வயதில்லாமல் வாழும் உயிர்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

கோமாளி


இருபது வாரம் முடியும் முன்பு ஒரு பெண் அபார்ஷன் செய்ய சட்டத்தில் அனுமதி இருக்கிறது. மெடிக்கல் டெர்மினேஷன் ஆக்ட் 1971 சட்டவிதி அனுமதி அளித்திருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் நிகிதா மற்றும் ஹரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு நீக்க முடியாத கஞ்னிடல் ஹார்ட் பிளாக்கின் காரணமாக வாழ்வதற்கு ரிஸ்க் அதிகம் இருப்பதால் அபார்ஷன் செய்ய அனுமதி கேட்டார்கள் கோர்ட்டில். குழந்தைக்கு பிரச்சினை இருப்பதை மெடிக்கல் செக்கப்பில் அவர்களது டாக்டர்கள் கண்டு பிடித்துச் சொன்னார்கள். தம்பதியினர் இருவரும் கோர்ட்டில் அபார்ஷன் செய்ய அனுமதி கேட்டு வழக்கு தொடுத்தார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதைப் பற்றி அல்ல இந்தக் கட்டுரை.

காரணம் சட்ட விதிகளின் பால் எனக்கு நம்பிக்கை இல்லை. ஜெனரல் ராணி (அக்லீம் அக்தர்)என்று பாகிஸ்தானில் ஒருவர் இருந்தார். அவரது வேலை பெரிய மனிதர்களுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுப்பது. எப்படி அவர் பெரிய மனிதர்களைப் பிடித்தார் என்பது ஒரு சுவாரசியமான கதை. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடத்தி வந்த யாஹ்யா கானுடன் அவருக்கு இருந்த நெருக்கத்தின் காரணமாக ராணியின் கண்ணசைவில் பலருக்கு எண்ணற்ற வேலைகளை நடத்திக் கொள்ள ஏதுவாயிருந்தது. பூட்டோவும் கூட ராணியிடம் பல வேலைகளை நிறைவேற்றிக் கொண்டார் என்கிறது வரலாறு. இருக்கட்டும்.

இங்கு ஏன் தேவையின்றி ஜெனரல் ராணி வந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா. பதில் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள். சுல்பிகர் அலி பூட்டோ ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ஜெயிலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் ராணி. காரணம் ஒன்றுமில்லை. ஜெனரல் ராணி என்றழைக்கப்பட்டவரால் தனது ரகசியங்கள் வெளியேறி விடும் என்ற பயம். இன்றைய அரசியல்வாதிகளில் சிலர் ஜெனரல் ராணியின் அடியொற்றி வந்தவர்கள் தான். இப்படி மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரசியல் பாதைக்கு திரும்பியவர்கள் இன்று பாதுகாப்பாய், போலீஸாரின் சல்யூட்டின் அரவணைப்பில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அதிகார வர்க்கத்திற்கு மாறாமல் தொழிலை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு நீதியின் பேராலும், ஜனநாயக சாட்சியின் முன்னிலையிலும் தண்டிக்கப்பட்டார்கள். இதற்கு தமிழ் நாட்டில் எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படிப் பட்ட சட்டவிதிகள் மனிதனுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. இந்தச் சட்டவிதிகள் அதிகாரவர்க்கத்தினருக்குத் தான் உதவி செய்யுமே தவிர ஆளப்படுகிறவர்களுக்கு பிரயோசனமில்லாதவை. உதாரணம் பாலியஸ்டர் பிரின்ஸ் என்ற புத்தகத்துக்கான தடை.

சமீபத்தில் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஏழு தலை நகரம் என்ற நூலை வாசிக்க நேர்ந்தது. அதில் பாசிம் என்பவன் ஒரு கேள்வி கேட்பான். வயதில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பர் யார் ? இது தான் அந்தக் கேள்வி. அதற்கு பதில் தாயின் கற்பத்தில் இருக்கும் குழந்தை என்று பதிலும் கூறுவான்.

ஆமாம். ஒரு குழந்தை பிறந்த பின்பு தான் அந்தக் குழந்தையின் வயது ஆரம்பமாகிறது. அதுவரை அது தாயின் வயிற்றுக்குள் வயதின்றிதான் வாழ்ந்து வருகிறது. குழந்தை பிறந்த பின்புதான் அது உயிர் என்று கணக்கிடப்படுகிறது. இப்படி இருக்கும் அந்தக் கருவிற்கு, அது பிறந்தால் நோயோடு வாழும் என்ற பிரச்சினை இருக்குங்கால் அதை அபார்ஷன் செய்வதில் தவறேதும் இருக்கிறதா ? அப்படி பிறக்கும் குழந்தை கடைசி வரை நோயோடு போராடி, பெற்றோருக்கும் சொல்லொண்ணா துன்பத்தை தரும். அதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா ? நிகிதா மற்றும் ஹரேஷ் தம்பதியினரின் வழக்கு தேவையான ஒன்றா ? தேவையற்ற ஒன்றா ? இந்த நிகழ்ச்சியில் சட்டப்படி பார்வை தேவையா ? அல்லது மனித தர்ம பார்வை தேவையா ? இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்.

சட்டமும் தர்மமும் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் மனித வாழ்க்கை சுமூகமாக செல்ல இயலுமா? சோ தனது மகாபாரதம் பேசுகிறது என்ற புத்தகத்தில் தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் அது அந்தக் கடவுளே வந்தாலும் முடியாத ஒன்று என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தர்ம வழி சிறந்ததா அல்லது சட்டத்தின் வழி சிறந்ததா என்கிற கேள்வி எழுகிறது மேற்கண்ட நிகழ்ச்சிகளை படிக்கும் போது.

சட்டம் – தர்மம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருக்கும் போது உலகில் அமைதி என்றும் நிலவாது என்பது நிதர்சனம்.

எனது இந்த காலம் படிக்கும் வாசகர்களின் மனதில் சில விடை தெரியாத கேள்விகளை மனதுக்குள் எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சட்ட மேதைகளும், அரசியல்வாதிகளும் இந்தக் கட்டுரையினை படிக்க நேர்ந்தால் அவர்களின் மனதுக்குள்ளும் எழும் கேள்விகளினால் ஏதாவது நடக்காதா என்ற நப்பாசையும் உள்ளே மறைந்து கிடக்கிறது.

கட்டுரை ஆக்க உதவி : உயிர்மை இதழ், திரு மாயாவின் கட்டுரை, திரு ராமகிருஷ்ணன் அவர்களின் ஏழு தலை நகரம், தி ஹிந்து நாளிதழ். அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

கோமாளி – உலகமற்றவன்


komaalee@gmail.com

Series Navigation