ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

மலர் மன்னன்


[ ‘காலச் சுவடு ‘ மார்ச் 2006 இதழின் தலையங்கம் ‘ராணுவத்தில் முஸ்லிம்கள் ‘ என்ற தலைப்பில் பாரதத்தின் ராணுவத்தில் முகமதியரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக வருந்தி, முகமதியருக்கு மட்டுமின்றி, அனைத்து சிறுபான்மை மதத்தவருக்கும் ராணுவத்தில் உரிய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. நமது ராணுவத்தில் கோர்க்கா ரெஜிமெண்ட், சீக்கியர் ரெஜிமெண்ட் என்றெல்லாம் மத-இன அடிப்படையில் பெயர்கள் தொடர்வதாகவும் ராணுவத்திற்கு மதமில்லை என்பவர்கள் இதனைக் கலைக்க வேண்டும் எனக் கேட்டதேயில்லை எனவும் காலச் சுவடு குறிப்பிட்டிருந்தது.

இவற்றுக்கெல்லாம் எதிர்வினை போல் அல்லாது ஒரு பொதுவான கட்டுரையாக இது பற்றி நான் அறிந்த தகவல்களைக் காலச் சுவடுக்குத் தெரவித்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எனது கட்டுரையினை வெளியிடத் தகுதியற்றது என ‘காலச் சுவடு ‘ மதிப்பீடு செய்து ( ‘not worth publishing ‘) நிராகரித்துவிட்டது. ‘திண்ணை ‘யாகிலும் பிரசுரிக்க முன்வரும் என்ற நம்பிக்கையில் அதே கட்டுரையினை அனுப்பியுள்ளேன்.

இக்கட்டுரை எந்த வகையில் பிரசுரம் செய்யத் தகுதியற்றது என்பதைத் ‘திண்ணை ‘யின் அறிவார்ந்த வாசகர்களின் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன். பத்திரகையின் கோட்பாட்டிற்குப் புறம்பானது என்ற அடிப்படையில் கட்டுரையினை நிராகரிப்பதற்கும் வெளியிடத் தகுதியற்றது எனத் தள்ளுவதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா ? – மலர் மன்னன்]

பிரிவினைக்கு முந்தைய பாரதத்தில், ஐக்கிய ராஜதானியில் மட்டுமல்ல(அன்றைய கால கட்டத்தில் மொழிவழியிலான மாநிலங்கள் உருவாக்கப்படவில்லை; நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மொழிபேசும் வட்டாரங்கள் பிணைக்கப்பட்ட ராஜதானிகள்தான் உண்டு. அதன் பயனாகவே மொழி சார்ந்த வேற்றுமை உணர்வின்றி நாமனைவரும் பாரத நாட்டவர்

என்கிற தேசிய உணர்வு இயல்பாக வேரூன்றி வளரவும் முடிந்தது), குறிப்பாக வடக்கு ராஜதானிகள் அனைத்திலுமே காவல் துறையிலும் ராணுவத்திலும் முகமதியரின் சதமானம் மிகவும் கணிசமாகவே இருந்தது. இன்னுங் கேட்கப் போனால், முகமதியருக்கு, அவர்கள் சுபாவமாகவே முரட்டுத்தனமாகத் தாக்கும் தன்மையுள்ளவர்கள் என்பதால் பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு வாய்மொழிச் சட்டமே இருந்தது, இத்துறைகளில் அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதாக!

பிரிட்டிஷ் அரசின் தேர்ந்த ராஜ தந்திர சாமர்த்தியங்களில் இதுவும் ஒன்று. 1857ல் ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பினரும் தமக்கிடையிலான சமயம் சார்ந்த வேற்றுமைகளையெல்லாம் ஒருபுறம் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் பொது எதிரியான ஆங்கிலேயக் கும்பினி தர்பாரை வெளியேற்றுவோம் எனப் புறப்பட்டபோதே ஆங்கிலேயர் விழித்துக்கொண்டு விட்டனர். 1857 புரட்சி முறியடிக்கப்பட்ட பிறகு, கும்பினி ஆட்சி அகற்றப்பட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நேரடியான காலனி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்ததும், ஆங்கிலேயரின் இந்த விழிப்புணர்வு செயல் வடிவம் பெறலாயிற்று.

