வறளையின் வீச்சு

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

இராம.கி.


பொதித்த கமலையிற் பொருகும் மசகு;
கதிர்த்த தொள்ளையிற் கருங்கல் தெரிப;
கதுத்துச் செறிந்து அதிர்த்த வீளையோ,
எதிர்த்து எழும்ப எண்பது நொடியே!
ஊற்றும் பொய்த்தே! உழல்வதும் சேறே!
ஏற்ற மாக்கள் என்பொடு நொய்ந்தே!
உணத்த முள்ளியோ வாய்க்கால் நிரம்ப;
கனத்த களத்தில் கமரும் சிரட்டும்;
சூமிய கதிரோ சாய்ந்தே ஒடிய;
ஏமுடை மக்கள் ஏழுகல் தொலைக்குத்
தடத்தில் புழுதி தாளுறப் பரப்பிக்
குடத்தைக் குறுகில் கொண்டு நடப்பார்;
வறளையின் வீச்சு வாழ்நிலம் முழுதும்;
குறளை விரவக் குரவம் அகலும்;
ஆறலைப் போகா தமைய,
ஏறுக சாலையிற் பெருநகர்ப் புறமே!

இது, தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து அண்மையில் கிட்டத்தட்ட ஓரிலக்கம் பேர் வறட்சியால்
பாதிக்கப் பட்டுப் பிழைப்பை நாடி வெங்காலூர் போகின்ற அவல நிலை கண்டு பாடியது. இது பொதுவியல்
என்ற திணையும், பொருண்மொழிக் காஞ்சி என்ற துறையுமாம்.

அருஞ்சொற் பொருள்:

கமலை = கவலையின் திரிபு; இராட்டினத்தைக் குறிக்கிறது;
பொருகும் மசகு = பொருபொருவென்று மண்ணும் புழுதியும் கலந்த மசகு எண்ணெய்; கமலை பயனுறாமற் கிடக்கிறது.
கதிர்த்தல் = வெளிப்படுதல்
தொள்ளை = தோண்டப் பட்ட பள்ளம்; இங்கே கிணற்றை உணர்த்துகிறது.
வீளை = whistle
ஏற்ற மாக்கள் = ஏற்றம் இறைக்கும் மாடுகள்
உணத்தல் = காய்ந்து போதல்; ஆற்று வாய்க்காலில் உள்ள முள்ளுச் செடிகளும் காய்ந்து போயின.
கமர் = நிலப்பிளவு
சூம்புதல்>சூமுதல்
குறுகு = இடுப்பு;
வறளை = வறட்சி
குறளை = வறுமை
குரவம் = பெருந்தன்மை, கெளரவம்
ஆறலை = வழிப்பறி

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation