ரெண்டு சம்பளம்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

இராம. வயிரவன்‘கொக்கரக்கோ! கொக்கரக்கோ..’ கோன்னு தலைக்கி மேல கத்துனது சேவல் இல்ல. எங்கவீட்டு அலாரம் டைம்பீஸ்தான் அப்பிடிக் கத்துச்சு. கண்ணத் தொறக்காம கைய நீட்டித் துளாவி அது தலையில ஒரு தட்டுத்தட்டீட்டு மறுபடியும் போர்வைய இழுத்துப் போத்திக்கிட்டு மொடங்கிப் போறேன். அஞ்சு நிமிசங்கூட இருக்காது ‘ஐயய்யோ, வேலக்கிப் போகணுமே, புள்ளய எழுப்பி ரெடி பண்ணணுமே, இப்பிடித் தூங்குறமேன்னு’ ஒரு நெனப்பு வருது. வாரிச் சுருட்டி எழுந்திருக்கிறேன்.  
கதவத் தொறந்து பேப்பர எடுத்து உள்ளபோட்டு – இதுவே ஊரா இருந்தா வாசத்தெளிச்சு சாணி போட்டுக் கோலம் போடோணும், நானும் சிங்கப்பூரு வந்த புதுசுல வாசலக் கழுவி பச்சரிசி மாவால விதவிதமா எனக்குத் தெரிஞ்ச பத்துக் கோலத்துல ஏதாவது ஒன்னப் போடுவேன். அப்பறம் எல்லாம் மாறிப்போச்சு. வீட்டுக்கு வந்தவுக போனவுக ‘இதென்ன வேலக்கிப் போகாமெ இதெல்லாம் பண்ணுறியா? நல்லாருக்கே? நாங்க இதுக்கெல்லாம் எங்கெ நேரத்தக் கண்டம்? முஸ்தபாவுல விக்கிற கோல ஸ்டிகர வாங்கி ஒட்டிப்போட்டு போயிக்கிட்டே இருப்போம்னு சொன்னதக் கேட்டு நானும் மாறித்தேன் போனேன். பண்ணனும்னு நெனச்சாக்குட எங்கெ நேரம்?
 அவசர அவசரமா அரிசியக் கலஞ்சு, குக்கர்ல அரிசியும் சரிக்கிச்சரி தண்ணியும் வெச்சு மூடி அடுப்புல ஏத்திப்புட்டு, பிரிஜ்ஜத் தொறந்து நேத்துக் கிண்டுன மீய எடுத்து வெளிய வச்சுப்புட்டு, அவன்ல காப்பிக்கி மக்குல பாலை வச்சுப்புட்டு குளிக்கிற ரூமுக்குல நொழையும் போது – மணி ஏழாயிருச்சே! பாப்புவ ரெடி பண்ணணுமே! – திரும்பி வந்து  சாத்தீருக்கிற ரூம் கதவத்தட்டி ‘லிசா’, ‘லிசா’ – எழுந்திரிச்சு பாப்புவ ரெடி பண்ணுமா’ ன்னுட்டு மறுபடி குளிக்கப் போறேன். வெதுவெதுப்பா சவரத் திருகி அவசரக்குளி குளிச்சுப்புட்டு துண்டச் சுத்திக்கினு வெளியே வர்றேன் – லிசா சிரிச்சுக்கினு சும்மா நிக்கிது. ‘என்னடி சும்மா நிக்கிற. போய் மொகத்தக் கழுவிட்டு வா, பாப்புவ எழுப்புன்னு’ சொல்லிப்புட்டு அலமாறியத் தொறந்து – எந்தச் சுடிதாரப் போடலாம்? – ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ ன்னு குக்கர் சத்தம். மூனாவது ஸ்ஸ்ஸூக்கு