கும்பினி தர்பார் எவ்வித வரைமுறைகளும் இன்றி, தட்டிக் கேட்பார் எவருமின்றி, தன்னிச்சையாக ஆட்சி செய்ததால் மனம் வெதும்பியிருந்தோருக்கு, நேரடி பிரிட்டிஷ் ஆளுகை என்கிற, சட்ட திட்டங்களோடு ஒரு முறையான ஆளும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததே பெரிய வரப்பிரசாதமாக இருந்தது! பிரிட்டிஷ் சாம்ராஜ்யப் பேரரசி விக்டோரியா மகாராணியாரின் நேரடிப் பிரஜைகாளாகவே எம்மை ஏற்கவேண்டும் என்பதுதான் அன்றெல்லாம் நமது பிரதானமான வேண்டுகோளாக இருந்தது! இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதில் எல்லாச் சமயத்தினருக்குமே சம பங்கு உண்டு.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பாரதத்தைத் தனது நேரடிக் காலனியாக நிர்வகிக்க முன்வந்ததுமே இங்குள்ள ஹிந்து-முகமதிய சமூகங்களை ஒன்றையொன்று முட்டிக்கொள்ளும் செம்மறி ஆடுகளாக வைத்திருந்தால்தான் தனது மணி மகுடத்தில் பாரதத்தை நடுநாயகமான வைரமாகத் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனப் புரிந்து கொண்டுவிட்டிருந்ததால் அதற்கான வழிமுறைகளையும் அது கையாளத் தொடங்கியது. ஒரு சமயம் ஹிந்து சீமான்களுக்கும் மறு சமயம் முகமதிய பிரபுக்களுக்கும் மானியங்கள் வழங்கி அரவணைத்தது. இதனால் பிரிட்டிஷ் அரசின் அபிமானத்தைப் பெறுவதில் ஹிந்து-முகமதிய பிரபுக்களிடையே போட்டா போட்டி உருவாகி, அவ்வப்போது இரு சமயத்தாருக்கிடையிலான மோதலாகவும் அது திருப்பமடைந்து வரலாயிற்று.

1857 புரட்சியில் பங்கேற்காது ஒதுங்கியிருந்த சீக்கியருக்கு, அவர்களின் விசுவாசத்தை அங்கீகரிக்கும் அடையாளமாக, பிரிட்டிஷ் ராஜாங்கம் தனது ராணுவத்திலும் காவல் துறையிலும் அதிக வாய்ப்பளித்து, அவர்களுக்குத் தொடர்ந்து அவற்றில் சேர முன்னுரிமையும் அளித்து வந்தது.

தெற்கே மறவர்கள், நாயர்கள், குடகு பிரதேசத்தவர், வடக்கே சீக்கியர், கோர்க்காக்கள், மேற்கே மராட்டியர், இவர்களோடு பொதுவாக முகமதியரும் இயல்பாகவே போர்க்குணம் மிக்கவர்களாக இருப்பவர்கள்தாம். இவர்களை யெல்லாம் களறிச் சமூகத்தவராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அடையாளங் கண்டது இயற்கையே. இதில் உள் நோக்கம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இந்தச் சமூகங்களில் தனக்கு மிக அதிக விசுவாசமாக இருக்க கூடிய சமூகங்களாகப் பார்த்துத் தேர்ந்து அவற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் அதிக அளவில் ராணுவ சேவையிலும் காவல் துறையிலும் சேர்த்துக் கொண்டது. கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்ட பறையரும் இவ்வாறே அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் இடம் பெற்றனர்.

மக்களிடையே நேரடித் தொடர்புள்ள குடிமை அமைப்பின் கீழ் வரும் காவல் துறையில் பறையரைச் சேர்ப்பது பிற சமூகத்தவரிடையே சலசலப்பை ஏற்படுத்திவிடுமாதலால் தானே தனக்குப் பிரச்சினையை உருவாக்கிக்கொள்ள வேண்டாம் எனக் கருதியதால்தான், பறையரைக் காவல் துறையில் சேர்த்துக் கொள்வதில் பிரிட்டிஷ் ஆட்சி ஊக்கம் காட்டவில்லை.

