வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ரவி நடராஜன்


கெவின் – என்னுடன் வேலை செய்யும் அதிகப் பிரசங்கி சக ஊழியன் (உண்மைப் பெயர் மறைக்கப்பட்டுள்ளது). அது என்னவோ தெரியவில்லை. மற்றவர்களுக்கு இல்லாத அக்கரை கெவினுக்கு இந்தியா மீது. அவனுடன் எனக்கு ஏற்பட்ட வினோத உரையாடல்கள் தர்மசங்கடமானவை; சில சமயம் எரிச்சலூட்டுபவை; பல சமயங்களில் பொருமையை சோதிப்பவை. என்னைப் போல மேற்குலகில் வாழும் பல இந்தியர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது என் கணிப்பு.
எங்கோ இருக்கும் இந்தியாவுக்கு (அது எங்கு இருக்கிறது என்று கெவினுக்கு சரியாக தெரியாது, தெரிந்து கொள்ள ஆசையும் இல்லை) ஏன் நான் 3 வாரம் விடுமுறையில் செல்கிறேன்? அப்படி என்ன இருக்கிறது அந்த தூரத்து தேசத்தில்? பிரமாதமான கடற்கரை இருக்குமோ? அழகான பெண்கள் இருப்பார்களோ? வட அமெரிக்காவில் இல்லாத புதுவிதமான கேளிக்கைகள் இருக்குமோ? இப்படி என்னை துளைத்து எடுத்துவிட்டான் படு பாவி. ஏதோ சொல்லி சாதுரியமாக சமாளித்து விட்டேன். அவனுடைய மேற்கத்திய மண்டைக்குள் நான் சொல்வது எதுவும் ஏறப் போவதில்லை. அவனுடைய பார்வையில் இந்தியாவில் ‘இண்டியன்’ பேசுவார்கள்! ஜெர்மனியில் ஜெர்மன் பேசுவதுபோல!
இந்த ஊர் டிவி இருக்கிறதே, அதை பொசுக்க வேண்டும் போல ஒரு முறை கோபம் வந்தது. இந்தியாவில் மாட்டு வண்டி என்று சம்மந்தம் இல்லாத ஏதோ ஒன்றை காட்டி விட்டார்கள். அதையும் அந்த கெவின் பார்த்து தொலைத்து விட்டான். அடுத்த நாள் என்னிடம், “விடுமுறையில் மாட்டு வண்டியில் போனாயா? எப்படி இருந்தது? என்ன இருந்தாலும் கற்கால மனிதர்கள் பயணம் செய்த முறையில் பயணம் செய்யும் திரில்லே தனி. It’s really cool” என்று புதிய கேள்வி கணையை சமாளிக்க ரொம்ப கஷ்டப் பட்டேன்.
அதே போல இந்த ஊர் செய்திதாளை என்ன செய்வது – கிழித்துத்தான் போட வேண்டும். ஏதோ ஒரு இந்திய கணினி மென்பொருள் நிறுவன தொழிலதிபரின் பேட்டியை போட்டார்கள். பேட்டி என்னவோ அறிவுபூர்வமாய்த்தான் இருந்தது. ஆனால் செய்தியின் தலைப்புதான் சிக்கலுக்கு காரணம். “உங்கள் வேலையை பறிக்கப் போகிறவர்” என்பது செய்தி தலைப்பு. படித்து விட்டான் கெவின். அடுத்த நாள் ஆட்டோ காரர் ரேஞ்சில், ‘எங்க வவுத்தில அடிக்கலாமா?” என்று ஆரம்பித்து விட்டான். சற்று இங்கு வேலை செய்யும் இந்தியர்களை மறைமுகமாக தாக்க ஆரம்பித்தான். எங்கள் நிறுவனத்தில் சொதப்பிய இந்தியர்களைப் பற்றி பேச்சை திருப்பி ஏராளமாக கலாய்க்கத் தொடங்கினான். எப்படியோ பேச்சை மாற்றி சமாளிப்பதற்குள் போதும் என்றாகிவிட்டது.