அடுப்பை அமத்தீருப்பான்னு சொல்லிப்புட்டு மறுபடி மூள கொழம்புது – எந்த டிரெஸ்? – வர்ற ஞாயித்துக் கெழமை செராங்கூன் போயி இன்னம் ஆறு ட்ரெஸ்ஸாவது வாங்கியாரணும். சம்பளந்தேன் வாங்குறமே – ஒருவழியா பச்சக்கலர் சுடிதார மாட்டிக்கினு ‘பாப்பு, பாப்பு, நேரமாச்சு எந்திரிடாச் செல்லம்’ – புள்ள எழுந்து தூக்கங் களையாமே கண்ண மூடிக்கிட்டே பாத்ரூம் போகுது. மூச்சா போயிட்டு வந்து நிக்கிது. அக்காக்கிட்ட மொகத்த தொடச்சிக்க – நான் தலையச் சீவிக்கிறேன். பாப்பு லிசாவுக்கு மொகத்தக் காட்டாமெ என்னப்பாத்து கையக்காட்டி சினுங்குது. ‘பாப்பு, அடம் பண்ணக் கூடாது. இன்னமே அக்காதேன் ஒனக்கு எல்லாம் பண்ணுவா, சரி இன்னக்கி மட்டும் நான், ஓகே’ – புள்ள மொகத்துல கொடுவா ஓடிக்கெடக்கு – ‘லிசா’ பாத்துக்க, நாளையிலேந்து நீதேன் பண்ணோணும் – பாப்புக்கு கொடுவாய ஈரத்துணியால தொடச்சி, கண்ணுல கோத்தய எடுத்து விடுறேன். பவுடரக் கையில கொட்டி மொகத்துல தடவுறேன். ஒரு எடமா அப்பிக்கிது. இழுத்து மொகம் பூறாத் தடவி, தலக்கி ரப்பர்பேண்ட மாட்டி விடுறேன் – லிசா கவனிக்கிதா? – ஆமா சிரிச்சுக்கிட்டே பாத்துக்கினு நிக்கிது அந்தப் பொண்ணு. மசமசன்னு நிக்காமன்னு சொல்ல வயில வந்துருச்சு. சரி இப்பத்தானே வந்து மூனு நாள்தானே ஆகுதுன்னுட்டு, லிசா பாப்புவோட தண்ணி பாட்டில நல்லா கழுவீட்டு தண்ணி புடிங்கிறேன். அசஞ்சிக்கினே போறா அவ. மதமதன்னு ஆளு வளந்துருக்கு. மேலு வணங்கல. இருவது வயசுன்னு அப்ளிகேசன்ல போட்ருந்துச்சு. இப்ப ட்ரெய்னிங்தானேன்னுட்டு நானும் சும்மா இருந்தர்றேன்.
நானும் காப்பியக் கலந்து வாயில ரெண்டு மடக்கு அவசர அவசரமா ஊத்திக்கினு, ரொட்டிய ஓரத்த நருக்கி ஜாமெத்தடவி எனக்கும் பாப்புக்கும் டப்பியில வச்சுக்கிறேன். அவ கொண்டார தண்ணி பாட்டுல கூடையில வச்சிக்கினு, ‘நீனும் எங்கூட வந்து க்ரெச்சப் பாத்துக்கங்கிறேன். சரின்னு சிரிச்சுக்கினே தலையாட்டுறா. ஒனக்கு மீ இருக்கு. வந்து அவன்ல சூடு பண்ணி சாப்புடுங்கிறேன். மூனுபேருமா கதவப் பூட்டிக்கினு வெளிய வந்து லிப்டுக்கு நிக்கிம்போது – மணி எட்டு பத்தாயிருச்சு. இன்னக்கிம் லேட்டுதான். அந்த மேனேஜர் கொள்ளிக் கண்ணால பாக்கும்போதே ‘ஏன் லேட்டுன்னு’ கேக்காமலே கேட்டமாறி இருக்கும்.
எங்க ப்ளோக்குக்கு ரெண்டு பிளோக் தள்ளித்தேன் பாப்புவ விடுற கிரெச். இவள அறிமுகப்படுத்தி வக்கணும். நெறய அம்மாக்க, மெய்டுக புள்ளகளக் கூட்டிக்கினு ஆடிஅசஞ்சி வாராக. என்னயமாறி ஒன்னு ரெண்டு வேலக்கிப் போறதுக கொஞ்சம் பரபரப்பா வருதுக. அங்கெ வேலபாக்குற ஆயா எழுந்துரிச்சு வாறா. இது நான் புதுசா சேர்த்துருக்கிற மெய்டு. இன்னமே நாளையிலேந்து புள்ளயக் கொண்டுவிட, கூட்ட இவதேன் வருவான்னு சொல்லுறேன். அவ ‘ஓ’ ன்னுட்டு தலயாட்டிக்கிறா. இவ சிரிச்சுக்கிறா. பாப்புக்கு கைய ஆட்டி ‘பைபை’ சொல்லிப்புட்டு – இவளப்பாத்து ‘ஏய், நான் போறேன். நீ அங்கன இங்கன பெராக்கு பாக்காமெ வீட்டுக்குப்போயி கதவ பத்தரமா சாத்திக்கினு இருடின்னு’ சாவியக் குடுத்துப்பிட்டு ஓட்டமும் நடயுமா பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்புக்குப் போறேன்.
வேர்த்து வடியிறமாதிரி இருக்கு. டிஷ்யூ எடுத்து நெத்தியத் ஒத்திக்கிறேன். பஸ் வரமாதிரித் தெரியல. குறுக்கால மார்க்கட்டுக்குள்ள விழுந்து நடந்தா பத்து நிமிசத்துல எம்மார்ட்டி எடுத்துரலாம். நடந்தரலாமேன்னு மார்க்கெட்டப் பாத்துக்கினே போறேன் – இன்னம் கொங்ச நேரம் போனா மார்க்கெட்டுல கூட்டஞ்சேந்து நடக்க முடியாது. இப்பதேன் கடைகளத் தொரந்து எடுத்து வக்கிதுக சனங்க. சக்கரம் வச்ச வண்டிகள இழுத்து வெளிய விடுறா பேக்கரிக் கடக்காரி. காய்கறியெல்லாம் ஸ்டைரோபோம் பொட்டீல ஐஸ் வச்சு வந்து எறங்குது. சாப்பட்டுக் கடையெல்லாம் ஒன்னு ரெண்டு தொரந்திருக்கு. கோப்பிக்கடை தொறந்திருக்கு. ஒரு டேபிள் மேல கருப்புக் கோப்பிக்கிளாஸ் இருக்கு. சீன ஆம்பளங்க ரெண்டு பேரு அங்கின உக்காந்து சிகரெட்டுப் பொகைய இழுத்து இழுத்து விடுறாங்கெ. இந்தச் சிகரெட்டுல அப்பிடி என்னதேன் இருக்கோ? என் ஹஸ்பெண்ட் ரவி மேலயும் இப்ப சிகரெட் வாசம் அடிக்கிது – அப்பிடி என்ன ஸ்ட்ரெஸ்ஸோ தெரியல – நல்ல வார்த்தயாச்சொல்லி நெறுத்திப்புடணும். ரவிய முன்ன மாதிரிக் கவனிச்சுக்கிட முடியில. இப்ப ஒருமாசமா நா வேலக்கிப்போக ஆரம்பிச்சதுலேர்ந்துதேன் இப்பிடி. ரவிக்கி பன்னண்டு மணி நேர சிப்டு வேல. நேரங்கெட்ட நேரத்துல வருவாரு. முன்னல்லாம் எப்ப வந்தாலும் முழிச்சிருந்து பாத்துப்பாத்து சோறுபோட்டுப் பேசிக்கிட்டு இருந்துட்டு தூங்கப்போவோம். இப்ப அவரே போட்டு சாப்பிட்டு படுத்துக்கிறாரு. ஏதாச்சம் பேசனுமின்னாக்கூட லீவு நாளுக்காகக் காத்துருக்க வேண்டியிருக்கு. அதும் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல வராது.
எம்மார்ட்டிக்குள்ள கூட்டம் அதிகமா இருந்தாலும் ஏசி சிலுசிலுன்னு இருந்ததுன்னால நடந்துவந்த களைப்பு கொறஞ்சமாதிரி இருக்கு. உக்கார எடம் கெடக்கிமான்னு பாக்குறேன். நாப்பது நிமிசம் நின்னுக்கினே போகணுமே – சுத்தி இருக்கிற மொகங்களப் பாக்குறேன். வெள்ளத்தோலு, கருப்புத்தோலு, சப்ப மூக்கு, ஒயரமூக்கு, முட்டக்கண்ணு, பூனக்கண்ணுன்னு விதவிதமா சனங்க. பாட்டுக்கேட்டுக்கினு, பேப்பரப்படிச்சுக்கினு, விளம்பரத்தப் பாத்துக்கினு. ஒன்ன ஒன்னு மொரச்சிக்கினு போகுதுங்க. தூங்கிக்கினு சில பேரு. ஒருவேளை நைட் சிப்டு பாத்துட்டு போகுங்களா இருக்கும் ரவி மாதிரி. ரவியும் பத்து மணிக்கி வீட்டுக்கு வந்துருவாரு. வந்து சாப்புட்டு படுத்தார்னா மறுபடி அஞ்சு மணிக்குதேன் முழிப்பாரு. அவருக்குத்தேன் சோறு வச்சுட்டு வந்துருக்கேன். கோழி பிரிஜ்ஜுக்குள்ள இருக்கும். அப்பறமா போன் பண்ணி சொல்லிரணும். இல்லாட்டியும் அவரே பாத்துக்குவாரு. இப்பல்லாம் நான் வேலக்கிப் போறேன்னு ரெம்பொ அனுசரணை. செக்ஸ் வெசயத்துலகூட ரெம்பொ மாறிட்டாரு. கையப் போடும்போதே ‘ப்ளீஸ்பா, எனக்குத் தூக்கம் வருது’ சொன்னா புரிஞ்சுக்கிறாரு. ஆபீஸ் பிரண்டுக அவுக வீட்டு ஆம்பளகளப்பத்தி ‘அப்பா தாங்கமுடியாது’ ன்னு சொல்லும் போது எனக்கு ரவிய நெனச்சா பெருமையா இருக்கும். சில நேரத்துல ‘ஐயோ பாவம்’ னும் தோனும். எல்லாத்துக்கும் காரணம் நாந்தானேன்னு தோனும். நாந்தேன் எம்மெஸ்ஸி படிச்சுப்புட்டு ஏன் வீட்டுல கெடக்கணும்னு வேலக்கிப்போறேன்னேன். அவரு நான் சம்பாரிக்கிறதே போருமே, நீ வீட்டுல இருந்து பாப்புவப் பாத்துக்கன்னாரு. ஒன்னுந்தெரியாதவளுக எல்லாம் ரெண்டாயிரம் மூனாயிரம் வெள்ளின்னு சம்பாரிக்கிறாளுவ. நான் எதுக்கு எம்மெஸ்ஸி, கம்ப்யூட்டர்னு படிச்சுப்புட்டு வீட்டுல கெடக்கணும்னு கேட்டு அவர நச்சரிச்சு சம்மதிக்க வெச்சு ஒரு அப்ளிகேசந்தான் போட்டேன். வேல கெடச்சுருச்சு. ஆனா என்ன கொஞ்சம் தூரம். சம்பளம் நல்ல சம்பளமாச்சே? பாப்புவ க்ரெச்சுல விட்டு போறது, கூட்டியாரது கொஞ்சம் செரமமா இருக்குது. இந்த யோசிப்புல எறங்குற எடத்த விட்டுட்டமான்னு வெளியே பாக்குறேன் – இல்ல அடுத்த ஸ்டாப்புலதேன் எறங்கணும்.