19-ம் நூற்றாண்டில் பாரத தேசத்து முகமதியரின் அதிகாரப் பூர்வமற்ற தலைவராகவே விளங்கிய அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக நிறுவநர் ஸர் சையது அகமது கான், 1857 சுதந்திரப் போருக்கு பகிரங்க எதிர்ப்புத் தெரிவித்து, எப்போதும் பிரிட்டாஷாருக்குப் பட்சமாக இருந்து வருவதுதான் முகமதியருக்கு நல்லது என்று வலியுறுத்தி வந்தவராவார். அவரது அந்திமக் காலத்தில் முகமதியர் சிலர் காங்கிரசில் சேரமுற்பட்டபோது, அதனை அவர் வன்மையாகக் கண்டித்தார். அவரது கண்டனம்தான் அவருடைய மறைவுக்குப்பின் சில ஆண்டுகளிலேயே முகமதியருக்கெனத் தனியொரு கட்சி தொடங்கப் படுவதற்கான தூண்டுதலை அளித்தது.

1906 ல் மூன்றாவது ஆகாகான் சுல்தான் முகமது ஷா தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 34 முகமதியப் பிரமுகர்கள் சிம்லாவில் கூடி, முகமதியருக்கான தனி அரசியல் கட்சியாக அகில இந்திய முஸ்லிம் லீகைத் தோற்றுவித்த கால கட்டத்தில், ஹிந்துக்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட காங்கிரஸ் மனு சமர்ப்பிக்கும் கட்டத்தைத் தாண்டி, திலகர் போன்றவர்களின் வழிகாட்டுதலில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடும் இயக்கமாகப் பரிணாமமடைந்து விட்டிருந்தது. முஸ்லிம் லீக், பிரிட்டிஷ் ஆட்சிக்கு இசைவான போக்கைக் கடைப்பிடித்தமையால், ராணுவத்திலும், காவல் துறையிலும் சேர முகமதியர் அதிக வாய்ப்பினைப் பெறலாயினர். முஸ்லிம் லீகின் கோரிக்கையே, நீதித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் முகமதியருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

இரண்டாவது உலகப் போரின்போது, காந்திஜியும் காங்கிரசும் பிரிட்டிஷ் பேரரசின் நலனுக்காக இந்தியர் ரத்தம் சிந்த அனுமதியோம் எனப் போர் மறுப்புப் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம் லீக் போர் ஆதரவுப் பிரச்சரம் செய்து, முகமதியர்

அதிக அளவில் ராணுவத்தில் சேர ஊக்குவித்தது. ஹிந்து மஹா சபைத் தலைவர் ஸாவர்கர்ஜியும் போர் ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொண்டார். பாரதத்தின் ராணுவத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதோடு, அவர்களுக்கு நவீனப் போர் முறையிலும் போர்க்கள நடவடிக்கைகளிலும் போதிய அனுபவம் இருப்பதும், பாரதத்தின் எதிர்கால நலனை முன்னிட்டு மிக மிக அவசியம் என்று ஸாவர்கர்ஜி வாதித்தார். இரண்டாவது உலகப் போர் இதற்கான அரிய வாய்ப்பு என்றார். அவரது போர் ஆதரவுப் பிரசாரம் ஏராளமான ஹிந்து இளைஞர்களை ராணுவத்தில் சேரத் தூண்டியது.

1947-ல் தேசப் பிரிவினையின்போது, ஒன்றுபட்டிருந்த பாரத ராணுவத்திலிருந்த முகமதியரில் அனேகமாக அனைவருமே, மத அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் ராணுவத்திற்குப் போய்விட்டனர். அது மட்டுமல்ல, பாகிஸ்தான் பிறந்த சூட்டோடு சூடாக, அதன் அதிபர் ஜின்னாவின் ஆணைக்கு இணங்க, 1947 செப்டம்பர் மாத வாக்கிலேயே பாரதத்திற்கு எதிரான போர் முஸ்தீபுகளிலும் இறங்கிவிட்டனர். இவ்வாறாக, இரண்டாம் உலகப் போரின்போது ஒன்றுபட்ட இந்திய ராணுவத்தினராகத் தோளொடு தோள் நின்று ஓரணியில் போரிட்டவர்கள், 1971 பங்களா தேஷ் போர்வரையிலும்கூட ஒருவரை யொருவர் எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று. அதன்பின் தொடர்ந்த போர்களில் அந்தத் தலைமுைறை அருகிப் போனமையால் அப்படியொரு இக்கட்டான நிலை உருவாவது குறையலாயிற்று.

வட மாநிலங்களில் காவல் துறையில் பணிசெய்து வந்த முகமதியரும் இதேபோல பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டதால்தான் பிரிவினைக்குப் பிறகு காவல் துறையிலும் முகமதியரின் எண்ணிக்கை குறைந்துபோயிற்று.

இரண்டாம் உலகப் போரின்போது ஹிந்துக்கள் பெருமளவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவது அவசியம் என்று ஸாவர்கர்ஜி வலியுறுத்தியதாலும், அதற்கு இணங்க ஹிந்துக்கள் கணிசமான அளவில் ராணுவத்தில் சேர்ந்ததாலுந்தான் பிரிவினையின்போது பாரத ராணுவம் தனது வலிமையைக் காப்பாற்றிக் கொண்டு, பாகிஸ்தானின் திடார்த் தாக்குதல்களையெல்லாம் சமாளிக்க முடிந்தது.

பாரத தேசத்தின் கடந்த கால வரலாற்றைப் புரட்டும்போது, பல கசப்பான உண்மைகள் தெரியவருகின்றன. முறையான வரலாற்றுப் பார்வையின் அவசியத்தைக் கருதி இதனைச் சுட்டிக் காட்டுவது தவிர்க்கமுடியாததாகிறது.

1565 ஜனவரி 26 அன்று தளிக்கோட்டையில் ஒன்றுபட்ட பாமினி சுல்தான்களுக்கும் விஜய நகர ராம ராயருக்கும் நடந்த இறுதிப்போரின்போது, ராம ராயரின் தரப்பில் இருந்த ஒரு லட்சத்து நாற்பதாயிரம் முகமதிய சிப்பாய்கள் மத அடிப்படையில் திடாரென எதிர்த் தரப்பு பாமினி சுல்தான்களின் சைன்னியத்துடன் சேர்ந்துகொண்டு, தாம் அங்கம் வகித்த விஜயநகரத் துருப்பினரோடு போரிடத் தொடங்கிவிட்டனர். இதனை எதிர்பாராத விஜய நகரப் படை திகைத்துப்போய், படுதோல்வியும் அடைந்தது.

இதேபோல், 1761 ஜனவரி 14 அன்று மூன்றாவது பானிபட் யுத்தம் என அறியப்படும் போரின் போது ஆப்கனிலிருந்து படையெடுத்து வந்த அகமது ஷா அப்தாலி, வலிமை மிக்க மராட்டிய சேனையை வெற்றிகொள்ள முடிந்ததற்கும் இதேபோன்ற நிலை உருவானதுதான் காரணம் (ஹிந்துஸ்தானத்தில் முகமதியர் மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்து வருவதால் மீண்டும் அதனை நிலை நாட்ட வருமாறு தில்லி இமாம்களும், மவுல்விகளும் விடுத்த அழைப்புதான் அப்தாலிக்கு பாரதத்தின் மீது படையெடுத்துவரும் துணிவினைத் தந்தது).

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, முகமதியரின் எண்ணிக்கை அதிகரிப்பு 1991 லிருந்து 2001 வரை 29.3 சதமாக இருந்து வந்துள்ளது. ஒய்வுபெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியும், மேற்கு வங்க அரசு அமைத்த சிறுபான்மையினர் நலக் கமிஷனின் தலைவராக இருந்தவருமான ஜஸ்டிஸ் கே.எம். யூசுப் ‘தி ஹிந்து ‘ நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலின்போது, பாரதத்தில் முகமதியரின் எண்ணிக்கை சரியாகக் கணிக்கப்படுவதில்லை என்றும் மொத்த மக்கள் தொகையில் முகமதியரின் தற்போதைய பங்கு இருபது சதமானத்திற்குக் குறையாது என்றும் குறிப்பிட்டுள்ளார் (அக்டோபர் 1, 1999). அரசு காட்டும் கணக்கென்னவோ 12 அல்லது 13 சதம்தான்.

இப்போது 2006-ல் இருக்கிறோம். எப்படியும் மக்கள் தொகையில் முகமதியரின் எண்ணிக்கை கூடுதலாகியிருக்குந்தான். ஹிந்துக்களிடையே குடும்பக் கட்டுப்பாடு அதிக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இப்போதே பெரும்பாலான குடும்பங்களில் ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகள் என்ற நிலை உருவாகிவிட்டிருக்கிறது. வருங்காலத்தில் இந்நிலை மேலும் தீவிரமடையும். ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகள் என்று வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர், உயிராபத்து மிக்கதும், நினைத்த நேரத்திற்கு விடுப்புப் பெறமுடியாததுமான ராணுவம், காவல் துறை ஆகியவற்றில் தங்கள் பிள்ளைகள் சேருவதை விரும்பமாட்டார்கள். அதே சமயம், சமயக் கட்டுப்பாடு மிக்க முகமதியர், தமது சமயக் கோட்பாட்டை முன்னிறுத்தி, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்று வருவார்களாதலால், தம் பிள்ளைகளை ராணுவம், காவல் துறை ஆகியவற்றுக்கு அனுப்புவதில் அந்த அளவுக்குத் தயக்கம் காட்டமாட்டார்கள். ஆகையால் அரசாங்கத்தின் முன்னுரிமையோ சலுகையோ இல்லாவிடினும்கூட, வெகு விரைவிலேயே நமது ராணுவத்திலும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறைகளிலும் முகமதிய சகோதரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிடும் எனவும் ஹிந்துக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

பாரதத்தின் பாதுகாப்புத் துறை சார்ந்த நிர்வாகப் பிரிவில் முகமதியரின் எண்ணிக்கை தற்போது கணிசமாகவே உள்ளது என்பதை இன்னமுங்கூட ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் எனக்குக் கிடைக்கும் நம்பகமான தகவல்களின் மூலம் அறிந்துள்ளேன். போர்முனையில் பணிசெய்யும் பாரத ராணுவ அதிகாரிகளின் இடமாற்றல் உத்தரவுகளை முடிவு செய்யும் முக்கியமான பொறுப்புகளில்கூட முகமதிய சகோதரர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உண்மை நிலவரமாகும்.

மேலும் கவனிக்கப் பட வேண்டியதோர் விஷயம், நமது ராணுவத்தில் கோர்க்கா பிரிவு, சீக்கியர் பிரிவு, மதராஸ் பிரிவு என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே பெயர் சூட்டப்பட்டதன் நோக்கம் ராணுவத்தினரை மத-இன அடிப்படையில் பிளவு படுத்துதல் எனக் கருத இயலாது. ஏனெனில் இப்பிரிவுகளில் பிற மத, இனத்தவரும் இடம் பெற்றிருந்தனர். இயல்பாக ஒரு பிரிவில் அதிக எண்ணிக்கையில் குறிப்பிட்ட ஓர் இனத்தவர் இடம் பெற்றுவிடுவதையொட்டி அப்பிரிவிற்கு அவ்வினத்தின் பெயர் சூட்டப் பெறுவது வழக்கத்தில் இருந்தது. ராணுவத்தில் மத, இன உணர்வு தோன்ற இடமளிக்கலாகாது என்ற முன்னெச்சரிக்கை காலப் போக்கில் ஆங்கிலேய ஆட்சியாளரிடையே பிறந்துவிட்டது. பிரிட்டிஷ் நடைமுறையைப் பல்வேறு துறைகளிலும் பின்பற்றிவரும் சுதந்திர பாரதம் இதிலும் அதே போக்கினை மேற்கொண்டு வருகிறது எனலாம்.

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation