17,217 ஆய்வுத்தாள்களில் பயன்பாடு. (அதற்கு அடுத்த ஆய்வுத்தாளின் பயன்பாடு, 9,375 ஆய்வுத்தாள்களில்.)

ஒரு நாள் சுப்பாராவ் தனது நண்பரும் சக அறிவியலாளருமான ஹோர்டான் ஆலெஸ்ஸிடம் பேசிக்கொண்டிருந்தார். அபோது இரத்தசோகை நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருந்து தேவை என அவர் சுப்பாராவிடம் தெரிவித்தார். ஏற்கனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ஈரல் பலருக்கு தாங்கமுடியாத வயிற்றுக்குமட்டலை ஏற்படுத்துவதாக விளங்குவதே இதற்கு காரணமாம். எனவே சுப்பாராவ் ஈரலில் இருக்கும் வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அச்சமயம் நிகழ்ந்ததே இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி. போதுமான உபகரணங்கள் இல்லாத போதிலும் இம்முயற்சியில் அவர் வெற்றிபெற்றார். இந்நிலையில் லெடர்லே உயிர்வேதியியல் தொழிற்சாலையின் பரிசோதனை பிரிவிலிருந்து அவர் அழைக்கப்பட்டார். அதன் உரிமையாளரான திரு.பெல் சுப்பாராவுக்கு அக்காலத்தில் வருட ஊதியமாக 14,000 டாலர்கள் அளிக்க முன்வந்தார். இந்த வாய்ப்பிற்கு சுப்பாராவ் பின்வரும் நிபந்தனையுடன் இணங்கினார், ‘அவர்கள் அளிக்கும் ஊதியத்தில் பாதி போதும். ஆனால் என் ஆய்விற்கு முழுமையான சுதந்திரமும்மாய்வு வசதிகளும் கொண்ட பரிசோதனைகூடம் தேவை. ‘ கர்மயோகத்திற்கு முன் செல்வத்தை துச்சமாக மதிக்கும் பாரதிய மனதின் மாண்புக்கு உதாரணமாக திகழ்ந்தவர் சுப்பாராவ். அப்பரிசோதனை கூடம் தயாரானதும் தான் லெடர்லே உயிர்வேதியியல் தொழிற்சாலையின் பரிசோதனை பிரிவில் இணைவதாக கூறினார். அந்நாள் வந்த போது ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில் 17 வருட தரமும் ஆழமும் வாய்ந்த ஆராய்ச்சியினை அளித்திருந்தார் சுப்பாராவ்.செல்வ வேட்கையல்ல மானுடத்துயர் துடைக்கும் ஆய்வின் மீதுள்ள கர்மயோகமே தன்னை வழிநடத்தும் ஆற்றல் என்பதை அவர் தனது ஆய்வு அணியினர் மனதிலும் வேரூன்ற வைத்திருந்தார். அவரது அடுத்த பணி ஈரலிலிருந்து பிரித்தெடுத்த ஃபாலிக் அமிலத்தை (Folic acid) செயற்கை முறையில் உருவாக்குவதாக அமைந்தது. ஃபாலிக் அமிலத்தின் மூலக்கூறு அமைப்பு அறியப்பட்டது.அவரது அணியின் காய் வாக்கர் பொதுவான முறையிலிருந்து மாறுபட்டு ஃபாலிக் அமிலத்தை உருவாக்க எடுத்த முயற்சிகளை சுப்பாராவ் மிகவும் ஊக்கப்படுத்தினார். இறுதியில் அவர்களுக்கு கிடைத்ததென்னவோ ஒரு ‘உபயோகமற்ற கரும் பொருள் தான் ‘. காய் வாக்கர் மனம் தளர்ந்துவிட்டார். அந்த ‘உபயோகமற்ற கரும் பொருளை ‘ மேலும் ஆராய்ந்த சுப்பாராவ் ஒருநாள் வாக்கரை அழைத்து வாழ்த்து கூறினார். ஏனெனில் அதில் ஃபாலிக் அமிலம் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஃபாலிக் அமிலம் இரத்தசோகை நோயினை குணப்படுத்தும் தன்மைகொண்டதில்லை என அறியப்பட்டது. ஆனால்-வெப்பமண்டல் ஸ்ப்ரூ (Tropical sprue) அது குணப்படுத்துவது அறியப்பட்டது. இந்த வெப்பமண்டல ஸ்ப்ரூதான் சுப்பாராவின் அண்ணன் புருஷோத்தமை கொன்ற வியாதி என்பது அதிசயப்படத்தக்க தற்செயலொற்றுமை. 1947 இல் லெடர்லே ஆய்வுச்சாலையைச் சார்ந்த நோயியலாளரான (pathologist) சிட்னி ஃபார்பர் சுப்பாராவுடன் இணைந்து லுகேமியா நோயால் அவதியுற்ற குழந்தைகளுக்கு ஃபாலிக் அமில சேர்க்கைகளை அளித்தார். இது அளிக்கப்பட்டு 45 நாட்களுக்கு கீமோதெரபியற்ற நல்முன்னேற்றம் அக்குழந்தைகளில் காணப்பட்டது. ஃபாலிக் அமில உருவாக்கம் புகழ்பெற்றது. அதன் முக்கியத்துவம் உலகமெங்குமுள்ள அறிவியலாளர்களால் மதிக்கப்பட்டது. இவ்வுருவாக்கமுறையை கண்டுபிடித்த அணியின் தலைவர் என்கிற முறையில் சுப்பாராவ்வின் பெயரே ஃபாலிக் அமிலத்தை உருவாக்கியவர் என அழைக்கப்படலாம். ஆனால் அவரது பெயர் அவரது அணியின் 16 பேர்களில் ஒன்றாகவே வெளியிடப்பட்டது – அவரது விருப்பத்தின் பெயரில்.

அடுத்து ஃபில்லாரியாவை கட்டுப்படுத்தும் மருந்தினை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினார் சுப்பாராவ். ஒருவாரத்திற்கு 200 எலிகள் பயன்படுத்தப்பட்ட பரிசோதனைகளில் 517 வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இறுதியாக ஒரு எலி உயிர் வாழ்ந்தது. டை எதில் கார்பாமாஸின் (Di ethyl Carbamazine) எனும் அம்மருந்து ஹெட்ரஸான் என அறியப்படுகிறது. யானைக்கால் வியாதியை கட்டுப்படுத்தும் இம்மருந்து சுப்பாராவின் கடும் உழைப்பின் விளைவு.பாலிமைஸீன் எனும் கால்நடை உணவும் அவரது கண்டுபிடிப்பே.

டெட்ராசைக்கிளின் (tetracycline) நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் இன்று பல கோடானுகோடி உயிர்களை நோயிலிருந்து காத்து நல்வாழ்வை அளிப்பவை. அவற்றுள் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட வேதிப்பொருள் இன்று அரியோமைசின் (Aureomycin) என அறியப்படுவதுதான்.ஸ்ட்ரெப்டோமைசெஸ் நுண்ணுயிரியிலிருந்து (Streptomyces aureofaciens) உருவாக்கப்பட்ட இந்த வேதிப்பொருள் கிராம்-நெகடிவ்

பாக்ட்டாரியங்களின் புரத சுரப்பை தடுத்து அவற்றை அழிக்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்ட போது மருத்துவர்கள் அதனை பயன்படுத்த முன்வரவில்லை. சுப்பாராவ் கூறினார், ‘நோய்விளைவிக்கும் நுண்ணுயிரிகளைத்தான் இந்த கண்டுபிடிப்பு அச்சப்படுத்துமென நினைத்தால் மருத்துவர்களையும் அல்லவா இது பயமுறுத்துகிறது! ‘ டாக்டர். லூயிஸ் ரைட் எனும் நியூயார்க் ஹார்லெம் மருத்துவமனை மருத்துவர், ‘இழக்க ஏதுமில்லை ‘ எனும் நிலையிலிருந்த ஒரு நோயாளிக்கு இம்மருந்தினை செலுத்தி பார்க்க முன்வந்தார். குறிப்பிடதக்க முன்னேற்றம் தெரிந்ததை அவர் தெரிவித்தார். அன்றிலிருந்து பல நூறுகோடி உயிர்களை காப்பாற்றிய அம்மருந்து டாக்டர்.சுப்பாராவின் மிக முக்கிய கண்டுபிடிப்பு. பின்னர் அவர் கவனம் இரத்த புற்றுநோய் பக்கம் சென்றது. குழந்தை இரத்த புற்றுநோயாளிகளுக்கு தற்காலிக நிவாரணமளிக்கும் அமினோப்டெரின் அவரது அடுத்த கண்டுபிடிப்பு. இது நோயாளிகளை மரணத்தின் பிடியிலிருந்து சிலகாலம் காப்பாற்றி சாதாரண வாழ்வளித்தது. அவரது அடுத்த கண்டுபிடிப்பான மெத்தோட்ரெக்ஸ்ரேட் மேலும் அதிககால குணமளிக்கும் மருந்தாக அமைந்தது. இரத்த புற்றுநோய் மட்டுமின்றி மற்ற பலவித புற்றுநோய்களுக்கும் அது நிவாரணமளித்தது.

இரவுபகலாக பிறர் துயரும் நோயும் தீர்க்க பாடுபட்ட டாக்டர். எல்லப்ரகாத சுப்பாராவ் 1948 இல் மாரடைப்பால் காலமானபோது அவருக்கு வயது 53. தன் வாழ்நாளில் 111 முக்கிய ஆய்வுத்தாள்களை அவர் சமர்ப்பித்திருந்தார். ‘அதிசய மருந்துகளின் வித்தகர் ‘ (wizard of wonder drugs) என அறியப்பட்டார். ஒரு வேளை ஒரே ஒரு கண்டுபிடிப்பினை மட்டும் அவர் செய்திருந்தால் அவருக்கு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்படுவதில் நியாயம் இருக்கலாம். பல முக்கிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டுபிடித்து இன,மொழி, தேசிய வட்டங்களுக்கு அப்பால் பல நூறுகோடி மானுட உயிர்களை காப்பாற்றிய இக்கர்மயோகியின் உயரத்திற்கு நோபெல் பரிசால் வளரமுடியுமா என்ன ? ஆனால் பரிசுகளுக்கு அப்பால், வரும் தலைமுறைகளுக்கு பாரத மனங்களில் மானுட துயர் நீக்கும் அறிவியல் கனலை வேள்வித்தீயாக அவரது நினைவு வளர்க்கும். அதுவே பாரத மண்ணின் மகத்தான இப்பெருமகனுக்கு, உலக குடிமகனுக்கு, நாம் அளிக்கும் காணிக்கையாகவும் இருக்கும்.

‘நீங்கள் ஒருவேளை சுப்பாராவ் எனும் பெயரையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர் வாழ்ந்ததால், நீங்கள் இன்று நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்கள். அவர் வாழ்வின் கடும் உழைப்பினால் உங்கள் வாழ்வு நீட்சியும் நலமும் பெற்றது. ‘

-டோரன் ஆண்ட்ரீம்

ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்

ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்

-மகாகவி பாரதி

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்