ஆபீசுக்குள்ள நொழையும் போதே லேட்டாப்போறமேன்னு குறுகுறுக்குது மனசு. என் சீட்டுல போயி உட்காருதேன். யார் யார்லாம் பாக்குறான்னு கண்ணு நோட்டம் விடுது. நல்ல வேளை யாரும் காணாம். எல்லாம் டீக்கி போயிருக்குங்க. லாகின் பண்ணி மெயில் பாத்து என் பெண்டிங் வேல என்னென்ன இருக்குன்னு பாத்து அதுல முக்கியம் எதுன்னு பாத்து – அப்பப்பா இவ்வளவு இருக்கேன்னு வருது. இன்னக்கி ரெம்பொ கஸ்ட்டந்தேன் – எல்லாத்தையும் மறந்து அன்னய கமிட்மெண்ட்ஸ், சப்போர்ட், அது இதுன்னு மூழ்கிப்போறேன்.
டீக்குப் போன குரூப் வருது. விமலா, சுந்தரி, சுலோ, மோகன், சாரோ எல்லாம் ‘ஹாய்’ன்னுட்டு போகுதுக அதது சீட்டுக்கு. கடசியா வர்றா ஸ்ரீதேவி. என்னடி ‘இன்னக்கி லேட்டான்னு’ சத்தமாக் கேட்டுக்கினே போறா. ‘ஆமா’ – அதேன் தெரியுதுல்ல சும்மா போவேண்டியதுதானே? ஹேய் லஞ்சுக்குப் போம் போது கூப்புடுங்கடிங்கிறேன். சரிசரிங்கிறாளுக. யூசர் மீட்டிங் சமாளிச்சு முடிஞ்சு வரவும் இவளுக லஞ்சுக்குப்போகக் ரெடியாக் கெளம்பி நிக்கிறாளுக. என்ன நீ வாரியா லேட்டாகுமான்னு விமலா கேக்குறா? எங்கேடி போரீக? – ரூப்கார்டன் பத்தாவது மாடி கேண்டீன் வழக்கம் போலங்கிறா சுந்தரி. – எனக்கு எங்க போனாலும் ஓக்கேப்பாங்கிறா கையில சாப்பாட்டுக் கூடையோட. அவ வீட்டு மெய்டு சமச்சுக்குடுத்துருவாளாம் வெள்ளெனே எழுந்து. லிசாவுக்கு சமைக்கக் கத்துக் குடுத்துட்டா நானும் இது போலக் கொண்டாரலாமேன்னு தோனுது. சரி வாங்கடி நானும் வாரேங்கிறேன். ஏன்னா இவளுகள விட்டா அப்பறம் தனியாப் போயி சாப்புடணும். கூட்டமா சாப்புடுறதே ஒரு தனி இதுதேன். பல கதையும் பேசுவாளுக. கிண்டலும் கேளியும் அரட்டையுமா இருக்கும். அதுனாலதேன் வாரேன்னுட்டேன்.
ரூப்கார்டன் கேண்டீன். வெயிலு பிச்சு ஒதருது. நெழழுக்கா புலிப்படம் போட்டு டைகர் பீர்னு எழுதுன கொடை ஒரு பத்து பதுனஞ்சு நிக்கிது. கொடக்கிக்கீழ வட்ட வட்டமா டேபிளு. மொதல்ல எடம்புடிச்சுக்கோணும். யாராவது ஒருத்திய வச்சுப்புட்டு மத்தவக சாப்பாடு வாங்கி வரணும். தமிழ்க்கடை, மலாய்க்கடை, சீனங்கடையின்னு பல விதமா ஒரு பத்துக் கடைகளோட, ஒரு தண்ணிக்கடையின்னு ஒன்னு இருக்கும். அங்கென போயி கியூ கட்டி நின்னு சாப்பாட வாங்கினு வந்து உக்காந்துக்கோணும். இடுப்புல காசுவாங்கிப்போட்டுக்கிற பெல்ட்ட மாட்டிக்கினு என்ன தண்ணி வேணுமின்னு கேட்டுக்கேட்டு கொண்டு வந்து தர ஆளுக இருக்கும். தண்ணீன்னா டீ, கோப்பி, கோக், மிராண்டான்னு, ஐஸ்லெமன் டீன்னு எல்லாந்தேன். தண்ணிக்கடைக்கித்தேன் நல்ல சேல்ஸ் இருக்கும். அவந்தேன் மொத்த ப்ளோரையும் வாடகைக்கு எடுத்து மத்த கடைங்களுக்கு வாடகைக்கு சப்லெட்டிங் விடுவானாம். இதெல்லாம் இதுக சொல்லித்தேன் எனக்கே தெரியும். சாப்புடும்போது ஐஸ்வர்யாராயோட லேட்டஸ்ட் காதலன் யாருங்கிறதுலேர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் பேச்சு போகும். எதத்தவற விட்டாலும் இதெத்தவறவிடலாமான்னு இருக்கும் எனக்கு.
சுந்தரி எடத்தப் படிச்சு ஒக்காந்துக்கறா. நானும் விமலாவும் தமிழ்க்கடைக்கிப் போய் -க்யூ நீளமாருக்கு – இருந்தாலும் நின்னுக்குறோம். மத்தவளுக சீனங்கடைக்கிப் போயி சிக்கன்ரைஸ் வாங்குறாளுக. எனக்கு ரெண்டு கய்கறி, தயிரோட வெஜ் மீல்ஸ் வாங்கிக்கிட்டேன். ரெண்டரை வெள்ளி ஆச்சு. விமலா கேக்குறா ஏண்டி உனக்குதான் மெய்டு வந்துருச்சே, சமச்சுத்தராதான்னு. இப்பதாண்டி வந்துருக்கு. இனிமே சொல்லிக்குடுக்கோணும், பிலிப்பினோ பொண்ணு, ஏற்கனவே ஒரு தமிழ் வீட்டுல ஒரு வருஷம் இருந்த பொண்ணு. தமிழ்ல பேசினா சில வார்த்தைகள் புரிஞ்சிக்கிறா. இருந்தாலும் நம்ம சமையல், ருசிக்கிப் பழக்கணுமில்ல அப்பிடீங்கிறேன். சுந்தரி ஏண்டி பிலிப்பினோ? தமிழ் மெய்டு கெடக்கலியா? – எனக்குத் தெரிஞ்ச பிரண்டு வீட்டுல தமிழ் மெய்டு வச்சு ஒரே பிரச்சினை. அதுககிட்ட வேலயே வாங்கமுடியலையாம். பிலிப்பினோ மெய்டுகதேன் வேலை பழகிக்கிச்சுன்னா அப்பறம் வீட்ட நல்லாப் பாத்துக்குங்களாம்னு நான் சொல்லுறேன். இன்னக்கி சாப்பாட்டுக்கடையோட அரட்டை சப்ஜெக்ட் ‘மெய்ட்’ பத்தி இருக்கப்போகுதுன்னு நெனச்சுக்கிறேன். அப்பத்தேன் ஸ்ரீதேவி ‘வீட்ட நல்லா பாத்துக்குறதோட வீட்டுக்காரரையும் பாத்துக்கின்றுவாளுகடீ’ ங்கிறா. எல்லாம் கொள்ளுன்னு சிரிக்கிறாளுக. எனக்கு ஒன்னும் புரியல. என்னடி சொல்ரீயங்கிறேன். அட ட்யூப்லைட்டு, இதுகூடப் புரியலையான்னு விமலா கேக்குறா. எனக்குத் தெரிஞ்ச ஒரு வீட்டுல அந்த ஆளுக்கும் மெய்டுக்கும் தொடர்பாயிப்போச்சு, அந்தப்பொண்ணு அப்பாவியா வேலவேலயின்னு போயிட்டு புருஷன விட்டுருச்சு அப்பிடீங்கிறா சரோ. எனக்குத் தலையில இடி விழுந்த மாறி இருக்கு. இருந்தாலும் என் ரவிமேல எனக்கு எப்பவுமே நம்பிக்கை உண்டுன்னு தேத்திக்கிட்டு என் ரவியப்பத்தி இவளுகளுக்கு சொல்லணுமான்னு நெனச்சுக்கிட்டு எங்க வீட்டுக்காரரு அப்பிடிபட்டவரு இல்ல, அதெல்லாம் சபலபுத்தி ஆம்பளங்களுக்குத்தேன், எல்லா ஆம்பளகளுமா அப்படீங்கிறேன் நான். அதுக்கு சரோ சொல்றா ‘பிலிப்பினோ பொண்ணுக எல்லாம் ரொம்ப வெளிப்படையா இருப்பாங்களாம். ‘அதெ’ல்லாம் பெரிய விசயமே இல்லையாம். இதெல்லாம் தெரிஞ்சுக்காம குண்டுச்சட்டிக்குள்ளே குதுர வோட்ரியேடின்னு’. எனக்கு இந்தப்பேச்ச இவளுக விடமாட்டாளுகளான்னு வருது. ஏம்மேல எனக்கு ஒரே பச்சாதாபமா இருக்கு. தைரியமாவும் இருக்கு. பேச்ச மாத்துரதுக்காக ஏதாவது சொல்லணுமேன்னுட்டு இந்த வீக் எண்ட் என்னடி ப்ரோகிராம்னு சும்மா பேத்தி வக்கிரேன். செந்தோசா போலாமான்னு விமலா. ஒவ்வொருத்தியும் வர்றேன் வல்லன்னு என்னென்னமோ சொன்னாளுக. எனக்குக் கவனமெல்லாம் பேச்சுல இல்ல. இன்னும் அந்த மெய்டு விசயமே மனசச் சுத்திக்கிச்சு.
மதியம் இருந்த முக்கியமான வேலைகள்னால மெய்டு விசயத்த மறந்துட்டேன். டீ பிரேக்குக்கு கூப்பிட்டாளுக. வரல வேலயிருக்குன்னுட்டேன். ரவி நல்லவர்தான் ஆனாலும் ஆம்பளைனாவே எப்பவுமே எதுவுமே கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்தப்புரியாத முண்டைக்கிப் புரியாமப்போச்சேன்னு வருது. ஓடாதெல்லாம் ஓடுது நெஞ்சுக்குள்ள.
கல்யாணம் முடிஞ்ச புதுசுல ரவி கொஞ்சம் தமாசுக்குப் பேசுவாரு. சும்மா என்ன வம்பிழுக்கறதுக்கு எதுர்ல வர்றவளுக, போறவளுகளப் பாத்து ‘இவ நல்ல கட்டை’, ‘இவ கண்ணப்பாரு’, ‘இவ முடியப்பாருன்னு’ சொல்லுறதக் கூட என்னால ஏத்துக்க முடியாது. ஒரு நாள் நானே சொல்லிப்புட்டேன். இந்த மாறி சொல்லுறதத் தயவு செஞ்சு விட்டுங்கன்னு. அதுக்கு சும்மா உன்ன சீண்டிப்பாக்க அப்பிடிச்சொன்னேம்பாரு. நான் ஒண்ணும் அப்படி பரந்தமனப்பான்மையோட ஒங்க ஆபீஸ்ல வேல பாக்குறவளுகளப் போல பொண்ணு இல்ல. எனக்குப் புடிக்கலன்னா படிக்கலதான். இப்ப நான் ‘இவன் மீசை நல்லாருக்கு’, ‘அவன் நல்லா வாட்டசாட்டமா இருக்கான்னு’ சொன்னா நல்லாருக்குமா?. எனக்கு அந்த வெளையாட்டெல்லாம் புடிக்கலையின்னு கட் அன் ரைட்டா சொல்லிப்புட்டேன். அதுலேர்ந்து அப்பிடியெல்லாம் பேசமாட்டாரு.
தலை வலிக்கிற மாதிரி வருது. இவரு வந்து தூங்குவாரு. தண்ணி கிண்ணி குடிக்கப் போகயில வரயில இவ எதிர்ல வந்து மாரக்காட்டிக்கினு சிரிச்சுக்கினு நிப்பா. இந்த மனுஷனுக்கு அது கிலுகிலுப்பா இருக்கும். இவளுக சொன்ன மாரி எதாச்சும் ஆயிருமோன்னு சந்தேகமா வருது. போனப்போட்டுப் பாப்பமுன்னு தோனுது. நம்பரைப் போடுறேன். அடிக்கிது. யாரும் எடுக்கல. மறுபடி போடுறேன், யாரும் எடுக்கல. அவரு ஹேண்ட்போன ஆப்பண்ணிட்டாரு. அதுவும் கெடக்கல. இந்த லிசாச் சனியன் என்ன பண்ணுதோ தெரியல. இருப்புக்கொள்ளாம வருது. ஹேண்ட்பேக்கை எடுத்துக்கிட்டு நா சீக்கிரம் கெளம்புரேன்னு சொல்லிப்புட்டு பொறப்புடுறேன்.
எம்மார்ட்டி எடுத்து, அப்பறம் பீடர் பஸ் எடுத்து வீட்டுக்குப் போற வரைக்கி எனக்குப் பொறுக்க முடியாது. டேக்சி எடுத்தரலாம்னு தீர்மாணமா கையக்காட்டி ஏறிக்கிட்டு உட்லண்ஸ் ட்ரைவ் 73 சீக்கிரம் போப்பாங்கிறேன். என் மனசப்புரிஞ்சுகிட்டா மாரி வண்டி வேகமாப் போகுது. நானா மெய்டு கேட்டேன்? இவருதேன் கஸ்ட்டப்படுறியேன்னாரு. நானும் சரின்னேன். ஏஜெண்ட்டுக்கிட்ட சொல்லி வச்சோம். ஏஜெண்டு குடுத்த பத்துப்பதினஞ்சு அப்ளிகேசன்ல கரிக்கட்டயா ஒன்னு இருந்துச்சு அப்ப இதப்பத்தியெல்லாம் யாரு நெனச்சா? ஒருவேளை அந்த கரிக்கட்டயத் தேர்ந்தெடுத்திருக்கலாமோன்னு இப்பத்தோணுது. இந்த ஆம்புளைங்களுக்கு எதுனா என்ன? நாந்தேன் இந்த மொகம் பாத்தா நல்ல பொண்ணாத்தெரியுதேன்னு சொன்னேன். அவரும் எக்ஸ்பீரியன்சும் கூட இருக்குது, தமிழ் வீட்டுல ஒரு வருஷம் இருந்துருக்குன்னாரு. என்ன எக்ஸ்பீரியன்சோ என்னவோ? யாரு கண்டா?
வீடு வந்ததும் டேக்ஸிக்கி காசக் கொடுத்துட்டு எறங்கி லிப்டு எடுத்து ஆறாவது ப்ளோர்ல வெளிய வந்து – அவரு வராண்டால தம்மடிச்சிக்கினு – என்ன ரவி போன் அடிச்சேனேங்கிறேன். சாரிம்மா நான் ஆன் பண்ண மறந்துட்டேங்கிறாரு. வீட்டுபோனுங்கிறேன் – எப்ப நா சிகரெட்டு வாங்கக் கீழ போனப்ப அடிச்சியாங்கிறாரு. உள்ளேர்ந்து பாப்புக்குட்டி ஓடியாந்து அம்மா இன்னக்கி அக்கா என்னக் கூட்டியாந்துட்டாங்கிறா. எனக்குப் புரியுது.
ரவி சிகரெட் வேண்டாப்பாங்கிறேன். எப்பயாச்சம் ஒன்னு, டென்சனா இருக்கும் போதுதானேங்கிறாரு. இனிமே ஒங்களுக்கு டென்சன், ஸ்ட்ரெஸ்லாம் வராமெ நா பாத்துக்கிறேன். நாளைக்கி ஆப்தானேங்கிறேன். ஆமாங்கிறாரு. அன்னக்கி நைட்டு ரவி கையப்போடயில நா ஒன்னுஞ்சொல்லல. ஏன்னா ஒரு மாத்தைக்குள்ள ரிசைன் பண்ணா நோட்டீஸ் பீரியட் தேவையில்லயாம்.

முற்றும்


rvairamr@gmail.com

Series Navigation

இராம. வயிரவன்

இராம. வயிரவன்