அதே போல, வாரக் கடைசியில், மேற்குலகில் அழுமூஞ்சி படங்களைக் டிவியில் காட்டி நன்கொடை திரட்டும் பெரிய கூட்டமே இருக்கிறது. ஒழுங்காக வாரக் கடைசியில் ஹாக்கி விளையாட வேண்டியதுதானே. அதைச் செய்யாமல் கெவின் அழுமூஞ்சி டிவி காட்சியை பார்க்க, அதில் இந்தியாவில் படிப்பிற்கு மாதத்திற்கு $5 க்காக ஏங்கும் குழந்தைகளை நன்கொடைக்காக காட்டி கழுத்தறுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் வறுத்தெடுத்துவிட்டான் கெவின். அவன், என் குழந்தைப் பருவத்தில் யாரோ ஒரு மேற்கத்திய மனிதர் படிப்பதற்கு உதவி செய்திருப்பார் என்று முடிவு செய்து விட்டான். எத்தனை சொன்னாலும் இன்றுவரை நம்ப மறுக்கிறான். அவனுடைய பார்வையில் இந்தியாவில் அத்தனை குழந்தைகளும் படிப்பதற்கு மேற்கத்திய நன்கொடையை எதிர்பார்த்திருப்பவர்கள்.
அப்படித்தான் இங்கு டிவியில் இந்தியா பற்றிய செய்தியைக் காட்டும் போது நமது மதிப்பிற்குறிய சாலைகளைக் காட்டியுள்ளார்கள். நான் அதைப் பார்க்கவில்லை. அடுத்த நாள் அலுவலகத்தில் ஒரே கேள்வி மயம். எப்படி மாடு, நாய்க்குட்டி ஓடும் போது கார் ஓட்டுகிறீர்கள்? அங்கு நெடுஞ்சாலையில் எப்படி 120 கி.மீ. வேகத்தில் நாய்களை சமாளிப்பீர்கள் என்று அறிவுபூர்வமாய் கேட்ட அபத்த கேள்விகளை எப்படியோ திசை திருப்பி விட்டேன். இல்லாவிட்டால், யானை வருமா, குரங்கு வருமா என்று பயங்கர கேள்விகள் அடுத்து வரும் என்பது என் கணிப்பு.
அதே போல, வாரக் கடைசியில் இங்கு ஒரு உள்ளூர் டிவி சானலில் பாலிவுட் திரைப்படங்கள் சப் டைட்டிலுடன் காட்ட ஏன்தான் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. பாழாய் போன கெவின் அதையும் பார்த்து விட்டான் – அதுவும் டூயட் பாடல் – தப்பான ஆங்கிலத்தில் கவிதையை வேறு மொழிபெயர்த்தல் தேவையா? விக்கிபீடியாவில் எதை எதையோ படித்துவிட்டு, கெவின் படு கொடூரக் கணக்கு போடத் தொடங்கி விட்டான். வருடத்திற்கு 800 படங்கள், படத்துக்கு 5 பாடல்கள், பாடலுக்கு 20 மரங்கள். இந்தியாவில் குறைந்த பட்சம் 80,000 மரங்களாவது இருக்கின்றன என்று ஆரம்பித்து, ஏன் காதல் வந்தவுடன் மரத்தை சுற்றி பாட்டு பாடுகிறீர்கள், ஏன் காதலர்கள் பாடும் போது எங்கோ மலைப் பிரதேசத்தில் சுற்றி பலரும் ஆடுகிறார்கள்? ஏன் எதை எடுத்தாலும் உரக்க பேசுகிறீர்கள்? ஏன் ஆண்கள் பெண்களைப் போல நடனமாடுகிறார்கள் என்று வித விதமான கேள்விகள். எனக்கு சலங்கை ஒலி போன்ற திரைப்படங்களும் இந்தியாவில் உண்டு என்று சொல்லத் தோன்றியது. அதைக் காட்ட போய், கெவினுக்கு கமல் சட்டை போட்டுக் கொள்ளாமல் ஆடுவதை கேட்டு கழுத்தறுப்பான் என்று விட்டு விட்டேன். ஹாலிவுட்டில் டாம் க்ரூஸ் படங்களில் வரும் அபத்தங்களை சொல்லி பொழுது போக்கு விஷயங்களை பெரிது படுத்த வேண்டியதில்லை என்று சாமாளித்து சரி கட்டினேன்.
கெவினுக்கு அவன் தொலைப்பேசி சேவையில் ஏதோ பிரசனை. அவன் தொலைப்பேசி கம்பெனியை தொடர்பு கொண்டதில், கடைசியில் ஒரு இந்திய கால் செண்டர் ஊழியருடன் போராடியிருக்கிறான். அடுத்த நாள் எனக்கு அர்ச்சனை. ஏன் இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு புரிவதில்லை என்று தொடங்கி அழுகையோ அழுகை. நான் ஒருவன் எப்படி அத்தனை இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை சரி செய்ய முடியும்? உன்னுடன் ‘இண்டியன்’ னில் பேசவில்லயே என்று சமாளித்தேன். எனக்கும் பல மெக்ஸிக்கோ நாட்டுக்காரர்களின் ஆங்கிலம் சரியாக புரிவதில்லை. நான் சமாளிக்கவில்லையா?
இந்தியாவில் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிப்பதில்லை, ஆனால் வேறு யாரோ வசிக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். உங்கள் ஊரில் சுல்தானா, ஷேக்கா என்று துளைத்துவிட்டான். உலகிலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா என்றவுடன் நம்ப மறுத்தான் கெவின். அதெப்படி சாத்தியம்? இத்தனை ஏழை மக்கள், பின்தங்கிய விவசாய முறைகள், படிப்பறிவில்லா மக்கள் உள்ள நாட்டில் ஜனநாயகம் என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. கெவின் பார்வையில் ஜனநாயகம் ஒரு மேற்குலக அமைப்பு. புஷ் முதன் முறை வென்ற பொழுது ஃப்ளோரிடாவில் ஓட்டுக் கணக்கெடுப்பு கொளறுபடியை நினைவு படுத்தினேன். இதைப் போன்ற கொளறுபடிகள் இந்தியாவில் நடப்பதில்லை – ஏனென்றால், உலகிலேயே தரமான மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை 60 கோடி வாக்காளர்கள் பதிவு செய்ய உபயோகிக்கிறோம் என்று பலவாறு சொல்லிப் பார்தேன். அந்த நிமிடம் கேட்பது போல கேட்டுவிட்டு அடுத்த கணமே மறந்துவிட்டான் கெவின்.
இன்னொரு கெவின் கேள்வி இந்தியாவில் இறங்கியவுடன் தாஜ் மஹால் வருமா? எப்படி இத்தனை சின்ன நாட்டில் இத்தனை பேர் வசிக்க முடியும்? முதலில் இந்தியாவை சின்ன நாடு என்றவுடன் ஒப்புக் கொள்ள முடியவில்லை. பிறகு கெவின் கேள்வியின் பின்னணி புரிந்தது. இந்தியாவின் 5 மடங்கு பெரிதான அமெரிக்கா/ கனடாவில் பொத்தம் 35 கோடி போர்கள் வசிக்கிறார்கள். எப்படி 110 கோடி பேர் அத்தனை குறைந்த நிலப்பரப்பில் வாழ முடியும்? அப்பாடா, முதன் முறையாக நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டான்.
இப்படி போய்க் கொண்டிருந்த சமாளிப்பு மேலும் அடுத்த கட்டத்திற்கு அந்த நாள் மாறியது. கெவின் ஒரு நாள் மாலை அவன் வீட்டிற்கு என்னை அழைத்தான். எத்தனை சாக்கு சொல்லியும் விடவில்லை. இது தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகி விட்டதே என்று வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டேன். அவன் மனைவி சாண்ட்ராவும் அவனும் கல்லூரியில் சந்தித்துக் கொண்ட்து போன்ற உப்பு சப்பில்லாத விஷயங்களுடன் மாலை தொடங்கியது.
இருவரும் Oriental Studies படிக்கையில் சந்தித்துக் கொண்டனர் என்றதும் உஷாராகி விட்டேன். அடுத்தது என்ன கொடைச்சலோ என்று ஐனா சபை முன் காலின் போவல் போல நெளியத் தொடங்கினேன். சாண்ட்ராவுக்கு அலுவலகத்தில் கெவினுடன் என்னுடைய உரையாடல்கள் பற்றி தெரிந்திருந்தது. இருவரும் பலவாறு மன்னிப்பு கேட்டனர். அவர்களின் கேள்விகள் சற்று அதிகபட்ச ஆர்வத்தினாலேயே தவிர என்னை தர்மசங்கடப் படுத்தும் நோக்கத்தில் அல்ல என்றனர். மேலும், “நீங்கள் அமெரிக்காவைப் பற்றி பலகலைக்கழகத்தில் நிறைய படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவையே பார்க்காத உங்களுக்கு அலுவலகத்தில் அமெரிக்கர் ஒருவர் சேர்ந்தால், கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வது இயற்கைதானே”, என்று அவர்களின் நோக்கை நியாயப் படுத்தவும் செய்தனர்.
“உங்களைப் போன்ற சிக்கலான நாடு, ஜனநாயகம் என்று கொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. இங்கு பிரிட்டிஷ்காரர்களை துரத்தி பல ஆண்டுகள் நாங்களும் ஏதேதோ செய்து வந்தோம். சும்மா உலகிற்கு 235 ஆண்டுகள் ஜனநாயகம் என்று புருடா விட்டு வருகிறோம். நியாயமாகப் பார்த்தால், எங்கள் உண்மையான ஜனநாயகம் ஒரு நூறு ஆண்டுகளாகத் தான். ஏன் நீங்கள் ஜப்பான், நெதர்லாண்ட் போல ஒரு அரசன்/அரசி அமைப்பை தேர்ந்தெடுத்திருக்கலாமே. அல்லது, அமெரிக்கா போல அதிபர் முறையை தேர்ந்தெடுத்திருக்கலாமே. எங்கள் அமைப்பிலும் புஷ் போன்ற கோர விபத்துக்கள் உண்டு. அல்லது கனடா போன்று தூரத்து அரசியை வைத்துக் கொண்டு ஒரு ஜனநாயக அமைப்பை தேர்ந்தெடுத்திருக்கலாமே. உங்கள் அமைப்பு எதுவாக இருந்திருந்தாலும், உங்களது தேசத்தின் நிகழ்கால பிரதிபலிப்பு உங்களது இமேஜுக்கு எதிராக உள்ளதே. அகிம்சையை உலகிற்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள். அடுத்தபடியே 40 ஆண்டுகளில் 4 தலைவர்களை சுட்டுத் தள்ளுகிறீர்கள். அணு ஆயுதம் தயார் செய்கிறீர்கள். உலகிற்கு 10,000 ஆண்டுகளாய் கணிதம், வானசாஸ்திரம், யோகாசனம் என்று கற்றுத் தந்த நீங்கள் இன்று மேற்கத்திய பழக்க வழக்கங்களுக்காக துடிக்கிறீர்கள். எங்களுக்கு மிகவும் குழப்பமாக தெரிகிறது”.
அப்பாடா, எத்தனை கேள்விகள். முழு பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டுதான் யோசனை பண்ண வேண்டும். அரசியல் அமைப்பு, நாட்டின் இமேஜ், மேற்கத்திய மோகம் என்று வரிசைப் படுத்திக் கொண்டேன். இது GRE யை விட மோசமான தேர்வாக தோன்றியது. எனக்கு தெரிந்ததை சொல்லிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
”முதலில் அரசியல் அமைப்பை பார்க்கலாம். எங்கள் தேசமே அவசரத்தில் உருவாக்கப்பட்டது என்பது உண்மை. கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பிரிவு, மதக் கலவரம் என்று ரகளையாகவே தொடங்கியது எங்கள் நாடு. கொஞ்ச நாட்களுக்கு கனடா முறையை நாங்களும் பின்பற்றினோம். ஆனால், சரிப்பட்டு வரவில்லை. பிரிடிஷ்காரர்களின் தொடர்பு அரசியல் தற்கொலையாக கருதப்பட்டது. அதனால் துண்டித்து விட்டோம். நீங்கள் சொன்ன ஜப்பான், நெதர்லாண்ட் சின்ன நாடுகள். எங்கள் நாட்டில் ராஜாக்கள் ஏராளம். அவர்களை நீக்கியதை ஒரு பெரிய சாதனையாக கருதுகிறோம். ராஜாக்களை விட்டு வைத்திருந்தால், இந்தியா என்ற நாடு தொலைந்து போயிருக்கும். சர்ச்சில் சொன்னதுபோல, அது ஒரு பூகோள அமைப்பு (India is a geography not a country) என்று முடிந்திருக்கும். எங்களுடைய பிரச்சனை எங்கள் அரசியல் அமைப்பு அல்ல. அதன் இயக்கத்தன்மை. எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் குறைகள் உண்டு. ஜனநாயகம் என்பது மேற்கத்திய பார்வையில் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் (படிப்பு, சுகாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு) உயர உதவும் ஒரு அமைப்பு. எங்கள் வாழ்க்கைத்தரம் மற்ற ஜனநாயக நாடுகளைப் போல உயராததால், அவற்றுடன் எங்களை சேர்க்க உங்களது மனம் மறுக்கிறது”.
“ஓரளவிற்கு புரிகிறது. அப்படி என்னதான் பிரச்சனை உங்களது அரசியல் அமைப்பை செயல்படுத்துவதற்கு?”
“அதிருக்கட்டும், அடுத்தது, எங்கள் நாட்டின் இமேஜ். இது ஒரு வரலாற்று பிரசனை. மோஸார்ட், ஹாக்னர், ஹெண்டல் போன்ற இசைக் கலைஞர்கள் இன்று ஜெர்மனியில் உண்டா? அல்லது, JFK போன்ற அமெரிக்க தலைவர்கள் உண்டா? ஃபைன்மேன் போன்ற அமெரிக்க விஞ்ஞானிகள் அப்புறம் காணவில்லையே. காந்தி அதைப் போன்ற ஒரு சரித்திர நிகழ்வு. எதில்தான் மேற்கத்திய முறைகள் வரவில்லை. பிரிடிஷ்காரர்கள் உங்களிடம் அவர்களது ஆங்கிலத்தையே தொலைத்துவிட்டார்கள். இன்று இணையம் எல்லாம் அமெரிக்க தாக்கம் தான். எங்கள் இளைஞர்கள் அமெரிக்க மோகம் கொண்டு இங்குள்ள மோசமான விஷயங்களை பின்பற்றுவது உண்மை. ஆனால், இது தற்காலிக நடப்புதான். 10,000 ஆண்டுகள் கடந்து வந்த எங்கள் நாட்டில் இது போன்ற பல பாதிப்புகள் வந்து போயிருக்கின்றன”.
”சரி, நாங்கள் யோகாசனத்திற்கு பல நூறு டாலர்கள் கொடுப்பது போல நீங்கள் KFC க்காக செலவழிக்கிறீகள்!” என்று கெவின் இன்னொரு முறை குத்திப் பார்த்தான்.
“சாண்ட்ரா, எங்களது அரசியல் அமைப்பு இயக்கத்திற்கு வருவோம். எங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ, பிரிடிஷ் அரசியல் முறைகள் மேல் ஒரு மோகம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், சுதந்திரத்திற்கு பின் ஒரு 40 வருடங்கள் வரை, நாங்கள் எங்கள் நாட்டின் பட்ஜெட்டை மாலை ஐந்து மணிக்கு மேல்தான் விவாதிப்போம். இந்தியாவில் மாலை ஐந்து மணி என்றால், இங்கிலாந்தில் அது காலை 11:30 மணி. பிரிடிஷ் செளகரியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முறையை தகர்த்து எறிய 40 ஆண்டுகள் ஆகியது. இன்றும் எங்கள் அமைப்பில் ஒரு நகரத் தலைவருக்கு கலெக்டர் என்று பெயர். அதுவும் அவர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. பல கலெக்டர்களுக்கு உள்ளூர் மொழிகள் கூட தெரியாது.”
“இதைப் போன்ற விஷயங்கள் அமெரிக்காவிலும் உண்டு. சரித்திரம் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு நீங்குவதில்லை. நீங்கள் சும்மா சாக்கு போக்கு சொல்லுகிறீர்கள். அடிப்படை பிரச்சனை அதுவல்ல. ஐந்து மணி பட்ஜெட்டில் உங்கள் நாடு முன்னேறியதா என்பதே கேள்வி”
”அதிகம் முன்னேறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏன் என்ற பின்னணிக்குப் போவோம். சாரி நோக்கு அரசியல் (partisan politics) எங்கு தேவை , எங்கு தேவையில்லை என்று பாகுபாடில்லை இந்தியாவில். சாரி நோக்கற்ற அரசியல் நகர, மற்றும் உள்ளூர் (தொழிற்சங்கம், மாணவர் சங்கம்) அமைப்புகளில் தேவை. இவை சாரி நோக்கிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் ஜனநாயக இயக்கம் மற்றும் தலைமை தேவையான அமைப்புகள். அத்துடன், இப்படி அடித்தளம் அமைந்துவிட்டால், ஓரளவிற்கு புஷ் போன்ற விபத்துக்களையும் தாண்டி ஸ்திரத்தன்மையை தரக் கூடியவை. உதாரணத்திற்கு, கனடாவில் 90 வயதான பெண்மணி 35 ஆண்டுகளாய் ஒரு நகரத்தை உயர்த்துவதற்காக நகர மேயராக உழைத்து வருகிறார். 7 தேர்தல்களில் ஜெயித்து வந்துள்ள ஹேஸில் மக்காலியன் (Hazel MacCallion) எந்த கனேடிய கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அடிப்படையில் அரசியல் திருத்தங்கள் தேவை”
“நீங்கள் சொல்லுவதை மறுக்கவில்லை. ஆனாலும் அறைக்குள் இருக்கும் யானையை மறக்கிறீர்கள். தவறாக நினைக்கவில்லை என்றால் சில கேள்விகள் கேட்கட்டுமா?” என்றார் சாண்ட்ரா.
“கேளுங்கள்”
“அமெரிக்காவும், கனடாவும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் வர வேண்டும் என்று சொல்லி வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“அடாவடித்தனம்”
“ஒப்புக் கொள்கிறேன். ஒரு உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொன்னேன். ஏன் இந்தியா மற்றும் அதன் தலைவர்கள் எந்த அடாவடித்தனமும் செய்வதில்லை”
“நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல”
”வழிக்கு வாங்கள். வேறு வழியில் சொல்லப் போனால், இந்தியர்கள் வளைந்து கொடுப்பவர்கள்”
“இதில் என்ன தவறு? இது நல்ல குணம் தானே?”
“சில இடங்களில் நல்ல குணம். சில இடங்களில் சரிப்பட்டு வராது. ஆப்கானிஸ்தான் போன்ற பன்னாட்டு சமாச்சாரத்தில் பிடிவாதம் என்பது சரிப்பட்டு வராது. ஆனால் உள்ளாட்டு ஆட்சி மற்றும் முன்னேற்ற விஷயங்களில் பிடிவாதம் ஒரு அருமையான குணம். உங்கள் அரசியல்வாதிகளிடம் அது இல்லை”
“புரியவில்லை”
“நான் Oriental Studies படிக்கும் போது ஒரு இந்திய பெண் பிரதமரைப் பற்றி படித்தேன்”
“இந்திரா காந்தி”
“அவர் மிக பிடிவாத குணம் உடையவர். எமர்ஜென்ஸி என்ற ஜனநாயக விரோத ஆட்சி செய்தது நினைவிருக்கலாம். ஆனால், அவர் சில பிடிவாதங்களால், பசுமை புரட்சி, விண்வெளி ஆராய்ச்சி, தொலைக்காட்சி, வங்கிதுறை விரிவு என்று மற்ற அரசியல்வாதிகள் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை செய்தவர். அவருக்கு பிறகு யாரும் இந்திய விவசாயத்தை அதிகம் முன்னேற்றியதாக தெரியவில்லை”
“இவை எல்லாம் சரிதான். என்ன சொல்ல வருகிறீர்கள் சாண்ட்ரா?”
“வளைந்து கொடுப்பவர்களை நம்பாதீர்கள். எதிலாவது அரசியல்வாதிகள் பிடிவாதமாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த துறையாவது முன்னேறும். நீங்கள் சொன்னது போல உங்கள் நாடு சிக்கலானது. ஆனால், 10 முக்கிய பிரச்சனையை முன்னே வையுங்கள். இதில் குறைந்த பட்சம் 3 பிரச்சனைகளில் பிடிவாதமாக நிற்பவருக்கு ஓட்டு போடுங்கள். அடுத்த 7 பிரச்சனைகளை அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்வோம். ஜனநாயகம் என்று இருந்தால் ஏதாவது பாக்கி இருந்து கொண்டேதான் இருக்கும்!”
அப்பொழுது நியாயமாகத் தான் படட்து.

Series Navigation