வரமொன்று வேண்டும்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

இராம.கி.


நான்யார் என்குவீ ராயின் நானோ,

கோடியில் பிறந்தே மாடமா ளிகையில்
தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்;
கோடியில் பிறந்தே கூவக் கரையினில்
வாடி வறண்டே மாள்வனும் அல்லன்;
மேவவும் பாவவும் மெய்யுறாத் துறக்கன்*3;
நாவலந் தீவினில் நானொரு நடுவன்;
நடுவனின் வேண்டுகை பொருளற்றுத் தோன்றலாம்;
கொடுப்பதும் விடுப்பதும் கொடையோர்க் குகப்பு;

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு ?

காலையில் எழும்பி கடன்களுக் கிடையே,
வேலையிற் செலும்வரை வெம்புரை*4 அடித்து,
வாரிய நீர்*5க்கென வழிமேல் கருத்து,
தாரை நீர்பெறத் தாங்கலை*6 வருத்தி,
தளவீ டெ*7ங்கணும் துழவிப் பொருதி,
மழைவரம் அறிந்திடத் தொலைக்காட்சி பார்த்து,
அலைபடும் நாளினி அமையா திருக்க,
புழை*8தனிப் பொருத்தி எனக்கே எனக்காய்,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு ?

பணிக்கென இருவளை உந்திலே*9 ஏகையில்,
கணக்கிலாக் கூட்டம் கடுகி விரைந்திடும்
அகவளைச் சாலை*10யின் துரப்பிலே*11 சிக்கா(து),
இகந்து சீறிட, யாக்கையில் பொருத்தமாய்,
இணைத்த சிறகுகள் எடுத்தே விரித்து,
நினைத்த போதினில் நெடுந்தொலை நகர்வாய்,
பாடி*12யில் எழுந்த பாலம் தொடங்கி,
ஓடிப் பறந்தே உதயம்*13 போகவே,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு ?

வரவுகள் நாலெனில் செலவுகள் நாலரை;
உறவுகள், அடுத்தவர், ஒப்பிடச் செய்வதால்,
காட்சிக் கிடங்காய் வீட்டையே மாற்றினால்,
தேட்டிய சம்பளம் மீத்தவா செய்யும் ?
வெம்பிப் பிதுங்கி விழைவுகள் கூட்டி,
நம்பி உழன்று நாணும் போதிலே
தோதுகள் அறிந்து துணையாள் புரிதரப்
போதும் எமக்கெனும் பொந்திகை*14 கிடைக்கவே,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு ?

இத்தனை காலம் எத்தனை துன்பம் ?
நத்தியர் வஞ்சம்; நயக்குறை; இழிவு;
நம்பிஏ மாந்தது; நடிப்பும் நழுவலும்;
கும்பியும் நெஞ்சும் குறுகிய கசப்பும்;
பொத்தித் துறக்க, பொதிவே*15 நினைக்க,
சித்தம் சீர்பட, செழுமை துலங்கிட,
உறுதியில் ஒன்றிட, உற்றவர் சேர்ந்திட,
மறதிநீர் மாந்தியே வாழ்வில் நிலைகொள,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு ?

இருக்கவோ அகவை எழுபதே சாலும்,
இருப்பினில் நோவுகள் எட்டா திருந்தால்!
நோவின் வலியோ, நுவலரின் இரட்டை
நாவினில் இருந்து நம்விதி தொலைப்பதால்!
நோவினில் நொய்ந்து சீரழி யாதே,
ஆவதில் நிறைந்து, அடைவதாய்த் தூங்கி,
அழும்பிய படியே சாயவும் வேண்டும்;
விழுமமே எச்சமாய் வீற்றிருக் கட்டும்;

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு ?

அன்புடன்,
இராம.கி.

1. உணக்குதல் = சுடுதல்; இங்கு வனைந்த பானையைச் சுடுதல்
2. நடுவன் என்றவுடன் வழக்காடு மன்றம் பட்டிமண்டபம் போன்றவற்றின் நடுவர் என்று எண்ண வேண்டாம். இங்கே பாடுகிறவன் ஒரு நடுத்தர வருக்கன். அந்த அளவில் இந்த நடுவன் வேண்டும் சிறுவகை( ?) வரங்களை இந்தச் சிறுங்(! ?) கவிதை பட்டியல் இடுகிறது.
3. துறக்கன் = சொர்க்கத்தான்; இப்படி மேலே ஏகி மேவவும் முடியாது, கீழே பரவிப் பாவவும் முடியாது இருக்கும் துறக்கம் தான் திரிசங்கு சொர்க்கம் என்பது.
4. வெம்புரை = வறண்டு போன borewell
5. வாரிய நீர் = metro water
6. தாங்கல் = tanker
7. தள வீடு = apartment house
8. புழை = செயற்கைக் குளம் (அல்லது இயற்கைக் கழிமுகம் = backwaters). செயற்கைப் புழைக்கரத்தைத் தான் வடமொழிப் படுத்தி புஷ்கரம் என்று நம்மூர்ப் பெருமாள் கோயில்களில் சொல்லுகிறார்கள். (இதுபோன்ற புழைக்கரத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து குளத்திற்கு கால்வாய் மூலம் நீர் வரத்து இருக்க வேண்டும்.)
9. இருவளை உந்து = two wheeler
10.அகவளைச் சாலை = inner ring road
11.துரப்பு = traffic
12.பாடி = சென்னை நகர் அகவளைச் சாலையின் வடபுலத்தில் உள்ள ஒரு பகுதி
13.உதயம் = சென்னை நகர் தென்புலத்தில் அசோக் நகர் முடிவில் இருக்கும் உதயம் திரையரங்கு. வட சென்னையில் உள்ள பாடியில் இருந்து உதயம் வரை மிகக் கூடுதலாய் இருக்கும் துரப்புத் தான் இந்தக் காலத்தில் காலை, மாலை நேரங்களில் சென்னையிலேயே அடர்ந்த துரப்பு. இதில் புகுந்து வெளிவருவது பெருமப் பயத்தனம்.
14.பொந்திகை = திருப்தி; satisfaction
15.பொதிவு = positive; பல இடங்களில் நேர்மறை என்ற சொல் positive என்பதற்குப் பொருந்தி வருவதில்லை. அதே பொழுது நேர்மறை என்ற சொல் directness என்பதற்கு மிகப் பொருந்தி நிற்கும். எனவே தான் நேர்மறை என்ற சொல்லை இங்கு ஆளத் தவிர்க்கிறேன். (அப்படி நேர்மறை என்ற சொல்லைச் சொல்ல வேண்டுமானால் மறை என்ற ஈற்றைத் தவிர்க்கலாம்; மாறாக நேரிய என்றே சொல்லலாம்.)

Series Navigation

இராம.கி.

இராம.கி.